Skip to content
Home » இயற்கையின் மரணம் #9 – சிறு பூ கொடுத்த துப்பு!

இயற்கையின் மரணம் #9 – சிறு பூ கொடுத்த துப்பு!

சிறு பூ கொடுத்த துப்பு!

2004 ஆம் ஆண்டு வெளிவந்த The Day After Tomorrow திரைப்படம் உலகம் திடீரென்று எதிர்கொள்ளும் அசாதாரணமான வானிலை நிகழ்வுகளின் காட்சிகளோடு துவங்கும். நியூ யார்க் சாலைகளுக்குச் சுனாமியால் இழுத்துக் கொண்டு வரப்பட்ட கப்பல், ஹாலிவுட்டைக் காலி செய்யும் பெரும் சுழற் காற்று, புது டில்லியில் பனிப்பொழிவு என்று திரையில் பிரம்மாண்ட காட்சிகள் விரியும். இந்த நிகழ்வுக்கான காரணங்களை ஆராயக் குழுமி இருக்கும் விஞ்ஞானிகள் தலையைச் சொரிந்துகொண்டிருக்க, ஓரமாக நின்று கொண்டிருக்கும் படத்தின் நாயகனான விஞ்ஞானி ‘நார்த் அட்லாண்டிக் கரண்ட் நின்று விட்டது, அதுவே இதற்கெல்லாம் காரணம்’ என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவார்.

அவர் குறிப்பிட்ட அந்த நார்த் அட்லாண்டிக் கரண்ட்தான் நாம் சென்ற பகுதியில் கண்ட கல்ப் ஸ்ட்ரீம். இந்தப் படம் வானிலை நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் ஹாலிவுட் பாணியில் மிகைப்படுத்தியது என்று வைத்துக் கொண்டாலும் அதன் கருவான கடல் நீரோட்டம் நின்று போவது என்பது உண்மையில் நடக்கக் கூடியதே. இந்தச் சாத்தியக்கூற்றை ஆராய்ந்த அறிவியல் அமைப்புகளின் அறிக்கை இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. இன்னும் சொல்லப் போனால் இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்படும் தாக்கங்கள் உலக அழிவு வகைத் திரைப்படங்களின் காட்சி அமைப்பு போலவே உள்ளது!

அமெரிக்காவின் ஜெட் ப்ரொபல்ஷன் லேப் (Jet Propulsion Lab) வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கடல் நீரோட்டங்களின் சுழற்சி துண்டிக்கப்பட்டால் சராசரி வெப்பநிலையின் அளவு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், மூன்று டிகிரி வரை குறையும் என்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இரண்டு டிகிரி உயரும் என்று கணக்கிட்டிருக்கிறது. இதன் விளைவாகப் பல வருடங்களுக்கு உலகின் முக்கிய விளைநிலங்களில் வறட்சியும், பல பாகங்களில் அதி தீவிரப் புயல்களும், சில பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு சமூகத்தில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கக்கூடும் என்று இந்த அறிக்கை அச்சுறுத்துகிறது. அணு ஆயுதப் போர்கள், உள்நாட்டுக் கலகங்கள், பட்டினிச் சாவுகள், அகதிகள் என்று உலகின் கடைசி நாட்களை வர்ணிப்பது போல அமைந்திருக்கிறது இந்த அறிக்கை.

இந்த ஆய்வறிக்கைகளை எல்லாம் மிகையான அவதானிப்புகள் என்று முற்றிலும் ஒதுக்க இயலவில்லை. ஏனென்றால், பருவநிலை மாற்றங்களினால் பல்லாண்டுகள் தொடரும் அசாதாரணமான வானிலை நிகழ்வுகள் வரலாற்றில் நடந்தேறியிருக்கின்றன. முக்கியமாகச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் நீரோட்டங்கள் நின்று கூடப் போய் இருக்கிறது. முற்காலத்தில் இப்படி ஒன்று நடந்திருக்கிறது என்று நமக்கு உணர்த்தியது ஒரு சிறு பூ!

வெண்மையான சிறு மலர்கள் கொண்ட ட்ரயஸ் ஆக்டோபெட்டாலா (Dryas Octopetala) ஆர்க்டிக் பகுதிகளில் வளரக்கூடிய ஒரு தாவரம். ஐஸ்லாண்டின் தேசியப் பூவாக அறியப்படும் இது மிகக் குளிர்ந்த பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய செடி. ஆனால், 12900 ஆண்டுகளுக்கு முன் இது ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவி இருந்தது என்பது பனி உள்ளகங்களிலும், கடல் படிமங்களிலும் காணப்பட்ட இந்த மலரின் மகரந்தம் காண்பித்தது. ஆச்சர்யமாக 1300 ஆண்டுகளில் அவை அங்கிருந்து மறைந்து விட்டன. அப்படி என்றால் அந்த இடைப்பட்ட கால கட்டத்தில் ஐரோப்பா குளிர்ந்திருந்ததா? ஆமாம் என்றே ஆராய்ச்சி முடிவுகள் கூறின.

ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை இந்தக் காலகட்டம் ஒரு பெரும் புதிரே. ஏனென்றால், 15000 ஆண்டுகளுக்கு முன் பிளீத்தொசீன் பனியுகம் முடிவுக்கு வந்தது. உலகம் வெம்மையாகத் துவங்கியது. ஆனால், 12900 ஆண்டுகளுக்கு முன் சட்டென்று (ஒரு வருடத்திற்குள்ளே என்றுகூடச் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன!) மீண்டும் பூமியின் வடக்கு பகுதிகள் குளிர்ந்தது. கிரீன்லேண்ட் போன்ற பகுதிகளில் ஏறக்குறைய 14 டிகிரி அளவு வெப்பநிலை கீழே சரிந்தது. இதற்கு முற்றிலும் எதிர்மாறாகப் பூமியின் தெற்கு பகுதிகளில் வெப்பமும், மழையின் அளவும் கூடியது. ஆண்டெஸ் மலைத் தொடர்களின் உச்சியில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி, அவற்றின் அளவு சுருங்கியது. பின்னர் 1300 ஆண்டுகள் கழித்து வந்தது போலவே சட்டென்று, மறுபடியும் சில ஆண்டுகளிலேயே, குளிர் மறைந்து வெப்பம் மீண்டும் குடியேறியது. இயல்பு நிலை திரும்பியது.

பூமியின் பருவநிலையின் இந்தப் பிறழ்வான காலகட்டம் Younger Dryas என்று அறியப்படுகிறது. மிலன்கோவிச் சுழற்சிகள் போன்ற வானியல் காரணங்கள் இந்தத் திடீர் பருவநிலை மாற்றத்தை விளக்க இயலவில்லை. ஆனால் பல ஆண்டுகளாகத் திரண்டு வரும் ஆராய்ச்சி முடிவுகள் ஒரு காரணத்தை அடையாளம் காண்பிக்கின்றன. அது 13000 ஆண்டுகளுக்கு முன் அட்லாண்டிக் பெருங்கடலில் வந்து சேர்ந்த மிக அபரிமிதமான நன்னீர்!

கடந்த பனியுகத்தின் முடிவில், அதிகரித்து வந்த வெப்ப அளவினால் பனிப்பாறைகள் உருகத் தொடங்கின. நிலப்பரப்புகளின் பாங்கின் படி சில இடங்களில் வேகமாக உருகியும் மற்றப் பகுதிகளில் மெதுவாகவும் உருகிய வண்ணம் இருந்தன. சில பெரும் பனிக்கட்டிகள் உருகிய நீரையும், மழை நீரையும் அடைத்து அணைகள் போல வளர்ந்து இருந்தன.

அது போல ஒரு பனி அணை கனடா நாட்டில் உருவாகி இருந்தது. பனியுகத்தில் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்திருந்த லாரென்டைட் பெரும் பனி கட்டிப் படலத்தின் (Laurentide Ice Sheet) சில உதிரி பனிப்பாறைகளால் உருவான அணை. இது அடைத்து வைத்திருந்த நீரின் அளவு இன்று இருக்கும் காஸ்பியன் கடல் போல இரு மடங்கு! பனியுகங்கள் பூமியில் உண்டாகி இருந்தது என்று அனுமானித்த அகாசியின் (Lake Agassiz) பெயராலேயே இன்று இது அறியப்படுகிறது. ஏறக்குறைய 1500000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டு இருந்த இந்த ராட்சச அகாசி ஏரியின் நீரை அடைத்து வைத்திருந்த தாழ்கள் சில பனிப்பாறைகள் மட்டுமே.

13000 ஆண்டுகளுக்கு முன் இந்த அணை உடைந்தது. பூமி அதுவரை காணாத வெள்ளம் இந்த உடைந்த பனிப் பாறைகளின் வழியே பாய்ந்து வெளியேறியது. ஒவ்வொரு வினாடிக்கும் 20 லட்சம் கியூபிக் மீட்டர் நீர், ஏறக்குறைய ஒவ்வொரு வினாடிக்கும் இருபது அமேசான் நதி அளவு நீர், ‘கல்பொருது இரங்குங் கதழ்வீழருவி’ போல நிலம் அதிர இறங்கி வெளியேறியது.

நிலங்களைக் கீறி, பெரும் பாறைகளைப் பந்தாடியபடியே வெளியேறிய இந்த வெள்ள நீர் வடக்காகச் சென்று ஆர்டிக் கடலை அடைந்து பின்பு அட்லாண்டிக் பெருங்கடலை அடைந்ததா அல்லது கிழக்கே வடிந்து நேராக வட அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்ததா என்பதைப் பற்றி ஒரு விவாதம் இருந்தாலும் இந்த அபரிமிதமான நன்னீர் கடல் நீரோட்டங்களின் சுழற்சியைத் துண்டித்தது என்பதைப் பல ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முன்பே குறிப்பிட்டது போல வெம்மையான, உப்பின் செறிவு அதிகமுள்ள கடல் நீர் ஒரு நீரோட்டமாக அட்லாண்டிக் பெருங்கடலைச் சுற்றி வந்து வெப்பத்தை வெளியேற்றி, குளிர்ந்து, அடி நீரோட்டமாக மருவி மற்றப் பகுதிகளுக்கு பயணிக்கிறது. ஆனால், அளவிற்கு மிகுதியாக நன்னீர் கடலில் சேரும் பொழுது நீரோட்டத்தில் உப்பின் செறிவு குறைவதால் இந்த நீரோட்டங்களின் பெரும் பயணம் தடைபட்டுத் தேங்குகிறது. 13000 ஆண்டுகளுக்கு முன் கடலில் சேர்ந்த இந்த நன்னீர், நீரோட்டத்தைத் துண்டித்துப் பூமியின் வடக்கு பிரதேசங்களுக்கு இவை அளித்த வந்த வெப்பத்தை இல்லாமல் ஆக்கியது. கடுங்குளிர் நிலத்தை மூடியது.

கடல் நீரோட்டங்கள் நின்று அதன் தாக்கங்கள் பருவநிலையைப் பாதித்தது என்று பல ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டாலும், இவை எல்லாமே ஒரு பெரிய விசையின் அங்கம்தான் என்று சிலர் கருதுகின்றனர். அவர்களின் கூற்றின்படி Younger Dryas காலத்திற்கு வித்திட்டது 13000 ஆண்டுகளுக்கு முன் வானில் வெடித்து பூமியின் மீது பல துண்டுகளாக வீழ்ந்த ஒரு வால் மீன் (Comet).

இது 13000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் வீழ்ந்ததற்கான அறிகுறி பூமியின் அடுக்குகளில் நன்கு படிந்திருப்பதாகக் கருதப்படுகிறது. பூமியின் வடக்கு பிரதேசங்களில் பல இடங்களில் இந்தக் காலகட்டத்தை அடையாளம் காட்டும் விதமாகக் கரிமம் நிறைந்த ஒரு கருப்புப் படலம் தென்படுகிறது. இதில் விண்வெளியில் இருந்து பெரும் கற்கள் வீழ்ந்ததற்கான அடையாளமாக இரிடியம் (Iridium) போன்ற உலோகம், பெரும் அழுத்தத்தாலும் கடும் வெப்பத்தினாலும் உருவான கோள வடிவான குறு மணிகளும் (Microspherules), நுண் வைரங்களும் (Nanodiamonds) அபரிமிதமாகக் காணப்படுகிறது. Younger Dryas Impact Hypothesis என்று அறியப்படும் இந்தக் கருதுகோள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வானிலிருந்து பூமியில் வீழ்ந்த இந்தப் பெரும் கற்கள் பூமியின் பருவநிலை செயற்பாட்டை மாற்றி அமைத்தது. இந்த நிகழ்வு பனிப்பாறைகளால் ஆன பல அணைகளை உடைத்ததும் இல்லாமல், மிகப் பரவலாகக் காட்டுத் தீயையும் மற்றும் பல பேரிடர்களையும் தூண்டியது. பூமியின் பருவநிலை செயல்பாட்டை 1300 வருடங்களுக்கு அலங்கோலமாக்கியது Younger Dryas காலகட்டம். மிக முக்கியமாக, பனியுகத்தின் பிடிகளில் இருந்து மெதுவாக வெளியே வந்துகொண்டிருந்த உயிரின வகைகளின் பாதையை மாற்றி அமைத்தது. மனிதனின் வளர்ச்சிப் பாதையைக் கூட.

(தொடரும்)

 

___________

உசாத்துணை
Peter Schwartz and Doug Randall, An Abrupt Climate Change Scenario and Its Implications for United States National Security, Jet Propulsion Laboratory, October 2003
S. L. Norris and others, Catastrophic Drainage From the Northwestern Outlet of Glacial Lake Agassiz During the Younger Dryas, Geophysical Research Letters, 2021
James Lawrence Powell, Premature rejection in science: The case of the Younger Dryas Impact Hypothesis, Science Progress, Vol. 105(1), 2022

பகிர:
ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *