சமீபத்தில், ஐரோப்பாவில் செயல்படும், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த, ‘The Copernicus Climate Change Service’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், 2022ஆம் ஆண்டுக்கான பருவநிலை அறிக்கையை வெளியிட்டது. அதைப் படித்தவுடன் எனக்கு வேர்த்து விட்டது. அத்தனை சூடு!
ஐரோப்பாவில் கடந்த ஆண்டின் வெயில் காலம் இதுவரை கண்டிராத அளவுக்குப் படு உக்கிரமாக இருந்திருக்கிறது. தென் துருவமான கிழக்கு அண்டார்டிகாவில் மார்ச் மாதம் வெப்ப நிலை -17.7 டிகிரி சென்டிகிரேடு பதிவாகியது. அடேங்கப்பா, என்ன குளிரு என்று நீங்கள் நினைக்கும் முன், இதைச் சற்று மனதில் வாங்கிக் கொள்ளுங்கள். கடந்த 65 ஆண்டுகளில், 2022ல் பதிவான இந்த வெப்பநிலையே மிகவும் அதிகமானது. உலகளவில் 2022ஆம் ஆண்டு வெப்பநிலை 1850-1900 காலகட்டத்தை (அதாவது, நவீன தொழிற்சாலைகள் தோன்றுவதற்கு முந்தைய காலம்) விட 1.2 டிகிரி சென்டிகிரேடு கூடுதல். இத்தகைய மிகு வெப்பம் நிறைந்த காலகட்டத்தில் நான் அடுத்துக் கூறப் போகும் செய்தி சற்று விசித்திரமாக இருக்கலாம். ஆனால், அதுவும் உண்மைதான்.
நாம் இருக்கும் இந்தக் காலகட்டம் இடைப் பனி யுகம் (interglacial period). அதாவது பனிப் பாறைகள் சற்றே விலகி இருக்கும் காலம். ஆனால் இந்தப் பின் வாங்கல் மீண்டும் பாய்வதற்குத்தான். வருங்காலத்தில் இப் பனிப் பாறைகள் மீண்டும் நிலத்தை ஆக்கிரமிக்கும். ஆராய்ச்சிகள் இதை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகின்றன. இயல்பின் படிக் கணக்கிட்டால் சுமார் 1500 வருடங்களுக்குள் பனிப் பாறைகள் வளரத் தொடங்கி பூமியைப் பனி யுகம் தன் சில்லிட்ட விரல்கள் கொண்டு இறுக்கி இருக்க வேண்டும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. ஆனால், அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் வளிமண்டலத்தில் நம்முடைய நடவடிக்கைகளால் உண்டாக்கிய பைங்குடில் வளிகள் (greenhouse gases) உலகை மேலும் வெப்பமாக்கி இருக்கிறது.
காற்று மண்டலத்தில் இருக்கும் இந்த வளிகளுக்கு ஒரு பிரத்யேகக் குணம் உண்டு. சூரியனில் இருந்து வெளியாகும் வெப்பத்தை இவை பூமியின் மேல் விழ அனுமதித்தாலும், பூமியின் மேல் பட்டு, தெறித்து, மேல் எழும்பும் வெப்பத்தை வெளியே செல்ல முடியாதவாறு தடுத்து விடுகிறது. சக்ரவியூகத்தில் நுழைந்த அபிமன்யு போல வெப்பம் பூமியிலேயே சிக்கிக் கொள்கிறது. இது ஒருவிதத்தில் நன்மையே. ஏனென்றால், இந்த ‘அளவான’ வெப்பம்தான் பூமியை உயிர்களுக்கு ஏற்ற ஓர் உறைவிடமாக மாற்றி இருக்கிறது. இல்லை என்றால் பூமி எப்பொழுதுமே குளிர்ந்து, உயிர்கள் ஏதுமில்லா ஒரு குளிர் பாலைவனமாகி இருக்கும்.
அதே சமயம், இந்த வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்பொழுது இது பல சிக்கல்களைப் பூமியில் உருவாக்குகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த ‘அகப்பட்டுக்கொண்ட’ வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் நம் தொழில் மற்றும் வாழ்வியல் சார்ந்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் பைங்குடில் வளிகள்.
முக்கியமாக, கரிவளியின் (Carbon-di-oxide) அளவு கடந்த 20 லட்சம் ஆண்டுகளில் சென்ற ஆண்டுதான் உச்சத்தைத் தொட்டது. ஆகவே, இந்த வெப்ப அதிகரிப்பு பனி யுகத்தைத் தாமதப்படுத்தியிருக்கிறது என்று நாம் சற்றே சந்தோஷப்பட்டுக் கொண்டாலும் இதற்காக வருங்காலங்களில் நாம் ஒரு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதைப் பின்பு நோக்குவோம்.
இந்தப் பகுதிகளைச் சற்றுக் கூர்ந்து வாசித்தவர்களுக்கு இங்கே சில கேள்விகள் எழக் கூடும். நாம் பனி யுகத்தை பற்றிப் பேசும் பொழுது ‘தாமதம்’ என்று ஏன் குறிப்பிடுகிறோம். ரயில் அட்டவணை போல இதற்கும் ஏதாவது கால அட்டவணை உண்டா?
உண்டு, என்பதுதான் பதில்!
இந்த அட்டவணையை வடிவமைத்தவர்களில் இருவர் முக்கியமானவர்கள். முதலாமவர் ஸ்காட்லேண்ட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் க்ரோல் (James Croll). இவர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எதுவும் படிக்கவில்லை. ஆனாலும் ஆர்வத்துடன் இயற்பியல், கணிதம் போன்றவற்றைத் தானே பயின்றார். பிழைப்பிற்காகப் பல தரப்பட்ட வேலைகளைச் செய்தார்; ஆயுள் காப்பீடு விற்றது, டீக்கடை வைத்தது, காற்றாலை மற்றும் நீர் விசை ஆலை போன்றவற்றின் பாகங்களைப் பழுது பார்த்தது என்று பல. ஆனால் அறிவியலின் மேல் இருந்த காதல் இவரை எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க விடவில்லை. இந்தத் தீராத் தாகம்தான் பனி யுகங்கள் தோன்றுவதற்கானக் காரணங்களை ஆராய இவரைத் தூண்டியது.
லூயிஸ் அகாசி பனி யுகங்கள் ஓர் உண்மை நிகழ்வே என்று நிரூபித்து இருந்தக் காலம் அது. க்ரோல் பனி யுகம் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள் என அனுமானித்திருந்தார். இதை நிரூபிப்பதற்குக் கணினியோ, ஏன் ஓர் எளியக் கணிப்பான் (calculator) கூட இல்லாத ஒரு காலத்தில், கடந்த 30 லட்சம் ஆண்டுகள் பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கிட்டு அவற்றை அட்டவணையிட்டார்.
இரண்டாமவர், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன் பிடிக்குள் கொண்டு வந்து அதன் இருட்டு மூலைகளைக் கூட ஒளிர்விக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட செர்பியாவைச் சேர்ந்த கணிதவியலாளர் மிலூடின் மிலன்கோவிச் (Milutin Milankovitch). தன்னுடைய கணிதத் திறமையை மனித குலம் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலுக்காகப் பயன்படுத்த எண்ணிய இவரின் கவனத்திற்கு வந்தது ஜேம்ஸ் க்ரோலின் முயற்சிகள். கணிதத்தில் நல்ல தேர்ச்சி இருந்ததால் இவர் க்ரோலின் கணக்குகளை மீட்டெடுத்து அதை நீட்டி இன்னும் துல்லியமாக்கினார்.
இவர்கள் இருவரின் கணக்குகளும் பனி யுகங்களின் முக்கிய அம்சமான சுழற்சியை முன் நிறுத்தின. இந்தச் சுழற்சிக்கானக் கால அளவும் இவர்களால் நிர்ணயிக்கப்பட்டது. முக்கியமாக, இவர்களின் பணி, பனி யுகங்கள் தோன்றுவதற்கும், மறைவதற்கும் பூமியின் சுற்றுப்பாதை மற்றும் அதில் தென்படும் மாற்றங்கள் ஒரு முக்கிய விசை என்ற சிந்தனையை ஆழமாக வேரூன்றியது. இந்தச் சுழற்சியின் மூன்று முக்கிய அங்கங்களைச் சற்றுச் சுருக்கமாகக் காணலாம்.
பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையின் வடிவம் மாறும் இயல்புடையது. வட்டமும், நீள் வட்டமுமாக (elliptical) இந்தப் பாதை ஊசல் ஆடிக் கொண்டிருக்கும். இதை eccentricity என்று அழைப்பார்கள். முழு வட்டப் பாதையிலிருந்து முழு நீள்வட்டப் பாதையை அடைய ஏறக்குறைய ஒரு லட்சம் ஆண்டுகள் பிடிக்கும். பூமி வட்டச் சுற்றுப்பாதையில் பயணிக்கும் பொழுது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் அவ்வளவாக மாறாது. ஆனால் நீள் வட்டப் பாதையில் இந்தத் தூரம் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாறுபடும் தூரமானது சில வருடங்களில் ஒரு குறிப்பிட்ட அளவை மிஞ்சும் பொழுது பூமியின் வடக்கு பகுதிகளில் சூரிய ஒளியின் தாக்கம் வெகுவாகக் குறைந்து அதனால் ஏற்படும் மிகக் கடுமையான பனிக் காலங்களே பனி யுகத்தைத் தொடங்கி வைக்கிறது.
இதைத் தவிர பூமியின் சுழற்சி அச்சு (எலுமிச்சம் பழத்தில் மேலிருந்து கீழாகச் சொருகப்பட்ட ஒரு பல் குத்தியைப் போல இதை உருவகப்படுத்தலாம் ) சற்றுச் சரிவாகவே உள்ளது. Obliquity என்று இதற்குப் பெயர். இதன் சரிவு தற்காலத்தில் 23.4 டிகிரி. இந்தச் சரிவானது 41000 வருடங்கள் சுழற்சியில் 22.1 டிகிரியிலிருந்து 24.5 டிகிரி வரை மாறிக் கொண்டிருக்கும். இந்தச் சரிவு குறைவாக இருக்கும் காலக் கட்டத்தில் பருவ நிலைகள் மிகவும் மிதமாக இருக்கும். குளிர் காலத்தில் உருவாகும் பனிப் பாறைகள் மிதமான வெயில் காலங்களில் உருகாமல் சேர்ந்து, வளர்ந்து பனி யுகத்தை உண்டாக்குகின்றன.
இவற்றோடு சேர்ந்து மற்றொரு காரணமும் இருக்கிறது. பூமியின் சுழற்சி சீராக இல்லாமல் ஒரு சுற்றும் பம்பரத்தில் காணப்படுவதைப் போல ஒரு தள்ளாட்டம் உண்டு (precession). பல்குத்தியால் துளைத்த எலுமிச்சம் பழத்தை ஒரு பம்பரம் போல் தரையில் சுற்ற விட்டால் அதன் மேல் பகுதியில் இருந்து துருத்திக் கொண்டிருக்கும் பல்குத்தியின் பகுதி ஒரு சிறு வட்டத்தைக் காற்றில் வரையும். அதைப்போலப் பூமியின் துருவத்திலிருந்து எழும் ஒரு கற்பனைக் கோடு அது போலவே சுழன்று கொண்டிருக்கிறது. இந்த வட்டத்தைச் சுற்றி முடிக்க ஏறக்குறைய 26000 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களும் பனி யுகத்திற்கு ஒரு காரணம்.
க்ரோல் மற்றும் மிலன்கோவிச் கணக்கிட்ட இந்த அட்டவணைக்குச் சாரம் உள்ளது என்று பல வருடங்கள் கழித்து, 1976ஆம் ஆண்டு வாக்கில், நிரூபிக்கப்பட்டது. சென்ற பகுதியில் குறிப்பிட்டது போலக் கடல் படிமங்கள் மற்றும் உள்ளகங்களில் இருந்து பெறப் பெற்ற கடற் சிப்பிகளின் தொல்வடிவத்திலிருந்த ஆக்ஸிஜன் ஐசோடோப்பு வகைகளின் விகிதாச்சாரம் இந்தச் சுழற்சிகளுக்குப் போதிய ஆதாரம் உள்ளதைக் காட்டியது.
சுருக்கமாக, ஆராய்ச்சிகள் தெரிவிப்பது இதுதான். பனி யுகங்களின் தோற்றமும் மறைவும் மூன்று முக்கியச் சுழற்சிகளின் விளைவு. பூமியின் சுற்றுப்பாதையினால் 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பருவநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து, பூமியின் சுழற்சி அச்சின் சரிவால் 41,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், தள்ளாட்டத்தினால் சுமார் 19000 ஆண்டுகளில் இருந்து 23000 ஆண்டுகள் வரை ஒரு மாற்றமும் உண்டு என்பதே இந்த அட்டவணை தெரிவிக்கிறது.
இந்த வானியல் கணக்குகளின் படி கடந்த பனி யுகம் 15000 ஆண்டுகள் முன் முடிந்தது. இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நடந்து முடிந்த பனி யுகத்திற்கும் அடுத்து வர போகும் பனி யுகத்திற்கும் இடையே உள்ள ஒரு வெதுவெதுப்பான இள வெப்பக் காலத்தில்.
இது வரை பனி யுகம் தோன்றுவதற்கான காரணங்கள் வானியல் சார்ந்தது என்று நான் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் பூமி சுற்றுவதும், சுழல்வதும், தள்ளாட்டமும், மாறுபடும் சூரியனின் வெப்பமும் வெறும் விசைகள் மட்டுமே. இந்த விசைகளைப் பெருக்கி ஒரு பெரும் பருவநிலை நிகழ்வாக மாற்றுவது இந்த வானியல் நிகழ்வுகளோடு ஊடாடும் ஐம்பூதங்கள்.
(தொடரும்)
___________
உசாத்துணை
The Copernicus Climate Change Service, 2022 Global Climate Highlights, 9th January, 2023.
P. C. Tzedakis and others, Determining the natural length of the current interglacial, Nature Geoscience, 9th January, 2012.
Doug Macdougall, Frozen Earth: The Once and Future Story of Ice Ages, University of California Press, 2004.
Brian Fagan (Eds.), The Complete Ice Age: How Climate Change Shaped The World, Thames and Hudson, 2009.