இஸ்ரேல் உளவுச் செயலியைக் கொண்டு சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், பிற தொழில்நுட்பங்களால் உலகளவில் நல்லதொரு நட்பினையும் ஏற்படுத்தியுள்ளது. ராணுவ ரீதியிலான உறவுகளைத் தவிர, சொட்டு நீர்ப்பாசனம் துவங்கி நீர் மேலாண்மை, கதிரொளி ஆற்றல், மருத்துவம் போன்ற துறைகளிலும் தனது தொழில்நுட்பத் திறனை உலகளவில் பகிர்ந்துள்ளது. குறிப்பாக விண்வெளித்துறையில் கூட முத்திரை பதித்துள்ளது. விண்வெளித் துறையில் போட்டியிடும் திறனில் உலகளவில் 12ஆம் இடத்தை இஸ்ரேல் பெற்றுள்ளது. இதை 2012ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தரமதிப்பிட்டுள்ளது.
இதுவரை 13 ஆய்வு மற்றும் உளவு செயற்கைக்கோள்களை இஸ்ரேல் ஏவியுள்ளது. அவற்றில் சில உலகளவில் மிகவும் மேம்பட்ட விண்வெளி சாதனையாகக் கருதப்படுகின்றன. ஷாவிட் -2 எனும் செயற்கைக்கோள் 1982-ல் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு 1988-ல் விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவுகலமாக இஸ்ரேலின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணைஜெரிக்கோவின் வடிவம் பயன்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் பூமியின் உயரம் குறைவான சுற்றுப்பாதையில் வலம் வரும். இஸ்ரேல் செயற்கைக்கோள்களை மேற்கு திசையிலிருந்து செலுத்துகிறது. கிழக்கில் செலுத்தினால் அண்டை நாடுகளுடன் மோதல் ஏற்படலாம் என்பதால் மேற்குப் பகுதியில் மத்திய தரைக்கடல் பகுதியின் அருகிலிருந்து செலுத்தி வருகிறது.
முன்பு 2004-ல் ஒரு முறை செயற்கைக்கோள் ஏவுதல் தோல்வியில் முடிவுற்றதால் இஸ்ரோவின் மூலமாக ஒரு செயற்கைக்கோளை ஏவியது. இஸ்ரோவுக்கும் இஸ்ரேல் விண்வெளி ஆய்வு அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொழில்நுட்ப உறவு உள்ளது. சென்றாண்டு இரு தரப்பிலும் மேலும் உறவுகளை வலுப்படுத்த சந்திப்புகளும், பேச்சுகளும் நடந்தன. கடந்த 2011-ல் இஸ்ரேல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை வழங்கியது. பின்னர் இது ரிசாட்-2 எனப் பெயரிடப்பட்டு இன்று இந்திய எல்லைகளைக் காக்கும் ‘வானிலிருந்து ஒரு கண்’ணாக செயல்படுகிறது. இஸ்ரேலின் செயற்கைக்கோள்கள் சிலவற்றை இஸ்ரோ விண்ணில் ஏவும் திட்டங்களும் உள்ளன.
இது போலவே பன்னாட்டு அளவில் தனது தொழில்நுட்ப மேம்பாட்டைச் சுட்டிக்காட்டியே உறவுகளின் நிலையை உறுதிப்படுத்துகிறது இஸ்ரேல். அரபு நாடுகளுடனான உறவில்கூட இத்தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் காட்டியே அவர்களுடன் அமைதி உடன்பாடுகளைச் செய்ய முயல்கிறது. ஐநா போன்ற உலக நிறுவனங்களில் இஸ்ரேலின் தொழில்நுட்பம் பயன்படுகிறது என்பது அதன் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது. பல பன்னாட்டுத் தொழில்நுட்ப முயற்சிகளிலும் இஸ்ரேல் உறுப்பினராக உள்ளது. குளோபல் பார்ட்னர்ஷிப் ஃபார் ஆர்டிஃபீஷியல் இண்டெலிஜன்ஸ், ஆர்டிமிஸ் அக்கார்ட், டிஜிநேஷன்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி மல்டி டோனர் டிரஸ்ட் ஃபண்ட் போன்றவை இதில் அடங்கும்.
சமூக இணையதளங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதிலும், ஈ-காமர்ஸ் குறித்த உலக வர்த்தக மையத்தின் முயற்சிகளிலும் இஸ்ரேல் பங்களிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான வணிக மற்றும் அறிவியல் கூட்டுறவை முன்னேறிய நாடுகளுடனான உறவில் இஸ்ரேல் கடைபிடிக்கிறது. ஐந்து கூட்டு தொழில் நிதி ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அந்த ஐந்து நாடுகள்: அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் தென் கொரியா. இந்த நிதி மூலம் கூட்டு ஆய்வுத் திட்டங்களுக்கான நிதி வசதி கிடைக்கிறது. இருதரப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் வகையில் சுமார் 40 திட்டங்களில் இஸ்ரேல் பங்கேற்றுள்ளது. இதில் அமெரிக்காதான் முன்னணியிலுள்ளது.
ஏற்கெனவே சொன்னதுபோல இஸ்ரேலின் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் 60% வரையில் அமெரிக்க நிறுவனங்களே இடம் பெற்றுள்ளன. சைபர் குற்றங்களைத் தடுக்க இஸ்ரேலிடம் இருந்து சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில்நுட்பங்களை உலக நாடுகள் வாங்கியுள்ளன என்கின்றனர். இஸ்ரேலில் சைபர் உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை அளிக்க 27 நிறுவனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் போலந்து, ஜெர்மனி, உக்ரைன், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவையும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக இஸ்ரேலுடன் இணைந்துள்ளன. ஆசியாவில் இந்தியாவைத் தவிர சீனாவும் இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாக இருக்கிறது.
இஸ்ரேலில் எத்தகைய கண்டுபிடிப்புகள் உருவாகின என்பது குறித்து பல தகவல்கள் இருந்தாலும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில், விளையாட்டுத் துறையில், உணவு விநியோகத்தில் எனப் பட்டியலிட்டால் அவை அனைத்திலும் ஏதோ ஒரு இஸ்ரேலிய தொழில்நுட்பம் அடங்கியிருக்கும். ஓர் எடுத்துக்காட்டாகப் பார்த்தால் ஸ்மார்ட்ஃபோனில் இரு லென்ஸ்கள் உள்ள ஃபோன்களை உருவாக்கியது கோர்ஃபோனோடிக்ஸ் எனும் நிறுவனம். யு எஸ் பி பென் டிரைவ்வை எம்-சிஸ்டம்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து ஐ பி எம் உருவாக்கியது. யூ மூவ் எனும் நிறுவனம் இஸ்ரேலில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மென்பொருள்தான் முக மற்றும் கண்ணைக் கொண்டு அடையாளம் அறியும் தொழில்நுட்பத்தைக் கொடுத்துள்ளது.
இஸ்ரேலின் வேஸ் எனும் நிறுவனம் உருவாக்கிய GPS தொழில்நுட்பத்தைத்தான் கூகுள் நிறுவனம் 2008-ல் வாங்கியது. இதுதான் இப்போது வரை உலகம் முழுதும் பொதுவாக பயனில் இருக்கும் தொழில்நுட்பம்.
விவசாயம், மருத்துவம் என இரண்டு ஆகப்பெரும் துறைகளிலும் இஸ்ரேலிய நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளன. கை, கால் இழந்த மனிதர்களுக்கான ரோபோடிக் உறுப்புகளை ரீ-வாக் எனும் கருவியை டாக்டர் அமித் கோஃபர் என்பவர் உருவாக்கியுள்ளார். அகோல் எனும் நிறுவனம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் தகவல்களைத் திரட்டித் தரும் பணியையும் செய்கிறது. இத்தொழில்நுட்பங்கள் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்துக்கு வந்துவிட்டன. இந்தியா போன்ற நாடுகளில் இப்போதுதான் அறிமுக நிலைக்கு அதுவும் ஸ்மார்ட்ஃபோன் பரவலாக பயனாகும் நிலையில் விவசாயிகளைச் சென்றடைந்துள்ளன. மேலும், சிடி ஸ்கேனர், எம் ஆர் ஐ, அச்ல்டிராசவுண்ட் ஸ்கேனர்கள் போன்றவையும் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டவையே.
சமீபத்தில் பாலஸ்தீன சிறுவனான சுலைமான் ஹஸன் சைக்கிள் ஓட்டும்போது ஏற்பட்ட கார் விபத்தில் தலைப்பகுதி உடலில் இருந்து கிட்டத்தட்ட அறுந்து தொங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டான். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மருத்துவர்கள் தலையை ஒட்டவைத்தாலும் சிறுவன் பிழைப்பது அரிது என்றே நினைத்தனர். ஆனால் பிழைத்துவிட்டான். மாபெரும் மருத்துவ அதிசயம் அது. ஒரு மாதம் கழித்து சிறுவனுடன் அந்த மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் உலகம் முழுதும் பரவியது. மருத்துவர்களின் திறனும், மருத்துவத்தின் முன்னேற்ற நிலையும் மிகவும் கைக்கொடுத்துள்ளன என்பதற்கு இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.
இஸ்ரேலின் இச்சாதனைகளுக்கு பின்னால் கல்வி அமைப்பின் பலமும் தெரிகிறது. இஸ்ரேலிய பல்கலைக்கழங்கங்களில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் கல்விப் பயில வருவது அதிகரித்தே வருகிறது. உலக அளவில் இஸ்ரேலின் பல பல்கலைக்கழகங்கள் ரசாயனம் (டெக்னியான்), கணினி அறிவியல் (வீஸ்மான் டெல் அவிவ் மற்றும் ஹீப்ரூ) ,கணிதம், இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் (ஹீப்ரூ மற்றும் டெக்னியான்) போன்ற துறைகளில் புகழ் பெற்று விளங்கி வருகின்றன.
இதுவரை 13 நோபல் பரிசுகளை இஸ்ரேலியர்கள் வென்றுள்ளனர். அறிவியல் மட்டுமின்றி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசையும் வென்றுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் பிரதமர்களான பெகின், பெரேஸ் மற்றும் ராபின் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
(தொடரும்)
இஸ்ரேலில் என்ன தொழில்நுட்பங்கள் முன்னணியில் உள்ளன; அதன் துவக்கம் என்ன போன்ற கேள்விகளுக்கு இச்சிறு காணொலி பதில் தருகிறது.