இஸ்ரேலின் சிறப்பு எதில் இருக்கிறது என்றால் அதன் ராணுவ வெற்றிகளிலோ அதன் நாட்டுப்பற்றிலோ அதன் புவியமைப்பு முக்கியத்துவத்திலோ அல்லது புவி சார் அரசியலில் செய்து வரும் பங்களிப்பிலோ இல்லை. மாறாக அவர்களின் தொழில்நுட்பம் அளித்த முன்னேற்றம் அத்தொழில்நுட்பங்களை உலகளவில் முதல் ஸ்டார்ட் அப் நாடாக மாற்றிய விதம், உலகம் முழுவதும் அத்தொழில்நுட்பங்கள் பரவி கோடிக்கணக்கான மக்கள் பலன் அடையச்செய்வது ஆகியவற்றில் அடங்கியுள்ளது.
பலரும் அறியாத ஒரு விஷயம் இஸ்ரேல் எனும் நாடு தோன்றும் முன்பே ஜெருசலேம் நகரில் ஹூப்ரூ பலகலைக்கழகம் அமைக்கப்பட்டுவிட்டது! அப்பல்கலைக்கழகம் 1918-ல் அமைக்கப்பட்டது; ஆனால் இஸ்ரேலோ அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தோற்றுவிக்கப்பட்டது. கல்விக்கு, குறிப்பாக உயர்க் கல்விக்கும், ஆய்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நாடு, இஸ்ரேல். உலகளவில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளில் இரண்டாம் இடம் இஸ்ரேலுக்குத்தான் கிடைத்துள்ளது. முதல் இடம் கனடாவிடம் உள்ளது.
இஸ்ரேலின் மக்கள்தொகை ஏறக்குறைய ஒரு கோடி என்பதால் இதனை ஒரு சாதனையாகக் கருதமுடியுமா என்று கேட்கலாம். ஆனால், இஸ்ரேலின் சாதனைகளுக்குப் பின்னால் இருப்பது கல்வியே. இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடவேண்டியது பல்கலைக்கழகக் கல்வி. ஆம். உயர்நிலைக் கல்வியில் இஸ்ரேல் எப்போதுமே ஆர்வம் காட்டி வந்துள்ளது. சொட்டு நீர்ப்பாசனம், ராணுவத் தொழில்நுட்பம் போன்றவை ஒரு காலகட்டத்தில் இஸ்ரேலுக்குத் துணை நின்றது என்றால் உயர்க்கல்வி இன்றைய முன்னேற்றத்தை உறுதி செய்திருக்கிறது.
இஸ்ரேலியப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆராய்ச்சிக்கூடமாகவே திகழ்கின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் பல்வேறு நாடுகளில் உள்ள பல நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி கிடைக்கின்றது. இங்குப் பயிலும் ஒரு மாணவர் வெறும் கல்வி அறிவு பெறுவதோடு நில்லாமல் ஓர் ஆராய்ச்சியாளராகவும் மாறுகிறார். விளைவு. அவரிடமுள்ள பல வணிக ரீதியிலான சிந்தனைகளில் பலவற்றை நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடனும் வெளி வருகிறார்.இப்படியான பல்கலைக்கழக ஆய்வுகளிலிருந்து பெறப்படும் தொழில்நுட்ப மேம்பாடுகளைக் கொண்டுதான் இஸ்ரேல் தனது தொழில்நுட்ப ஆதிக்கத்தை நிறுவியுள்ளது. உலகின் பல முன்னணி நாடுகளுக்கு இணையாகத் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது இஸ்ரேல்.
இஸ்ரேல் 1980 முதல் 1990கள் வரையிலான காலகட்டத்தில் பொருளாதாரச் சுணக்கத்தை எதிர்கொண்டாலும், அதுவே ஒரு வரமாக அமைந்தது. துன்பகாலத்தில் கிடைத்த நற்பேறு. 1991-ல் சோவியத் ஒன்றியம் உடைந்து அங்கிருந்து 6 லட்சம் யூதர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். முன்னரே இது பற்றிக் குறிப்பிட்டததுபோல் வந்தவர்கள் திறமையான, இளம் வயதுக்கூட்டமாக இருந்தது இரட்டைச் சாதகமானது.
இதே காலகட்டத்தில் உலகம் முழுதும் வீசிய தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளுக்குள் இஸ்ரேலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அப்போது முதல் தனது மனித வளத்தை மக்கள்தொகைப் பெருக்கத்தின் மூலமும், தனது வேலைவாய்ப்பைப் பல மடங்கு உயர்த்தியும் இத்தாலி, ஸ்பெயின் போன்ற முன்னேறிய நாடுகளைவிட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது.
இஸ்ரேலில் தங்களது கிளையை வைத்திராத பெரும் பன்னாட்டு நிறுவனங்களே இல்லை. ஏறக்குறைய 4,000 தொழில்நுட்ப நிறுவனங்கள் இஸ்ரேலில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றில் பல உலகின் பெரிய நிறுவனங்கள். உலகளவில் இஸ்ரேலில் தொழில்நுட்ப அறிவு படைத்த மக்கள்தொகையும் அதிகம். உலகின் முதல் 500 தொழில்நுட்ப நிறுவனங்களில் 50க்கும் மேற்பட்டவை தங்களது ஆய்வு நிலையத்தை இஸ்ரேலில் வைத்துள்ளன. தொழில்நுட்ப ஸடார்ட் அப் சூழல் இப்போதுதான் இந்தியாவில் பிரபலமாகிவருகிறது. ஆனால் உலக தொழில்நுட்பப் புரட்சிக்கு அடிகோலிய இஸ்ரேலில் தொழில் நுட்ப ஆய்வுச்சாலைகள் கொண்ட நகராக அதன் தலைநகரமான டெல் அவிவ் விளங்குகிறது. அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்குக்கு அடுத்தபடியான இடத்தை டெல் அவிவ் நகரம் பெறுகிறது.
அமெரிக்காவின் பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் தங்களது பங்குகளையும் இடம்பெறச் செய்வது ஒவ்வொரு வர்த்தக நிறுவனங்களின் கனவாக இருக்கும். இந்தியாவில் இருந்து ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே அத்தகைய இடத்தைப் பெற்றுள்ளன. ஆனால், இஸ்ரேல் நிறுவனங்களில் பல அமெரிக்க, சீன நிறுவனங்களுக்குப் போட்டியாக நாஸ்டாக்கில் இடம்பெற்றுள்ளன. பல ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் பின்நிலைகளில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் தொழில்நுட்ப சாதனைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகளையும் கூற வேண்டுமே. ஐ ஃபோனின் ஹார்ட்வேர்கள் இஸ்ரேலில்தான் உருவாகின்றன. சீனா ஐஃபோனை அதிகளவில் தயாரிக்கலாம் (இந்தியாவும் இப்போது ஐஃபோனை உற்பத்தி செய்கிறது). ஆனால் அதனை இயக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல்தான் வடிவமைக்கிறது. இதேபோல மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ்ஸை உருவாக்குவதில் இஸ்ரேலியத் தொழில்நுட்பவியலாளர்களின் பங்கு பெரியது. நாம் பயன்படுத்தும் கணினிகளிலும் பிற மின்னணு சாதனங்களிலும் உள்ள இண்டெல் சிப்பை இஸ்ரேலில் தயாரிக்கிறார்கள். இத்தொழிற்சாலையில் ஏறக்குறைய 10,000 பேர் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. கூகுளின் பல தொழில்நுட்பப் புரட்சிகளை இஸ்ரேலிய நிறுவனங்களே உருவாக்கித் தருகின்றனவாம்!
இஸ்ரேலின் இத்தகைய பெரு வளர்ச்சி அதன் தேசிய வருமானத்தில் வெளிப்பட வேண்டுமே? ஆம் இஸ்ரேலின் மொத்த தேசிய உற்பத்தியில் (ஜி டி பி) சுமார் 13% அளவுக்குத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலமாகவே கிடைக்கின்றது. ஆரம்பகாலத்தில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களை இஸ்ரேலில் தொழில் துவங்க அழைக்கும்போது இஸ்ரேல் அரசு 10 நிதியங்களை ஏற்படுத்தி சுமார் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இப்போது அரசு தனது முதலீடுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டது. ஏனெனில் தொழில் நுட்ப நிறுவனங்களால் தங்களுக்கான் முதலீடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்கிற காரணத்தினால் நிறுத்திவிட்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் வென்ச்சர் கேபிடல் எனப்படும் நிதியளிப்பு முறையை இஸ்ரேல் அறிமுகப்படுத்தியது. தனியார் முதலீடுகளில் 40%க்கு இணையாக அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும். லாபத்தில் அரசு செய்த செலவையும் சிறிதளவு வட்டியையும் தனியார் நிறுவனம் திருப்பியளித்தால் மீதமுள்ள மொத்த லாபமும் தனியார் நிறுவனமே வைத்துக்கொள்ளலாம். அதாவது மறைமுகக் கடனுதவியை இஸ்ரேல் அரசு செய்தது. அரசு செய்த $ 100 மில்லியன் முதலீடுகள் ஒரு காலத்தில் $250 மில்லியன்களாக உயர்ந்தது. இது 1993-96-க்கும் இடையில் 3 ஆண்டுகளில் நிகழ்ந்தது. இதற்கு யோஸ்மா திட்டம் எனப் பெயரிடப்பட்டது. யோஸ்மா என்றால் ஹீப்ரூ மொழியில் ‘முயற்சி’ என்று பொருள்.
(தொடரும்)