பொதுவாகப் பூமியில் ஏற்படும் பனியுகங்களின் தோற்றத்திற்கும் மறைவிற்கும் வானியல் காரணங்களைச் சுட்டிக் காட்டினாலும் அவை துவக்கப்புள்ளிகள் மட்டுமே. அதுவும் அளவில் சிறியது. ஆனால், இவை பூமியில் ஏற்படுத்தும் மாற்றங்களோ மிகப் பெரியது. எப்படி இந்தச் சிறு புள்ளிகள் பூமியின் மீது ஒரு பெரும் கோலமாக விரிகிறது என்பது பெரும்பாலும் ஒரு விளக்க இயலாத மர்மம்தான். ஆனாலும், கடந்த சில பத்தாண்டுகளில் இந்த மர்மத்தின் சில இருட்டுப் பாகங்களில் அறிவியல் தனது வெளிச்சத்தைப் பாய்ச்சி இருக்கிறது. இவை காட்டும் காட்சிகள் பிரமிப்பூட்டுபவை. ஐம்பூதங்களும் ஒன்றோடொன்று ஊடாடி நடத்தும் பெரும் நடனம். இந்த நடனத்தின் சில அசைவுகளைக் காணலாம்.
மிலன்கோவிச் வானியல் சுழற்சிகள் (Milankovich cycles) பனியுகத்தைத் தூண்டும் ஒரு விசை மட்டுமே. ஏனென்றால், இந்தச் சுழற்சிகள் உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் கூட, அதாவது நீள்வட்டப் பாதையில் பூமி சூரியனை விட்டு உச்சபட்சத் தொலைவிலும், சுழற்சி அச்சின் சரிவுக் குறைவாக இருக்கும் காலகட்டத்தில் கூடச் சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் .001 சதவிகிதம் மட்டுமே குறைகிறது. இந்த மிக மிகச் சிறிய அளவு மாறுதல் கூட பூமியின் வெப்ப அளவைச் சுமார் 5 டிகிரி சென்டிகிரேடு வரை குறைக்கிறது. இந்த அளவொவ்வாத பெருக்கத்திற்குப் பூமியிலும், வளிமண்டலத்திலும் நடந்தேறும் பல நிகழ்வுகள் காரணிகளாக அமைந்திருக்கின்றன.
காற்றுமண்டலத்தில் கரிவளியின் செறிவு பூமியின் வெப்ப அளவைப் பாதிக்கிறது. அதாவது அதிக அளவு கரிவளி வெப்பத்தையும், குறைந்த அளவு குளுமையும் உருவாக்கும். கடந்த பனியுகத்தின் உச்சத்தில் இந்த வளியின் அளவு ஏறக்குறைய 160 பிபிஎம் (ppm – parts per million). அதாவது சராசரியை விட மிகக் குறைவு. இதனால் சூரியனில் இருந்து வந்து சேரும் வெப்பத்தின் பெரும் பகுதி பூமியிலேயே அடைபடாமல் நிலத்தில் பட்டு, மீண்டும் விண்வெளிக்கே திரும்பியது. இது பூமியைக் குளிர்வித்தது. ஆனால், இங்கு எழும் முக்கிய கேள்வி இதுதான். கரிவளியின் செறிவு ஏன் குறைந்தது?
இமயமலைதான் காரணம்!
எப்படி என்பதைப் புரிந்துகொள்ள நாம் கார்பன் அல்லது கரிமத்தின் சுழற்சியை (Carbon cycle) சற்றுக் கவனிக்க வேண்டும்.
காற்றில் உள்ள கரிமம் மழைநீரோடு கலந்து கார்போனிக் அமிலமாக நிலத்தின் மேல் வீழ்கிறது. இந்த மென் அமிலத்தன்மை வாய்ந்த மழை நீர் நிலத்தின் மேல் இருக்கும் பாறைகளை மெதுவாக அரித்து அவற்றில் இருந்து கால்சியம், மெக்னீசியம் போன்ற அயனிகளை (ions) விடுவித்து நதிகள் மூலமாகக் கடல் கொண்டு சேர்க்கிறது. கடலில் உள்ள கார்போனேட் அங்கு வந்து சேர்ந்த அயனிகளுடன் கூடி கால்சியம் கார்போனேட் ஆக மாறுகிறது. இந்தப் பொருளையே சிறு கடல் வாழ் பிராணிகள் சிப்பிகளாக்கித் தங்களின் கவசமாக அணிகின்றன. இவை இறந்த பின் இந்த ஓடுகள் கடலுக்கு அடியில் பெரும் படலங்களாக உருவாகி, கடல் படிமங்களுடன் கலந்து, பெரும் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு காலப் போக்கில் சுண்ணாம்புப் பாறைகளாக (limestone) உருவெடுக்கின்றன. (இது ஏதோ கடலுக்கு அடியில் நடக்கும் சமாச்சாரம்தான் என்றாலும் அடுத்த முறை உங்கள் இல்லத்தை அலங்கரிக்கும் பளிங்குக் கல் தரையில் கால் பதித்து நடக்கும் போது பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறு பிராணிகளை நினைத்துக் கொள்ளுங்கள். ஆமாம், ஏனென்றால் பளிங்குக் கல் சுண்ணாம்புப் பாறையின் ஓர் உருவம்தான்!)
ஆகவே, முடிவாக, காற்றில் இருந்த கரிமம் உருமாறி பாறைகளில் தேங்கிவிட்டது. இதையே கரிமத் தேக்கம் (Carbon sink) என்று கூறுகிறோம். இது போல இயற்கையில் பல கரிமத் தேக்கங்கள் உண்டு. தாவரங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் கரிவளியைத் தங்கள் உணவு உற்பத்திக்காக உறிஞ்சிக் கொள்கிறது. இந்தச் செடி கொடிகள் இறந்த பின் பூமியின் மடிப்புகளில் சிக்குண்டு நிலக்கரியாக நிலத்தின் அடியில் தேங்குகிறது. இதுவும் ஒரு கரிமத் தேக்கமே. இது கரிமச் சுழற்சியின் ஒரு பகுதி. ஏனென்றால், கடன் கொடுக்கும் கறாரான பேர்வழி போல, கொடுத்ததைத் திரும்பப் பெறாமல் விடாது வளிமண்டலம்.
பூமியிலிருந்து கரிமம் வளிமண்டலத்தை அடையும் பாதைகள் பல. உதாரணத்திற்கு, கண்டங்களின் உரசல்களினால் பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் கடும் வெப்ப அழுத்தத்தினால் கரைந்து அதில் வெளியாகும் கரிவளி எரிமலைகளின் ஏப்பங்களாக வெளியேறி, கரிமம் வந்த இடத்தையே சென்று சேர்கிறது. அதேபோல செடி கொடிகள் மக்கும் பொழுதும் கரிவளி வெளியேறி வளிமண்டலம் மீள்கிறது. இது சுழற்சியின் இன்னொரு பகுதி.
இப்படித்தான் இந்த நீண்ட சுழற்சி பல கோடி ஆண்டுகளாக வளிமண்டலத்தில் கரிமத்தின் அளவை ஒரு சம நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஆனால், இந்த சம நிலை பல காலங்களில் பல காரணங்களுக்காகச் சீர் குலைவதுண்டு. அதாவது, கரிமம் வளிமண்டலத்தில் குறைவாகவும், நிலத்தில் அதிகமாகவும் அல்லது எதிரெதிர் மாறாகவும் ஆவது உண்டு.
உதாரணத்திற்குக் கடந்த சில பத்தாண்டுகளாக மனிதனால் உந்தப்பட்ட உலகம் தழுவிய தொழில்மயமாக்கம் பூமியில் புதையுண்டு கிடந்த நிலக்கரியை மிகப் பரவலாக பயன்படுத்தி வருகிறது. இந்தச் செயல்பாடு நிலக்கரியில் இருக்கும் கரிமத்தை மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்புகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டுமே நம் செயல்பாடுகளால் ஏறக்குறைய 417 பிபிஎம் அளவு கரிவளியை வெளியேற்றி வளிமண்டலத்தில் நிரப்பி இருக்கிறோம். ஓர் இகழ்தற்குரிய சாதனையை நாம் படைத்திருக்கிறோம்.
இது அல்லாமல் இயற்கையாகவே கூட வளிமண்டலத்தில் கரிமத்தின் அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இந்த மாறுதல்கள் பருவநிலையை வெகுவாகப் பாதிக்கும். இமயமலையின் தோற்றம் இதற்கு ஓர் உதாரணம்.
ஏறக்குறைய 9 கோடி ஆண்டுகளுக்கு முன், துணைக்கண்டம் என்று இன்று அறியப்படுகிற, இந்திய நிலப்பரப்பு மடகாஸ்கரை (இப்பொழுது இது ஆப்பிரிக்கக் கண்டம் அருகே இருக்கும் ஒரு தீவு) விட்டுப் பிரிந்து ஒரு தனித் தீவாக வடக்கு நோக்கி ஒரு பெரும் பயணத்தைத் துவக்கியது. பொதுவாகக் கண்டங்கள் நகரும் வேகத்தை விட இதன் வேகம் சற்றுக் கூடுதல்தான் – வருடத்திற்கு 31 செ. மீ !
இப்படி சுமார் நான்கு கோடி ஆண்டுகள் பயணித்த பின்னர் இந்திய தீவு வடக்கில் இருந்த யூரேசியா கண்டத்தை முட்டி, கடப்பாரை நிலத்தைக் குத்தி நெம்புவதுபோல, கீழிருந்து நெம்பி தெற்கு யூரேசிய நிலப்பரப்பை மேல் எழுப்பியது. அப்படி எழுந்த நிலப் பரப்புகள்தான் இன்று நாம் காணும் இமய மலைத் தொடர்கள்.
இந்தக் கண்டங்களின் மோதலுக்கு முன் அந்நாளில் யூரேசியாவையும் இந்தியாவையும் டெதிஸ் (Tethys) என்ற கடல் பிரித்திருந்தது. இந்தக் கடல் கூட இந்த எழுச்சியில் சிக்குண்டு மேல் எழுந்தது. அதனால்தான் இன்றுகூட உலகத்திலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடல் வாழ் பிராணிகளின் தொல்படிவம் தென்படும்! ஒரு மேலைக் கடல்தான் வெள்ளிப் பனிமலையின் ஒரு பகுதி.
இன்று நாம் காணும் இமய மலைத் தொடர்களின் எழுச்சி ‘ஒரு’ நிகழ்வு அல்ல. கடந்த 5 கோடி ஆண்டுகளாக இமயம், சில காலகட்டங்களில் வேகமாகவும் சிலவற்றில் மிக மெதுவாகவும், எழும்பி வருகிறது. இன்று கூட ஆண்டுக்கு 5 மி.மீ உயர்ந்து கொண்டே இருக்கிறது. இமயத்தின் இந்த வளர்ச்சி இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு அடிக்கோல் இட்டது.
ஒன்று, இந்தியத் துணைக்கண்டம் பெரிதும் நம்பி இருக்கும் பருவமழை. இமய மலை எழுவதற்கு முன்பே கூட இந்திய தீபகற்பம் கோடைக் காலத்தில் மிகவும் சூடாகவே இருந்தது. மலையின் எழுச்சி இதை மேலும் அதிகரித்தது. ஒரு காரணம், ஆர்டிக் பகுதிகளில் இருந்து வரும் குளிர் காற்றை இந்த மலைத் தொடர் அணையிட்டுத் தடுத்தது. மேலும் இமயத்தோடு எழுந்த மிகப் பெரிய நிலப்பரப்பான திபேத்தன் பீடபூமி (Tibetan Plateau) கோடைக் காலங்களில் அதி வெம்மையாகிறது. பௌதிக விதிகள் படி வெப்பமுள்ள காற்று மேல் எழும்பி ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலத்தை உருவாக்கும். வருடா வருடம் இந்திய துணைக்கண்டத்தின் வடக்கு பகுதியில் தோன்றும் இந்தக் குறைந்த காற்றழுத்த மண்டலத்தை நிரப்ப இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இருந்து கிளம்புகிறது குளிர்ந்த நீர் கொண்ட காற்று. இது இந்திய துணைக்கண்டத்தை நோக்கி நகர்ந்து மழையைப் பொழிந்து கொண்டே இமயப் பெருஞ் சுவற்றில் மோதி தன் மொத்தச் சுமையையும் இறக்கி வைக்கிறது.
இமய மலைச் சரிவுகளில் விழத் தொடங்கிய இந்த மாமழையே கடந்த பனியுகம் உருவாகக் காரணம். இதுவே இரண்டாவது முக்கிய நிகழ்வு.
நாம் முன்பே கண்டது போலக் கரிமச் சுழற்சியின் முக்கிய அங்கம் கார்போனிக் அமிலம் அடங்கிய மழை நீர். மழை அதிகரிக்கும் பொழுது அதில் சேரும் கரிமமும் அதிகரித்து, பாறைகளின் அரிப்பும் அதிகமாகி, முடிவாக வளிமண்டலத்தில் இருக்கும் கரிமம் பாறைகளாகத் தேக்கம் கொள்கிறது. இமய மலைத் தொடர்கள் எழும்பி, பெரும் மழையைத் தருவித்து, வளிமண்டலத்தில் இருக்கும் கரிம அளவைப் பெரும் அளவு குறைத்ததினால் பூமி குளிர்ந்து கடந்த பனியுகத்தை உருவாக்கியது.
நிலமும், நீரும், ஆகாயமும் ஒத்திசைந்து ஆடும் இது ஒரு வகை நடனம் என்றால் காற்றும், நீரும் சேர்ந்து ஆடும் மற்றொரு வகை நடனம் இருக்கிறது. அதை அடுத்த பகுதியில் காண்போம்.
(தொடரும்)
___________
உசாத்துணை
Doug Macdougall, Frozen Earth: The Once and Future Story of Ice Ages, University of California Press, 2004.
The Copernicus Climate Change Service, 2022 Global Climate Highlights, 9th January, 2023.
Raymo, M.E. and others. Influence of late Cenozoic mountain building on ocean geochemical cycles, Geology, Volume 16, 1988.
Pranay Lal, Indica: A Deep Natural History of the Indian Subcontinent, Allen Lane, 2016