Skip to content
Home » இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்

இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்

சிறு வயதில் இருந்தே ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு ஒரு பழக்கம் இருந்தது. தன்னைச் சுற்றி நிகழும் பல இயற்பியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது மற்றவருக்கு எடுத்து உரைக்கவோ அவற்றைத் தன் மனதிற்குள்ளேயே உருவகப்படுத்திக்கொள்வார். ஓர் ஒளிக் கற்றையைத் துரத்திக் கொண்டு சென்றால் அது எவ்வாறு நம் கண்களுக்குத் தென்படக் கூடும் என்று தனது பதினாறு வயதினிலேயே சிந்தனைச் சோதனைகள் செய்யத் துவங்கினார். அவரைப் போல நாமும் ஒரு சிந்தனைச் சோதனை செய்வோம்.

ஒரு சிறு கப்பலை மனதில் உருவகப்படுத்திக்கொள்வோம். பல மைல் தூரம் தண்ணீரின் மேலேயும், நீர்மூழ்கிக் கப்பல் போலவே தண்ணீருக்கு அடியிலும் செல்லக்கூடிய ஒரு விசேஷக் கப்பல். ஆனால் அந்தக் கப்பலுக்கு எந்தவிதமான உந்துகையும் கிடையாது. நீர் போகும் போக்கிலேதான் பயணிக்கும். அந்தக் கப்பல் துவங்க இருக்கும் ஒரு நீண்ட பயணத்தை நாம் கழுகு போலப் பறந்து கொண்டே கண்காணிப்போம். சிந்தனைச் சோதனைதானே. எதுவும் சாத்தியமே!

மேற்கிந்திய தீவுகளுக்கு அருகே மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து (Gulf of Mexico) நம் கப்பல் தன் பயணத்தைத் தொடங்குகிறது. மிக மெதுவாக, ஏறக்குறைய மணிக்கு 6 கி.மீ வேகத்தில், ப்ளோரிடா (Florida) மாகாணத்தைக் கடந்து, அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரமாக மிதந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஐரோப்பாவின் மேற்கு பகுதிகளைத் தொட்டபடியே ஐஸ்லேண்ட் (Iceland) அருகே வந்தவுடன் ஒரு விந்தை நிகழ்ந்தேறும். மிதந்து கொண்டிருக்கும் கப்பல் தண்ணீரில் மூழ்கி தன் பயணத்தை நீருக்கு அடியில் தொடரத் துவங்கும். நமக்குத்தான் பருந்துப் பார்வை உள்ளதே; கடலுக்கு அடியில் செல்லும் கப்பலைப் பின் தொடர்வோம்.

நார்டிக் கடலிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலைக் குறுக்கு வெட்டாகக் கடந்து தென் அமெரிக்க கடற்கரை ஓரமாக வந்து அண்டார்டிக்கா கண்டத்தை உரசிக் கொண்டே இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்து மீண்டும் மேலெழும்பி இந்த நெடும் பயணத்தைத் துவங்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு அருகே நம் கப்பல் வந்து சேரும். அதற்குள் ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்!

எந்த வித உந்துகை அமைப்பும் (propulsion system) இல்லாத இந்தக் கப்பலை உலகின் பல பாகங்களுக்கு இட்டுச் சென்றது பெரும் நாகங்களைப் போலக் கடலில் நெளிந்து செல்லும் கடல் நீரோட்டங்கள். இந்த மொத்த நீரோட்டங்களின் தொகுப்பு ‘Thermohaline circulation’ என்று அறியப்படுகிறது. இந்தக் கடல் நதிகள் பூமியின் பருவநிலையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது.

உதாரணத்திற்கு, நம் சிந்தனையில் உதித்தக் கப்பலின் பயணத்தின் முதல் பகுதியை எடுத்துக்கொள்வோம். மேற்கிந்திய தீவுகள் அருகே ஆரம்பித்து நோர்டிக் கடல் அருகே கடல் அடி சேரும் இந்த நீரோட்டம் கல்ப் ஸ்ட்ரீம் (Gulf stream) என்று அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய நூறு அமேசான் நதிகள் அளவு நீர் கொண்ட இந்த வலிமையான கடல் நீரோட்டம் பூமியின் வடக்கு பாகங்களில் உள்ள பல நாடுகளின் பருவநிலையை நிர்ணயிக்கிறது.

நவீன மனிதன் இந்த நீரோட்டத்தின் இருப்பை அறிந்து கொண்டது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வே. 1513ஆம் ஆண்டு பொன்ஸ் லியான் (Juan Ponce de Leon) ஒரு விசித்திரமான குறிக்கோளுடன் புளோரிடா மாகாணத்தின் கடல் பகுதிகளில் பயணத்தை மேற்கொண்டார். அவர் தேடிக் கொண்டிருந்தது பழங்கதைகளில் கூறப்பட்ட இளமையை மீட்டெடுக்கும் ஓர் ஊற்றை (Fountain of Youth). Pirates of the Caribbean திரைப்படங்களின் வரிசையில் ‘On Stranger Tides’ என்ற படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ (Jack Sparrow) தேடிச் செல்வதும் அதே ஊற்றைத்தான்!

ஊற்றைத் தேடிப்போன பொன்ஸ் கண்டெடுத்தது கடலில் ஒரு பெரும் நீரோட்டத்தை. ஏப்ரல் 22ஆம் நாள் 1513 தேதியிட்ட தன்னுடைய நாட் குறிப்பில் இவ்வாறாகக் குறித்திருக்கிறார்

‘நல்ல காற்று இருந்தும் எங்கள் கப்பல்கள் இந்த நீரோட்டத்தில் முன் செல்ல முடியவில்லை. இந்த நீர் எங்களை எதிர் திசையில் இழுத்துச் சென்றது. மிகவும் முயன்றோம். கடைசியில் எங்களுக்குத் தெரிய வந்தது இதுதான்; இந்த நீரோட்டம் காற்றை விட வலியது.’

ஆனால், பொன்ஸின் இந்தக் கண்டெடுப்பு ஏதோ காரணங்களுக்காக வெளி உலகிற்குச் சேரவில்லை. இந்த நீரோட்டத்தின் வலிமையும், பயன்களும் பற்றிய சிந்தனையைக் கடல் மாலுமிகளின் பலமாக வேரூன்றியதற்கு, பொன்ஸின் கண்டெடுப்பிற்கு ஆறு வருடங்கள் கழித்து, அந்த நீரோட்டத்தில் பயணித்த அன்டன் அலமினோ (Anton de Alaminos) தான் காரணம். அஸ்டெக் (Aztec) நாகரீகத்தின் தலைநகரான டெனோஷ்டிட்லானை (Tenochtitlan) சூறையாடிய ஸ்பானிஷ் நாட்டுப் பிரதிநிதியான ஹெர்னான் கார்டெஸ் (Hernan Cortes), தான் கொள்ளையடித்த தங்கத்தை மீண்டும் ஸ்பெயினிற்கு அனுப்புவதற்குத் தேர்ந்தெடுத்தது அலமினோவை. ஏனென்றால், அலமினோ பொன்ஸ் லியோனின் கப்பலில் மீகாமனாக இருந்தவர். திறமைசாலி என்று பெயர் எடுத்தவர். விலை மதிக்க முடியாத தங்கத்தைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்ட அலமினோ ஸ்பெயின் செல்வதற்கு ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

அக்காலத்தில் அமெரிக்க கிழக்கு கரைகளில் இருந்து ஐரோப்பா செல்லும் கப்பல்கள், கிழக்கு திசையில் அட்லாண்டிக் பெருங்கடலைச் சற்றுச் சரிந்த நேர்கோட்டுப் பாதை வழியாகக் கடந்து ஐரோப்பா அடைந்தது. அந்தப் பாதை பல இன்னல்கள் நிறைந்தது. அட்லாண்டிக் பெருங்கடல் நடுவில் பல நேரம் காற்று நின்றுவிடும். மீண்டும் தொடங்கும் வரை அங்கேயே மிதக்க வேண்டும். இப்படிப் பல சிக்கல்கள். அலமினோ, கிழக்கு நோக்கிச் செல்வதற்குப் பதிலாக வடக்கு நோக்கிக் கப்பல்களைச் செலுத்தினார். இந்தக் கடல் நீரோட்டத்தைப் பற்றி முன்னமே அறிந்திருந்தாலும் அது எங்கே முடிகிறது என்பதைப்பற்றி அவர் ஏதும் அறியாதவர். ஆனாலும் மிக உறுதியுடன் முன் நகர்ந்தார். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கும் வடக்கு கரோலினா மாகாணம் வரை சென்ற கப்பல், நீரோட்டத்தைத் தொடர்ந்து கிழக்கு நோக்கித் திரும்பி ஐரோப்பாவை நோக்கி நகரத் துவங்கியது; ஒரு புத்தம் புது கடல் வழிப் பாதை உபயோகத்திற்கு வந்தது. கல்ப் ஸ்ட்ரீம், கப்பல்கள் பயணிக்கும் பெரும் நெடுஞ்சாலை ஆகியது.

இந்த வலிமையான நீரோட்டம் உப்பும், நீரும், காற்றும், சூரியனின் வெப்பமும் இணைந்து ஊடாடிப் பெரும் கடல்கள் அமைத்த மேடைகளில் அரங்கேறும் நடனம். பூமியின் நிலநடுக்கோடு (Equator) அருகே அமைந்திருக்கும் மேற்கிந்திய தீவுகளின் கடல் பரப்புகளில் அதி வெப்பத்தினால் அதிகக் கடல் நீர் ஆவியாகிறது. இதனால் மீதம் இருக்கும் கடல் நீரில் உப்பின் அளவு சற்று அதிகமாகவே இருக்கும். காற்று இந்த மிகு உப்பு கொண்ட வெம்மையான நீரை நகர்த்தி வடக்கு அட்லாண்டிக் சமுத்திரத்தின் வழியாக மேற்கு ஐரோப்பாவிற்குக் கொண்டு சேர்க்கிறது. இங்கே, நீரோட்டத்தைச் சுற்றி இருக்கும் கடல் பகுதிகள் 0 டிகிரி சென்டிகிரேட் வெப்ப அளவில் இருக்கும் பொழுது இந்த நீரோட்டத்தின் வெப்ப அளவு ஏறக்குறைய 8 டிகிரி கூடுதல் இருக்கும்!

அட்லாண்டிக் பெருங்கடலில் மிதந்து வரும் இந்த வெந்நீர் நதிதான் தன் வெம்மையைப் பரப்பிக் குளிர் காலங்களில் கூட ஐரோப்பாவின் பல பாகங்களை ‘சற்று மிதமான’ வெப்பநிலையில் வைத்திருக்கிறது. இந்த நீரோட்டம் ஐரோப்பாவிற்கு அளிக்கும் கொடையை எண்ணிப் பார்ப்பதற்கு ஸ்காட்லாண்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் இன்வெரீவ் (Inverewe) என்ற தோட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் பகுதி இருக்கும் அட்சக்கோட்டில் தான் ரஷ்யாவின் மாஸ்கோ, கனடாவின் ஹட்சன் விரிகுடா (Hudson Bay) போன்ற வருடங்களுக்குப் பல மாதங்கள் குளிர்ந்தும், பனி மூடிக் காணப்படும் பிரதேசங்கள் உள்ளன. ஆனால் இன்வெரீவ் தோட்டத்தில் தென்னை, வாழை, தைல மரம் போன்ற வெப்ப மண்டல மரம் மற்றும் பயிர்கள் செழித்து வளர்கின்றது. காரணம் கல்ப் நீரோட்டம் இந்தப் பகுதிக்கு அளிக்கும் வெப்பம்.

இப்படியாக வெப்பத்தை இழக்கும் இந்த நீரோட்டம், குளிர்ந்து, உப்பின் அளவு சுற்றியுள்ள நீரை விட அதிகம் இருப்பதால், அடர்த்தியான இந்த நீரோட்டம் இங்கே கடலில் மூழ்குகிறது. இங்கேதான் நம் உருவகப்படுத்தியக் கப்பலும் நீரில் மூழ்கி இந்த நீரோட்டத்தின் மற்றுமொரு பயணத்தைத் துவங்குகிறது. கடலுக்குள் மூழ்கும் இந்த நீரோட்டம்தான் ஓர் இழுவைச் சக்தியாக மாறி இந்த நீர்ச் சங்கிலியை நீடிக்கச் செய்கிறது.

பூமியின் உருண்டை வடிவத்தினால் சூரிய வெப்பம் நிலநடுக்கோடு பகுதிகளில் அதிகமாகவும், துருவங்களில் குறைந்தும் காணப்படுகிறது. இது இப்படியே இருக்கும் பட்சத்தில் நிலநடுக்கோடு பகுதிகள் உலைபோலக் கொதித்தும், துருவங்கள் அதி உக்கிரமாகக் குளிர்ந்தும், பூமி இருவிதமானப் பாலைகளின் பிடியில் சிக்கி இருக்கும். இந்த இரு நரகங்களில் இருந்தும் பூமியைக் காத்திருப்பதில் பல கண்டங்களை உரசி, பல கடல்களின் ஊடே சுற்றும் இந்தக் கடல் நீரோட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகளாவிய தூக்கிப்பட்டை (Global conveyor belt) போலச் செயல்படும் இந்த நீரோட்டங்கள் பூமியில் விழும் வெப்பத்தைப் பல பகுதிகளுக்கு விநியோகிக்கிறது. ஆகவே கடல்களில் சுற்றும் இந்த நதிகளில் ஏற்படும் மாற்றம் பூமியில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்த வல்லது. அது போன்று நடந்தும் இருக்கிறது.

(தொடரும்)

 

___________

உசாத்துணை
Doug Macdougall, Frozen Earth: The Once and Future Story of Ice Ages, University of California Press, 2004.
Jared Lloyd, The Gulf Stream and the Age of Exploration, Coastal Review, 1/4/2016

பகிர:
ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *