Skip to content
Home » இஸ்ரேல் #31 – கல்வியும் சமூகப்-பொருளாதாரச் சூழலும்

இஸ்ரேல் #31 – கல்வியும் சமூகப்-பொருளாதாரச் சூழலும்

Israel

இஸ்ரேலில் கல்வி குறித்தான பார்வை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்குமே இருக்கும். ஏனெனில் ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்களும் அவற்றின் மூலமான பில்லியன் டாலர்கள் வருமானமும் அனைவரையும் அதிசயவைக்கவே செய்யும். இஸ்ரேல் சமூகத்தில் கல்வி குறித்த நிலை வரலாற்றில் பண்பாட்டின் வளர்ச்சியுடன் இணைந்ததாகவே இருக்கிறது என்கின்றனர்.

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மற்றும் பிற ஆட்சியர்களால் நிலமோ அல்லது வேறு வகையான சொத்துரிமையோ வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படாத நிலையில் வாடி வந்த யூதர்களுக்கு கல்வியும் அறிவைத் தேடும் தாகமுமே அவர்களுடைய நசுக்கப்பட்ட நிலையிலிருந்து எழுச்சியைக் கொண்டு வந்தன. வணிகர்களாகவும் இன்ன பிற தொழில்களிலும் சிறந்து விளங்க ஏதுவாக அவர்களது அறிவாற்றலே துணை நின்றது என்கின்றனர். பல அரசுகளில் அரசர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியிலும்கூட யூதர்கள் இருந்துள்ளனர். இதற்குக் காரணம் அன்றைய முக்கிய அறிஞர்கள் பெரிதாக எண்ணும் வானியல், இயந்திரவியல், கணக்கியல் உட்பட பல அறிவியல் துறைகளில் யூதர்கள் சிறந்து விளங்கியதே. தங்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் புலனாகாத வரமாகக் கல்வியும், அறிவு வேட்கையும் கிடைத்ததாக யூதர்கள் கருதினர்.

இஸ்ரேல் தோன்றிய பிறகு கல்விக்குத் தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள் உட்பட உயர் கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன. நாளடைவில் உயர்கல்வி பயின்று தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்தனர். ஆனால் இப்போக்கு இன்று பெரிய தடையை எதிர்கொண்டுள்ளது.

மக்கள் தொகையில் ஒரு பகுதியினராக இருந்த பழமைவாதிகளும், அராபியர்களும் கல்வியை இடை நிற்றல் செய்வதிலும், மதக் கல்வியை மட்டுமே தொடர்ந்து கற்போம் எனும் தீவிரமான நிலைப்பாட்டை எடுப்பதிலும் மும்மரமாக இருந்து வருகின்றனர். இதனால் ஏற்கெனவே வெளிநாட்டவர்களை வரவைத்துத் தொழிலாளர் திறன் பற்றாக்குறையைச் சமாளித்து வந்த தொழில் துறையினர் தங்களது தொழில்களை வெளிநாடுகளுக்கு அவுட்-சோர்சிங் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே ராணுவத்தில் கட்டாயமாகப் பணியாற்றும் விதியைத் திருத்தி இதுவரை கொடுக்கப்பட்ட விலக்குகளை நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளனர். இது மட்டுமின்றி குறைந்தபட்சக் கல்வித் தகுதியையும் ஏற்படுத்த உள்ளனர். இதனால் எதிர்காலத்தில் திறன் பற்றாக்குறை நீங்கும் என்று கருதுகின்றனர்.

இஸ்ரேல் கல்வி அமைப்பானது 6+3+3+3+2+ 4 எனப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி 6 வருடங்கள் (6-12 வயது வரை) அதன் பிறகு இடைநிலைக் கல்வி (12-15 வயது வரை) 3 ஆண்டுகள், மேல் நிலைக்கல்வி (15-18 வயது வரை) 3 ஆண்டுகள், இளங்கலை வகுப்பு 3 ஆண்டுகள், பட்டப்படிப்பு 2 ஆண்டுகள் கடைசியாக முனைவர் பட்டம் 4 ஆண்டுகள். தொழிற்கல்வியும் தனியே கற்பிக்கப்படுகிறது. தொழிற்கல்வியே தேசத்தின் உழைப்பாளர்களை உயர் தொழில்நுட்பப் பணிகளுக்கும், ராணுவத்தின் தொழில் நுட்பப் பிரிவுகளில் பணியாற்றவும் அடிப்படையாக உள்ளது. அனைத்து உயர்க்கல்விக்கும் மேல் நிலைக்கல்வியில் பெறப்படும் சான்றிதழ் (பக்ரூட்) தேவைப்படுகிறது.

குழந்தைகளுக்கு கல்வியின் மீது ஈர்ப்பு வருவதற்கு நம்நாட்டில் உள்ள பால்வாடி பள்ளிகள் போல 2-3 வயது குழந்தைகளுக்குக் கல்வி அறிவு புகட்ட பள்ளிகள் உண்டு. இது போன்ற பள்ளிகள் உள்ளூர் நிர்வாகத்தால் நடத்தப்படுகின்றன. பகல் நேரத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் மையங்கள் பல பெண்களால் நடத்தப்படுகின்றன. இங்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது. தொலை தூரப் பிரதேசங்களிலும், சாதகமற்ற சூழல்கள் நிலவும் இடங்களிலும் பள்ளிகளை நடத்தத் தனித்த திட்டங்கள் உள்ளன.

மழலையர் பள்ளிகள் ஐந்து வயது குழந்தைகளுக்குக் கட்டாயமானவை; அவை இலவசமாகக் கல்வி கற்பிக்கின்றன. அடிப்படைத் திறன்கள், கணக்கியல் மற்றும் மொழி ஆகியவற்றைக் கற்பிக்கிறார்கள். இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி சிறக்கவும் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கவும் முனைகிறார்கள். கல்வி பயிற்றுவிக்கும் இடங்களில் உணவும் உறைவிடமும் வழங்கும் பள்ளிகளும் உண்டு. இவை துவக்கக்கல்விக்குப் பிந்தையக் கல்வியைக் கற்பிக்கும் பள்ளிகளில் காணப்படுகின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 10% பேர் இப்பள்ளிகளில் பயில்கிறார்கள்.

பள்ளிகளை நான்கு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

  1. அரசுப் பள்ளிகள்: பெரும்பாலான மாணவர்கள் இங்குதான் பயில்கிறார்கள்.
  2. அரசு மதக்கல்விப் பள்ளிகள்: இங்கு யூத மதக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
  3. மரபு சார்ந்த பள்ளிகள்: இவை அராபியர்கள் மற்றும் ட்ரூஸ் சிறுபான்மையினர் பயிலும் பள்ளிகள். இங்கு மதமும் பண்பாடும் கற்பிக்கப்படுகின்றன.
  4. தனியார் பள்ளிகள்: இவை பல்வேறு மதத்தவர்கள், பன்னாட்டு கல்வி அமைப்புகளின் கீழ் நடத்தப்படுகின்றன.

இஸ்ரேலியக் கல்வி அமைச்சகம் ஏராளமான கல்வி சார்ந்த கற்றல் வசதிகளையும் சாதனங்களையும் வழங்கியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பள்ளியும் செயல்படும். தாங்கள் வாழும் சமூகத்தினை அறிந்துகொள்ள மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பில் ஆழமாகக் கற்க ஏற்பாடு இருக்கிறது. திறமை வாய்ந்த, கல்வியில் நிகரற்று விளங்கும் மாணவர்களுக்கு உயர்த் தகுதியுடைய திட்டங்களில் இடம் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய முறையில் அனைத்து வசதிகளும் கல்வி பயிலும் இடங்களில் கிடைக்கும்படி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பலருக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் சார்ந்த சமூகத்தினுள்ளேயே வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உளவியல், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரால் மாணவர்களின் நலன் பேணப்படுகிறது.

உயர் கல்வியில் இஸ்ரேலின் வளர்ச்சி என்பது தனித்துவமானது என்பதை ஏற்கெனவே அறிந்துள்ளோம். அனைத்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கும் நம்மூரில் +1, +2 போன்ற பள்ளி இறுதித் தேர்வான பக்ரூட் வழிவகை செய்கிறது. நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் உயர் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது. உயர் கல்வியில் புதிய புலங்களை இணைப்பதன் மூலம் அது விரிவடைந்து வருகிறது. மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் உயர் கல்வியை நோக்கி வருவதும் அதன் வளர்ச்சியைச் சுட்டுகிறது. பல்கலைக்கழகங்கள் மூலமே உயர் கல்வி நடைபெற்று வருகிறது. உயர்நிலைக்கல்வியை அளிக்கும் பல்கலைக்கழகம் அல்லாத கல்வி நிறுவனங்கள் இளங்கலைக் கல்வியை மட்டுமே அளிக்கின்றன. வட்டாரக் கல்லூரிகள் கலைப்பாடங்களையும்கூடக் கற்பிக்கின்றன.

பெரும்பாலான மாணவர்கள் 20 முதல் 24 வயதில் தான் பாடங்களைப் படிக்கிறார்கள். இதற்குக் காரணம் கட்டாய ராணுவச் சேவையே. வியப்பூட்டும் வகையில் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலான மாணவர்கள் பெண்களே. கற்பிக்கப்படும் பாடங்கள் வேறுபட்டவை. சமூக அறிவியல், அறிவியல், மானுடவியல், வணிகம், மேலாண்மை மற்றும் கணிதம் போன்றவை இவற்றில் அடங்கும். இஸ்ரேலின் கல்விச் சேவையில் குறிப்பாக உயர் கல்வியில் வெளிநாட்டு நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றின் கிளைகள் மூலம் அவை செயல்படுகின்றன.

இஸ்ரேல் கல்வி அமைப்பில் உறுத்தக்கூடிய விஷயம் மதக்கல்வி நிறுவனங்கள் தனியாகவே இயங்குகின்றன. அரசு நடத்தும் பள்ளிகளில் மதச்சார்ப்பற்ற அணுகுமுறை உண்டு. எனவே பெரும்பாலான பள்ளிகள் மதச் சார்ப்பற்றவையே. இஸ்ரேலும் மதச் சார்ப்பற்ற நாடு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனாலும் மக்களில் பலர் யூத மதக்கோட்பாடுகளுக்கும், பாலஸ்தீன அராபியர்கள் இஸ்லாத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதால் தனித்தனிப் பள்ளிகள் தேவைப்படுகின்றன. மதக்கல்விப் பள்ளிகளில் இருபாலருக்கும் தனி வகுப்புகள் முறை பின்பற்றப்படுகிறது.

எனினும், மொத்தமாகப் பார்த்தால் தொழில்மய நாடுகளின் மத்தியில் இஸ்ரேலின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. கனடாவுக்கு அடுத்தபடியாக அதிகமாகக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர் எண்ணிக்கை கொண்ட நாடு, இஸ்ரேல் என்பது அதன் வெற்றியை நன்கு எடுத்துக்காட்டுகிறது. இஸ்ரேலின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதன் கல்வி முறையே அடிப்படைக் காரணமாகத் திகழ்கிறது.

(தொடரும்)

 

இஸ்ரேலின் கல்வி முறை குறித்து அறிந்து கொள்ள இக்காணொலிகளைப் பார்க்கவும்

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts