Skip to content
Home » இஸ்ரேல் #20 – அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பு

இஸ்ரேல் #20 – அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பு

இஸ்ரேல்

இஸ்ரேலில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஏறக்குறைய 5-6 முன்னணிக் கட்சிகளை நீங்கள் குறிப்பிடலாம். ஆனால் ஏறக்குறைய 40 அரசியல் கட்சிகள் உள்ளன எனக் கூறப்படுகிறது. அவை தங்களின் கொள்கைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைக்குப் பின்னர் பல காலம் மாபாய் கட்சியே அரசமைத்து வந்தது. தொழிலாளர் கட்சியாக அது பரிணமிக்கும் வரையில் இக்கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்து வந்த பென் குரியன் இக்கட்சியை வழி நடத்தி வந்தார்.

ஆரம்ப காலங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்ததை நாம் முன்னர் கண்டோம். எனவே கூட்டணி அரசியல் நடைபெற்றது. ஆனால் 1960களின் இறுதியிலும், 1970களின் ஆரம்பத்திலும் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தொழிலாளர் கட்சியும், லிக்குட் கட்சியும் தனித்தனியே பலம் பெற்று மோதிக் கொண்டன. யோம் கிப்பூர் போரினை அடுத்து லிக்குட் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அன்று முதல் லிக்குட் கட்சியின் வலது சாரி அரசியலே இஸ்ரேலில் முதன்மைப் பெற்று வருகிறது.

இஸ்ரேலின் அரசியல் கட்சிகளை மூன்று பெரிய வகைப்பாட்டுக்குள் இடுகிறார்கள். ஒன்று தொழிலாளர் கட்சி, மிதவாத-சீர்திருத்தம் கடைசியாக மத அடிப்படையிலான கட்சி. இந்த மூன்று வகைகளைத் தவிர்த்து பெண்ணியக் கட்சிகள், பசுமைக் கட்சி போன்ற கோட்பாட்டு ரீதியிலான கட்சிகளும் இருக்கின்றன. பொதுவுடமைக் கட்சிகள் இப்போதும் இருக்கின்றன. வலது சாரி கட்சிகள் மேலும் பரிணாமம் பெற்று தீவிர வலது சாரிகள் எனும் நிலைப்பாட்டுக்குள் வந்துவிட்டன. இன்றைய அரசை வலது சாரி அரசுகளிலேயே அதிகபட்ச வலதுசாரி அரசாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேலின் நாடாளுமன்றம் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படும் 120 இடங்களைக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் தாங்கள் பெறுகின்ற வாக்கு விகிதங்களின் அடிப்படையில் பிரதிநிதிகளைப் பெறுகின்றனர். ஆம், இஸ்ரேலில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளது. நம் நாட்டில் உள்ளது போல் இல்லாமல் அரசியல் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதனால் கூட்டணி அரசு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவுள்ளது. எந்தவொரு கட்சி 30 இடங்களுக்கு மேல் பெறுகின்றதோ அக்கட்சியே ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருக்கிறது. முரண்பட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட சில நேரங்களில் கூட்டணி அமைக்கின்றன. ஆனால் அக்கூட்டணி நீடிக்காது. எனவே தேர்தல் என்பது ஒவ்வொரு ஆண்டும் கூட நிகழும் ஒன்றாகிவிட்டது.

கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளில் (1999 முதல்) 11 க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஒருமுறை முன்னாள் பிரதமர் கோல்டா மேயர் இஸ்ரேலில் 3 மில்லியன் பிரதமர்கள் உள்ளனர் என்றார். இந்த நிலையற்றத் தன்மையைக் கூட மக்களாட்சியின் முக்கிய அம்சமாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் மத்திய கிழக்கில் மக்களாட்சி கொண்ட ஒரே நாடு எனும் பெருமையை இஸ்ரேல் மட்டுமே பெற்றுள்ளது. அதாவது முழுமையான மக்களாட்சி. ஈரானில் நாடாளுமன்றம் அதிபர் என அனைத்தையும் இஸ்லாமிய உயர் மட்டக்குழுவே தீர்மானிக்கும். விடுதலை அடைந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து 36 அரசுகள் இதுவரை ஆட்சி செய்துள்ளன. இதுவரை அதிக காலம் பிரதமராக இருந்த சாதனைக்கு உரியவர் இப்போதைய பிரதமரான பெஞ்சமின் நேதன்யாஹூ. அவர் 12 ஆண்டுகள்பிரதமராக பதவி வகித்துவிட்டார்.

இஸ்ரேல் அரசியலில் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை விட அரபு உறவு, மதவாதம், அரசில் மதத்தின் பங்கு போன்றவையே அதிகம் இடம் பெறுகின்றன. இஸ்ரேலில் வாழும் அராபியர்களுக்கும் கட்சிகள் உண்டு. அவையும் நாடாளுமன்றத்தில் இடம் பெறுகின்றன. பல அரசியல் கட்சிகள் மிதவாதம் பேசி, பாலஸ்தீனத்தைப் பிரித்துக் கொடுக்கலாம் என்கின்றன. குறிப்பாக நடுத்தர நிலைப்பாடுகளை எடுக்கும் மிதவாதக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இத்தகைய போக்குகளுடன் உள்ளன. பொருளாதாரம், சமூக விஷயங்களைப் பேசும் வலதுசாரி கட்சிகளும் உள்ளன.

இஸ்ரேலின் 67 லட்சம் வாக்காளர்கள் சேர்ந்து ஒரே தொகுதியாக தேசம் முழுமைக்கும் வாக்களிக்கின்றனர். இதில் 3.75% விழுக்காடு பெறும் அரசியல் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கும். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பதை அக்கட்சி வாக்களார்களைப் பதிவு செய்து வைத்துள்ளப் பட்டியலில் இருந்து தெரிய வருகிறது. எனவே ஒவ்வொரு கட்சிக்குமோ அல்லது அதன் பங்காளி கட்சிக்குமோ எவ்வளவு வாக்குகள் உள்ளன என்பது தேர்தலுக்கு முன்பாகவே கணிக்க முடிகிறது. எனினும் எக்கட்சியின் பட்டியலிலும் இடம் பெறாத வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பது தெரியாது. இதனால்தான் தேர்தல்கள் விறுவிறுப்பாக நிகழ்கின்றன.

கட்சிக்கே வாக்கு என்றாலும் யார் யார் வெற்றி பெற்றவர்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? தேர்தலுக்கு முன்னரே வேட்பாளர்கள் எவர் என்பதை ஒவ்வொரு கட்சியும் அறிவித்துவிடும். இதை தேர்தலை நடத்தும் குழுவும் ஏற்றுக்கொண்டு பட்டியல் வெளியிடும். ஒவ்வொரு கட்சியும் தனது முக்கிய வேட்பாளர்களை தர வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிடும். கட்சி பெறும் இடங்களைப் பொறுத்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு கட்சி ஆறு இடங்களைப் பெற்றால் பட்டியலில் உள்ள முதல் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்படுவர்.

முதலில் தேர்தலில் உறுப்பினர்களைப் பெற 1% வாக்குகள் பெற்றால் போதும் என்ற நிலை இருந்தது. இதனால் சிறிய கட்சிகள் கூட வெற்றி பெற்றன. பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெற முடியாத சூழல் நிலவியதோடு தொடர்ச்சியாக கூட்டணி அரசே அமையவும் காரணமானது. எனவே குறைந்தபட்ச வாக்குகள் பெறும் விகிதத்தை 1.5% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போதிலிருந்து சிறிய கட்சிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது. ஆனாலும் நாற்பது கட்சிகளில் 15 கட்சிகளாவது வெற்றி பெறுகின்றன.

முன்பு ஒருமுறை பிரதமரை மக்களே தேர்வு செய்வது எனும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. இதனால் பிரதமர் வேறு கட்சியாகவும் நாடாளுமன்றத்தின் பெரிய கட்சி மற்றொரு கட்சியாகவும் அமையும் வாய்ப்பு இருந்தது. பின்னர் இந்த முறை மீண்டும் மாற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக் கட்சியின் பிரதிநிதியே பிரதமராக தேர்வு செய்யப்படும் முறை நடைமுறைக்கு வந்தது.

தேர்தல் முறைகளிலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டதால் பரப்புரையிலும் அதன் தாக்கம் தெரிகிறது. பெரிய கட்சிகள் தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியாக்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சில கட்சிகள் உள்ளூர் மேயர் தேர்தல் போன்றவற்றில் பின்பற்றப்படும் வழிகளில் பரப்புரைச் செய்கிறார்கள். தேர்தல் செலவு ஒரு பிரச்னையாக மாறியுள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *