Skip to content
Home » இஸ்ரேல் #26 – மொசாத்தின் வலைவீச்சு

இஸ்ரேல் #26 – மொசாத்தின் வலைவீச்சு

இஸ்ரேல்

இஸ்ரேல் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் உள்நாட்டுப் பாதுகாப்போடு வெளிநாட்டிலும் தனது உளவு நடவடிக்கைகள் மூலம் செல்வாக்குப் பெற விரும்பியது. அதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்புதான் மொசாத். மொசாத் 1949, டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யூத ராணுவமான ஹகன்னாவின் உளவுப் பிரிவாக இருந்தப் பின்னர் இன்ஸ்டியூட் ஃபார் கோ ஆர்டினேஷன் எனும் நிறுவனமாக உருவாக்கப்பட்டது, மொசாத். இரண்டாவது தலைவராகப் பதவியேற்ற இஸ்ஸர் ஹரேல் இயக்கத்தினை உருவாக்கிப் பொலிவடையச் செய்தார். பத்தாண்டுகளுக்கு மேலாகத் தலைமைப் பொறுப்பில் இருந்த ஹரேல் மொசாத்தை, தொழில்முறைச்சார்ந்த, வலுவான உளவு அமைப்பாக மாற்றினார்.

ஆரம்பகாலத்தில் யூதர்களின் படுகொலைக்கு காரணமான உயர் நாஜி அதிகாரிகளைத் தேடிக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதை முக்கியப் பணியாகச் செய்தது. 1960-ல் அர்ஜெண்டினாவில் மறைந்திருந்த அடால்ஃப் ஈஷ்மேனை கைது செய்து இஸ்ரேலுக்கு அழைத்து வந்து போர்க்காலக் குற்றங்களுக்காக விசாரிக்க வைத்தது முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

பின்னர் எலி கோஹனை தொழில் அதிபராக சிரியாவில் உளவு பார்க்க அனுப்பியது. ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் கொல்லப்பட்ட 11 இஸ்ரேலிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அவர்களது கொலைக்கு காரணமாக இருந்த தீவிரவாதிகளைத் தேடிக் கொன்றது; எண்டபே விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட பயணிகளை மீட்டு வந்ததும், ஈராக்கின் அணுமின் நிலையத்தைத் தகர்த்ததும் முக்கிய சாதனைகளாகக் கருதப்படுகின்றன.

இன்று சுமார் 3 பில்லியன் டாலர் பட்ஜெட்டுடனும், ஏறக்குறைய 7,000 பணியாளர்களுடனும் செயல்படும் மொசாத் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வுக்கு அடுத்தப்படியான உலக முக்கியத்துவம் வாய்ந்த உளவு நிறுவனமாக மதிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு நாட்டு உளவு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது இன்றியமையாதது. பாகிஸ்தான், அரபு நாடுகளுடன் இணைந்து போரிட்டது என்பதால் அதன் நடவடிக்கைகளின் மீது இஸ்ரேலுக்கு ஒரு கண் இருந்து கொண்டிருந்தது. ஆனால் அண்டை நாடான இந்தியாவுடன் தூதரக உறவு இல்லாதது ஒரு தடையாக இருந்து வந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்றார். இஸ்ரேலுடன் இணைந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிக்க விரும்பினார் ராஜீவ். பாகிஸ்தானில் உளவு பார்க்கும் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதியளித்தார் என்று பின்னர் கூறப்பட்டது.

இந்தியாவின் அயல்நாட்டு உளவுத்துறையான ரிசர்ச் அண்ட் அனலைசிங் ஏஜென்சி (”ரா” ) மொசாத்துடன் இணைந்து செயல்பட்டது. ராஜீவ்வுக்கு முன்பாக இந்திரா காந்தியே மொசாத்துடன் இணைந்து செயல்பட அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான், சீனா மற்றும் வட கொரியா ஆகியவற்றின் கூட்டணி ராணுவ ரீதியாக இருந்ததால் இந்திரா மொசாத்துடன் இணைந்து எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்துள்ளார். ராஜீவ் ஐ நா சபைக் கூட்டம் ஒன்றில் அன்றைய இஸ்ரேலிய பிரதமர் ஷிமோன் பெரேஸ்சைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன்படிப் பார்க்கையில் இந்தியா தனது புவிசார் நலன்களை முன்னெடுக்க இஸ்ரேலுடன் இணைய விரும்பியது புரியும்.

மொசாத் இப்படி பல உலகத் தலைவர்களை இஸ்ரேல் நோக்கி இழுக்கும் வேலைகளைத் திறம்பட நடத்தியது அதன் வீச்சைக் காட்டுகிறது. இது தவிர ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேல் நாட்டவரை விடுவிக்க அமெரிக்க இஸ்லாமியர்கள் அமெரிக்க அரசை நிர்ப்பந்தித்ததும் அதன் செல்வாக்கைக் காட்டுகிறது. பாகிஸ்தான், காஷ்மீருக்கு வருகை தந்த இஸ்ரேலியர்கள் சிலரை மொசாத் உளவாளிகள் எனக் கருதி ஒருவரைக் கொன்று, மற்றொருவரைக் கடத்த தீவிரவாதிகளைத் தூண்டியது. அந்நபர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் இந்திய உளவு நிறுவனம் மொசாத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது.

தலைவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள், அதிகாரிகள் ஆகியோரையும் தன் வசம் இழுத்தது. இதில் நம்ப முடியாத ஒரு நிகழ்வு எகிப்து அதிபரின் நெருங்கிய வட்டத்துக்குள்ளும் மொசாத் நுழைந்தது. அஷ்ரஃப் மார்வான் அதிபர் நாசரின் இரண்டாவது மகளான மோனாவைக் காதலித்து மணந்தார். பின்னர் அதிபரின் அலுவலகத்தில் ஒரு முக்கிய அதிகாரியானார். நாசர் அவரை பல்வேறு நேரங்களில் பயன்படுத்திக் கொண்டார். நாசருக்குப் பிறகு பதவிக்கு வந்த சதாத்தும் மார்வானைப் பயன்படுத்திக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால் 1973, யோம் கிப்பூர் போருக்கு வலுசேர்க்கும் அனைத்துப் பணிகளையும் மார்வான் செய்ததாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் மொசாத்திடம் தொடர்பில் இருந்த மார்வான் போர் குறித்து பல செய்திகளை இஸ்ரேலுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னாட்களில் மார்வான் ஓர் இரட்டை உளவாளி என்றும் சதாத்தின் யோசனைப்படியே இஸ்ரேலுக்குத் தவறான தகவல்களை அளித்தார் என்றும் கூறப்பட்டது. மார்வான் 2007 வரை லண்டனில் வாழ்ந்தார். அவரது மரணமும் அவரின் சாகசங்களைப் போல மர்மமான முறையில் நிகழ்ந்தது. இஸ்ரேலின் கோஹன் எலி சிரியாவில் உளவு பார்த்ததும், மார்வான் தவறாகவே இருந்தாலும் போர் குறித்து இஸ்ரேலுக்கு தெரிவித்ததும் மொசாத்தின் வீச்சை அறிந்து கொள்ள உதவுகிறது.

மொசாத் உலகளவில் இஸ்லாமிய நாடுகளிலும் கூடத் திறம்படத் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு எகிப்தில் நிகழ்ந்த பல அழிவு வேலைகளே சாட்சி. எகிப்துக்கும் பிற அரபு நாடுகளுக்கும் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஜெர்மன் அறிவியலர்கள் வேலை செய்து வந்தனர். இத்திட்டத்தை வெற்றிகரமாக மொசாத் தடுத்து நிறுத்தியது. ஏவுகணையை கிழக்கு ஜெர்மனி (சோவியத் கூட்டாளி) செய்து கொடுத்த நிலையில் அமெரிக்கச் சார்பு மேற்கு ஜெர்மனியின் லோட்ஸ் என்பவர் மொசாத்துக்கு உதவி செய்தார். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

ரஷ்யாவிலிருந்தும், மொராக்கோ போன்ற நாடுகளில் இருந்தும் யூதர்களை இஸ்ரேலுக்கு அழைத்து வரும் பணிகளையும் மொசாத் செய்துள்ளது. அனைத்துக்கும் மேல் 1990 ஆம் ஆண்டுகளில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதி ஒருவரை கைது செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு மொசாத் உதவியது.

இது தவிர செப்டெம்பர் 11, 2001 ஆம் ஆண்டுத் தாக்குதல் குறித்தும் மொசாத் அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு தகவல் அளித்துள்ளது. ஏராளமான தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர் என்ற தகவலில் உண்மைத் தன்மை, துல்லியம் ஆகியவை போதாது என நினைத்தனரோ என்னவோ ஒரு மாதம் கழித்து இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிறைவேறியது.

ஈரானின் அணு ஆயுத சோதனைகள் குறித்து சவூதி அரேபியாவின் உளவு நிறுவனம் மொசாத்துடன் ஒத்துழைத்து வந்தது 2014-ல் இஸ்ரேலிய இராணுவத் தளத்தில் வெளியிடப்பட்டது. சவூதி அரேபியா மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரகம், ஆப்கானிஸ்தான்,அசைர்பைஜான் குடியரசு மற்றும் பஹ்ரைன் ஆகியவையும் மொசாத்துடன் தொடர்பில் இருந்துள்ளன. பஹ்ரைன் ஈரானிய, பாலஸ்தீன இஸ்லாமிய இயக்கங்கள் குறித்து தகவல்கள் அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஈரானைக் குறி வைத்து பல நடவடிக்கைகளை மொசாத் செய்துள்ளது. குறிப்பாக அணு அறிவியலர் பலரை மொசாத் கொன்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மொசாத்தின் ஈரான் அணு அறிவியலர் கொலைகளை அதன் முன்னாள் தலைவரான மீயர் டாகன் பேட்டி ஒன்றில் புகழ்ந்துரைத்துள்ளார். இவ்வாறான கொலைகள் அணு அறிவியலர் பலரை அச்சப்படுத்தி அணு மின் உற்பத்திப் பிரிவுக்கு விரட்டி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொசாத் துணிகரமாக ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள ரகசிய அணு ஆவணக் காப்பகத்துக்குள் நுழைந்து 1,00,000 மேற்பட்ட தகவல்களைக் கடத்திச் சென்று தனது அமெரிக்க, ஐரோப்பிய கூட்டாளிகளிடம் காட்டி ஈரானின் அணு ஆயுத திட்டங்களை விவரித்துள்ளது. இது நாள் வரை ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தடைப்பட்டு வருகின்றன. தனது ஏவுகணைகளை வெற்றிகரமாக உருவாக்கும் ஈரானால் அணு ஆயுதம் தன்னிடம் இருப்பதாக வெளியில் சொல்ல முடியவில்லை.

ஈராக்கின் அணு ஆயுத திட்டத்தை பிரான்ஸில் அதன் அறிவியலர் ஒருவரின் வாயிலாகவே அறிந்து கொண்டது மொசாத். பின்னர் அந்த அணு ஆயுத நிலையத்தைத் தகர்க்கவும் செய்தது. சதாம் ஹூசைன் குவைத்தைக் கைப்பற்றியதுடன் இஸ்ரேல் மீது ஸ்கட் ஏவுகணைகளையும் வீசச் செய்தார். ஈராக் ஸ்கட் ஏவுகணைகளை சோவியத் ஒன்றியத்திடமிருந்து பெற்றிருந்தார். அணு ஆயுதமும் இருந்திருந்தால் இஸ்ரேல் உலக வரைபடத்தில் இன்று இருந்திருக்குமா என்பது ஐயமே. இப்படிப் பல சாகசங்களையும், துல்லியமான உளவு நடவடிக்கைகளையும் தன் இருத்தலைக் காத்துக்கொள்ள மொசாத் மூலம் இஸ்ரேல் செய்து வருகிறது. இதனால் பல நேரங்களில் அமெரிக்க முதல் நியூசிலாந்து வரை அனைத்துப் பகுதிகளிலும் தூதரகக் கண்டனங்களையும் இஸ்ரேல் பெற்றுள்ளது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts