Skip to content
Home » இஸ்ரேல் #36 – முடிவுரை

இஸ்ரேல் #36 – முடிவுரை

இஸ்ரேல்

இதுவரையில் இஸ்ரேலின் ஆரம்பம் முதல் இன்றைய நிலைவரையிலும் பார்த்தோம். இதில் பாலஸ்தீனத்தின் நிலை குறித்தும் கண்டோம். உலகில் பெரும்பாலான நாடுகளில் இஸ்ரேல் குறித்து எதிர்மறையான எண்ணம் இல்லாதிருக்கும் நிலையில் தனது மக்கள் மீதான தாக்குதலுக்காகப் பதில் நடவடிக்கையை எடுக்கும் உரிமை உறுதிப்பட்டிருப்பது குறித்து இஸ்ரேல் மகிழ்ச்சியடையலாம்.

ஐ.நா சபை உள்ளிட்ட பல வல்லாதிக்க சக்திகள் இஸ்ரேல் தரப்பில் நின்று பேசுவது பெரும் ஆறுதல். இஸ்ரேலின் பதில் தாக்குதலில் பொது மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது எனும் நிலைப்பாட்டை யாரும் கண்டிக்க முடியாது. அதேநேரம் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது. பாலஸ்தீன விடுதலை என்ற பெயரிலான இஸ்ரேல் அழிப்பு முயற்சிகளை நேரடியாக ஈரான் முயற்சி செய்கிறது. சதாம், கடாஃபி மற்றும் இன்ன பிற நாடுகளால் இயலாததை ஈரான் முயற்சி செய்கிறது. ஏற்கனவே எண்ணெய் விற்பனைத் தடை உட்பட பலத் தடைகளைப் பெற்றுள்ள ஈரான், தனது பொருளாதார பலவீனங்களைப் புறக்கணித்துவிட்டு பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. இப்பிரச்னையில் ஏற்கெனவே அரபு நாடுகள் இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து அதனால் பெற்ற பயன்களைத் தானும் பெற வேண்டும் எனும் ஆசையால் ஏற்பட்ட எண்ணமாக இது இருக்கலாம்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளாக அரபு எண்ணெய் வள நாடுகள் 1973 முதல் 2023 வரையில் எண்ணெய்ப் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்திவந்துள்ளன; ஏராளமான அமெரிக்க டாலர்களையும், செலாவணி உபரியையும் சேமித்து வைத்துள்ளன. உலகம் முழுதும் ஏராளமான முதலீடுகள், சொத்துகள் அரபு நாடுகள் வசமுண்டு. அடுத்த 10 ஆண்டுகளுக்கு எண்ணெய்ப் பொருளாதாரம் சரியாமல் இருக்கும் என்பது அவற்றின் கணிப்பு. அதன் பிறகு ஏற்படக்கூடிய சரிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவே இப்போது பிரிக்ஸ் போன்ற அமைப்புகளில் இணைவதையும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. இஸ்ரேலுடன் 28 இஸ்லாமிய நாடுகளுக்கு தூதரக உறவில்லை. சமீபத்தில் ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ போன்றவை தூதரக உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. இது புதிய பாதையாக இருந்தாலும் இத்தனை நாள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருந்துவிட்டு இப்போது தங்களது அரசியல்-பொருளாதார நலன்களுக்காக இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டுவது ஒருவகையில் பாலஸ்தீனர்களுக்குச் செய்யப்படும் கெடுதல் என்பதாகவே கருதப்படும்.

ஈரான் தனது ராணுவ பலத்தை அதிகரித்துக்கொண்டு அரபு நாடுகள் பலவற்றை மிரட்டி வருகிறது. ஈரானுக்குத் துணையாக கத்தார், லெபனான் மற்றும் சிரியா ஆகியவை உள்ளன. இந்நிலையில் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஆயுதப் போரைத் தொடர்ந்து நடத்த இந்நாடுகளையே நம்பியுள்ளன. மேற்குக் கரையில் தன்னாட்சிப் பகுதியை ஆட்சி செய்யும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும், அப்பிரதேசத்து மக்களும் ஏறக்குறைய வன்முறைப் பாதையைக் கைவிட்டாலும், இஸ்ரேல் புதிய யூதக் குடியேற்றங்களைச் செய்யும்போது கலவரங்கள் வெடிப்பதைத் தடுக்க இயலாமல் உள்ளனர்.

காசாவைவிட மேற்குக் கரையில் மக்கள் தொகை அதிகம். மேலும் வன்முறையில்லாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க பாலஸ்தீன அரசு முனைவதால் இஸ்ரேலும் கரிசனத்துடனேயே நடந்து கொள்கிறது. ஆயினும் ஹமாஸ் போன்ற இயக்கங்கள் மேற்குக்கரையிலும் சிறிதளவு செல்வாக்குடன் இருப்பது நெருடலாக உள்ளது. மேலும் இஸ்ரேலுக்குள் வாழும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அராபியர்கள் முழுச் சுதந்திரத்துடன் இயங்குவது இஸ்ரேல் யூத அடிப்படைவாத அரசு எனும் பிம்பத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. அத்துடன் வேறு சில இனக்குழுக்களும் இஸ்ரேலில் வாழ்கின்றனர். ஏராளமான வெளிநாட்டினர் இஸ்ரேலில் கல்வி கற்கவும், பணிபுரியவும் செய்கின்றனர். இவர்களில் எவரும் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை.

பாலஸ்தீனத்தைத் தனி நாடாகத்தான் 1948-ல் அறிவித்தனர். இடையில் நடந்த போர்களில் இஸ்ரேல் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டதால் மீண்டும் ஒருமுறை தங்களைத் தனிநாடாக அறிவிக்கும் தீர்மானத்தை பாலஸ்தீனம் ஐநாவில் கொண்டு வந்தது. அம்முயற்சி கைகூடவில்லை. கிடைத்த நாட்டையும் அண்டை நாடுகளின் தூண்டுதலால் இழந்த பாலஸ்தீன மக்கள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். ஐநாவின் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் கீழ் இவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். பாலஸ்தீனத்தின் வருவாய் கூட ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் அளிக்கும் வேலைவாய்ப்புகளால்தான் கிடைக்கிறது. எனவே அரபு நாடுகளை நம்பாமல் பாலஸ்தீன மக்கள் தங்களது எதிர்காலத்தை அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும்.

இச்சிக்கலுக்கு இந்தியா போன்ற நாடுகள் என்ன பங்களிப்பு செய்ய இயலும்? உறுதியாக சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், அப்பகுதி பிற நாடுகளுக்கு நிகரான பொருளாதார வளர்ச்சியைப் பெறவும் பெருமளவில் உதவ முடியும். இந்தியாவால் கல்வி, மருத்துவம், வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பேரளவில் செய்ய இயலும். ஆனால் முழுமையான அமைதியை பாலஸ்தீன அரசியல்வாதிகளும், மக்களும் உறுதி செய்தால்தானே முடியும்?

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடு. அது மட்டுமின்றி உலகளவில் இஸ்லாமிய மக்களைக் அதிகம் கொண்ட இரண்டாவது நாடு. பல ஆண்டுகளாக இந்திய அரசு இஸ்லாமிய மக்களின் அதிருப்தியை மனதில் வைத்து இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தாமல் இருந்தது. மறைமுகமாக தொடர்புகள் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டவில்லை. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் பல துருவ புவிசார் அரசியலில் தனது பாரம்பரியமான பங்கை மீண்டும் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் நம் பொருளாதாரம். அடுத்த பத்தாண்டுகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலனிய வரலாற்றுக்கு முன் இந்தியாவும், சீனாவுமுமே உலகில் பெரிய பொருளாதார சக்திகள். மீண்டும் வரலாறு திரும்பும் நேரத்தில் சீனா பொதுவுடமைக் கோட்பாட்டினால் இன்றும் இரும்புத்திரை அரசாக இருப்பதால் அதன் உண்மையான பலம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ரஷ்யாவின் பொருளாதாரம் உயருமா, இல்லையா என்பதும் புதிராக உள்ளது.

இந்நிலையில் ஜப்பான், கொரியா,ஜெர்மன், பிரெஞ்சு நாடுகளையும், ’பெரியண்ணன்’ அமெரிக்காவையும் கடந்து வலிமை வாய்ந்த நாடாக இந்தியா உயரலாம். அப்படி இல்லாமல் போனாலும் நிகரானதொரு சக்தியாக விளங்கலாம்.இதனால் ஏற்படும் பலாபலன்கள் இந்தியர் அனைவரையும் மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் கிடைக்கும். “வசுதைவ குடும்பகம்” என்று இன்றைய பிரதமர் நரேந்திர மோடி முன்வைக்கும் கருத்து இதனையே வலியுறுத்துகிறது. எனவே பாலஸ்தீனம் அமைதியும், வளமும் கொண்ட நாடாக வளர இந்தியா உறுதியாகப் பங்களிக்கும். ஆனால் அதனைப் பயன்படுத்தும் சூழலை பாலஸ்தீன மக்கள்தான் ஏற்படுத்த வேண்டும்.

இஸ்ரேலுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்குவது காஷ்மீர் பிரச்னையில் இன்றுவரை சந்தித்து வரும் வன்முறைகளே காரணம். காஷ்மீரில் பண்டைய காலம் தொட்டு வாழ்ந்து வந்த பண்டிட்கள் இன்று அகதிகளாக இந்தியா முழுதும் வாழ்கின்றனர். காரணம்: பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்துக்குத் தங்கள் நாட்டை முன்னேற்றுவதைவிட காஷ்மீரைத் தங்கள் வசம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருப்பதுதான். இதில் பாடம் படித்த இந்தியா, இஸ்ரேலைஆதரிப்பதில் எவ்விதமான வியப்பும் இல்லை. இதையும் கடந்துதான் பாலஸ்தீனத்துக்கு நாம் உதவ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவ்வாறு செய்வது பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களையும், இந்திய இஸ்லாமியர்களையும் அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையை ஒட்டியே செயல்படுகிறோம் என்பதைச் சுட்டும்படியாக இருக்கும்.

இந்திய வரலாற்றில் நாடு பிடிக்கும் கொள்கை நம் எந்தவொரு பேரரசுக்கும் இருந்ததில்லை. இன்றைய நவீன வரலாற்றிலும் அத்தகைய எண்ணம் இல்லை; இனியும் இருக்கவேண்டிய தேவையும் இல்லை. ஆகையால் சமத்துவமும் அமைதியும் கொண்ட உலகைப் படைக்க இந்தியா தனது பாரம்பரியக் கருத்துகளை முன்வைத்து, கொள்கைகளை வகுத்துச் செயல்பட வேண்டிய காலம் இது. அவ்வாறே நிகழும் என்று நம்புவோமாக.

(முற்றும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts