வரலாற்று ஆராய்ச்சியில் பல கருத்துகள் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கும். இவற்றை நெம்பி எடுத்து ஒரு மாற்றுக் கருத்தையோ, கோட்பாட்டையோ நிலை நிறுத்துவது மிகக் கடினம். இதைச் சென்ற பகுதியில் கையாண்ட உவமையின் வாயிலாகச் சொல்வதென்றால், வரலாற்றுச் சித்திரங்களின் வண்ணங்களை மேம்படுத்தவோ, இன்னும் பல படிகள் மேலே சென்று, ஒரு புதுச் சித்திரத்தை உருவாக்குவதோ எளிதல்ல. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
கோட்பாட்டின் வீச்சு, அதைக் கண்டெடுத்துவரின் ஆளுமை, அது உருவாக்கும் பார்வை, இவை அனைத்துமே அதை பலப்படுத்துகின்றன. தொடரும் ஆராய்ச்சிகள் இந்தக் கோட்பாட்டின் எல்லைக் கோடுகளுக்கு உள்ளாகவே ஒடுங்குகிறது. இதை மீறி, புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட தரவுகள் இந்த நன்கு நிறுவப்பட்ட கோட்பாட்டிற்குச் சவால் விடும் பட்சத்தில் தரவுகள் சேகரித்த முறையைப்பற்றியோ, கண்டெடுத்த தரவுகளை முறைப்படுத்தி முன் வைத்த புது விளக்கத்தைப் பற்றியோ கடும் வினாக்கள் எழுப்பப்படும். சில சமயங்களில் தரவுகளின் நம்பகத்தன்மை பற்றியே கேள்விகள் எழக்கூடும். பழைய கோட்பாட்டை நிறுவியவர்களே இதை முன் நின்று நடத்துவார்கள். இந்தத் துறையில் புதிதாக நுழையும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு பெரிய சவால். பலர் ‘நமக்கு எதற்கு வம்பு’ என்று ஒதுங்கி, நடைமுறையில் இருக்கும் வரலாற்றுச் சட்டகங்களுக்கு (frameworks) உள்ளேயே தங்கள் ஆராய்ச்சிகளைச் சுருக்கிக் கொள்வார்கள். ஆனால், இந்த பலமாக வேரூன்றிய விருட்சம் ஆட்டம் காண்பதும் உண்டு. கடந்த சில பத்தாண்டுகளில் வரலாற்றின் பல முக்கியக் கோட்பாடுகள் கேள்விக்குறியாக்கப் பட்டிருக்கின்றன. விசித்திரமாக, இந்தச் சவால்கள் வேறு பிற துறைகளிலிருந்து எழும்பியிருக்கிறது.
உதாரணத்திற்கு, அமெரிக்க கண்டத்தில் மனிதன் கால் எடுத்து வைத்தது ஏறக்குறைய 12500 ஆண்டுகள் முன்புதான் என்ற கருதுகோள் வேன்ஸ் ஹேன்ஸ் (Vance Haynes) என்பவரால் 1964ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்டது. க்ளோவிஸ் (Clovis) இன மக்கள் (நியூ மெக்ஸிகோ மாகாணத்தில், க்ளோவிஸ் என்கின்ற இடத்தில் கல் மற்றும் எலும்பு ஈட்டி முனைகள் மற்றும் கருவிகள் கண்டெடுக்கப்பட்டதால் இவர்கள் க்ளோவிஸ் இன மக்கள் என்று அறியப்படுகிறார்கள்) ஆசியாவையும், அமெரிக்க கண்டத்தையும் இணைத்த பெறிஞ்சியா (Beringia) நிலப் பாலம் வழியே (இப்பொழுது அது கடலுக்கு அடியே), கனடா தேசத்தில் உருகும் பனிப்பாறைகள் (அப்பொழுது பனி யுகம் முடிந்த தருவாய்) உருவாக்கிய ஒரு பாதை வழியாக வந்து வட, மற்றும் தென் அமெரிக்காவிற்குள் குடிபெயர்ந்தார்கள் என்பதே அந்தக் கருதுகோளின் மையப் புள்ளி.
இது ஒரு ‘தெய்வ வாக்காகவே’ மதிக்கப்பட்டது என்று ‘1491’ என்ற புத்தகத்தை எழுதிய சார்லஸ் மேன் (Charles Mann) குறிப்பிடுகிறார். ஏனென்றால், 1960களிலேயே சில ஆராய்ச்சியாளர்கள் க்ளோவிஸ் கலாச்சாரத்திற்கு முன்பாகவே மனிதன் அமெரிக்க கண்டத்தில் இருந்திருக்கிறான் என்பதற்கான அகழ்வாராய்ச்சிக் கண்டெடுப்புகளைப் பட்டியலிட்டிருந்தனர். ஆனால், அவை அனைத்தையும் நம்பகத்தன்மை அற்றவை என்று ஹேன்ஸ் நிராகரித்தார். அந்தக் கோட்பாட்டை எதிர்த்துக் குரல் கொடுப்பது அந்தத் துறையில் முன்னேறத் துடிப்பவர்களுக்குத் தற்கொலைக்குச் சமானம் என்றே கருதப்பட்டது. இவ்வாறு இருக்கையில் மொழியியல், மரபியல் போன்ற துறைகளில் இருந்த வல்லுநர்கள் இந்தக் கோட்பாட்டில் சாரம் இல்லை என்றும் மனிதன் அமெரிக்க கண்டத்தில் கால் பதித்தது குறைந்தது 25,000 ஆண்டுகளுக்கு முன்பே என்று இப்பொழுது நிறுவி இருக்கின்றனர்!
சற்றொப்ப இதைப் போலவே, பல ஆண்டுகளாக வரலாற்றாசிரியர்களால் பருவ நிலை ஒரு அசையாத்தன்மை கொண்டது என்ற கருத்து ஆழப் பதிந்திருந்தது. இந்தக் கருத்தை முதன் முதலில் சீண்டியவர்கள் பிற துறைகளைச் சார்ந்த வல்லுனர்களே. இவர்களின் ‘புது’ கருத்து நிராகரிக்கப்பட்டது, தரவுகள் போதவில்லை என்று சொல்லப்பட்டது, கண்டெடுத்த தரவுகளின் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் எழுந்தன. இந்தச் சவால்களையும் மீறி வரலாற்று நிகழ்வுகளில் பருவ நிலை ஒரு முக்கியக் காரணி என்ற மாற்றுக் கருத்தை முன் வைத்த சில முக்கியமான முன்னோடிகளைப் பற்றித்தான் இந்தப் பகுதி.
பருவ நிலை, வரலாற்று நிகழ்வுகளோடு பின்னி இருப்பதைக் கடந்த சில பத்தாண்டுகளாகப் பல ஆராய்ச்சிகள் நிரூபித்திருந்தாலும், இந்த ‘புதிய’ கருத்திற்கு ஒரு நூறாண்டுக்கு மேல் செல்லும் வேர் உள்ளது. முதன் முதலில் இந்தச் சிந்தனையைச் சில ஆதாரங்களோடு தொகுத்து ஒரு கோட்பாடாக முன் வைத்தவர், பிரபல வரலாற்றாசிரியர் ஆர்னோல்ட் டோய்ன்பீ (Arnold Toynbee). இவர் நிகழ்கால வரலாற்றுச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று புகழப்பட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜியோப்ரி மார்ட்டின் (Geoffrey Martin) இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் சர்ச்சைகளுக்கு மிகவும் பெயர் பெற்றவர் என்று இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த வர்ணனைக்கெல்லாம் சொந்தக்காரர் 1876ஆம் ஆண்டு பிறந்து பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியராகப் பணி புரிந்த எல்ஸ்ஒர்த் ஹன்டிங்டன் (Ellsworth Huntington).
இவரின் மூதாதையர்கள் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு 1633ஆம் ஆண்டு குடியேறினார்கள். அமெரிக்க வரலாற்றில் பழமையும், செல்வாக்கும் உடைய குடும்பங்களின் பட்டியலில் ஹன்டிங்டன் பெயரும் உண்டு. பிரிந்திருந்த குடியேற்ற நாடுகளை ஒன்றிணைத்து, பிரிட்டனுடன் போரிட்டு விடுதலை அடைந்து அமெரிக்காவை ஒரு தனி நாடாக்கி அதன் வடிவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் இந்த வம்சாவளியில் தோன்றிய சாமுவேல் ஹன்டிங்டன். 1776ஆம் ஆண்டு அமெரிக்க விடுதலை அறிவிப்புப் பத்திரத்தில் காணும் ஐம்பது கையெழுத்துகளில் இவருடையதும் ஒன்று. இத்தகையக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்தான் எல்ஸ்ஒர்த்.
இவர் 1907ஆம் ஆண்டில் பாலஸ்தீனம், இந்தியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் ஒரு பதினேழு மாத காலப் பயணத்தை மேற்கொண்டார். இந்தக் கடினமான பயணத்தில் எல்ஸ்ஒர்த் சேகரித்த தகவல்கள் பல; பாலைநிலங்கள் வழியே செல்லும் வணிகக் குழுக்களின் மாறி வரும் பாதைகள், பல ஆண்டுகளாக மாறி வரும் காஸ்பியன் கடல் மற்றும் நதிகளின் அளவுகள் போன்ற பலதரப்பட்ட புவியியல் தரவுகள் இதில் அடக்கம். இவற்றை ஒன்றுபடுத்திப் பார்க்கையில் இவர் கண்ணில் பட்டது ஒரு அசாதாரண அமைவு. இந்தப் பகுதியின் வரலாற்றில் நல்ல பரிச்சயம் கொண்ட இவர், இந்த இயற்கை நிகழ்வுகள் – அதாவது வறட்சியோ, வெள்ளமோ அல்ல பிற நிகழ்வுகளோ – இந்தப் பகுதியின் பல நாகரீகங்களின் தோற்றம் அல்லது மறைவு காலத்துடன் மிக நெருக்கமான ஒட்டுறவு கொண்டுள்ளதைக் கண்டார். தான் கண்டெடுத்ததை ஒரு கோட்பாடாக ‘பல்ஸ் ஆப் ஆசியா (Pulse of Asia)’ மற்றும் ‘பாலஸ்டைன் அண்ட் இட்ஸ் ட்ரான்ஸபோர்மேஷன் (Palestine and its Transformation)’ என்ற புத்தகங்களில் எல்ஸ்ஒர்த் விரித்தெடுத்தார்.
இவருடைய கோட்பாட்டின் மையக் கரு இதுதான். மாறுபடும் சூரியனின் இயக்கம் பூமியையும் அதன் வானிலையையும் மாற்றிக் கொண்டே இருக்கிறது. நாம் இயற்கையின் சுழற்சிகளின் பின்னலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பருவ நிலையின் நீண்ட கால மற்றும் குறுகிய காலச் சுழற்சிகள் நம்முடைய கவனத்திற்கு இப்பொழுதுதான் வந்திருக்கிறது. நூறாண்டுக் கால பருவ நிலைச் சுழற்சிகளின் தாக்கத்தை இந்த நூற்றாண்டில் பெருகி வரும் சூறாவளிகளின் எண்ணிக்கையும், பலமும் நிரூபிக்கிறது. இந்தச் சுழற்சிகளை இன்னும் தீவிரமாக நாம் ஆராய முற்பட்டால் வரலாற்றின் பல முக்கியமான பக்கங்களை நாம் இன்னும் துல்லியமாகப் படிக்க இயலும். இந்த ஆராய்ச்சிகள் பருவ நிலைச் சுழற்சிகள் எவ்வாறு மனிதனின் மனதையும், உடலையும், உணவு உற்பத்தித் திறனையும், அந்த நிலப் பகுதியின் மக்கள் தாங்கும் திறனையும் பாதிக்கிறது என்பதை அனுமானிக்க முடியும். இந்தச் சுழற்சிகள் வரலாற்று நிகழ்வுகளின் போக்கையும், திசையையும் நிர்ணயிக்கும் என்று வாதிட்டார். அறிஞர்களின் வட்டத்தில் அன்று இது ஒரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
எல்ஸ்ஒர்த் முன்வைத்த இந்தக் கருத்து அறிஞர்களின் மத்தியில் உயிர்ப்போடு விவாதிக்கப்பட்டு வந்தாலும் சில வருடங்களிலேயே இது வழக்கொழிந்து போனது. அது மட்டும் அல்லாமல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இடையே environmental determinism என்று அறியப்பட்ட இது, ஓர் ஒதுக்கத்தக்கக் கோட்பாடாகவே மாறியது. அதற்குச் சில காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தக் கோட்பாடுகளை ஜெர்மனியில் தோன்றிய நாஜி இயக்கம் தனது வசதிக்கு ஏற்ப திரித்துக் கொண்டது. இரண்டாவது, பிற்காலத்தில் எல்ஸ்ஒர்த் இனத்தூய்மை, அதை மேம்படுத்தும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும் அமெரிக்க இயக்கங்களுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்ததும் கரும் புள்ளிகளாக இவரின் ஆளுமையில் படர்ந்தன. ஆனால் இதற்கெல்லாம் மேலாக, நீண்ட கால வானியல் சுழற்சிகள் பற்றிய தரவுகள், மிகச் சொற்பமாகச் சேகரிக்கப்பட்ட கடந்த காலத்து வானிலைத் தரவுகள், போன்றவை இந்தக் கோட்பாட்டை ஒரு பெரும் கேள்விக்குறியாகவே ஆக்கியது. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் மண்ணிற்கு அடியே புதைந்து கிடந்தது இது. இந்தக் கோட்பாட்டைத் தூசித் தட்டி மீட்டு எடுத்தவர்களில் காலநிலை நிபுணர் (Climatologist) ஹுபர்ட் லேம்ப் (Hubert Lamb) முக்கியமானவர்.
இவரைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.
(தொடரும்)
___________
உசாத்துணை
Charles C. Mann,1491: New Revelations of the Americas Before Columbus, Vintage, 2006
Geoffrey J. Martin, Ellsworth Huntington: His Life and Thought, Shoe String Press Inc., 1973
Ellsworth Huntington, Mainsprings of Civilization. Arno Press, 1972