இஸ்ரேலின் வளர்ச்சியில் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்பட வேண்டியவை வறுமைக் குறைப்பு, வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவையே. விடுதலை பெற்ற 1948-லிருந்து 1960-கள் வரையில் பல கட்டுப்பாடுகள் இருந்ததைப் பார்த்தோம். ஜெர்மனியின் படுகொலை இழப்பீடுகள், அந்நிய மண்ணில் வாழ்ந்த யூதர்கள் (பெரும்பாலும் அமெரிக்கா) அனுப்பி வைத்த நிதி என இரு முக்கிய வழிகளில் வருவாய் கிடைத்ததால் பொருளாதாரம் வேகமெடுத்திருந்தது. ஆனால், யோம் கிப்பூர் போர் அதை அடுத்த எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றாலும், 1980-களில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தாலும் வீழ்ந்தது. பின்னர் 1990-களில் ரஷ்யாவிலிருந்து இஸ்ரேல் வந்த யூதக்குடியேற்றங்களால் ஏற்பட்ட வளர்ச்சி இன்று வரை தொடர்கிறது.
ஆயினும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று வேறு கதையையும் சொல்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலிய தேசியக் காப்பீடு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இஸ்ரேலில் 5 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்வதாகத் தெரிவித்தது. பொது முடக்கம், ஏற்கனவே அரசியல் நிலைப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்த வறுமையையும் வாழ்க்கைத்தரத்தையும் மேலும் வீழ்த்தியது. பொது முடக்கத்தால் அடித்தட்டு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கியதால் ஓரளவே நிலைமையை மேம்படுத்த முடிந்தது.
இஸ்ரேலில் பழமைவாத யூதர்களின் மத்தியில் காணப்படும் வறுமையே அதிகம் என்கிறது ஆய்வு. அராபியர்கள் மத்தியிலும் கணிசமான வறுமை உள்ளது. ஏறக்குறைய எட்டு லட்சம் அராபியர்கள் வறுமையில் உள்ளனர். இதர இஸ்ரேல் மக்களில் ஏறக்குறைய 20 லட்சம் பேர் வறுமையில் உள்ளனர். யூதர்களில் சுமார் 18% பேர் வறுமையில் இருப்பதாகக் கூறுகிறது அறிக்கை. இஸ்ரேலின் மக்கள் தொகை ஒரு கோடியை எட்டும் நிலையிலுள்ளது. இதன் காரணமாக வளர்ந்த நாடுகளில் வறுமை அதிகமுள்ள நாடுகளின் கீழ் இரண்டாம் இடத்தை இஸ்ரேல் பெற்றுள்ளது. இதைவிட மூன்றில் ஒரு பங்கு ஆண்களும் பெண்களும் தங்களை வறுமையில் வாழ்பவர்களாக கருதுகின்றனராம்.
அரசு மக்களிடையே காணப்படும் வறுமையை மறுக்கவில்லை. அவற்றைத் தீர்க்க வழிமுறைகளை ஆராய்வதாகக் கூறியுள்ளது. பொதுவாக மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்திக் கொடுப்பதோடு அவர்களுக்கு கல்வியும் பயிற்சியும் அளித்தால் அது வறுமைக்குறைப்புக்கு வழிவிடும் என்று கருதப்படுகிறது. இதற்கு வழிவிடும் வகையில் சட்டத் திருத்தங்களும் தேவை என்றும் சுட்டப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஏறக்குறைய இஸ்ரேலிய நாணயத்தில் 2,200 ஹிட்லரின் வதை முகாம்களில் இருந்தவர்களுக்கும் (சுமார் 2,00,000 பேரில் 25% வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்) மாற்றுத் திறனாளிகளுக்கு 2,342 ஷெகல்களும் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படுகின்றன. இவை எவ்விதத்திலும் போதுமானவையல்ல. அரசு மலிவு விலை வீடு உட்பட பல நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது.
வறுமையைப் புரிந்துகொள்ள மற்ற விவரங்களையும் காணவேண்டும். உணவுப் பொருட்களை வீணடித்தல் என்பது இஸ்ரேலில் அதிகம் என்று இஸ்ரேலின் வறுமைக்கு எதிராகப் போராடும் தன்னார்வ சங்கமான லேகட் சொல்கிறது. வீணடிக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு இஸ்ரேலின் 37% உணவு உற்பத்தி ஈடாகும் என்று லேகட் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த 2.6 மில்லியன் டன் உணவுப் பொருட்களில் பாதியளவு இருந்தாலே உணவுத் தட்டுப்பாட்டை (வறுமையின் அளவை) நீக்க முடியும் என்கிறது லேகட்.
உணவு வீணடிப்பு தொடர்பாக சட்டங்களை ஏற்படுத்துவதில் இஸ்ரேல் மோசமாக நடந்துகொள்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். இப்போது வீணாகும் 20% உணவுப் பொருட்களை முறையாகப் பகிர்ந்தால் இஸ்ரேலின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்கின்றனர் வல்லுநர்கள். இதற்கு இஸ்ரேல் நாணயத்தில் 1.1 பில்லியன்கள் மட்டுமே செலவாகும் என்றும் சுட்டுகின்றனர். இஸ்ரேலின் 6,33,000 குடும்பங்கள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர், சமூக ஆர்வலர்கள்.
இஸ்ரேலின் முதல் 25 ஆண்டுகாலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் நன்கு உயர்ந்து வந்துள்ளது. நவீன வாழ்க்கைத் தர அடையாளச் சின்னங்களான வீட்டுப் பயன்பாட்டு மின் கருவிகள், கார்கள் போன்றவற்றை வைத்துள்ள குடும்பங்களின் விழுக்காடு ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கங்களுக்கு உயர்ந்துள்ளது. புத்தாயிரத்தில் இஸ்ரேலிய வாழ்க்கைத் தரம் முன்னேறிய நாடுகளின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடத்தக்கவகையில் இருந்தது. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னால் மக்களின் கடும் எதிர்ப்பினால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசு மேற்கொள்ளத் துவங்கியது. உயர் வாழ்க்கைத் தரத்துக்குத் தடையாக இருப்பது வாழ்க்கைச் செலவுகளே எனன்று சொன்னது; ஏகபோகமாக நடைபெற்ற பல்வேறு தொழில் நிறுவனங்களைப் பிரித்தும், இறக்குமதி தடைகளை அகற்றியும் இஸ்ரேலிய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்தது.
உடல் நலம், மருத்துவம் ஆகியவற்றில் இஸ்ரேல் மிகவும் மேம்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. உலகின் நான்காவது உடல் நலச் சேவையை அளிக்கிறது இஸ்ரேல் என்று அது கூறியுள்ளது. மிகச் சிறந்த உள்கட்டமைப்பை இஸ்ரேல் பெற்றுள்ளதாக உலகளவில் குறிப்பிடுகிறார்கள். ஓர் இஸ்ரேலிய மருத்துவர் சராசரியாக ஒரு மாதத்தில் 5000-6000 அமெரிக்க டாலர்களை ஈட்டுகிறார் எனவும் கூறப்படுகிறது. உலகில் அதிக ஆயுள் கொண்ட தனி நபர்களின் விழுக்காடும் இஸ்ரேலில்தான் அதிகமாம். ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் ஏறக்குறைய 83 என்கின்றனர்.
ஏற்கனவே கூறியதுபோல கல்விக்கு அதிகம் செலவழிக்கும் நாடு இஸ்ரேல். அதிகமாக மானியம் அளிக்கப்பட்டு உயர்க்கல்வி வரை தடையின்றிக் கற்கும் வசதி இஸ்ரேலிலுள்ளது. கல்வியே பொருளாதார முன்னேற்றத்தின் ஊக்கி என்பதை இஸ்ரேலியர்கள் உணர்ந்துள்ளனர். இஸ்ரேலில் அரசு, தனியார் மற்றும் அராபிய கல்வி நிறுவனங்கள் எனப் பிரிவுகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதாகக் கற்கும் வகையில் கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல கல்வி நிறுவனங்கள் ஆசியாவின் முதல் தர கல்வி நிறுவனங்களாகப் பட்டியல் இடப்பட்டுள்ளன. கல்வி கற்றவுடன் ராணுவச் சேவைக்கும் தயாராக வேண்டும்.
(தொடரும்)