இஸ்ரேல் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த உள்நாட்டு உற்பத்தி, தற்சார்பு, புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிதல், வெளிநாட்டு வர்த்தகம் ஆகியற்றை முன்னெடுக்கிறது என்பதைக் கண்டோம். அவ்வாறு செய்யும்போது இரண்டு விவகாரங்களை நாம் கவனமாக கணக்கில் கொள்ளவேண்டும். அரசு செலவழிக்கும் நிதிக்கு ஈடாக வளர்ச்சிப் பலன்கள் உள்ளனவா? மானியம் அளித்தால் உதவி பெற்றவர்கள் லாபம் ஈட்டி அரசின் உதவிக்கு ஈடு செய்கின்றனரா? வெளிநாட்டு வர்த்தகம் இஸ்ரேலுக்கு சாதகமாக இருக்கிறதா? இக்கேள்விகளுக்கு விடை இல்லை என்பதுதான். இஸ்ரேலின் வெளிநாட்டு வர்த்தகம் அமெரிக்காவின் தாராளத்தாலும், வெளிநாடு வாழ் யூதர்களாலுமே நிலைப்பெற்றிருந்தது. இன்று ஏற்றுமதி பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் நிலைமை சாதகமாக இருக்கிறது. இஸ்ரேலின் வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும்போது ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
இஸ்ரேல் தனது வர்த்தகத்தை உலகம் முழுதும் பரப்பியிருக்கிறது. அனைத்துக் கண்டங்களிலும் அதற்கு வர்த்தகப் பங்காளிகள் உள்ளனர். (காண்க படம்). ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்து தனது செலாவணி நிலை பாதகமாகாமல் கவனித்துக் கொண்டனர். முதலில் 1948 முதல் விவசாயம் முக்கியப் பங்கு வகித்தது. கடந்த 2020-களில் விவசாய ஏற்றுமதி 2% மட்டுமே. ஒரு கட்டத்தில் 10 பெரு நிறுவனங்கள் இஸ்ரேலின் ஏற்றுமதியில் ஏறக்குறைய பாதியைப் பங்களித்திருந்தன. அந்தளவுக்கு மின்னணு, சேவைத் துறைகளின் ஏற்றுமதி அதிகரித்திருந்தது. இன்று தகவல் தொழில் நுட்பம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது. அருகிலுள்ள அரபு நாடுகள் இன்றுவரை இஸ்ரேலிடம் வர்த்தகம் செய்வதில்லை (இஸ்ரேலிடம் தூதரக உறவுள்ள நாடுகள் தவிர) பாலஸ்தீனப்பகுதிகளுக்கு ஏற்றுமதி – இறக்குமதி நடைபெறுகிறது. இந்தியாவிடமும் 3-5% அந்நிய வர்த்தகம் செய்கிறது இஸ்ரேல். சீனா, அமெரிக்கா சில ஐரோப்பிய நாடுகள் என அதன் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் பரவியுள்ளனர்.
அந்நிய வர்த்தகம் தவிர இஸ்ரேலின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிப்பதில் முக்கியத்துவம் பெற்றது எரிசக்தி. துவக்கத்தில் இஸ்ரேல் தனது எரிசக்தித் தேவைகளை இறக்குமதி மூலமே நிறைவேற்றிக் கொண்டிருந்தது. இரண்டு போர்களில் அராபியர்களை வென்றதால் 1970 களின் மத்தியில் ஏற்பட்ட எண்ணெய்ச் சிக்கலினால் தனது அந்நியச் செலாவணியில் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது. பின்னர் எகிப்திடம் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு அங்கிருந்து எரிபொருளை வாங்கியது. தனது எரிசக்தித் தேவைகளுக்காக பெரும் செலவு செய்து அகழ்வாய்வுப் பணிகளை நடத்தியது. இதன் விளைவாக ஏராளமான எரிவாயுப் படிமங்களைக் கண்டறிந்தது. அதன் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
ஆரம்பம் முதலே சூரிய மின் ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததால் வீடுகளில் மின் பயன்பாட்டுக்குப் போதுமான மின் ஆற்றல் கிடைக்கிறது. தற்போது 8% அளவில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் இஸ்ரேல், வரும் ஆண்டுகளில் 30% வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. தனது மின் தேவைக்காக நிலக்கரியை அதிகம் நம்பியிருக்கும் இஸ்ரேல் 2025-ல் சூழல் மாசினைக் கட்டுப்படுத்தும் விதமாக அனல்மின் நிலையங்களை மூடப் போகிறது. அதன் பிறகு எரிவாயுவும் சூரிய மின்சாரமுமே முக்கிய எரிசக்தி ஆற்றல்களாக நிலைபெறும். சூரிய மின் ஆற்றலை உருவாக்கும் திறனை அதிகரிப்பதோடு எங்கெல்லாம் சாதனங்களை நிறுவ முடியுமோ அங்கெல்லாம் நிறுவுவதும் நோக்கமாக உள்ளது. ஐரோப்பாவுடனும், எகிப்து மற்றும் ஜோர்டனுடனும் எரிசக்தியைத் தடங்கள் வழியாக பரிமாறிக்கொள்ளும் யோசனையும் உண்டு என்கின்றனர் நிபுணர்கள். இஸ்ரேல்மட்டுமின்றி சவூதி அரேபியாவும் சூரிய மின் ஆற்றலை மேம்படுத்துவதில் பேரார்வம் கொண்டுள்ளது.
இஸ்ரேலில் அணுமின் நிலையங்களும் உண்டு. ஆனால் அவை ஆய்வுப் பணிகள் என்ற வகைப்பாட்டின் கீழ் இயங்குவதால் அவற்றை மின் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதில்லை. அதற்கான சர்வதேச அணுசக்தி கழகத்தின் அனுமதியும் இல்லை. இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள் சர்ச்சைக்குரியவையே. பல காலம் அமெரிக்காவுக்கே தெரியாமல் அணு மின் நிலையங்களை அமைத்துவந்தனர். இதற்கு ஃபிரான்ஸ் உதவி வந்தது. எரிசக்தி வளங்கள் கூடுதலாகத் தேவை எனும் போது அணுமின் நிலையங்களை இயக்க முடியவில்லை.
சாலைப்போக்குவரத்தும் இஸ்ரேலில் சிறப்பாகவுள்ளது. மொத்தமுள்ள 18,000 கி.மீ பரப்பில் 449 கி.மீ கட்டுப்பாடற்றச் சாலைகள். சைக்கிள் பாதைகள் எனத் தனியாக நாடு முழுதும் இணைக்கும் பாதைகள் உள்ளன. தனித்து வேகமாகச் செல்ல பேருந்துப் பாதைகளும் உள்ளன. தனியாரின் “டாக்ஸி” சேவைகளும் உண்டு. இவை நாடு முழுவதையும் இணைக்கின்றன. நம்மூரில் இருப்பது போன்று டெல் அவிவ்வில் மெட்ரோ சேவைகளும் உண்டு. அவற்றை லைட் டிரெயின் என்று அழைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சுரங்கப்பாதைகளில் இயங்குகின்றன. ஏற்கெனவே சொன்னது போல இஸ்ரேலில் 47 விமான நிலையங்கள் உண்டு. பென் குரியன் சர்வதேச விமான நிலையமே உலகத்தை இணைக்கிறது.
இஸ்ரேலின் வளர்ச்சி உள்நாட்டு உற்பத்தியுடன் இறக்குமதி, சுற்றுலா போன்ற அயல் தொழில்களின் வளர்ச்சியிலும் அடங்கியுள்ளது. இஸ்ரேலில் பல புராதன, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மட்டுமின்றி புதிய தொழில் கேந்திரங்கள், துறைமுகங்கள் ஆகியனவும் ஈர்க்கும் இடங்களாக உள்ளன. இறந்த கடல், சீசரியா போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவை.
இஸ்ரேல் கைப்பற்றி வைத்துள்ள பகுதிகளுக்கும் கூட சுற்றுலாச் சேவைகள் உண்டு! இஸ்ரேலியர்கள் உலகம் சுற்றி வரக்கூடியவர்கள். உள்நாட்டில் ஈட்டப்படும் சுற்றுலா வருவாயைவிட வெளிநாட்டில் இஸ்ரேலியர்கள் செலவழிப்பது அதிகம். ஏறக்குறைய 8 மில்லியன் பேர் வெளிநாடுகளுக்கு சென்றாண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 3 மில்லியன் பேர் இஸ்ரேலுக்குள் வந்துள்ளனர். கொரோனா பொது முடக்கத்துக்குப் பின் இன்னும் பழைய நிலை திரும்பவில்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
(தொடரும்)