Skip to content
Home » இஸ்ரேல் #34 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள்

இஸ்ரேல் #34 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள்

பாலஸ்தீனம்

சுதந்திர பாலஸ்தீனம் என்பது பாலஸ்தீனர்களின் பிறப்புரிமை என்பதை உலகில் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. வழக்கம்போல அமெரிக்க மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கவில்லை. ஆனாலும் இன்று வரை சுதந்திர பாலஸ்தீனம் ஒரு சிறு நிலப்பகுதியில் பாலஸ்தீன தன்னாட்சிப் பகுதி எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. காரணம் நாம் அறிந்ததுதான்.

இஸ்ரேல் அப்பகுதியில் அமைக்கப்படுவதை அராபிய நாடுகள் எதிர்த்து மூன்று முறை போர்த் தொடுத்ததால் பாலஸ்தீனம் கனவாகிப் போனது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலை அப்பகுதியில் அமைக்க முடிவு செய்தபோது அதன் பின்னால் இருந்த நியாயத்தை உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. ஆயினும், ஹிட்லருக்கு உதவிய அரபு இஸ்லாமிய மதத் தலைவர்களும், அவர்களின் ஆதரவு பெற்ற அரசியல் தலைமைகளும் இஸ்ரேலை எதிர்த்தனர். தொடர்ச்சியாகப் போர் புரிந்தும் தோல்விகளைச் சந்தித்தனர். பின்னர் யதார்த்தச் சூழலை உணர்ந்த எகிப்து இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போதே சுதந்திர பாலஸ்தீனத்துக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டது எனலாம்.

இப்போது சவூதி அரேபியாவும் இஸ்ரேலுடன் சுமுக ராஜ்ஜிய உறவுகளை ஏற்படுத்த விழைந்துள்ள நிலையில் பாலஸ்தீனர்களின் நிலை என்ன என்பதை உலகம் உற்று நோக்கி வருகிறது. இந்தப் பின்னணியில் மத்திய கிழக்கில் பாலஸ்தீனம் என்றொரு பகுதியின் வரலாறு என்ன என்பதையும் காண வேண்டும்.

பாலஸ்தீனப்பகுதியில் கற்காலம் துவங்கி இரும்புக் காலம் வரையிலான மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. யூத அரசன் தாவூதின் படைகள் பல கிழக்குப் பகுதிகளையும் பாலஸ்தீனப் படைகளையும் வெற்றி கொண்டார் என்பதிலிருந்து வரலாற்று காலம் கணக்கிடப்படுகிறது. எகிப்துப் பேரரசின் வீழ்ச்சி, ரோம ராஜ்ய வீழ்ச்சி ஆகியவற்றுடன் புதிய மதங்களின் வருகையும் அப்பகுதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பிலிஸ்தீனியர்கள் என்றழைக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இப்பெயர் வந்ததற்கு காரணம் ராம்சேஸ் -3 அரசரின் கூலிப்படைகளாக இருந்ததால் ஏற்பட்டது என்கின்றனர். கிரேக்க எழுத்தாளர்கள் பிலிஸ்தீனம் எனும் இடத்துக்கு பிலிஸ்தியா எனப் பெயர் வைத்ததில் இருந்து பெறப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இப்பகுதிக்கு முதலாம் உலகப் போர் முடிந்த காலம் வரையில் பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை. தொடர்ச்சியாக ஆட்டோமான் பேரரசின் கீழ் இருந்த இப்பகுதி 1920-22 காலகட்டத்தில் பிரெஞ்சு-ஆங்கிலேய அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. சவூதி அரேபியா, ஈராக், சிரியா, ஜோர்டன் என தனித்தனி நாடுகள் உருவானபோது பாலஸ்தீன அராபியர்களுக்கு தனி நாடு ஏதும் கிடைக்கவில்லை. அப்பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது.

பாலஸ்தீனம் என்ற பகுதிக்கு நிரந்தர எல்லை வரையறுக்கப்படவில்லை. கிழக்கே ஜோர்டன் நதி, மேற்கே சினாய், வடக்கே சிரியாவின் பகுதிகள் மற்றும் மத்தியத் தரைக்கடல் போன்றவை எல்லைகளாகக் கருதப்பட்டன. இப்பகுதிகளை இஸ்ரேலுக்கு என்று ஒதுக்கியபோது மேற்கே இருந்த ஜெருசலேம் அடங்கிய மேற்குக் கரைப் பகுதிகளும், காசாவும் மட்டுமே பாலஸ்தீனமாக அடையாளம் காணப்பட்டன. ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலும் பாலைவனப்பகுதிகளே. மேற்காசியப் பகுதியில் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்பட்டது பாலஸ்தீனம். ஜோர்டானையும் சிரியாவையும் மத்தியத் திரைக்கடலோடு இணைக்கும் பகுதியாகவும் இருந்தது. இஸ்ரேல் அமைக்கப்பட்ட பிறகு பாலஸ்தீனர்களுக்கு காசாவைத் தவிர கடல் சார்ந்த பகுதி வேறேதும் இல்லாமற் போனது.

வரலாற்றுக் காலத்தில் அலெக்ஸாண்டரின் தளபதியான டாலமியின் கீழ் பாலஸ்தீனம் இருந்தது. பெயரளவில்தான் எகிப்தின் ஆட்சி. ஆனால் உள்ளூர் பழங்குடியினத் தலைவர்களின் ஆதிக்கமே மேலோங்கியது. மேலும் கி.மு மூன்றாம் நூற்றாண்டின் போது பருப்பு, எண்ணெய் மற்றும் மதுவுடன் பெண்களின் ஏற்றுமதியும் நடந்ததாக ஒரு சரித்திரக் குறிப்பு தெரிவிக்கிறது. டாலமி ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தை நகரமயமாக்கி அதன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிவெடுத்ததாகத் தெரிகிறது. இதே காலகட்டத்தில் அலெக்ஸாண்டரின் மற்றொரு தளபதியான செல்லுகஸ் நிகேடாரின் பார்வையும் பாலஸ்தீனத்தின் மீது இருந்து வந்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கி.மு 200-ல் டாலமி 5-ன் காலத்தில் ஆண்டியோகுஸ் படைகளால் பாலஸ்தீனம் வெல்லப்பட்டது. இதன் பிறகு தொடர்ச்சியாகப் பல போர்களையும், ஆட்சி மாற்றங்களையும் பாலஸ்தீனம் சந்தித்தது.

பின்னர் ஆறாம் நூற்றாண்டில் முதல் காலிஃபாவான அபு பக்கர் (632-634) பெரும்படைகளைத் திரட்டி புனித ஜிகாத்துக்கு அழைப்பு விடுத்தார். அவருக்குப் பிறகு காலிஃபாவான முதலாம் உமர் (634-644) சிரியா முழுமைக்குமான ஆட்சி விரிவாக்கத்தை ஏற்படுத்த படைகளை அனுப்பியது பெரும் பலன் தந்தது. பின்னர் 623-ல் ஜெருசலேம் உட்படப் பல பாலஸ்தீனப் பகுதிகள் காசாவரையில் இஸ்லாமியர் வசம் சென்றது. அப்போதுதான் அல்-அக்சா மசூதியும் கட்டப்பட்டது. உமாயாத் பேரரசு என்றழைக்கப்பட்ட அரசின் கீழ் பாலஸ்தீனம் தனியே ஒரு மாகாணமாக (ஆறு மாகாணங்களில்) அங்கீகாரம் பெற்றது. இதுவே பாலஸ்தீனம் எனும் பகுதியின் முதல் தோற்றம் எனலாம்.

உம்மாயாத் காலிஃபா அப்துல் மாலிக் இபின் மார்வான் 691-ல் பாறைக் கோயிலை நிர்மாணித்தார். உம்மாயாத் காலத்தில் இஸ்லாமியமயமாக்கலும் அராபியமயமாக்கலும் ஒரு சேர நிகழ்ந்தது. இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது இழிவுபடுத்தும் செயல்கள் அரங்கேறின. பேரளவில் மதமாற்றம் நிகழ்ந்தது. குறிப்பாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். பாலைவனத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வருகை தந்ததாலும், மதமாற்றத்தாலும் கிறிஸ்தவர்கள் அதிகம் இருந்தப் பகுதி இஸ்லாமியர் அதிகம் இருக்கும் பகுதியாக மாறியது. இதே காலகட்டத்தில் மற்றொரு நிகழ்வும் நடந்தது. ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக இடம் விட்டு நீங்கியிருந்த யூதர்களில் ஒரு பகுதியினர் ஜெருசலேமுக்குள் வந்தனர்.

உம்மாயாத்துகளின் ஆதிக்கம் 750-ல் முடிவுற்ற போது அப்பாசித்களின் ஆதிக்கம் எழுந்தது. அப்பாசித்களுக்கு சிரியாவின் பழங்குடியினர் ஆதரவு இருந்தது. உம்மாயாத்துகளுக்கு யேமன் பழங்குடியினரின் ஆதரவு இருந்தது. எனவே இரு தரப்புக்கும் இடையில் பகைமை மூண்டது. இதனால் பல உம்மாயாத் எழுச்சிகள் உருவாகி அவை கடுமையாக அடக்கப்பட்டன. பின்னர் சிலுவைப்போர்ப் படையினர், மாம்லுக்ஸ் என பல ஆட்சிகள் வந்தாலும் நிலையாக யாரும் செல்வாக்கோடு இருக்கவில்லை.

அடுத்ததாக ஆட்டோமான் பேரரசின் கீழ் பாலஸ்தீனம் இடம் பெற்றது. அப்பகுதியின் வளர்ச்சியும் பெருகியது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 1948 வரையில் பாலஸ்தீனத்துக்குரிய அங்கீகாரம் கிடைத்து வந்தது. ஆட்டோமான் நாடாளுமன்றத்தில் பாலஸ்தீனப் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். பல சஞ்சிகைகள் 1914-கு முன்பே பதிப்பில் இருந்தன. இந்த இதழ்களில் அராபிய தேசிய வாதமும் யூத எதிர்ப்பும் முழுமையாக காணப்பட்டன. இது முதல் உலகப் போருக்கு முந்தைய நிலை. அராபியர்கள் யூதக் குடியேற்றத்தினர் (சியோனிஸ்ட்கள்) நிலம் வாங்குவதை எதிர்த்தனர். பிரெஞ்சு செல்வந்தரான ரோத்ஸ்சைல்ட் சியோனிஸ்ட்கள் நிலம் வாங்க உதவி செய்து வந்தார்.

இப்படியான யூதக் குடியேற்றங்களின் எண்ணிக்கை 1900-ல் 17ஆக இருந்து 1918-ல் 47ஆக உயர்ந்தது. ஆனாலும் பெரும்பாலான யூதர்கள் நகரப்பகுதிகளிலேயே வாழ்ந்தனர். முதலாம் உலகப் போர் துவங்கிய 1914-ல் பாலஸ்தீனத்தின் மக்கள் தொகை 6,90,000. இதில் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த பகுதிகளாக இருந்தன. 5,35,000 இஸ்லாமியர், 70,000 கிறிஸ்துவர்கள் மற்றும் 85,000 யூதர்கள் பாலஸ்தீனத்தில் இருந்தனர்.

முதலாம் உலகப் போரின் இறுதியில் இருந்து அடுத்த ஆறு ஆண்டுகள் பாலஸ்தீனத்தின் வரலாற்றை மாற்றியமைத்தன. தங்களுக்குத் தனி நாடு கிடைக்கும் என பாலஸ்தீனர்கள் நினைதனர்; வல்லரசுகளோ வேறொன்றைச் செய்தன. தங்களின் நலன்களுக்காக மட்டும் வல்லரசுகள் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கருத முடியாது. பாலஸ்தீன அராபியர்களுக்கென்று தனித் தலைமை இன்மை, குறிப்பிட்ட ஆட்சிப் பிரதேசம் இன்மை எனப் பல காரணங்களால் சவூதி, ஜோர்டான், சிரியா ஆகியவற்றின் ஆதரவையே பாலஸ்தீனர்கள் எதிர்பார்த்திருந்தனர். அராபிய நாடுகள் வல்லரசு நாடுகளின் எண்ணங்களை மீறி நடந்து கொள்ளும் நிலையில் இல்லை. இதுவே இன்றுவரை தொடர்கிறது.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts