Skip to content
Home » இஸ்ரேல் #19 – சமூக முன்னேற்றம்

இஸ்ரேல் #19 – சமூக முன்னேற்றம்

இஸ்ரேல் - சமூக முன்னேற்றம்

இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது எம்மாதிரியான சமூக அமைப்பு அங்கு அமையும் என்பது குறித்தெல்லாம் பெரிய கவலைகள் எவருக்கும் இருப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. முதல் இருபத்தி ஐந்து ஆண்டுகள் போர்ச்சூழலில் கழிந்தது. அக்காலத்தில் சமூக மாற்றம், முன்னேற்றம் என்பது மேம்போக்காகவே இருந்தது. சிறிதளவே மேற்கத்திய அல்லது நவீன பாணியிலான வாழ்க்கை முறை புழக்கத்தில் இருந்தது. ஏனெனில் யூத மத வழியேதான் நாட்டுப்பற்றும், இனப்படுகொலைகளுக்குப் பிறகு தங்களை காத்துக்கொள்வதற்கும் வாய்ப்பிருந்தது.

யூத நாடு – யூத இனம் எனும் இருமுகங்கள் இருந்தாலும் பல ஐரோப்பிய நாடுகளைப் போல ஓரினம், ஓர் மதம் எனும் அடிப்படையிலேயே இஸ்ரேலும் அமைந்திருந்தது. சமூகம், பண்பாடு ஆகியன பல்வேறு உலகப் பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்த யூதர்களால் மாறுபட்டிருந்தாலும் யூத அடையாளத்தை மேம்படுத்தும் வடிவங்களே முன்னுரிமை பெற்றன. இது அழிவின் விளிம்புக்குள் சென்ற எந்தவொரு சமூக/இனக் கூட்டத்துக்கும் பொருந்தும்.

பழமைவாத யூதம் செல்வாக்கு பெற்றிருந்ததால் ஆட்சியாளர்களுக்குத் தங்களது கொள்கைகளை வடிவமைத்துக்கொள்ள ஏதுவாக இருந்தது. பழமைவாத யூதமே அரசியலின் அடையாளமாக இன்றைக்கும் உள்ளது.

யோம் கிப்பூர் போருக்குப் பிறகு பெரிய போர் எதையும் இஸ்ரேல் சந்திக்கவில்லை. அமைதியும் தொடர் வளர்ச்சியும் சமூகத்தின் போக்கைச் சற்று மாற்றியமைத்தது. மக்கள்தொகைப் பெருக்கம், ரஷ்யாவிலிருந்து வந்த புதிய யூதக் குடியேற்றங்கள், பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் ஆகியன சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. யூத சமூகமானது இன்று பலவகையான சமூகக் குழுக்களை உள்ளடக்கியதாக மாறியுள்ளது.

சமூகப் பொருளியல் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் உருவாகும். இது இயல்பு. சமூகப் பண்பாட்டு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் கட்சிகளும் இஸ்ரேலில் உருவாகியுள்ளன என்பது எவ்வாறு சமூக வேறுபாடுகள் உருவாகியுள்ளன என்பதைக் காட்டுகிறது. மகளிர் மேம்பாடு, ஓர் பாலினச் சமூகம் ஆகியன வெளிப்படையாகத் தங்களது இருப்பையும் உரிமைகளையும் வலியுறுத்தி இயக்கம் காண்கின்றனர்.

உலகமயமாக்கல் வேறு சில பிரச்னைகளை இஸ்ரேல் முன் நிறுத்தியது. குறிப்பாக அது நாள் வரை தற்சார்பு பொருளாதாரமாக இருந்த இஸ்ரேல் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யத் துவங்கியது. மேலும் தனது பொருட்களை ஏற்றுமதி செய்யும் பொருட்டு புதிய நிறுவனங்களையும் அமைக்கத் துவங்கியது. இந்நிறுவனங்களில் பணியாற்ற ஏற்கெனவே இருந்தத் தொழிலாளர்களின் திறன் போதாததால் வெளி நாடுகளில் இருந்து பணியாளர்களை அழைத்து வரத் துவங்கியது. இத்தாலி, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் நைஜீரியாவிலிருந்து பணியாளர்கள் இஸ்ரேலுக்குள் வந்தனர். பாலஸ்தீனர்களை இப்பணிகளில் பயன்படுத்துவதில் ஆபத்து இருந்ததால் அவர்கள் தவிர்க்கப்பட்டனர்.

உள்ளூர் யூதர்கள் மத்தியில் திறன் பற்றாக்குறையோடு பலர் தொழில் முனைவர்களாக இருந்ததால் உற்பத்தியிலோ இன்ன பிற பிரிவுகளிலோ ஈடுபட இயலாதிருந்தது. தற்சார்புப் பொருளாதாரமாக இருந்த காலத்தில் இருந்த இறுக்கமான சமூகக் கட்டமைப்பு தாராளவாதக் காலங்களில் மாறிப்போனது. மேலும் சமூக ஜனநாயகமயமாக்கல் கட்டாயமானது. இம்மாற்றங்கள் இஸ்ரேலைப் பிற நாடுகளுக்கு இணையான நவீன சமூகப் பண்பாட்டுக் கட்டமைப்புகளைக் கொண்ட நாடாக மாற்றிக்காட்டியது.

தனி நபர்களின் பழக்கவழக்கங்களிலும் மாறுதல்களைக் கொண்டு வந்தது காலம். குடிப்பது யூதர்களின் மத்தியில் அதிகம் அறியப்படாதது. மதுப்பழக்கம் இப்போது பரவலாகிவிட்டது. குடியினால் ஏற்படும் விபத்துகளும் அதிகமாகிவிட்டன. உலகமயமாக்கலில் தங்களுடைய பங்கு என்ன என்பது குறித்து இஸ்ரேலிய சமூகத்தின் முன் கேள்வி ஏதும் எழும்பவில்லை. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போவது அங்குள்ள நிறை , குறைகளைத் தங்களது அமைப்புடன் ஒப்புநோக்கவும் கூடப் பயன்படும் என்பதை இஸ்ரேலியர்கள் உணர்ந்தாலும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோர் உயர் நடுத்தர, அதற்கு மேலுமுள்ள வசதி படைத்தோரே. இவர்கள் படித்த, வசதி படைத்த யூதப் பிரிவினராக இருக்கிறார்கள்.

மற்றொரு யூதப் பிரிவினர் திறன் குறைந்த வேலைகளைச் செய்யும், அதிகமாக மரபு வழி மதிப்பீடுகளைக் கொண்டுள்ள குறைந்த வருவாய்ப் பிரிவினர். இந்த இரண்டு வகைகளில் அதிகமாகப் பழமைவாதம் பேசும் இஸ்ரேலியக் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் குறைந்த வருவாய்ப் பிரிவினரே. ஏழ்மை நிலையில் அதிகம் இருப்போர் மத நூல்களைப் படிப்பதை மட்டுமே செய்து வரும் கடும் போக்கு யூதர்கள். மற்றொரு ஏழைப் பிரிவினர் அராபிய இஸ்லாமியர்கள். இப்படி இருக்கும் நிலையில் சமூக மாற்றம் என்பது உடனடியாக ஏற்படும் வாய்ப்பு கிடைக்காது.

வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் தங்களுடன் ஒப்பு நோக்கும் போக்கு ஏழை, எளிய யூதர்களிடையே இருக்கிறதா எனத் தெரியவில்லை. வெளியுலகை ஏற்காத போக்கும் அதிக நாள் நீடிக்க முடியாது. அரசின் உதவித் தொகை எப்போதும் கிடைக்காது. மீண்டும் அராபியர்களுடனோ ஈரானுடனோ போர் செய்யும் சூழல் வந்தால் அதன் தாக்கம் இஸ்ரேல் சமூகத்தில் அழுத்தமாக அமையும். ஏனெனில் ராணுவத்தில் இணைய மாட்டோம் என்றும், உழைக்காமல் மதக் கல்வியை மட்டுமே சார்ந்திருப்போர் எண்ணிக்கையும், தங்களை அராபியர்களாகவே எண்ணிக் கொள்ளும் சிறுபான்மை இஸ்லாமியரும் பொருந்தாத மக்கள் கூட்டமாக இருப்பது இவையெல்லம் இஸ்ரேலின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும். இவர்கள் இஸ்ரேல் மக்கள் தொகையில் ஏறக்குறைய 20% விழுக்காட்டினர். வறுமை, வேலையின்மை, சமூக முன்னேற்றமின்மை எனப் பலத் தளங்களில் பின் தங்கியிருப்போரின் இவ்வளவு பெரிய எண்ணிக்கை, வெறும் ஒரு கோடிப் பேருள்ள நாட்டுக்குப் பெரும் இடைஞ்சல்.

பெண்கள் நிலை

இஸ்ரேல் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் நாடாகவுள்ளது. இஸ்ரேல் மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதியைக் கொண்டுள்ளனர் பெண்கள். அரசியல் பங்கேற்பு முதல் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்களிக்கிறார்கள். ஸியோனிசக் காலத்தில் பெண்கள் தங்களுக்கென்று தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கி புதிய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் அனைத்துவிதமான உரிமைகளுக்கும் வழி செய்து கொண்டனர்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு (1919) உலகிலேயே பெண்களுக்கு என்று ஏற்பட்ட முதல் அரசியல் கட்சியும் அதுதான். விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் சமூகத்தில் பெண்களின் நிலை முழுமையாக விடுதலை கொண்டதாக இல்லை என்கின்றனர் பெண்ணியச் சிந்தனையாளர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் ஆண்கள் ஒப்புக்கொண்டால்தான் மணவிலக்கு பெற முடியும் என்பது பெண்களுக்கு எதிரானது என்கின்றனர்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டப்படி தவறு என்கிற தீர்ப்பால் கடும் அதிர்ச்சிக்குள்ளானவர்கள் இஸ்ரேலியப் பெண்கள். இஸ்ரேலில் தேவையற்ற கருவைக் கலைக்க சட்டப்படி வழியுண்டு. இருப்பினும் தகுந்த காரணம் சொல்லப்பட வேண்டும். ஆனாலும் பழமைவாத யூத அமைப்பின் பெண்கள் பலர் யூதமதத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு கருக்கலைப்பு பல நேரங்களில் இன்றியமையாதது என்பதை அறிவார்கள் என்கின்றனர்.

இஸ்ரேலுக்கு அருகிலுள்ள அரபு நாடுகளுடன் ஒப்பிடும் போது இஸ்ரேலிய பெண்கள் அதிகளவில் உரிமைகளுடன் உள்ளனர் என்பதில் ஐயமில்லை. பெண்களுக்கு எதிரான பாரபட்சம் சட்டப்படி தவறு. குடும்ப வன்முறைக்கு எதிரான தேசிய திட்டமும் செயல்பாட்டிலுள்ளது.

பெண்களைப் போலவே தனிச் சமூகமாக தங்களை அழைத்துக்கொள்ளும் ஓர்ப்பால் இனத்தவரின் இருப்பு இஸ்ரேலில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பழமைவாத இஸ்ரேலிய மக்களின் தாக்குதலுக்கு அவர்கள் ஆளாகின்றனர். பன்னாட்டு அளவில் தனது பன்முக சமூக அமைப்பையும், சட்டப்படியான உரிமைகளையும் பாதுகாக்கும் நாடாக இஸ்ரேல் இருப்பதை பிரதமர் முதல் அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டெல் அவிவ் நகரில் ஓரினச் சேர்க்கையாளர் மாநாட்டைக் கூட்டுகிறது இஸ்ரேல். உலகம் முழுவதும் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் இங்கு கூடுகின்றனர். இருப்பினும் சமூகப் பன்முகத்தன்மை என்பது முன்னேற்றம் காண வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வோரும் உள்ளனர்.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *