இஸ்ரேலிடம் இருக்கும் வலிமையான ஆயுதங்களில் ஒன்று மொசாத் என்று சொன்னால் மிகையில்லை. மொசாத் எவ்வாறு போர்களையும், பாதுகாப்பையும் எளிதாக்கியது என்பதை முன்னர் பார்த்தோம். இனி மொசாத் எப்படி இயங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
மொசாத்திடம் நான்கு பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு வெளிநாடுகளில் நிகழும் செயல்பாடுகளுக்குப் பொறுப்பு. ஒவ்வொரு செயல்பாட்டுப் பிரிவிலும், அது ஏதொவொரு நாடாகவோ நகரமாகவோ இருக்கலாம், அங்குத் தலைமைத் தாங்கும் நபர் ஒருவர் தனது களச் செயல்பாட்டு முகவர்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார். இதை கலெக்ஷன் டிபார்ட்மெண்ட் என்கின்றனர்.
அடுத்தது தனது சொந்த நடவடிக்கைகளுக்கு அப்பால் ஒவ்வொரு பிரதேசத்திலும் அந்தந்த நாட்டின் உளவுத் துறையோ வேறு அரசு முகமைகளோ உதவ வேண்டிய சூழல் இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் அங்கு செயல்பட அமைக்கப்பட்டதுதான் பொலிடிகல் ஆக்ஷன் டிபார்ட்மெண்ட். இத்துறை இஸ்ரேலுக்கு தூதரக உறவு அல்லாத நாடுகளில் கூடச் செயல்பட வழிவகுக்கிறது.
உலகில் பல சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன, அதன் தாக்கம் என்ன என்பதையெல்லாம் நாம் அதிகம் கவனிப்பதில்லை. சில விஷயங்கள் நம் கண் முன்னே நிகழ்ந்தாலும் அதன் காரணங்களை அலசும் வசதி நமக்கு இருப்பதில்லை.
உதாரணமாக, அடுத்த தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற மாட்டார் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது என்றால் அதன் நோக்கம் என்ன? ஏன் மற்றவர்கள் எல்லாம் வெற்றி பெறுவார் எனும் போது இந்த நிறுவனம் ஏன் மாற்றிச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதன் பின்னால் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று செயல்படலாம் என்பதை இன்று மக்கள் ஊகித்தாலும் உறுதியாகக் கூற முடியாது.
ஒருவேளை அவர்கள் கணிப்பு சரியோ? அவர்கள் ஆய்வு செய்தப் பகுதிகளில் அதுதான் நிலவரமோ என்று நீங்கள் இதைக் கடந்து போகலாம். ஆனால் வெளிநாட்டு உளவு நிறுவனத்தின் பணி உங்களைச் குழம்பச் செய்வதுதான்; அதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். இப்படி உளவு நிறுவனங்கள் செயல்பட தனிப் பிரிவு உண்டு. அப்படியொரு பிரிவு மொசாத்திடமும் உண்டு. அதற்குப் பெயர் லாப் டிபார்ட்மெண்ட். இப்படி உளவியல் போரையும், பிரச்சாரப் போரையும் நிகழ்த்துகிறது இத்துறை.
கடைசியாக வருவது சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு. இது அதிகச் சிறப்புகளைக் கொண்ட பிரிவு. இது மொசாத்தின் ராணுவப் பிரிவாகச் செயல்படுகிறது. பிற நாடுகளில் நாச வேலைகளில் ஈடுபடுதல் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளைக் குறிவைத்து தாக்குவது என செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இதற்கு மெட்ஸடா எனும் மற்றொரு பெயரும் உண்டு. பின்னர் கோமேமெய்டு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பிரிவின் கீழ் கிடோன் எனும் சிறப்பு அணி ஒன்றுமுள்ளது. அதனிடம் “சூப்பர்கில்லர் ஏஜெண்டுகள்” இருப்பார்கள். களச் செயல்பாடுகளில் அதிகச் சுதந்தரம் கொண்ட அணி. இந்த அணி மூலம் கடந்த காலங்களில் பல தேசியப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் வெற்றி கிடைத்துள்ளது என்கின்றது இஸ்ரேல் அரசு.
பனிப்போர் காலங்களில் ஏராளமான முகவர்களுடனும், துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்தப் படையினரையும் அதிகளவில் வைத்திருந்த இஸ்ரேல் மாறிவிட்ட உலகச் சூழலுக்கு ஏற்ப தனது பாணியையும் மாற்றிக் கொண்டுள்ளது. இப்போது களச் செயல்பாடுகளை மட்டும் நம்பியிராமல் களத்தில் துல்லியமாகச் செயல்பட திட்டம் வகுப்பதையே விரும்புகிறது.
இன்றுள்ள உலகமயமாக்கல் சூழலில் தரவு என்பதே எதையும் நிர்ணயிக்கும் ஆற்றல் உடையதாகவுள்ளது. இதை நன்கறிந்துள்ளது மொசாத். எனவே தனது புதிய முகவர்களில் சமூகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் இணைக்கிறது. கல்வியாளர், தொழில் அதிபர், சமூக சேவகர்கள் என்பதோடு அரசியல்வாதிகள்/கட்சிகள் எனவும் விரிகிறது அதன் வட்டம். குறிப்பாக அரசு எதிர்ப்பாளர்களிடம் இணைந்து செயல்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளில் மொசாத் பல செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
குறிப்பாக இன்றைக்கு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அணு அறிவியலர்களை மொசாத் கொன்றதை இலகுவாக்கியதாக சில ஈரானிய புரட்சிப்படை வீரர்கள், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தனது புரட்சிப் படைகளிடையே மொசாத் பெருமளவில் ஊடுருவியுள்ளதை ஏறக்குறைய ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் அரசு மீதான அதிருப்தியே மொசாத்தின் வேலையை எளிதாக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது.
மொசாத் தனது முகவர்களைத் தேர்வு செய்வதில் கடுமை காட்டுகிறது என்பதைப் பல முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவரை பல மாதங்கள் வரை கடுமையாகப் பரிசோதிக்கின்றனர். அத்துடன் நில்லாமல் பயிற்சியிலும் ஈடுபடுத்துகின்றனர். இப்படிக் கடுமை காட்டுவதால் நூற்றில் ஐந்து பேர் அளவிலேயே பயிற்சியின் முடிவில் பணிக்குத் தேர்வாகின்றனர். இவ்வாறு பணிக்குத் தேர்வானவர்கள் தங்களுக்கு கீழ் உளவாளிகளை உருவாக்குகின்றனர். இப்படி உளவு சொல்பவர்களுக்கு பணமே வெகுமதியாக அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு உளவுத் தகவல்களில் ஏராளமான தரவுகளையே உளவாளிகள் திரட்டித் தருகின்றனர். இதை களத்தில் செயல்படாத பிரிவான லகாம் வகை பிரித்து அலசி ஆராய்ந்து அவ்வப்போது அரசுக்கு அறிக்கைகளை அளிக்கின்றது. மற்றொரு தனிப்பிரிவின் வேலை அணு ஆயுதங்களை எந்தெந்த நாடுகள் பெருக்கிவருகின்றன என்பதை ஆராய்வது.
மொசாத்தின் நடவடிக்கைகளால் பல நேரங்களில் பலருக்கு தர்மசங்கடங்கள் நேர்கின்றன. சாதாரண மக்களில் சிலர் மொசாத் உளவாளி என அடையாளம் காட்டப்படும் சந்தர்ப்பங்களும் நிகழ்ந்துள்ளன. சில நேரங்களில் வெளிநாடுகளில் பிடிபடும் உளவாளிகள் உள்நாட்டில் குடிமக்களின் கடவுச் சீட்டை பிரதியெடுத்து வெளிநாட்டுக்கு பயணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இறந்து போனவர்களின் கடவுச் சீட்டு பிரதி எடுக்கப்பட்டால் பெரிய பாதிப்பு நிகழாது. உயிருடன் இருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு கடுமையானதாக அமையலாம். குறிப்பாக குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் தனி நபர் பற்றிய சந்தேகப் பார்வைகள் அவரது மன நிம்மதியைக் குலைக்கலாமே? அது தவிர அவருக்கு உண்மையிலேயே வெளிநாடு செல்ல வேண்டிய தேவை எழுந்தால் வெளிநாடுகளில் விசா கிடைப்பதிலும் சிக்கல் வரலாம்.
இவ்வாறு பல விதமான சிக்கலகளைக் கடந்து உலகின் இரண்டாவது பெரிய உளவு நிறுவனமாக விளங்கும் மொசாத் தனது வருங்காலத்தை எப்படிக் கணிக்கிறது என்பது தெரியவில்லை. உலக அரசியலில் மாற்றங்கள் எப்போதும் நிரந்தரமாக நிகழ்கின்றன. தனது பாதுகாப்புக்காக என உருவாக்கியுள்ள முகமையை இஸ்ரேல் மேலும் பலப்படுத்தும் தேவை எழுமா என்பது இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்து விடும். அரபு நாடுகளுடன் அமைதி ஏற்பட்டாலும் தனது வளர்ச்சிப்பாதையில் இராணுவம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பெரிதும் நம்பியுள்ள இஸ்ரேல் எவ்வாறு எதிர்காலத்தைச் சந்திக்கும் என்பது ஆராய வேண்டிய ஒன்றே.
(தொடரும்)