Skip to content
Home » இயற்கையின் மரணம் #4 – பழையதோர் உலகம் செய்வோம்!

இயற்கையின் மரணம் #4 – பழையதோர் உலகம் செய்வோம்!

பனி உள்ளகங்கள் (ice cores)

ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் அந்தப் புகலிடத்தை நிர்மாணித்த ஜான் ஹாமான்ட் (ரிச்சர்ட் அட்டன்பரோ) ஒரு கைத்தடியை வைத்திருப்பார். அந்தத் தடியின் முனையில் ஒரு சிறிய அம்பர் கல்லில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு கொசுவின் பதப்படுத்தப்பட்ட உடல் தென்படும். பதமாவதற்குச் சற்று முன்பு அந்தக் கொசு உறிஞ்சிய டைனோசர் ரத்தத்தில் இருந்த மரபணுவைப் பிரித்தெடுத்தே பல கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த டைனோசர்களையும், மற்ற பிற உயிரினங்களையும் படைத்ததாகக் கூறுவார் ஹாமான்ட்.

அதேபோலதான் அளவில் மிகச் சிறிய பொருள்களாக இருக்கும் பனிப் படிகங்கள், சிறு கடற் சிற்பிகள், மணல் துகள்கள் போன்றவற்றில் இருந்து கடந்த காலப் பருவநிலையின் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். மறைந்துபோன ஓர் உலகத்தை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கின்றனர்.

அண்டார்டிகா, கிரீன்லேண்ட் மற்றும் பூமியின் பிற பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட பனி உள்ளகங்கள் (ice cores), ஜுராசிக் கொசுவைப் போலவே, கடந்த காலப் பருவநிலையைப் பற்றிய பல நூறு தகவல்களை உள்ளடக்கி இருக்கின்றன. பூமியின் சில பகுதிகளில் பல லட்சம் ஆண்டுகளாகப் பனி பெய்து, இறுகியபடியே உள்ளது. இதை நாம் ஆழ்துளைக் கிணறு தோண்டுவது போல் (வெளிப் பொருள்கள் உள்ளகத்தை மாசு படுத்தாதவாறு பாதுகாத்து) பூமியில் நீண்ட துளையிட்டுப் பனி உள்ளகங்கள் வெளியே எடுக்கப்படுகின்றன. இந்த நீண்ட உருளை வடிவ உள்ளகங்கள் ஒரு காலப் பெட்டகம்.

பனி உள்ளகங்கள் (ice cores)
பனி உள்ளகங்கள் (ice cores)

இதன் ஒருமுனை நிகழ் காலம் என்றால் (துளையிடும் போது நிலத்தருகே இருக்கும் பகுதி) கீழே செல்லச் செல்ல நாம் கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கின்றோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் பனி விழும் பொழுது காற்றில் உள்ள வாயுக்கள் சிறு குமிழிகளாக, தூசித் துகள்கள், எரிமலைச் சாம்பல், கடலின் உப்பு, காடுகள் எரிந்ததால் காற்றில் கலக்கும் புகைக்கரி ஆகியவை பொழியும் பனியுடன் கலந்து நிலத்தில் ஒரு படலம் போலப் படர்கிறது. பல லட்சம் வருடங்களாகச் சேகரிக்கப்பட்ட இவைகளே, ஆராய்ச்சி நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கும் பொழுது, பூமியின் கடந்த காலத்துப் பருவநிலையை விவரிக்கின்றன.

இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு மிகவும் துணை புரிவது ஆக்சிஜனின் இரு வகைகள். இவை isotopes என்று அறியப்படுகின்றன (தமிழில் இதற்கு ஓர் அழகான கலைச்சொல் உண்டு – ஓரிடத் தனிமம்). இதில் ஆக்சிஜன் 16 (16O) வகையில் அதனுடைய அணுக்கருவில் 8 ப்ரோட்டான்களும், 8 நியூட்ரான்களும் காணப்படும். இதை விட சற்று ‘கனமாக’ இருப்பது ஆக்சிஜன் 18 (18O). இதில் 8 ப்ரோட்டான்களும், 10 நியூட்ரான்களும் உண்டு. நீரில் இந்த இரு ஆக்சிஜன் வகைகளின் விகிதாச்சாரம் பருவநிலையைப் பொறுத்து மாறும். இந்த மாற்றமே ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய வரம். ஏனென்றால், காற்றில் உள்ள நீர் ஆவியில் இருக்கும் 16O மழையாய்ப் பொழிவதற்குக் குளிர்ந்த வெப்பநிலை தேவைப்படும். ஆகவே பனி உள்ளகத்தின் ஒரு பகுதியில் 16O விகிதாச்சாரம், ஒரு குறிப்பிட்ட அளவை விட, அதிகம் இருந்தால் பூமி குளிர்ந்திருந்தது (உலகின் பல பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளகங்கள் இதே கதையைக் கூறும் பட்சத்தில்) என்று அனுமானிக்கலாம். அதேபோல கடல் நீரில் 16O அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், பனிப் பாறைகளில் சிக்கி இருந்த 16O விடுவிக்கப்பட்டு கடல் நீரில் சேர்ந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. இதிலிருந்து வெப்பம் அந்தக் காலகட்டங்களில் அதிகமாகி, பனிப் பாறைகள் உருகத் தொடங்கி விட்டன என்று முடிவு செய்து கொள்ளலாம்.

கடந்த பல பத்தாண்டுகளாகவே, இந்தப் பனி உள்ளகங்கள், நம்மைப் படிப்படியாக, பல லட்சம் ஆண்டுகள் முன்பு இருந்த பருவநிலையை அறிய உதவியிருக்கின்றன. 1980களில் கிரீன்லேண்ட்டில் துளையிட்டு எடுக்கப்பட்ட உள்ளகம் நம்மை 150,000 வருடங்கள் பின்னே இட்டுச் சென்றது. 2000ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில், ஏறக்குறைய பூமிக்கடியில் 3.5 கிலோமீட்டர் ஆழம் வரை துளையிட்டு எடுக்கப்பட்ட உள்ளகம் 420,000 ஆண்டுகளின் கதையைக் கூறியது . மிகச் சமீபத்தில், 2022ஆம் ஆண்டு, அண்டார்டிகாவின் ஆங் பள்ளத்தாக்கிலிருந்து எடுக்கப்பட்ட உள்ளகம் நம்மை, ஒரே அடியாக, 50 லட்சம் ஆண்டுகள் முன்பு வரை இருந்த பருவநிலை வரலாற்றைக் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறது.

கடலடியில் இருக்கும் வண்டல் படிமங்களில் கூடக் கடந்த காலப் பருவநிலை தன் கைரேகைகளை விட்டுச் சென்றிருக்கின்றது. கடற்சிப்பிகள் வளரும்பொழுது அவை ஆக்சிஜன் isotopesகளை தங்கள் ஓடுகளில் சேர்த்துக் கொண்டே இருக்கும். பொதுவாக, இவை 18O isotope வகையை அதிக அளவு சேர்த்துக்கொள்கிறது. ஆனால், இவை வளரும் இடத்தில் நீர் குளிர்ந்திருந்தால் இவற்றின் சிப்பிகளில் 18O அளவு சராசரியை விடக் கூடுதலாக இருக்கும். இதைப் போன்ற சிறு குறிப்புகளை வைத்து, கடந்த காலத்தில் கடல் நீரின் வெப்பநிலை மட்டும் அல்லாமல், கடல்நீரின் உப்புத்தன்மை, நிலத்தில் பனி சூழ்ந்திருந்ததா இல்லையா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்.

இப்படியே, டைஆட்டம் (Diatom) எனப்படும் ஒருவிதக் கடல் நுண்பாசியின் தொல்படிவ (fossil) எண்ணிக்கை முன்பிருந்த கடலடி நீரோட்டத்தைப் பற்றி ஒரு புரிதலை அளித்திருக்கிறது. பலமான நீரோட்டம் சில நேரங்களில் அதிகச் சத்துக்களைக் கடல் அடியில் இருந்து மேல் பரப்பிற்குக் கொண்டு வரும். அச்சமயங்களில் இந்தச் சத்துக்களை உண்டு வாழும் நுண்ணுயிர்களின் (டைஆட்டம், போல) எண்ணிக்கை அதிகமாகும். இவை இறந்த பின் கடலடியில் பெருந்திரளாகப் படியும். இந்தத் தொல்படிவங்கள் திரட்சியாகப் படிந்திருக்கும் பதியன்களின் காலகட்டத்தில் கடலடி நீரோட்டம் வலிமையாக இருந்தது என்று அனுமானிக்கலாம்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல காற்றில் எழும் மணல் துகள்கள் கூட வரலாற்று பருவநிலையைப் பற்றிய வேறு ஒரு பரிமாணத்தை விளக்குகின்றன. இன்று கூட சஹாரா பாலைவனத்திலிருந்து எழும்பும் மணல் துகள்கள் பல்லாயிரம் மைல்கள் காற்றில் கடந்து தென் அமெரிக்க அமேசான் காடுகள் வரைப் பரவுவதாகக் கண்டறிந்திருக்கின்றனர். இது அமேசான் காடுகளில் வளரும் தாவரங்களுக்கு மணிச்சத்தாகிறது என்பது ஒரு கொசுறு செய்தி. இதைப் போலவே பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பல நில பரப்புகளில் இருந்து மேலெழுந்த மணல் துகள்கள் கடலில் வீழ்ந்து படிமங்களாகச் சேர்ந்திருக்கும். இந்த வண்டல் படிமங்களில் கிடைக்கும் மணல் துகள்களின் அளவு மற்றும் அவற்றின் வேதிப் பண்புகள் (chemical properties), அவை கடந்த காலத்தில் எந்தெந்த நிலப்பரப்புகளில் இருந்து வந்தது என்பதைப் பற்றியும், இவற்றைக் கடலில் சேர்த்த காற்றின் திசைகளையும் அதன் வலிமையையும் ஊகிக்கப் பேருதவியாக இருந்திருக்கிறது.

இப்படிப் பல பத்தாண்டுகளாகச் சிறுகச் சிறுக சேர்த்த துளித் தரவுகள் நம்முடைய கடந்த காலப் பருவநிலை பற்றியும் அதில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் ஒரு தெளிவைத் தந்திருக்கிறது. ஆப்பிரிக்க பெருவெளிகளில் இருக்கும் கறையான்கள் சிறு மணல் துகள்களையும், எச்சிலையும் கொண்டு பெரும் கோட்டை போலக் காணப்படும் புற்றுகளைக் கட்டுவது போல, ஆராய்ச்சியாளர்கள் தூசியும், சிப்பிகளையும் கொண்டே பல லட்சம் ஆண்டுகள் முன் மறைந்து போன உலகத்தின் தட்ப வெட்ப நிலைகள், மழையின் தீவிரம், காற்றின் திசை, கடலடி நீரோட்டங்களின் வலிமை ஆகியவற்றை விவரித்திருக்கின்றனர். பழையதோர் உலகத்தை மீண்டும் உருவாக்கி இருக்கின்றனர்.

இந்த மறைந்து போன உலகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் நம் முன்னே வைப்பது மூன்று முக்கிய புள்ளிகள்.

ஒன்று, குறைந்தபட்சம் கடந்த 500,000 ஆண்டுகளாகப் பருவநிலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சில காலங்களில் மிகவும் குளிர்ந்து, நிலங்களில் பனிப்பாறைகள் படர்ந்து, பனியுகமாகக் காட்சி அளித்தது இந்த உலகம். மற்ற காலங்களில் வெப்பம் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி ஒரு வெம்மையான இடமாகப் பூமி திகழ்ந்தது. இந்தப் பருவநிலை வரலாற்றின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த ஊசலாட்டத்தில் வெம்மையான காலகட்டங்களைவிட பனி யுகங்களே மிகுந்திருந்தன.

இரண்டு, பல நேரங்களில் பருவநிலை மாற்றம் மிகத் துரிதமாக நடந்தேறியிருக்கிறது. ஏறக்குறைய, குளிரூட்டியை இயங்க விட்ட சில நிமிடங்களிலேயே அறை குளிர்வது போல பூமி சில பத்தாண்டுகளிலேயே வெப்பம் குறைந்து பனியுகமாக சில்லிட்டுருக்கிறது.

மூன்று, மிக விசித்திரமாக, கடந்த கால ஊசலாட்டங்களுக்கு மாறாக, சென்ற 12000 ஆண்டுகளில் (ஏற்ற இறக்கங்கள், சிறு பனியுகங்கள், திடீர் வறட்சிகள் போன்றவை இந்தக் காலகட்டத்தில் இருந்தாலும்) வெம்மைக் காலங்களின் அளவு, வெப்பத்தின் அளவு, பைங்குடில் வளிகளின் (Greenhouse gases) செறிவு ஆகியவை கடந்த 500,000 ஆண்டுகள் இருந்ததை விட அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த மாற்றங்களின் காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டே மானுடவியலாளர் பிரையன் பாகன், நாகரீகங்கள் தோன்றியது பூமியின் ஒரு ‘நீண்ட வெயில் காலத்தில்’ என்று குறிப்பிட்டு இந்த நீண்ட வெயில் காலம் எங்கே எப்பொழுது முடியும் என்பதை ஒருவரும் அறியார் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மனித நாகரீகத்திற்கு வித்திட்ட இந்தக் காலகட்டத்தையே நாம் ஹோலோசீன் (Holocene) என்று அழைக்கிறோம். ஏறக்குறைய 12,000 ஆண்டுகள் முன் துவங்கி இன்று வரை இருக்கும் இந்தக் காலகட்டம் விவசாயம் முதல் கைப்பேசி வரை பிரமிடுகள் முதல் தஞ்சை பெரிய கோவில் வரை நிகழ்ந்த அத்துணை ஆக்கங்களுக்கும் அடித்தளமாக இருந்திருக்கிறது.

இதை வேறு விதமாகவும் பார்க்கலாம். 150,000 வருடங்கள் முன்பு ஆப்ரிக்க பெரு வெளிகளில் தோன்றிய ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் (Homo sapiens sapiens – நவீன மனிதன், ஹோமோ சேபியன்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கம்) கடந்த 138,000 ஆண்டுகள் வரை கண்டு அடையாத வளர்ச்சியைக் கடந்த 12,000 வருடங்களில் கண்டிருக்கிறான். இந்த ஹோலோசீனில் அப்படி என்னதான் மாறியது? எது மனித குலத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியைத் தூண்டியது? இதைப் புரிந்துகொள்ள நாம் பனி யுகங்களைச் சற்றுக் கவனிக்க வேண்டும்.

(தொடரும்)

 

___________

உசாத்துணை
Brian Fagan, The Long Summer: How Climate Changed Civilization, Basic Books, 2004
Holli Riebeek, Paleoclimatology: the Oxygen Balance, NASA Earth Observatory, May 6, 2005
A Record from the Deep: Fossil Chemistry, NASA Earth Observatory, September 27, 2005

பகிர:
ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

2 thoughts on “இயற்கையின் மரணம் #4 – பழையதோர் உலகம் செய்வோம்!”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *