Skip to content
Home » இஸ்ரேல் #16 – ஆய்வும் மேம்பாடுமே உறுதுணை

இஸ்ரேல் #16 – ஆய்வும் மேம்பாடுமே உறுதுணை

இஸ்ரேல்

இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி என்பது விவசாயத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள், கண்டுபிடிப்புகளோடு நின்றுவிடவில்லை. உற்பத்தித் துறையிலும் இரசாயனம், போக்குவரத்து, மருத்துவம் மற்றும் மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றிலும் விரிவடைந்தது. இஸ்ரேலின் உற்பத்தித் துறை சிறியது என்றாலும் வலுவானது. சேவைத்துறையிலேயே அதிக ஆய்வுகளும் மேம்பாடுகளும் நிகழ்கின்றன. குறிப்பாக மின்னணு, டிஜிட்டல் தொழில் நுட்பங்களில் இஸ்ரேலின் முன்னேற்றம் இந்தியா உட்பட பல நாடுகளை ஈர்த்தது என்றால் வியப்பில்லை. இந்தியாவில் அரசியல் பரபரப்பைக் கிளப்பிய பெகாசுஸ் எனும் உளவுச் செயலி இஸ்ரேலில்தான் உருவாக்கப்பட்டது.

விடுதலையடைந்த சில ஆண்டுகளிலேயே தங்களுடைய தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள அதிகளவில் கல்வியிலும், பயிற்சியிலும் இஸ்ரேல் முதலீடு செய்யத் துவங்கியது. அதன் பலனாக பல தொழில்நுட்பப் புரட்சிகளை அதனால் செய்ய முடிந்தது. துவக்க காலத்தில் ரசாயனம், மருந்து, பண்டங்கள் உற்பத்தித் துறை ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினர். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் வெற்றி பெற்றதும், உற்பத்தித் துறைக்கு பெரும் பக்கபலமானது.

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின் அறிவியல் அடிப்படையிலான, உயர் வகைத் தொழில்நுட்பங்களைக் கொண்ட மின்னணு, மேம்பட்ட கணினி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள், மென்பொருள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் ஏற்றுமதிக்காகவே உற்பத்தி செய்யப்பட்டன. இதர முக்கியப் பொருட்களில் ரசாயனம், நெகிழி, உலோகங்கள், உணவு, மருத்துவம் மற்றும் தொழில்சார் பொருட்கள் அடங்கின.

இஸ்ரேல் ஒரு காலத்தில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. உலகின் மிகப் பெரிய பட்டை தீட்டும் தொழிற்கூடம் டெல் அவிவ் நகரில் இருந்தது. பெரிய தொழில்கள் தனியாரிடமே இருந்தன. அரசின் கட்டுப்பாட்டில் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்தது. இந்த ஆலையில் பயணிகள் மற்றும் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. இஸ்ரேலின் ராணுவத் தளவாட உற்பத்தி ‘ஆறு நாட்கள் போர்’ நடந்த பிறகு பல மடங்கு அதிகரித்தது. பெருமளவில் ஏற்றுமதி வாய்ப்புள்ள தொழிலாக ராணுவத் தளவாட உற்பத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவுக்கு நேரடியாக விமானங்களை இஸ்ரேல் விற்காவிட்டாலும் பிரெஞ்சு நாட்டின் மிராஜ் விமானங்களில் தேவையான மாறுதல்களைச் செய்து அவற்றை நவீனமாக மாற்ற உதவியது. இஸ்ரேலின் ஸ்பைஸ் எனப்படும் நவீன குண்டுகள் பாலகோட் தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்டன என்று இந்திய ராணுவம் கூறியது. முதல் முறையாக அத்தகைய வகைக் குண்டுகளை இந்தியா பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பிற்காலத்தில் ‘மிராஜ் 5’ஐ இஸ்ரேலுக்கு பிரான்ஸ் வழங்கவில்லை. என்றாலும் அதன் மூல வடிவமைப்பைக் கள்ளத்தனமாகப் பெற்று இஸ்ரேல் புதிய ரக விமானம் ஒன்றை ஏற்படுத்தியது. அதற்கு நெஷெர் என்று பெயர். சிலர் பிரான்ஸ் மறைமுகமாக இஸ்ரேலுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டினர். இப்போது இஸ்ரேல் இந்தியாவுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைக்கு உதவ ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பயணியர் விமானங்களை மாற்றியமைக்கும் நுட்பத்தை அளிக்கவுள்ளது. இஸ்ரேலின் ஏரோஃபேஸ் இண்டஸ்ட்ரீஸ் இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை எச்.ஏ.எல் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளது.

ராணுவத்துக்கு அடுத்தப்படியாக மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்வது வளர்ந்தது. ஏனெனில் ராணுவத்துகாக உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களின் நீட்சியே பிற தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் காரணிகளாக உள்ளன என்பதை உலகளவில் நாம் காணலாம். இன்றைய இணைய உலகம் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனில் உருவானது என்பது நாம் அறிந்ததே. அதுபோல முதலில் வறண்ட பாலைவனத்தை விவசாயச் சோலைவனமாக ஆற்றுவதற்கு முன்னுரிமைக் கொடுத்து தனது உணவுத் தற்சார்ப்பைத் தீர்த்துக்கொண்ட இஸ்ரேல் அதன் பின்னர் ராணுவத்தின் மூலம் கண்டறியப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ஆரம்பித்ததது. குறிப்பாக மருத்துவக் கருவிகள், மின்னணுப்பொருட்கள், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், தொலைத் தொடர்ப்புக் கருவிகள் ஆகியவற்றின் உற்பத்தியில் கவனம் செலுத்தியது.

இதனிடையே 1980ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இஸ்ரேல் திரும்பிய பல மென்பொருள் வல்லுநர்கள் அமெரிக்க நிறுவனங்களான ஐ.பி.எம், இண்டெல் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் வெளிநாட்டுக் கிளைகளைத் துவங்கினர். அதாவது பின்னாட்களில் அவுட்சோர்சிங் எனும் முறைமை பேரளவில் வளர முதல் சுழிப் போட்டனர் எனலாம். கூடவே 1990களில் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய யூதர்கள் இஸ்ரேலின் இன்றைய தொழில்நுட்ப அதிவேக வளர்ச்சிக்கு அடிகோலினர். இன்று இஸ்ரேல் மின்னணு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அச் செயல்பாடுகளே முக்கியக் காரணம்.

இஸ்ரேலில் கனிம வளங்கள் குறைவு. துவக்க காலங்களில் ஒரு சில கனிமங்களை வைத்து ரசாயனப் பொருட்களை உருவாக்கி ஏற்றுமதி செய்தனர். இன்று அதன் வளமான தொழிலாளர் படை பல நவீனப் பொருட்களையும் தொழில்நுட்பங்களையும் ஏற்றுமதி செய்ய பக்கபலமாக உள்ளனர். இவற்றின் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பமும் கைத்திறனும் இஸ்ரேலுக்கு உள்ளேயே கிடைக்கின்றது என்பதுதான் முக்கிய அம்சம். மற்றொன்றையும் நாம் அறிய வேண்டும். இதர நாடுகளில் பொருளாதாரம் வளரும்போது கூடவே தொழில்துறையில் வேலை செய்வோர் எண்ணிக்கை குறையவே செய்யும். ஆனால் இஸ்ரேலில் இன்றும் சுமார் 25% தொழிலாளர்கள் தொழில் துறையில் பணியாற்றுகின்றனர். சேவைத்துறையில் அதிகம் பேர் பணியாற்றுகின்றனர் என்பது உண்மை. அதேநேரம் விவசாயத்தில் இயந்திரமயம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் காரணங்களைக் கண்டோம். ஆனால் சேவைத்துறையில் அதிக வாய்ப்பு இருந்தாலும் உற்பத்தித் துறையில் இப்போதும் தொழிலாளர் எண்ணிக்கை குறையாமல் உள்ளது வியப்பூட்டுவதாகும்.

கடந்த இருபதாண்டுகளாக தொழில் சார் உற்பத்தி பல துறைகளில் உலகளவிலான உற்பத்தியுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேறியுள்ளது. மருத்துவ மின்னணுவியல், விவசாய தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, ரசாயனங்கள், கணினி மென்பொருள் & வன்பொருள் அத்துடன் வைரம் வெட்டுதல் மற்றும் பட்டைத்தீட்டுதல் ஆகிய பல தொழில்களில் முன்னேறியுள்ளது. உயர் தொழில்நுட்பத் தொழில்களில் சுமார் 8% வளர்ச்சி சாதிக்கப்பட்ட ஆண்டுகளும் உண்டு. இந்தளவானது முன்னேறிய தொழில்மய (ஓ.இ.சி.டி) நாடுகளில் காணப்படும் அளவுக்கு தேசிய வருமானத்தில் 4.9 % ஐ ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட வளர்ச்சியாகும். ஐ.நாவின் நிபுணர் குழுவொன்று இஸ்ரேலின் இந்த ஆய்வு & மேம்பாட்டுத்திறனை உலகின் முதல் 10 நாடுகள் வரிசையில் வைத்துள்ளதாகத் தெரிவித்தது. இஸ்ரேலின் கல்வி நிலையங்களில் ஆய்வு& மேம்பாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தொழில்முனைவோர் நிதியுமே காரணங்கள்.

எதிர்பார்க்க இயலாத மற்றொரு வியப்பு இஸ்ரேல் உலகின் இரண்டாவது சேவைத்துறை ஏற்றுமதியாளர் என்பதாகும். பொதுவாக சேவைத்துறை உள்நாட்டு வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும். எனவே மற்ற துறைகள் போல் ஏற்றுமதிக்கு உகந்ததல்ல. ஆனால் கடந்த இருபதாண்டுகளாக இஸ்ரேல் மெதுவாக சேவைத் துறையிலும் சாதித்துள்ளது.

மேலை நாடுகளில் காணப்படும் இப்போக்கு இஸ்ரேலிலும் காணப்படுவது வியப்பு. ஏனெனில் அந்நாடுகளில் உற்பத்தித்துறையும் கடந்து சேவைத் துறை அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக பரிணமித்திருக்கும். ஆனால் இஸ்ரேலின் பெரும்பான்மை தொழிலாளர்கள் உற்பத்தி சார்ந்த, ராணுவம் போன்ற துறைகளில் பணியாற்றும் போது சேவைத் துறை இந்தளவு வளர்ந்திருப்பதுதான் வியப்பு. பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொழிலாளர் நலன் காக்கும் நடவடிக்கைகளாலுமே இச்சாதனை நிகழ்ந்ததாக அந்நாட்டின் அயல் வணிக அமைப்பான எஃப்.ஐ.சி.சி தெரிவிக்கிறது. அந்த அமைப்பு இஸ்ரேலின் தோற்றத்தை மாற்றும் விதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளோடு இணைந்து துறைவாரியாக ஏற்பட்ட வளர்ச்சிகளையும் நாம் காண வேண்டும்.

0

இஸ்ரேலைப் பொறுத்தவரை விடுதலை அடைந்த பிறகு பல பொருட்களை உடனடியாக உற்பத்தி செய்ய இயலாத நிலை. அதற்கான உள்கட்டமைப்புகள் இல்லாததே காரணம். பின்னர் தொழில் உற்பத்தியில் மேம்பட்டாலும் அயல்நாட்டு வர்த்தகம், உள் நாட்டில் நிதி மற்றும் வங்கிச் சேவை, போக்குவரத்து, தொலைத் தொடர்பு ஆகியன மேம்படுத்தப்படத் தேவை இருந்தது. இராணுவ வலைப்பின்னலால் தொலை தொடர்பு வளர்ந்தது. போக்குவரத்து தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிச் சேவைகள் பெரும்பாலும் அரசு சார்ந்த நிதியுதவிகளாகவே இருந்தன. அயல் நாட்டு வர்த்தகம் குறிப்பாக இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளே நடைமுறைக்கு தேவைப்பட்டன. ஏனெனில் உள்நாட்டில் நுகரப்படும் பொருட்கள், குறிப்பாக சொகுசுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால் அந்நிய செலாவணி இழப்புக் கூடும் என்பதால் பெருமளவு கட்டுப்பாடுகள் இருந்தன.

ஆரம்ப காலங்களில் இஸ்ரேலுக்கு வர்த்தகம் செய்ய அதிக நாடுகள் இல்லை. தங்களது உற்பத்தியை அமெரிக்கா, ஐரோப்பாவுக்கே அதிகம் ஏற்றுமதி செய்தனர். இதில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் அமெரிக்கப் பொருட்கள் இஸ்ரேலுக்குள் வந்தால் ஏராளமான வரிகளையும் அளவுக்கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டன. நட்பு நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் பல ஒப்பந்தங்களை இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக பல நாடுகளுடன் செய்து கொண்டது. இதனால் அந்நிய செலாவணி மிச்சமானது.

போக்குவரத்துத் துறையில் மானியத்துடன் இணைந்த கட்டண விகிதங்கள் இருந்தன. தனியாரிடம் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டு விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. ரயில் போக்குவரத்து நாடு முழுதும் இருக்கிறது. பின்னர் பல நாடுகளில் இருந்து மக்கள் குடியேறியதால் இட நெருக்கடியும் அதிகரித்தது. இஸ்ரேல் பரப்பளவில் சுமார் 470 கி.மீ நீளமும், 135 கி.மீ அகலமும் உடையது. இதில் தனியார் போக்குவரத்தையும் உள்ளடக்க வேண்டும். ஒரு கட்டத்தில் ஒரு கி.மீ க்கு நூறு கார்கள் வரையில் இருக்கும்படி அதிகரிப்பு நிகழந்தது. அமெரிக்காவில் கூட ஒரு கி.மீக்கு 40 கார்கள் மட்டுமே இருந்த நிலையில் இஸ்ரேலில் அதை விட இருமடங்கு (நால்வரில் ஒருவருக்கு ஒரு கார் என்றளவில்) இருந்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

விமான சேவைகளும் கூட, விடுதலை அடைந்தவுடன் துவங்கப்பட்டன. அரசு நிறுவனமான எல் அல் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் முதன் முதலில் தனது பயணத்தைத் துவக்கி இஸ்ரேலின் முதல் அதிபரான சையாம் வீஸ்மேனை ஜெனீவாவிலிருந்து டெல் அவிவ் நகரத்துக்கு அழைத்து வந்தது. பின்னர் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக இஸ்ரேல் ஏர்லைன்ஸ் உருவாகியது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

துறைமுகங்களைப் பொறுத்தவரை ஹாயிஃபா பெரியது மட்டுமின்றி முக்கியமான துறைமுகமாகும். தெற்குப்புறத்தில் இலாத் மற்றும் அஷ்டோட் என துறைமுகங்களும் உள்ளன. இவை தவிர டெல் அவிவ் (தலைநகராக செயல்படுகிறது) ஹடேரா, அஷ்கேலோன் துறைமுகங்களும் உள்ளன. டெல் அவிவ் தற்போது பொழுது போக்கு மற்றும் அங்காடிகளுக்கான துறைமுகமாக செயல்படுகிறது. கண்டெய்னர் துறைமுகங்கள் ஏற்பட்ட பிறகு டெல் அவிவ் துறைமுகம் தனது பயனை இழந்தது.

ஹாயிஃபா இருப்பதிலேயே பெரியது. ஆண்டு தோறும் ஏறக்குறைய 30 மில்லியன் டன் சரக்குகளையும், 20 லட்சம் பயணிகளையும் கையாள்கிறது. சமீபத்தில் ஹாயிஃபா துறைமுகத்தில் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை இந்தியாவின் அதானி குழுமம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய – இஸ்ரேல் உறவில் முக்கியமான அம்சமாக இதைக் கருதுகிறார்கள்.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் – இந்திய இராணுவம் அங்கு போர் புரிந்துள்ளது. அங்கு இந்திய வீரர்களின் கல்லறைகளும் உள்ளன. இந்தியா தனது கடற்படையை அங்கே கொண்டு நிறுத்தவும், இதன் மூலம் மத்தியத் தரைக்கடல் பகுதியில் இந்தியா வலிமை பெறவும் வழி ஏற்பட்டுள்ளது. ஹாயிஃபா இஸ்ரேலின் தொழில் வளர்ச்சிக்கு மிக அதிகமாகப் பங்களித்துள்ளது. இங்கிருந்து சுற்றுலா கப்பல்கள் மத்தியத் தரைக்கடல் பகுதிக்குள் சென்று உலகம் முழுவதையும் இணைக்கிறது. அஷ்டோட் துறைமுகத்தில் பல்வேறு பொருட்களைக் கையாளும் வகையில் தனித்தனி அமைப்புகள் உள்ளன.

இஸ்ரேலின் ரயில் போக்குவரத்து அரசு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. ஏறக்குறைய 1, 200 கி.மீ தூரத்துக்கு ஸ்டாண்டர்ட் காஜ் எனும் பாதையை அமைத்துள்ளது அந் நிறுவனம். அதிக மக்கள் நெருக்கடி இருக்கும் கடற்கரைப் பகுதிகளில்தான் அதிகம் பாதைகளைப் பெற்றுள்ளது. மொத்தமாக 66 ரயில் நிலையங்கள் இருப்பதாகத் தெரிகிறது. சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் ரயில் சேவையைப் பயன்படுத்துவதால் தோராயமாக 7 கோடி பயணிகள் ரயில் சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்புண்டு.

தொலை தொடர்பு இஸ்ரேல் பகுதிகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போதே 1920களில் நிறுவப்பட்டுவிட்டது. விடுதலை அடைந்த பிறகு மெள்ள வளரத் துவங்கிய இத்துறை இன்று பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் தொலைபேசி இணைப்பு கிடைக்க சுமார் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை, 1980களின் மத்தியில் பெசக் (Bezeq) எனும் அரசு நிறுவனத்தை ஏற்படுத்தும் வரையில் நீடித்தது. அதன் பிறகு இரண்டாவது இணைப்பைப் பெறும்படி மக்களைத் தூண்டும் விளம்பரங்களை வெளியிட வேண்டிய நிலை.

பெசக் 1990களில் இணைப்புக்காகக் காத்திருக்கும் நிலையை மாற்றியதோடு, தொழில்நுட்ப மேம்பாட்டையும் செய்தது. இன்று அடிப்படைத் தொழில்நுட்பமாக மாறியுள்ள கண்ணாடி இழைத் தொழில்நுட்பம் அன்றே இஸ்ரேலில் அறிமுகமாகிவிட்டது. கடலுக்கு அடியில் கண்ணாடி இழைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், செயற்கைக்கோள் தொடர்புகளைப் பயன்படுத்தியும் உலகம் முழுதும் தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்தினர். 1980களின் மத்தியிலேயே இஸ்ரேலில் முதல் மொபைல் நிறுவனம் துவங்கியாகிவிட்டது. முதலில் கட்டணம் அதிகம் என்றாலும் அடுத்தடுத்து புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைய வணிகம் பெருகியது. ஏராளமான புதிய தொழில்நுட்ப வசதிகளை இஸ்ரேலியத் தொலை தொடர்புத் துறை வழங்க முயற்சி செய்தது. இதில் வீடியோ ஆன் டிமாண்ட் போன்றவையும் அடங்கும்.

சாதாரணமாக ஐ எஸ் டி என் இணைப்புகளை இஸ்ரேல் குடிமக்கள் பெறும் நிலையும் இருந்தது. இவை சொல்லும் செய்தி ஆண்டிராய்ட் செல்ஃபோன்கள் தரும் வசதிகளை சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேலிய நிறுவனங்கள் செய்து வைத்திருந்தன என்பதே. தொலை தொடர்பு வளர்ச்சி இஸ்ரேலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக மட்டுமல்ல; உலக நாடுகள் பலவற்றில் அத்தொழில்நுட்பம் ஏற்படுத்தும் வளர்ச்சிக்கும் காரணமாகியது என்றால் மிகையில்லை.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *