கதை கதையாம் காரணமாம்!
ஐரோப்பா, வட ஆப்ரிக்கா மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளைக் கொண்ட பெரும் நிலப்பரப்பை ஆண்ட ரோம சாம்ராஜ்யத்தின் எச்சத்தை இன்றுகூட பிரான்சிலும், துருக்கியிலும், லெபனானிலும் காண இயலும். புராதன ரோம் நகரம் அழிந்து ஆயிரத்து ஐந்நூறு வருடங்கள் கழிந்த பின்னும் வளைவுகளும், கல் வாணலியை கவிழ்த்து போட்டது போல இருக்கும் குவிமுக மாடங்களும், பெரும் தூண்களும் இந்த நாகரிகத்தின் சிந்தனைகளையும், செல்வத்தையும், வளர்ச்சியையும் இன்று கூட நம்மிடம் கூறிக் கொண்டிருக்கிறது.
இந்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னே பல காரணங்கள் உண்டு. பெருகிய மக்கள் தொகை, ரோம் நகரின் கட்டமைப்பு மற்றும் கலாச்சாரச் சீர்கேடு, தொய்வுற்றத் தலைமை, மந்தமான பொருளாதாரம் என்று காரணங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இவற்றிற்கு எல்லாம் மேலாக, நடு மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல், இந்த சாம்ராஜ்யம் சுருண்டு விழக் காரணம், அயல்நாட்டவரின் படையெடுப்பு.
இந்தப் பெரும் நாகரீகத்தை ஒரு திறமுள்ள தடகள வீரரின் உடம்புடன் ஒப்பிட்டு அதன் வீழ்ச்சியை இவ்வாறு வர்ணிக்கிறார் வரலாற்றாசிரியர் அட்ரியன் கோல்டஸ்வொர்த்தி. ரோமப் பேரரசு திடும் என்று விழவில்லை. பல வருடங்கள் தொடர்ந்த உள்நாட்டுப் போர்களும், மன்னர்களின் பாதுகாப்பற்றத் தன்மையும், அதிகாரிகளின் சுரண்டல்களும் உரமேறி இருந்த ரோம் சாம்ராஜ்யத்தின் உடலை மெல்லச் சிதைத்தன. இந்தச் சீக்குப் பிடித்த உடம்பைத்தான் ஜெர்மனியப் பகுதியில் இருந்து புற்றீசல் போல் கிளம்பிய காட்டுமிராண்டிகள் கொலை செய்தனர் என்று குறிப்பிடுகிறார்.
பொதுவாக, இதைப் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கான காரணங்களைக் கண்டறிதல் ஒரு பெரும் சவால். பலவிதப்பட்ட தரவுகளைப் பல மூலங்களிலிருந்து திரட்டி அவற்றைச் சலித்து எஞ்சியவற்றை ஆராய்ந்து அவற்றைக் கோர்வைப் படுத்தும் வரலாற்றாசிரியர்கள் ஒரு விதத்தில் துப்பறிவாளர்களே! இன்னும் சொல்லப் போனால் துப்பறியும் வேலையை விட இது கடினம். ஏனென்றால் வரலாற்று நிகழ்வுகளுக்கானக் காரணிகள் பல உண்டு. இவை ஒன்றோடு ஒன்று ஊடாடுபவை. இவற்றின் கனம் அல்லது முக்கியத்துவத்தை அனுமானிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இவற்றை எல்லாம் உள்வாங்கி இந்தக் காரணிகளைக் குழைத்து ஒரு சீரான சித்திரத்தை நமக்கு அளிக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆகவே, பிரபல வரலாற்றாசிரியர் ஆர்தர் ஸ்லெசிங்கர் ஜூனியர் கூறுவது போல, இது ஒரு கலையும் கூட. வரலாற்றாசிரியன் தனக்குக் கிட்டிய தரவுகளின் அடிப்படையில் கதை, காட்சி, கதாபாத்திரங்கள், அவர்களின் குணங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை ஒரு கைதேர்ந்த கலைஞன் போல உருவாக்குகிறான்.
கடந்த சில நூறாண்டுகளாக இந்த ‘கலைஞர்கள்’ நமக்குப் பல சித்திரங்களை அளித்திருக்கின்றனர். மேலே நாம் கண்ட சித்திரம் ஒரு தொன்மையான நாகரீகத்தின் அழிவைப் பற்றியது. அதேபோல சாம்ராஜ்யங்கள் தோன்றி, விரிந்ததைப் பற்றியும் சித்திரங்கள் உண்டு.
உதாரணத்திற்கு, 320 பொ.யு.மு வில் தோன்றிய மௌரியப் பேரரசு மிகக் குறுகிய காலத்திற்குள்ளே இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் மௌரிய சாம்ராஜ்யம் பெரும் நிலப்பரப்பை ஆண்டது மட்டுமின்றி ஓர் அரசியல் தொலைநோக்குப் பார்வையை இந்திய வெளியில் பலமாக வேரூன்றியது என்று குறிப்பிடுகிறார். இந்தச் சாம்ராஜ்யத்தில் உதித்த அசோகரின் கல்வெட்டுகளும், தூண்களும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் காந்தஹாரில் இருந்து ஆந்திராவில் இருக்கும் அமராவதி வரை இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளில் இன்றும் இருக்கின்றன. சந்திரகுப்த மௌரியனின் உத்வேகமும், சாணக்கியரின் மதி நுட்பமும், அசோகனின் சாகசங்களும் இந்தப் பேரரசின் வெற்றிக்கும் விஸ்தீரணத்திற்கும் மிக முக்கியக் காரணங்களாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றனர்.
இந்த வரலாற்று ஓவியங்கள் பல விதங்களில் சுவாரஸ்யமானவை. ஏன்? எதற்கு? எப்படி? என்று வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி இன்று நம் மனதில் எழும் வினாக்களுக்கு இந்தச் சித்திரங்கள் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கத்தை அளிக்கின்றன. இதுவே ஒரு சுவாரஸ்யம்தான். இதையும் தாண்டி, இந்தச் சித்திரங்களைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் இன்னொன்றும் புலப்படும். இந்த நிகழ்வுகள் பல இடங்களிலும், பல கால கட்டங்களில் நடந்திருந்தாலும், ஆச்சரியகரமாக, ஒரு பொதுக்கூறு உள்ளது.
அது என்னவென்றால், வரலாற்று நிகழ்வுகளுக்கான காரணிகளில் மனிதனும், அவனுடைய எத்தனங்களும் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதே. அரசர்கள், கட்டமைப்புகள், கலாச்சாரம், வரி, போர்கள், யுக்திகள் போன்ற மனித ஆக்கங்கள் பல சமூகங்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், அழிவிற்கும் காரணங்களாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது பரவலாக எல்லோராலும் ஏற்கப்படும் காரணங்கள். ஆனால், இவை மட்டும் தான் காரணங்களா?
இல்லை, என்பதுதான் கடந்த சில பத்தாண்டுகளாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தப் ‘புதிய’ காரணி வரலாற்றுச் சித்திரங்களின் வண்ணத்தை மேலும் மெருகூட்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, வரலாற்றுப் புத்தகத்தின் இந்த அத்தியாயத்தைக் கவனிப்போம்.
பல்லாயிரம் வருடங்களாக மொங்கோலியப் புல்வெளிப் பரப்புகள் மிகக் கடுமையான தட்பவெப்ப நிலைகளுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு பெரும் நிலவெளி. இங்கே வாழ்ந்த நாடோடிகள் தங்கள் வாழ்க்கையை இதையொட்டியே நடத்தினர். சமீபத்தில் ஜியாங் ரோங் எழுதிய சீன நாவலான ஓநாய் குலச்சின்னத்தில் (தமிழில்: சி. மோகன்) பில்ஜி என்ற மொங்கோலியப் பழங்குடி முதியவர் தங்களின் வாழ்வியல் நிர்ப்பந்தங்களை இவ்வாறு வர்ணிப்பார்:
‘மேய்ச்சல் நிலத்தில் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதென்பது பைத்தியக்காரத்தனமானது… நாடோடி மேய்ச்சலின் பிரதான அம்சமே, பாதகங்களைத் தவிர்ப்பதும் சாதகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வதும்தான். நாங்கள் ஓரிடத்தில் நிலைத்திருந்து விட்டால், எல்லாவிதமான பாதகங்களையும், சாதகமே இன்றி எதிர்கொள்ள நேரிடும். பிறகு, நாங்கள் எப்படி மேய்ப்பது?’
சில பத்து வருடங்கள் நல்ல மழையும், வளமையான புல்வெளிகளும், வாளிப்பான குதிரைகளும் அதன் மூலம் கிடைக்கும் பாலும், இறைச்சியும் அந்த நிலப்பரப்பில் வசிக்கும் நாடோடிகளின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தின. ஆனால் அதைத் தொடர்ந்து பல வருடங்கள் வறட்சியும், உணவுப் பற்றாக்குறையும் அவர்களைப் பிற வளப் பிரதேசங்களுக்கு விரட்டின.
இந்தப் பருவநிலை ஊசலாட்டம் வரலாற்று நிகழ்வுகளில் ஒரு பெரும் பங்கு வகித்திருக்கிறது. பிரபல தொல்லியலாளரும், மானுடவியலாளரும் ஆன பேராசிரியர் பிரையன் பாகன் இந்த நிலப்பரப்பில் தோன்றிய மங்கோலியப் பேரரசின் உலகம் வியந்த வளர்ச்சிக்கும், அது ஐரோப்பாவைத் தொட்டு நின்றதற்கும் அந்தக் காலக் கட்டத்தின் பருவநிலையை ஒரு முக்கியமான காரணியாக முன் வைத்திருக்கிறார்.
பாகனின் கூற்றின்படி சமீப காலங்களில் கண்டெடுத்த வானிலைத் தரவுகள், மங்கோலியப் பேரரசுக்கு வித்திட்ட செங்கிஸ் கான் இந்தப் புல்வெளிப் பரப்புகளில் தன் ஆளுமையைப் பதித்தது 1200 களில் ஏற்பட்ட ஒரு நீண்ட வறட்சிக் காலத்தில் என்று உறுதிப்படுத்துகின்றன. வறட்சியினால் உண்டான மக்களின் கொந்தளிப்பும், செங்கிஸ் கானின் போர் மற்றும் நிர்வாக மதிநுட்பமும் சேர்ந்து நாடோடிகளாகத் திரிந்த ஒரு கூட்டத்தைச் சீனாவையும் ரஷ்யாவையும் மண்டியிட வைத்த ஒரு பெரும் படையாக மாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது. மங்கோலியப் பேரரசின் வளர்ச்சிப் பாதையில் பருவநிலையின் தாக்கம் இதோடு முடியவில்லை.
1241ல் மங்கோலியப் படைகள் போலந்து, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்த பின் மேற்கு ஐரோப்பாவின் மீது கண் வைக்கத் தொடங்கியது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக மங்கோலியப் பேரரசனான ஓகெடெய் கான் (செங்கிஸ் கானின் மூன்றாவது மகன்) இறந்ததனால் இந்தப் படைகளை முன்னின்று நடத்திய பாட்டு கான் (செங்கிஸ் கானின் பேரன்) யூரேசியா புல்வெளிப் பரப்புகளுக்குத் திரும்பினான். தற்செயலாக அந்தக் கால கட்டத்தில் புல்வெளிப் பரப்புகளின் பருவநிலை குளிர்ந்தும், மழை பொழிந்தும் வளத்தைக் கூட்டின. போர்களும் நின்று போயிற்று. மேற்கு ஐரோப்பாவை ஆள நினைத்த பாட்டு கான் அதை மறந்தான். ஆராய்ச்சியாளர் பிரையன் பாகனின் கணக்குப்படி புல்வெளிப் பரப்புகளின் வறட்சி நிலை தொடர்ந்திருந்தால் பாட்டு கான் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் தேசங்கள் உட்பட முழு ஐரோப்பாவையும் 1250க்குள் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கக் கூடும்.
கடந்த சில பத்தாண்டுகளாக இதைப் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கான காரணிகளின் வரிசையில், மெதுவாக அதே சமயத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பருவநிலை மாற்றங்கள், இயற்கையின் கொடைகள், பேரிடர்கள் ஆகியவையும் சேர்ந்துள்ளன. பண்டைய பருவநிலை மாற்றங்களின் ஆராய்ச்சி முடிவுகள் கூற வருவது இதைத்தான்; வரலாற்றின் களத்தில் பருவநிலை வெற்றுப் பின்புலம் அல்ல, அதுவும் ஒரு முக்கியக் கதை மாந்தரே.
இந்தக் கதை மாந்தரைத்தான் இந்தத் தொடர் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப் போகிறது. இவருக்குப் பல முகங்கள் உண்டு. சாந்தத்துடன் கொடை வள்ளலாகச் சில காலங்களில் இருப்பார். சிணுங்கல்களுடன் சிறு கோபம் கொண்டு சில காலம், வெறி கொண்ட மிருகம் போல எழுந்து பலவற்றை அழிக்கும் உக்கிர முகத்தோடு சில காலம் ஊழித் தாண்டவம் ஆடுவார். இந்த மாறும் நிலைகள் எவ்வாறு வரலாற்று நிகழ்வுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைப் பற்றித்தான் இந்தத் தொடர். பிளீத்தொசீன் பனியுகத்திலிருந்து சுமேரிய நாகரீகம் வரை, மெசோ அமெரிக்க மயன் நாகரீகத்திலிருந்து கம்போடியாவின் க்மெர் ஆட்சி வரை பருவநிலையின் பல முகங்கள் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை இந்தத் தொடர் விளக்கும்.
இந்தத் தொடரைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு சில வார்த்தைகள். இந்தத் தொடர் வரலாற்றின் எல்லாப் பக்கங்களையும் புரட்டப் போவதில்லை. அது என்னால் இயலாத காரியம். ஒரு சில பக்கங்களைத்தான் கவனிக்கப் போகிறோம். இந்தப் பக்கங்களின் தேர்வு இரண்டு காரணங்களால் வழி நடத்தப்பட்டது. ஒன்று, தரவுகளின் இருப்பு. இரண்டு, அந்த வரலாற்று நிகழ்வுகளின்பால் நான் கொண்ட ஈர்ப்பு. இந்தத் தொடர் பருவநிலை மாற்றங்கள் மட்டுமே வரலாற்றை நிர்ணயிக்கின்றன என்று ஒரு போதும் கூறப் போவதில்லை, அதுவும் ஒரு முக்கியமான காரணி என்றே அறிவுறுத்தும். பருவநிலை மாற்றம் நம் நிகழ்காலத்தின் ஒரு மிக முக்கியமான அங்கம். இது மனித வரலாற்றை எவ்விதம் பாதித்துள்ளது என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி நம் நிகழ்காலத்தை, முக்கியமாகப் பருவ நிலை சமநிலையைக் குலைக்கும் மனிதச் செயல்களை, சற்றுக் கூர்ந்து நோக்கத் தூண்டும்.
(தொடரும்)
____________
உசாத்துணை:
Adrian Goldsworthy, How Rome Fell: Death of a Superpower, Yale University Press, 2009.
Arthur Schlesinger, Jr., The Historian as Artist, The Atlantic, July 1963.
Romila Thapar, The Penguin History of Early India: From the Origins to AD 1300
Brian Fagan, The Great Warming: Climate Change and the Rise and Fall of Civilizations, 2009.