இஸ்ரேல் அரசு பிற நாடுகளைப்போல மூன்று முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை என அதிகாரபூர்வ அமைப்புகள் தங்களது பணியைச் செய்து வருகின்றன. அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ளாட்சி, ராணுவம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு (உளவு நிறுவனங்கள்) ஆகியன உள்ளன. பாதுகாப்புக் கொள்கை மூலம் இஸ்ரேலின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இஸ்ரேல் தனது உள்நாட்டுப் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பதைக் கடந்தகாலப் படிப்பினைகளிலிருந்து அறியலாம். தேசம் உருவாக்கப்பட்ட உடனேயே போரினைச் சந்தித்ததும் இன்றுவரை பல அராபிய நாடுகள் அங்கீகரிக்காமல் இருப்பதால் பாதுகாப்பின்மையையும் உணர்ந்துள்ளது. உலக இஸ்லாமிய அமைப்புகள் பலவும் இஸ்ரேலை எதிரி சக்தியாகவே கருதுகின்றன. இப்படி ஒவ்வொன்றின் நிலைப்பாட்டையும் ஒட்டியே தனது பாதுகாப்பு கொள்கையை வடிவமைத்துக் கொண்டுள்ளது இஸ்ரேல்.
பாதுகாப்பு என்பது ராணுவ ரீதியிலானது மட்டுமல்ல; உள்நாட்டில் அரசியல் குழப்பங்கள், அரசு நிர்வாகத்தின் திறமையின்மை, அதிகாரப் பிரிவினைகளின் தெளிவின்மை எனப் பல விஷயங்களும் இஸ்ரேலின் வளர்ச்சியையும், நிலைத்து நிற்கும் தன்மையையும் வரையறுக்கின்றன. அந்த வகையில் இஸ்ரேலின் அரசு நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அறிய வேண்டியுள்ளது.
இந்தியாவில் உள்ளது போலவே இஸ்ரேல் நாடாளுமன்றமும் தேர்தலுக்குப் பிறகு கூடி அவைத் தலைவரைத் தேர்வு செய்கிறது. நாடாளுமன்றம் பொதுவாகக் கூடி சட்ட முன் வரைவுகள், நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பொதுவாக சட்ட முன் வரைவுகளைத் தனி உறுப்பினர்களோ, கூட்டாக இணைந்தோ, குறிப்பிட்ட அமைச்சரோ அல்லது அரசோ தாக்கல் செய்யலாம். அதற்கு முன்னர் அந்த சட்ட முன் வரைவானது சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் இன்னும் பிற அமைச்சர்கள், பிறகு அமைச்சரவைகளின் பரிசீலனைக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதனை முதல் தாக்கல் என்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் விவாதித்த பின்னர் நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனைக்கு உட்படுகிறது. இரண்டாம் முறை நாடாளுமன்றம் கூடி சட்ட முன் வரைவில் நாடாளுமன்றக் குழு ஏற்படுத்திய மாற்றங்களை விவாதிக்கிறது. அதன் பின்னரும் மேற்கொண்டு ஐயங்கள், திருத்தங்களுக்காக நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
மூன்றாம் முறையாக விவாதம் நடந்த பின்னர் சட்ட முன் வரைவு நாடாளுமன்றத்தால் ஏற்கப்படுகிறது. அதன் பின்னர் நாடாளுமன்ற அவைத் தலைவர் கையெழுத்திடுவார். பின்னர் அரசிதழில் வெளியிடப்படும். அரசிதழில் குடியரசுத் தலைவர், பிரதமர், தொடர்புடைய அமைச்சர் ஆகியோர் கையெழுத்திட்டிருப்பர். கடைசியாக சட்ட அமைச்சர் தனது முத்திரையை சட்டத்தில் பதிப்பார்.
தனி உறுப்பினர் கொண்டு வரும் சட்ட முன் வரைவுகள் மூன்று முறை நாடாளுமன்றத்தால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படலாம். தனி உறுப்பினர் சட்ட முன் வரைவுகளுக்கு அரசு அனுமதி தேவையில்லை.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 12 நிரந்தரக் குழுக்கள் இடம் பெற்றுள்ளன. சிறப்புக் குழுக்கள் மூன்றும், நாடாளுமன்ற விசாரணைக்குழு, அறநெறிக்குழு, விளக்கம் & வரையறைகள் குழு, பொதுக்குழுக்களும் உண்டு.
உள்ளாட்சி அமைப்புகள்
இஸ்ரேலில் மூன்று விதமான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவை நகராட்சிகள், மண்டலக் குழுக்கள் மற்றும் உள்ளூர் குழுக்கள் ஆகியனவாகும். நகராட்சிகள் பொதுவாக 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளாகும். பெரிய நகரங்களாக ஜெருசலேம், டெல் அவிவ் மற்றும் ஹாயிஃபா ஆகியன உள்ளன. சிறிய நகரங்களும், கிராமப்புற குடியேற்றங்களும் உள்ளூர் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன. இவை நகராட்சிக்கு இணையான அதிகாரங்கள் படைத்தவை.
தங்களது சேவைப் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் குடியிருப்புப் பகுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இன்ன பிற அமைப்புகளுக்கு பல்வேறுவிதமான சேவைகளை வழங்குகின்றன. உள்கட்டமைப்பு, சாலை அமைப்பு, குடிநீர் வழங்கல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை மற்றும் பூங்காக்களை ஏற்படுத்தி அவற்றைப் பராமரிக்கிறது. சுற்றுச்சூழல், கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை வழங்குகின்றது.
பொதுவாகப் பள்ளிகளை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்படுத்திப் பராமரிக்கின்றன. இப்பள்ளிகளில் பல தன்னார்வ சங்கங்களால் நடத்தப்பட்டாலும் உள்ளாட்சி நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. விளையாட்டு, கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள், அரங்கங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கும் நிதியுதவி செய்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் பிற சேவைகளில் சமூக நலச் செயல்பாடுகளும் உண்டு. சமூக நல ஊழியர்கள் உதவித் தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவியையும், வயோதிகர், மன நலம் குன்றிய சிறுவர்கள், போதை மறுவாழ்வு உட்பட பல செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்.
நகரமைப்புத் திட்டங்களிலும் உள்ளாட்சி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சட்டப்படி உள்ளாட்சி நிறுவனங்களுக்கு கணிசமான சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவை நகரத் திட்டமிடுதலில் மண்டல மற்றும் கிராமப்புற பரிமாணங்களையும் உள்ளடக்கியுள்ளன. உள்ளூர் குழு உறுப்பினர்களே நகரத் திட்டமிடல் அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளனர். உள்ளூர் திட்டக் குழுவானது அன்றாட நிர்வாகத்தையும், விதிகளைப் பின்பற்றி செயலாற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி நிறுவனங்களுக்கான நிதி வளங்களாக, உள்ளூரில் திரட்டப்படும் நிதி, அரசின் நிதியுதவி மற்றும் கடன்கள் மூலம் திரட்டப்படும் நிதி ஆகியன உள்ளன. அரசின் நிதியுதவிகளில் பொது நிதியுதவி, இலக்கு நிதி ஆகிய இரு வகைகள் உள்ளன. இலக்கு நிதியுதவிகளை அமைச்சகங்கள் வழங்குகின்றன.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் உறுப்பினர்களால் உள்ளாட்சிகள் அமைகின்றன. தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது. மக்கள் தொகையைப் பொறுத்து உள்ளாட்சியின் மொத்த இடங்கள் அமைகின்றன. நகராட்சிகளுக்கு 9 முதல் 31 வரையிலும், உள்ளூர் குழுக்களுக்கு 5 முதல் 21 வரையிலும் இடங்கள் அமைகின்றன. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி அமைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
நீதிமன்றங்கள்
வழக்கம் போல சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்களோடு, ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே தனி நபர் சட்டப்படியான நீதிமன்றங்கள் உள்ளன. இவை தவிர ராணுவ நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்களும் உள்ளன.
கணக்காயரும், அரசின் கட்டுப்பாடுகளும்
கணக்காயரின் ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்படுகிறது. இந்த அறிக்கையில் குறிப்பிட்ட ஆண்டின் அனைத்து அரசு சார்ந்த நடவடிக்கைகளும் இடம் பெறுகின்றன. நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கணக்காயரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். பின்னர் நாடாளுமன்றமும் தேர்ந்தெடுக்கும் கணக்காயரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். கணக்காயர் பொது நலத் தீர்ப்பாயராகவும் இருக்கிறார். தனி நபர் ஒருவர் கணக்காயரிடம் ஏதேனும் அரசு ஊழியர், சேவைகள் குறைபாடு முறையீடு செய்யலாம். கணக்காயரின் ஆண்டறிக்கை போலவே பொது நல தீர்ப்பாயரின் ஆண்டறிக்கையும் வெளியாகிறது.
(தொடரும்)