இஸ்ரேல் தோன்றிய நாளிலிருந்து அதன் இருத்தல் கேள்விக்கு உள்ளாகி வந்தது என்பதை நாம் அறிவோம். மூன்று போர்களில் வென்றிருந்தாலும் உள்நாட்டில் அராபியர்களுடனான மோதல்களால் தொடர்ச்சியாக அமைதியின்மை நீடித்து வந்தது. ஒருவழியாக 1978 மற்றும் 1995 ஆண்டுகளில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தங்களால் சற்று நிம்மதி கிடைத்தாலும் அது நீடிக்கவில்லை.
காசா மற்றும் லெபனானிலிருந்து ராக்கெட் தாக்குதல்கள், மனித வெடிகுண்டு தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொள்ளத் துவங்கியிருந்தது இஸ்ரேல். ஏற்கனவே இருந்த பகைமை மேலும் அதிகரிக்கவே ராக்கெட் தாக்குதல்கள் உதவின. இன்று வரையில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க பல மத்திய கிழக்கு நாடுகள் முன்வராத சூழ்நிலையில் அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தலிலேயே உள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு மூன்று முகமைகளின் கைகளில் உள்ளது. ஷின் பெட் எனும் உள்நாட்டுப் பாதுகாப்பு; அமான் எனும் ராணுவ உளவு அமைப்பு; மொசாத் எனும் வெளிநாட்டு உளவுப் பாதுகாப்பு. இவற்றில் மொசாத் எனும் பெயர் உலகளவில் பிரபலம். உலகில் நிகழ்ந்த பல அரசியல் சம்பவங்களில் மொசாத்தின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மொசாத்தின் வீச்சும், அதன் செயல்பாடுகளும் வெகு நுட்பமானவை; உலகின் கூர்மையான கண்களில் மொசாத்தின் கண்களும் அடங்கும் என்று உளவுத் துறை நிபுணர்கள் கூறுவார்கள். தங்கள் இனத்தை வேட்டையாடிய நாஜிக்கள் பலரைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய அமைப்புதான் மொசாத். அதே போல ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் தங்கள் விளையாட்டு வீரர்கள் 11 பேரைக் கொன்ற அராபியத் தீவிரவாதிகளைப் பழி வாங்கிய சாகசச் செயல்களுக்கும் பேர் வாங்கியது மொசாத்.
உகாண்டாவின் எண்டபே விமான நிலையத்தில் எதிர்பாராத தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளாக இருந்த இஸ்ரேல், பிரெஞ்சு நாட்டவரை மீட்டு உலகை வியக்க வைத்த செயலில் மொசாத்துக்கும் பங்குண்டு. ஈராக்கின் அணுமின் நிலையத்தைத் தகர்த்தும் தனது செயலாற்றலை நிலைநிறுத்தியது மொசாத். இதனால் அமெரிக்காவின் எரிச்சலுக்கும் ஆளானது. அத்துடன் ஏராளமான தியாகக் கதைகளும் உண்டு. இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டுப் போரில் வெல்வதற்கு இலியாஹூ கோஹன் என்ற மொசாத் அதிகாரியின் உயிர் தியாகம் முக்கியக் காரணம்.
ஒருபுறம் மொசாத் வெளிநாட்டுப் பாதுகாப்பை உத்தி வகுத்துச் செயல்படுத்தி வந்தாலும் உள்நாட்டுப் பாதுகாப்பின் முக்கியத்துவமும் அதிகரித்தே வந்தது. அராபியர்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டதால் யிட்ஷாக் ரபின் எனும் பிரதமரும் கொல்லப்பட்டார். இதனால் உள்நாட்டுப் பாதுகாப்பும் அதிகக் கவனம் பெறத் துவங்கியது. ரபினின் பாதுகாப்பில் ஏற்பட்ட கோளாறுகளுக்குப் பொறுப்பேற்று துறையின் தலைவர் கார்மி கில்லான் பதவியைத் துறந்தார்.
பின்னர் ஒரு முறை பாலஸ்தீன தீவிரவாதிகள் பேருந்து ஒன்றைக் கடத்தியபோது அதனை முழுமையாக மீட்டனர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினர். ஷின் பெட் முதன்முதலில் இஸ்ரேல் ராணுவத்தின் ஒரு பிரிவாகவே இருந்து வந்தது. பின்னர் பிரதமரின் அலுவலகத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இஸ்ரேலிய உளவுத் துறையின் தந்தை எனக் கருதப்பட்ட இஸ்ஸர் ஹரேல் முதலில் இதன் தலைவராக இருந்தார். பின்னர் மொசாத்துக்குத் தலைமையேற்றார்.
இந்த அமைப்பின் துவக்க கால சாதனைகளில் ஒன்று: தங்களது இரட்டை உளவாளியான கமால்/பிட்டன் மூலம் எகிப்து ராணுவ அதிகாரிகளிடம் இஸ்ரேல் தரைவழியாகவே முதலில் தாக்குதல் நடத்தும் என்று கூறியது. அதை நம்பி எகிப்து தங்களின் விமானப்படையை படைத் தளத்திலேயே நிறுத்திவிட்டனர். இது இஸ்ரேலுக்கு சாதகமானது. போர் துவங்கிய முதல் மூன்று நேரத்திலேயே எகிப்தின் விமானப்படை முற்றிலும் சிதைந்தது.
ஷின் பெட்டின் சாகசங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகக் கூறப்படுவது ரபினின் படுகொலைக்குப் பிறகு ஹமாஸின் வெடிகுண்டுப் பிரிவின் தலைவர் என அறியப்பட்ட யாஹ்யா ஆயாஷ் மொபைலில் வைக்கப்பட்டிருந்த குண்டினால் கொல்லப்பட்டார்.
ஷின் பெட் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறதா என்பதை நாடாளுமன்றக் குழுவொன்று கண்காணித்து வந்துள்ளது. அதன் விசாரணை முறைகளில் சித்ரவதையும் முக்கிய அம்சமாக இருந்துள்ளதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகு அதற்கும் கடிவாளம் போடப்பட்டது. குறிப்பாக பாலஸ்தீனக் கைதிகளிடம் சித்ரவதை என்பது தவிர்க்க முடியாத அம்சமாக இருந்துள்ளதும் தெரிய வந்தது.
இருப்பினும் இப்போதும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சித்ரவதைக் குறித்த முறையீடுகளுக்கு விசாரணையே இல்லை என்கின்றனர். அம்னஸ்டி இண்டெர்நேஷனல் குறிப்பாக இப்பிரச்னை குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறது.
டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீனப் போராளிகளைக் கொல்லவும் ஷின் பெட் ராணுவத்துடன் இணைந்து செயல்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நபர்களை அடையாளம் காட்ட ஷின் பெட் உளவாளிகள் ராணுவ அதிகாரிகளுடன் அமர்ந்து கண்காணித்து வருவர். கொல்லப்பட வேண்டிய நபர்களின் அடையாளம் உறுதியானப் பிறகு டிரோன்கள் மூலம் தாக்குதல் நடக்கும்.
இம்முறையை அமெரிக்கா மற்றும் பிற மேலை நாடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் பயன்படுத்தியதை நாம் பல திரைப்படங்களில் கண்டிருப்போம். இது தவிர எல்லைத் தாண்டிய கைதுகள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரையும் பல்வேறு இடங்களில் ஷின் பெட் கைது செய்துள்ளது. இத்தகைய கைதுகளை சட்டவிரோதமானவை என பலரும் கண்டித்து வருகின்றனர்.
தற்கொலைப்படைத் தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்த காலகட்டத்திலேயே பல்வேறு அத்துமீறல்களும் நிகழ்ந்துள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒட்டிய 1993-95ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 14 தற்கொலைப்படைத் தாக்குதல்களும், அவற்றில் 86 நபர்களும் மரணமடைந்தனர். முதலில் 1989 ஆம் ஆண்டு துவங்கிய தற்கொலைப்படைத் தாக்குதல்கள் 2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரையில் மிக முக்கியப் பாதுகாப்புப் பிரச்னையாக உருவெடுத்தது. சுமார் 150 தாக்குதல்கள் வரையில் நிகழ்ந்துள்ளது. தொடர்ச்சியாக 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கூட முறையே ஒரு தாக்குதல் நடந்துள்ளது. சுமார் 800 பேர் இறந்தனர்; 1000 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் போன்ற சிறிய நாட்டில் தொடர்ச்சியான தற்கொலைப்படைத் தாக்குதல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை உலகம் அதிகம் உணரவில்லை. ஏனெனில் நீடிக்கும் பாலஸ்தீனப் பிரச்னையால் தாக்குதல்கள் நிகழ்கின்றன. எனவே அப்பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது என்பதைப் பலரும் வலியுறுத்தினர். அதே காலகட்டத்தில் உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் நிகழ்ந்த மும்பை தாக்குதல்களுக்குப் பிறகே இப்பிரச்னைக் குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீதும் தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்ந்தது. எனவே இஸ்ரேல் மட்டுமின்றி பிற நாடுகளிலும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நிகழ்ந்ததால் அதனை மனித இனத்துக்கு எதிரான குற்றமாகக் கருதும் ஏற்பாட்டை 2002ஆம் ஆண்டில் ஆம்நெஸ்டி இண்டெர்நேஷனலும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பும் செய்தன.
(தொடரும்)