இஸ்ரேலைத் தோற்றுவிக்கும்போது அதனை மதச்சார்பற்ற தேசம் என வரையறுத்தனர். அதிகாரபூர்வ மொழியாக ஹூப்ரூ இருந்தாலும் அரபி உட்பட வேறு சில மொழிகளும் அங்கீகாரம் பெற்றன. பெரும்பாலான வழக்கு மொழிகளும் இவற்றில் அடங்கும். ஐரோப்பிய மொழிகளான ரஷ்யன், ஆங்கிலம், யிட்டிஷ், ஃபிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகியவனவும் பேசப்படுகின்றன. இவை தவிர ஏறக்குறைய 10% பேர் வட்டாரவழக்கு மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். ஹீப்ரூவை 90% யூதர்களும், 60% அராபியர்களும் நன்கறிந்துள்ளனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
இஸ்ரேலிய தூதரக, அயல்நாட்டு தொடர்பு மொழியாக ஃபிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் இருந்து வந்தன. ஆறு நாட்கள் போருக்குப் பிறகு ஃபிரெஞ்சுப் பயன்பாடு குறைந்தது. பின்னர் 1990 களிலிருந்து ஆங்கிலம் கடவுச் சீட்டுகளில் இடம் பெறத் துவங்கியது. இப்போது அயல் உறவுத்துறை அதிகாரிகள் ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆக, ஹீப்ரூவுக்குப் பிறகு செல்வாக்கான மொழியாக ஆங்கிலம்தான் இருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து புலம் பெயர்ந்த யூதர்கள் ரஷ்ய மொழியைத் தங்கள் முதன்மை மொழியாகக் கருதுகின்றனர். ஏறக்குறைய 20 லட்சம் பேர் ரஷ்ய மொழியில் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். ஏராளமான இதழ்கள், டிஜிட்டல் ஊடகங்கள் ஆகியன ரஷ்ய மொழியில் வெளிவருகின்றன. ஹீப்ரூவுக்குப் பிறகு மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மொழி என்றால் அது ரஷ்ய மொழிதான். எனினும் வேலைவாய்ப்பு என்று வந்தால் ஆங்கிலம் கட்டாயம் தேவை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் ஒருவர் ஆங்கிலம் தெரியாத பட்டதாரிகள் இன்றையப் பொருளாதார சூழலில் “மாற்றுத்திறனாளிகள்” என்று குறிப்பிடுகிறார் என்றால் அதன் முக்கியத்துவம் விளங்கும். ஏனெனில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆங்கிலப் பின்னணியைக் கொண்டவையே.
யிட்டிஷ் மொழி ஜெர்மன் பின்னணியில் உருவானது. கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த யூதர்களால் கொண்டு வரப்பட்டது. ஹீப்ரூவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பேசும் மொழி யிட்டிஷ் எனக் கூறப்படுகிறது. பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இம்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இப்போது வரை ரஷ்ய மொழியைப்போல ஏறக்குறைய 20 லட்சம் பேர் இம்மொழியைப் பேசுகின்றனர்.
ஹீப்ரூவும் தமிழ், சம்ஸ்கிருதம் போல செம்மொழிதான். பண்டைய மொழிகளில் இன்னமும் புழக்கத்திலுள்ள மொழிகளில் ஹீப்ரூவும் ஒன்று. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் ஹீப்ரு மொழியில்தான் (அதன் ஆதி வடிவில்) பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. இடைக்காலத்தில் பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களைத் தருவித்துக்கொண்டு வளர்ந்த ஹீப்ரூ நவீன காலத்தில் மக்களால் பேச, எழுத உதவும் வடிவத்தை அடைந்துள்ளது.
மொழி என்றால் இனமும் இணைந்து வர வேண்டும். யூத மொழி (ஹீப்ரூ) என்றால் யூத இனம் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் யூதர்களை இனமாகக் கருதுவதில்லை. யூத மதத்தவர் என்றே அடையாளப்படுத்துகின்றனர். ஏறக்குறைய அராபியர்களும்கூட இனமாக இல்லாமல் குறிப்பிட்ட தேசத்தின் மக்களாகவோ இஸ்லாமியர்களாகவோ அடையாளப்படுத்தப்படுகின்றனர். கிறிஸ்தவர்களும் தேசத்தின் குடிமக்களாகவோ கிறிஸ்துவ மதத்தவராகவோகத்தான் அடையாளம் காணப்படுகின்றனர். ஹிந்துக்கள் என்றாலே இந்தியர்கள்தான்.
இப்படி மதம், பிரதேசம் என அடையாளம் இருக்கையில் யூதர்களுக்கு மொழி, பண்பாடு இருந்தும் இனம் என்ற வரையறை இல்லை. இச்சூழ்நிலையில் பாலஸ்தீனர்கள் தங்களை இனமாகவும், யூதர்களுடன் அப்பிராந்தியத்தில் ஒரு சேர வாழ்ந்தவர்கள் என்பதையும் வைத்து தங்களுக்குரிய பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது என்கின்றனர். யூதர்களும் உலகம் முழுதும் பரவினாலும், சிறு அளவில் மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளனர். எனவே இனம் எனும் வரையறை இல்லாவிட்டாலும் மொழி, பண்பாட்டு வழக்கால் தனி அடையாளம் கொண்டுள்ளனர்.
துவக்ககாலம் முதலே யூதர்கள் தங்களை ஆபிரஹாம், ஐசாக் மற்றும் ஜேக்கப் ஆகியோரின் வாரிசுகளாக அறிவித்து வந்தனர். மதம் மாறி வந்தவர்களையும் அப்பாரம்பரியத்தில் இணைத்தனர். சில நேரங்களில் தங்களைப் பழங்குடியினர் எனவும் கூட அடையாளப்படுத்தினர். எப்போதும் ஒரு குறிப்பிட்ட தோற்றம் அல்லது உருவ ஒற்றுமை, நீண்ட காலம் ஒரே பிரதேசத்தில் வாழ்வது, மரபணு ரீதியில் ஒன்றுபட்டிருப்பது, இப்படி எதுவும் இல்லாத யூதர்களை இனம் என வரையறுப்பதில் சிக்கல் இருக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். வெவ்வேறு நாடுகளில் பல்வேறு பின்னணியில் இருந்து யூத மதத்தைத் தழுவியர்களால் ஒரே மாதிரியான மரபணுத் தொகுப்பைக் கொண்டிருக்க முடியாது அல்லவா? இந்தியாவில் பல்வேறு மொழி, இனம் மற்றும் பண்பாடு இருந்தாலும் 97% பேரின் மரபணு ஒன்று என ஓர் ஆய்வில் தெரிய வந்தது. எனவே இனம் என்பதற்கான தனிப் பண்புகளை யூதர்கள் பெறவில்லை.
யூதர்களை நாஜிக்கள் படுகொலை செய்தபோது அதை ‘யூத இனப்படுகொலை’ என்றே அழைத்தனர். இது யூதர்கள் ஓர் இனம் எனும் அடையாளத்தைக் கொடுத்தது. ஆயினும் யூதர்களை இனம் எனும் அடையாளத்துக்குள் பொருத்த முடியாது என்று இப்போது கூறப்படுகிறது.
யூதர்களுடைய பண்பாடும் வேறுபட்டது. பெரும்பாலும் மத ரீதியிலான மதிப்பீடுகளை ஒட்டியே யூதப்பண்பாடும் அமைந்துள்ளது. உடை, உணவு ஆகிய விஷயங்களில் இன்று யூதர்கள் மத மதிப்பீடுகளில் இருந்து மிகவும் விலகிவிட்டதாகத் தெரிகிறது. மத வழிப்பாட்டு நேரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அணிந்து கொள்ள தனி ஆடைகள் உண்டு. ஆண்கள் சிறு தொப்பி ஒன்றை அணிந்திருப்பார்கள். அதன் பெயர் கிப்பா. பெண்களும் தங்களது தலையை மறைக்கும்படி “ஸ்கார்ஃப்’ அல்லது ஷிட்டல் எனும் ‘விக்’ அணிவார்கள். வழிபாட்டு நேரங்களிலும், திருமணம், இறப்பு போன்ற தருணங்களிலும் ஆண்களும், பெண்களும் தங்களுடைய மதப் பாரம்பரியப்படியான ஆடைகளை அணிவது ஏறக்குறைய கட்டாயம்.
உணவு விஷயத்திலும் யூதர்களின் கோஷர் உணவு முறைகள் உலகப் பிரபலம். எப்படி ஹலால் உணவுகள் இந்தியாவில் பரவலாகக் காணப்படுமோ அதுபோல யூதர்கள் வாழும் உலக நகரங்களில் கோஷர் முறையில் உணவு வழங்கப்படும் எனும் அறிவிப்புகள் உணவகங்களில் காணப்படும். கோஷர் உணவு முறை என்பது சில வகையான இறைச்சிகளையும், கடல் உணவுகளையும் தவிர்ப்பதும், இறைச்சி மற்றும் பால் பொருட்களைத் தனித்தனியே பிரித்து வைப்பதுமாகும். ஏறக்குறைய ஹலால் உணவு முறையும், கோஷர் உணவு முறையும் ஒன்றுதான். சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு. அவற்றின் ஒற்றுமைகளில் முக்கியமானது இருவருமே பன்றிக்கறி உண்ண மாட்டார்கள். இருவருமே பசு இறைச்சியை உண்பார்கள். இந்துக்கள் உட்பட பல மதத்தவர் இவை இரண்டையுமே உண்ண மாட்டார்கள். ஆனாலும் இந்துக்களில் ஒரு பிரிவினர் பன்றிக்கறியை உண்பார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு. இதே போலத்தான் பசுவின் இறைச்சியை உண்பதும். இந்தியாவில் இருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு மாட்டு இறைச்சி ஏற்றுமதி உண்டு. அவை எல்லாமே இஸ்லாமிய நாடுகளுக்குப் போவதாகப் பொதுவான எண்ணம் இருக்கும். ஆனால் அவை இஸ்ரேலுக்கும் போகின்றன.
மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்ப தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ளூர் மக்களுடன் இணைந்து தங்களது பண்பாட்டு நடைமுறைகளை மாற்றியமைத்துக்கொள்ளும் யூதர்களும் உண்டு. மாறாக, தங்களது பாரம்பரியத்தை அப்படியே பின்பற்றுபவர்களும் உண்டு. அமெரிக்காவில் நடந்த பல ஆய்வுகளில் இந்த கால மாற்றத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அமெரிக்க யூத மக்கள் தொகை செல்வாக்கு மிக்கது மட்டுமல்ல; இரண்டாவது பெரிய யூத மக்கள் தொகையையும் கொண்டது. ஏறக்குறைய 80 லட்சம் யூதர்கள் அல்லது யூத தலைமுறையினர் அமெரிக்காவில் வாழ்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அமெரிக்க யூத மக்கள் பல்வேறு சமூக மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு ஆய்வின்படி 1% யூதர்கள் தங்களுக்கு மதம் கிடையாது என்று கூறியுள்ளனர்.
உலகம் முழுதும் யூதர்கள் வாழ்ந்தாலும் அவர்களில் பெரும்பாலோர் ஐரோப்பிய மண்ணில்தான் வாழ்ந்தனர். இதன் காரணமாக யூதர்கள் நவீன தொழில்நுட்பப் பண்பாட்டுக் கருவிகளான வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம், அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றிலும் கோலோச்சினர். இரண்டாம் உலகப்போருக்கு முன்னரும் பின்னரும்கூட இதன் தொடர்ச்சியைக் காணலாம்.
(தொடரும்)