Skip to content
Home » இஸ்ரேல் #23 – அடிப்படைச் சட்டங்கள்

இஸ்ரேல் #23 – அடிப்படைச் சட்டங்கள்

இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு என்று தனித்த அரசமைப்புச் சட்டமே இல்லை. ஆம்; இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. விடுதலை கிடைக்கும் ஆண்டிலிருந்து இன்று வரை அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியினை பல அரசுகள் செய்து வருகின்றன. ஏன் இதுவரை அரசமைப்புச் சட்டம் வரையப்படவில்லை? இதற்குப் பல காரணங்கள் இருப்பினும், முதலில் ஒன்றை நினைவுக் கூர வேண்டும். தனது இருத்தலே நிச்சயமற்றத் தன்மையில் இருக்கும் போது எப்படி அரசமைப்புச் சட்டம் குறித்து சிந்திக்க முடியும்?

ஓரளவு அமைதி திரும்பிய காலமான 1950-களின் துவக்கத்தில் அன்றைய பிரதமர் பென் குரியன் நாடாளுமன்றமான நெஸ்ஸட்டையே அரசமைப்புச் சட்டம் ஒன்றை ஏற்படுத்தும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் காலம்தான் கழிந்ததே தவிர அரசமைப்புச் சட்டம் வரவில்லை. பலர் இப்படியொரு நிலை ஏற்பட பென் குரியனே காரணம் என்றனர். ஏனெனில் அரசமைப்புச் சட்டம் உருவானால் உச்ச நீதிமன்றம் இஸ்ரேலின் பல சமத்துவச் சட்டங்களை நிராகரிக்கலாம் என்ற அச்சம்; பல அரசியல் கட்சிகள் தங்களின் வசதிக்கேற்ப அரசமைப்புச் சட்டத்தை அல்லது அதன் பிரிவுகளைத் தேர்வு செய்ய வலியுறுத்துவார்கள் என்ற சிந்தனை இவற்றினால் பென் குரியன் அரசமைப்புச் சட்டமே வேண்டாம் என்று இருந்துவிட்டார் என்கின்றனர். மேலும் இங்கிலாந்து போன்ற ஒரு சில நாடுகளில் அரசமைப்புச் சட்டமே இல்லை என்பதால் அதனையே பின்பற்றிக்கொள்ளலாம் என்று முடிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்தனர்.

ஆனாலும் 13 அடிப்படைச் சட்டங்களைக் கொண்டு ஏறக்குறைய அரசமைப்புச் சட்டங்களின் பிரிவுகளைப்போல வகுத்துக் கொண்டு செயல்படும் நிலையில் உள்ளது, இஸ்ரேல். இந்த அடிப்படைச் சட்டங்கள் பல்வேறு ஆண்டுகளில் இயற்றப்பட்டவை. அப்படி இயற்றப்பட்ட இரு சட்டங்கள் 1992-ல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டங்கள் அடிப்படை மனித உரிமைகள், தொழில்செய்யும் உரிமை ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது. இச் சட்டங்கள் புரட்சிகரமானவை என வர்ணிக்கப்பட்டன.

தற்போது அரசமைப்புச் சட்டத்தின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமான பிரச்னையாக முன்னெடுக்கப்படுகிறது. காரணம் இப்போதைய நேதன்யாஹூ அரசு செய்துள்ள இரண்டு அடிப்படைச் சட்டத் திருத்தங்கள். லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கித் தங்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என முழக்கங்களை எழுப்புகின்றனர்.

என்ன நடந்தது?

புதிய இஸ்ரேலிய அரசு பதவி ஏற்றதுடன் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை வரையறுக்க முடிவு செய்தது. ஏனெனில் நாடாளுமன்றத்தினால் கொண்டு வரப்படும் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து, ஏற்கவோ நிராகரிக்கவோ கூடாது என்று அரசு கருதியது. ஏற்கனவே சொன்னதுபோல் 1992-ல் இரு அடிப்படைச் சட்டங்கள் நீதிமன்றத்துக்குச் சட்டங்களைத் திருத்தும் அதிகாரங்களைக் கொடுத்தது. அத்துடன் நீதிபதிகளை நியமிப்பதில் நீதித்துறை மட்டுமே முடிவெடுக்கிறது. இது நீதித்துறை எவ்விதமான தலையீடுகளும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்கிறது. இப்போதைய முயற்சி இதற்கு ஊறுவிளைவிப்பதாக இருக்கும் என்பதால்தான் மக்கள் தெருவில் இறங்கி போராடுகின்றனர்.

எதிர்க்கட்சிகள் நீதித்துறையை முடக்கும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கமாட்டோம் என்கின்றனர். மக்கள் போராட்டங்களைக் கண்ட குடியரசுத் தலைவரும் (இப்பதவி அலங்காரப் பதவி மட்டுமே என்றாலும்கூட) குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். கூடவே சமரச திட்டங்களையும் அறிவித்தார். நாட்டில் ரத்த ஆறு ஓடக்கூடாது என்றும் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பிரதமர் நேதன்யாஹூ சமரசத் திட்டத்தை நிராகரித்தார். இப்போதைக்கு அரசு பின்வாங்கியுள்ளது போலத் தெரிகிறது. ஆனால் மீண்டும் எப்போது முயற்சி செய்யும் என்பது தெரியாது.

இஸ்ரேலை வழிநடத்திச் செல்லும் 13 அடிப்படைச் சட்டங்களின் தொகுப்பைப் பார்த்தால் நிபுணர்கள் சொல்வது போல இவற்றையும், இன்னும் பிற தேவையான பிரிவுகளையும் உருவாக்கி இணைத்தால் அரசமைப்புச் சட்டம் அமையப்பெறும். எனவே நேதன்யாஹூவின் சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை உயர்த்தி நீதிமன்றம், நிர்வாகப் பிரிவுகளை அதன் கீழ் இயங்கும்படிச் செய்ய இயலாது.

அடிப்படைச் சட்டம் – க்நெஸ்ஸட் (1958): நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை விவரிக்கும், அதன் உரிமைகளைக் காக்கும் அடிப்படைச் சட்டம் இது. தேர்தல் அமைப்பு முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழக்குகளிலிருந்தான விலக்கு, நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் பணிகளுக்கான விலக்கு வரையிலான அம்சங்களை இச்சட்டம் வழங்குகிறது. இச்சட்டம் நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் யாவர் என்பதை விளக்கவில்லை. நாடாளுமன்றம் தேர்வு செய்யப்படும் விதத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதேபோல, நாடாளுமன்றத்தின் வயதை நீட்டிக்கவோ, நெருக்கடிக்காலக் கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்தவோ 81 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அடுத்த தேர்தலுக்கான தேதியையும் நிர்ணயிக்கிறது.

இஸ்ரேலிய நிலம் (1960): அரசு, மேம்பாட்டு ஆணையம் அல்லது யூத நிதியத்தின் நிலவுடமையை மாற்றுவதைத் தடுக்கிறது. சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்களைத் தவிர வேறொரு செயலுக்கு நிலத்தை உரிமை மாற்றம் செய்ய முடியாது.

நாட்டின் குடியரசுத் தலைவர் (1964): நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருப்பதை உறுதிப்படுத்தும் சட்டம். ஜெருசலேம் குடியரசுத் தலைவரின் இருப்பிடம். நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்படும் குடியரசுத் தலைவர் ஏழாண்டுகள் பதவியில் இருப்பார். ஒருமுறை மட்டுமே ஒருவரை தேர்வு செய்ய முடியும்; அதாவது இரண்டாவது பதவிக்காலம் கிடையாது. குடியரசுத் தலைவராகும் தகுதி, அதிகாரங்கள் மற்றும் பணிகள் எல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் அரசு (2001): இச்சட்டத்தின்படி பிரதமர் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார். ஆனால் இச்சட்டம் பின்னர் நீக்கப்பட்டது. அரசின் இருப்பிடம் ஜெருசலேம் ஆகும். நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றே அரசு அமைக்கப்படுகிறது. அரசு அமைக்கப்படும் விதம், அதிகாரங்கள் மற்றும் பணிகள் இச்சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையால் மட்டுமே மாற்ற இயலும்.

நாட்டின் பொருளாதாரம் (1975): வரிகளையும், கட்டணங்களையும் இடும் வழிமுறைகளை இச்சட்டம் தீர்மானிக்கிறது. அரசு சொத்தினை பரிமாற்றும் விதிகளையும் அமைக்கிறது. நிதிநிலை அறிக்கைக்கான வழிகாட்டுதல்களையும், கூடுதல் நிதிநிலை சட்டங்களுக்கான வழிகாட்டுதல்களையும், ரூபாய் நோட்டுக்களை அச்சிடவும், நாணயங்களைப் பொறிக்கவும் வழிகாட்டுதல்களைத் தீர்மானிக்கிறது.

ராணுவம் (1976): ராணுவத்துக்கான அடிப்படைச் சட்டம் இயற்றப்படும் வரை 1948-ன் ராணுவச் சட்டமே அரசமைப்பு மற்றும் சட்ட வரையறைகளாக ராணுவத்தை வழி நடத்தியது. இஸ்ரேலிய பாதுகாப்புப்படையே அதிகாரபூர்வ ராணுவம். வேறு எந்த ஏற்பாடும் சட்ட விரோதமானது. கட்டாய ராணுவச் சேவையையும் இச்சட்டமே வரையறுக்கிறது. ராணுவ அமைச்சர்/அமைச்சகம் மூலம் அரசே ராணுவத்தை நிர்வகிக்கிறது. ராணுவத் தளபதியின் நியமனத்தையும் இச்சட்டமே தீர்மானிக்கிறது.

ஜெருசலேம், இஸ்ரேல் தலைநகரம்(1980): இச்சட்டத்தின் நோக்கம் ஜெருசலேத்தை தலைநகராக நிறுவுவதும், அதன் ஒற்றுமையையும் வலுவையும் ஏற்படுத்திக் கொள்வதும் ஆகும். ஜெருசலேம் அரசின் தலைமையகமாகவும், குடியரசுத் தலைவர், நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலைமையகமாகவும் இருக்கும். இச்சட்டத்தில் ஜெருசலேத்தின் புனிதத் தலங்களின் நிலையையும், அனைத்து மதத்தவரின் உரிமைகளைக் காப்பதும் இடம் பெற்றுள்ளது. அத்துடன் ஜெருசலேத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது.

நீதித்துறை (1984): இச்சட்டத்தின்படி நீதிமன்றங்கள் குற்றவியல் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நீதித்துறையின் சுதந்திரமும் நீதிமன்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும் நிறுவப்படுகிறது. நீதிபதிகளை நியமிக்கும் வழிமுறைகளையும் தீர்மானிக்கிறது. இச்சட்டத்தில், நெருக்கடி நிலையின்போது கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகளினால் உருவாகும் மாற்றங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும், அதன் நிலைத்ததன்மைக் குறித்தும் அறிவுறுத்தல்களைக் உள்ளடக்கியுள்ளது.

நாட்டின் கணக்காயர் (1988): உச்சபட்ச நடுவராக விளங்கும் வகையில் நாட்டின் கணக்காயரை அவருடையை அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகளை விவரிக்கிறது. முன்பு பல்வேறு சட்டங்களில் சிதறிக்கிடந்த அம்சங்களைத் தொகுத்து அறிவுறுத்தல்களாகக் கொடுத்துள்ளது இச்சட்டம். நாட்டின் கணக்காயரைத் தேர்வு செய்யும் முறையையும் தீர்மானிக்கிறது. மேலும் கணக்காயர் நாடாளுமன்றத்துக்கு, பதில் அளிக்கக் கடமைப்பட்டவர் என்றும் தெரிவிக்கிறது.

தொழில் செய்யும் உரிமை (1994): இச்சட்டத்தின் முதல் வடிவத்தை 1992-ல் நாடாளுமன்றம் ஏற்றது. சட்டத்தின் இரண்டாவது வடிவம் 1994-ல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் தனிநபர்களது தொழில் மற்றும் வேலை உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. இச்சட்டத்தை 61 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையே மாற்ற இயலும். நெருக்கடியான காலகட்டத்தில் இச்சட்டத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் நான்கு ஆண்டுகளுக்கோ அல்லது குறிப்பிட்டுள்ள தேதியிலோ முடிவுக்கு வரும்.

மனித கண்ணியம் மற்றும் சுதந்திரம் (1992): இச்சட்டம் மனிதர்களின் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. நாட்டை விட்டு வெளியேற, உட்புக, தனிப்பட்டத் விஷயங்களின் பாதுகாப்பு, தனி நபர் சொத்துக்களிலும், உடல் மற்றும் சொந்தமான பொருட்களிலும் சோதனையிடுவதிலிருந்து விலக்கு, ஒருவரின் பேச்சு சுதந்திரம், எழுத்து உரிமைகளைத் தடுப்பதிலிருந்து பாதுகாப்பது என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. தனிநபரின் கண்ணியத்தைக் காப்பதிலும், மனித உரிமைகளைக் காப்பதிலும் விலக்குகளைக் கைக்கொள்வதை இச்சட்டத்தின்படியே செய்ய இயலும்.

பொது வாக்கெடுப்பு (2014): இச்சட்டப்படி இஸ்ரேலிய அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள், அவற்றின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நாடாளுமன்றம் ஏற்றாலும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும். இல்லையென்றால் அதனை 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும்.

இஸ்ரேல்- யூத மக்களின் தேச அரசு: இஸ்ரேல் யூத மக்களின் வரலாற்று ரீதியிலான தாய்நாடு அல்லது தாய்மண் ஆகும். எனவே இஸ்ரேல் அம்மக்களின் தேச அரசாகும். அந்த தேச அரசானது அதன் பண்பாட்டை, இயற்கையை, மத மற்றும் வரலாற்று சுய-நிர்ணய உரிமையை அளிக்கிறது. இச்சட்டமானது அலுவல் மொழி, அரசு சின்னங்கள் ஜெருசலேத்தின் தகுதி மற்றும் வெளிநாட்டில் வாழும் யூத மக்களுடனான தொடர்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இவ்வாறான அடிப்படைச் சட்டங்கள் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதே அரசின் நிலைப்பாடாகவுள்ளது.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *