Skip to content
Home » இயற்கையின் மரணம் #10 – ‘அப்பா, எருது!’

இயற்கையின் மரணம் #10 – ‘அப்பா, எருது!’

இயற்கையின் மரணம்

பனியுகங்கள் மிக உக்கிரமானவை. கடந்த பனியுகமான பிளீத்தொசீன் இதற்கு விதி விலக்கல்ல. 20,000 ஆண்டுகளுக்கு முன் Last Glacial Maximum என்று அழைக்கப்பட்ட இதன் உச்சத்தில் உலகின் வரைபடம் இன்று இருப்பது போல் இல்லாமல், வேறாகக் காட்சியளித்தது. ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் உயரம் கொண்ட பனிப்பாறைகள் வட அமெரிக்கா, வட ஐரோப்பா, ஆசியாவின் சில பகுதிகள் என்று பூமியின் 25 சதவிகித நிலப்பரப்புகளில் நிலம் இருக்கும் சுவடே தெரியாமல் வெள்ளை மலைகள்போல வியாபித்திருந்தன. இன்று பெரும் நகரங்களாக இருக்கும் சிக்காகோவும், க்ளாஸ்கோவும் அன்று இந்தப் பனிப்பாறைகளின் அடியில்.

நிறைய தண்ணீர் பனிப்பாறைகளாக உறைந்ததால் கடல் மட்டத்தின் அளவு இன்று இருப்பதை விடச் சுமார் நானூறு அடிகள் கீழே இருந்தது. இன்று கடலுக்கு அடியில் இருக்கும் பல பகுதிகள் அன்று காற்றில் அலையாடும் தாவரங்களுக்கும், நிலத்தில் நடமாடும் மிருகங்களுக்கும் சொந்தமாகி இருந்தன. இன்று பல இந்தோனேசிய தீவுகளாக இருக்கும் போர்னியோ, பாலி, சுமத்ரா போன்றவை ஒரு பெரும் கண்டமாக இருந்தது. சுண்டாலேண்ட் (Sundaland) என்று அதற்குப் பெயர். தற்போது தீவாக இருக்கும் பிரிட்டன் அன்று ஐரோப்பாவுடன் நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே பூமி குளிர்ந்து, வறண்டு இருந்தது. சஹாரா, கோபி மற்றும் பிற பாலைவனங்களின் பரப்பளவுகள் இப்பொழுது இருப்பதைவிடப் பன்மடங்கு பெருகி விரிந்திருந்தது. அவ்வப்போது தீவிரமான புழுதிப் புயல்கள் கிளம்பி நிலத்தையும், வானத்தையும் மென் படலங்களால் மறைத்தது.

பிளீத்தொசீன் பனியுகம் எப்பொழுதுமே ஒரு சீராக இருந்ததில்லை. நிறையக் குமுறலும், கொந்தளிப்பும், இடை இடையே கொஞ்சம் சாந்தமும் கலந்து கிடந்த ஒரு காலகட்டம். தொடர்ந்து சில வருடங்கள் வெப்பம், பின்பு பல வருடங்களுக்குத் தொடர்ச்சியாக எல்லாவற்றையும் உறையவைக்கும் தீவிரப் பனி. ஆண்டின் பல மாதங்கள் நிலத்தைப் பனி மூட, சில மாதங்கள் பனி சற்று உருகி புல் முளைத்து வெள்ளை நிலப் பரப்புகளில் சற்றுப் பச்சையைத் தீட்டும். சட்டென்று, எந்த அட்டவணைக்கும் பிடிபடாத பருவநிலை மாற்றங்கள். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்தின் படி கடந்த 750000 ஆண்டுகளில் 75 சதவிகித காலம் பருவநிலையில் கடும் அலைவுகள் ஏற்பட்டபடியே இருந்திருக்கிறது. அதுவும் பல நேரங்களில் அதி குளிர்வாகவே இருந்திருக்கிறது. ஒழுங்கற்றுத் துடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பருவநிலையை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொண்டான் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதன்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய தற்கால மனிதன் (Homo sapiens) பனியுகத்தில் யூரேசியா கண்டத்தில் பரவலாகக் கால் பதித்திருந்தான். ஆனால் வாழ்க்கை மிகக் கடினம்தான். சில காலங்கள் மட்டுமே ஓர் இடத்தில் தங்கும் பழக்கம் இருந்தது. மற்றபடி உணவைத் தேடிச் செல்லும் வாழ்க்கைமுறைதான். மாமிசம்தான் பிரதான உணவு. கம்பளி யானை, பனி மான் போன்ற மிருகங்களைப் பின்தொடர்ந்து சென்று வேட்டையாடியோ, அவ்வப்பொழுது உருகி ஓடும் நதிகளில் மீன் பிடித்தோ உணவு சேர்க்க வேண்டும்.

அவ்வப்போது தொடர்பு கொண்டு ஊடாடினாலும் பெரும்பாலான சமயங்களில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருந்தது சமுதாயம். பல நேரங்கள் எங்கு இரையைத் தேடிச் சென்றார்களோ அதன் அருகே இருக்கும் குகைகளின் உள்ளேதான் வாழ வேண்டியிருந்தது. சில்லிட்டு வீசும் குளிர்காற்றைத் தடுக்கக் குகை வாயில்களில் கனத்த தோல்களைத் தொங்கவிட்டு, உள்ளே நெருப்பு மூட்டிப் பல மாதங்கள் அங்கேயே அடைபட்டு சிறைவாசம் போலக் காலத்தைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம். அடிக்கடி இடம் பெயர்ந்து, கிடைத்த வாய்ப்புகளைச் செம்மையாகப் பயன்படுத்தி, சூழலில் சிறிய தடங்கள் பதித்த வாழ்வியலைக் கொண்டே மனிதன் இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தான்.

இவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கக்கூடும் என்று கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சியாளர் ஸ்டீவன் மிதென் (Steven Mithen) விவரிக்கிறார். உக்ரைன் நாட்டில், தற்போது புஷ்கரி என்று அறியப்படும் இடத்தில் வாழ்ந்துவந்த ஒரு சிறு குழுவைப் பற்றிய சித்திரம் இது.

‘பாதி உறைந்த ஒரு சிறு நதியின் அருகில்தான் இவர்களின் இருப்பிடம். வடக்கில் ஓங்கி வளர்ந்திருக்கும் பெரும் பனிப்பாறைகளில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவு இருந்தாலும் கடும் குளிர் காற்று வீசிக் கொண்டே இருக்கும். வருடத்திற்கு 9 மாதங்கள் – 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை! பல நாட்கள் சில மணி நேரங்களே வெளிச்சம், பல மணி நேரங்கள் இருளில்தான். இங்கு உயிர் வாழ மிகக் கடின உழைப்பு தேவை. வேட்டையாடி, மாமிசத்தைப் பதப்படுத்தி, எலும்புகளைச் சேகரித்து, அவற்றை நீண்ட தூரம் இழுத்துக் கொண்டுவந்து, இந்தக் கடினமான பொருள்களை ஆயுதங்களாகவோ அல்லது மற்ற அத்தியாவசிய உபகரணங்களாகவோ உருமாற்றி தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இந்தக் கடும் சூழலில்தான் கம்பளி யானையின் எலும்புகளும், தந்தங்களும், முரட்டுத் தோலையும் வைத்து அமைக்கப்பட்ட ஐந்து வட்டக் குடியிருப்புகளில் இவர்கள் வாழ்ந்து வந்தனர்.’

விசித்திரமாக, இந்தக் கடுமையான சூழலில் இருந்துதான் மனிதனின் பல வித ஆக்கங்கள் மலர்ந்தன. ஆடைகள், அணிகள், அலங்காரங்கள், ஆயுதங்கள் என்று பல்வேறு பொருள்களின் தரமும், வகையும், அழகியலும் பன்மடங்காக வளர்ந்து செழித்தது. உதாரணத்திற்கு, ஒரு தாய் கல்லில் இருந்தே பல கூரான சிறு ‘பிளேடுகளை’ செதுக்கியெடுத்து, பின்பு இவற்றைச் சுரண்டியாகவோ, அம்புத் தலைகளாகவோ, கல் ஊசிகளாகவோ உருமாற்றும் தொழில்நுட்பம் பிறந்தது. அதேபோல பனிகலைமானின் கொம்புகளை மாங்காய் பத்தை போடுவது போல நீள் வாக்கில் கீறி, பல நீண்ட பகுதிகளை அதிலிருந்து பெயர்த்தெடுத்து (இந்த நுட்பம் Groove and Splinter என்று அழைக்கப்படுகிறது) அவற்றைப் பல ஆயுதங்களாக மாற்றும் நுட்பமும் வேகமாகப் பரவியது.

இந்த மாற்றங்கள் யாவும் திடீர் என்று ஏற்பட்டது அல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் திரண்டு வந்துகொண்டிருந்த மனிதப் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமே என்று கூறுபவர்கள் இருந்தாலும் மனிதக் குலத்தின் வளர்ச்சிப் பாதையில் இது ஒரு முக்கிய நிகழ்வே என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவற்றின் உச்சக்கட்டம் குகை ஓவியங்கள்.

பிரான்ஸ் தேசத்தில் உள்ள லாசோ (Lascaux), சாவட் (Chauvet) அல்லது ஸ்பெயினில் உள்ள ஆல்தமீரா (Altamira) போன்ற குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஏறக்குறைய 30,000 ஆண்டுகள் புராதனமான ஓவியங்கள் பிரமிப்பூட்டுபவை. புள்ளிகள், முக்கோணங்கள், அம்புக்குறிகள், உள்ளங்கை பதிப்புகள், காட்டெருது, சிங்கம், நரவிலங்குகள் என்று இந்த ஓவியங்கள் குகைகளின் உட்கூரையிலும், சுவரிலும் அணிவகுத்துச் செல்கின்றன. இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின் இவற்றை நாம் மீண்டும் கண்டெடுத்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வே.

‘அப்பா, எருது!’ என்ற ஒரு குழந்தையின் இரண்டு வார்த்தைகள் மனிதன் கடந்து வந்த வரலாற்றுப் பாதையைப் பற்றிய நம் புரிதலைப் புரட்டிப் போட்டது. 1879ஆம் ஆண்டு மர்ஸலினோ சாட்டுவோலா (Marcelino Sanz de Sautuola) தனது மகள் மரியாவுடன் தங்கள் கிராமத்தின் அருகில் இருக்கும் ஆல்தமீராவில் ஒரு குகையைக் காணச் சென்றார். அவர் சட்டம் படித்தவர், வரலாற்றிலும் ஆர்வம் உண்டு. அந்தக் குகைக்கு முன்பே சென்றிருந்தார். இது இரண்டாவது முறை. குகைக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே மரியா குகையின் உட்கூரையைத் தன் சிறு கரத்தால் சுட்டிக் காட்டி ‘அப்பா, எருது!’ என்றாள். மேலே பார்த்த சாட்டுவோலா பிரமிப்பில் உறைந்து போனார். பல வண்ணங்களால் தீட்டப்பட்ட ஏறக்குறைய முப்பது ஓவியங்கள் சுளுந்தின் மங்கிய வெளிச்சத்தில் உயிர் கொண்டு கூரை மீது அலைவதுபோலக் காணப்பட்டது. ஆல்தமீராவில், தான் கண்டதை எல்லாம் தொகுத்து ஒரு சிறு வெளியீடாகப் பிரசுரித்தார் சாட்டுவோலா.

ஆல்தமீரா குகை ஓவியம்

இந்தச் சிறு பிரசுரமும், அது பேசும் அழகு ததும்பும் ஓவியங்களும், முன்வரலாற்று (Prehistory) ஆராச்சியாளர்கள் இடையே ஒரு சிறு பூகம்பத்தை உண்டாக்கியது. மென்மையான மனித ஆக்கங்களான கலை, ஓவியம் போன்றவை பின்வந்த நாகரீகங்களின் பங்களிப்பு என்பதே பல ஆய்வாளர்களின் கருதுகோள். முன்வரலாற்றுக் காலங்களில் இயற்கைக்கு அஞ்சி ஏறக்குறைய மிருகங்களைப்போல குகைகளில் வாழ்ந்த ‘காட்டுமிராண்டிகள்’ கல் ஆயுதங்கள், மற்றும் பிற உபகரணங்கள் தயாரித்ததைத் தவிர வேறொன்றும் சாதித்ததில்லை என்றே ஆணித்தரமாக இவர்கள் வாதிட்டுக்கொண்டிருந்த காலம் அது. நாகரீகமற்ற பிளீத்தொசீன் யுகத்து வாசிகள் இதைப்போல ஓர் அழகியல் பொதிந்த, தத்ரூப ஓவியங்களை வரைந்திடச் சாத்தியமே இல்லை என்பது இவர்களின் எண்ணம்.

ஆல்தமீரா குகைகளின் ஓவியங்களின் தொன்மையைப் பற்றிச் சில மாநாடுகளில் பேசப்பட்டபோது அக்காலத்தில் பிரான்ஸ் தேசத்தின் முன்னிலை வரலாற்று ஆராய்ச்சியாளர்களாகத் திகழ்ந்த மோர்டில்லெட் (Gabriel Mortillet), கேரட்டைல்ஹக் (Emile Caratailhac) போன்றவர்கள் இவற்றை முற்றிலும் நிராகரித்தனர். ஆல்தமீரா குகை ஓவியங்கள் ஓர் ஏமாற்று வேலை, கேலிச்சித்திரம். பல நேர்மையான ஆராய்ச்சியாளர்களைக் கேலி செய்யவே யாரோ சிலர் செய்த மோசடி என்று சொல்லி இந்த ஓவியங்களின் தொன்மைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படிச் சொல்லிய இவர்களே, இதைப்போல உலகின் பல நாடுகளில் இந்த ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்ட பின், 1902ஆம் ஆண்டு வாக்கில் தங்கள் தவற்றை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டனர். அதே ஆண்டு கேரட்டைல்ஹக் ஆல்தமீராவிற்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டார். சாட்டுவோலா மறைந்து விட்டதனால் அவரின் மகள் மரியாவை (கண்டுபிடித்தது இவள்தானே!) சந்தித்து மன்னிப்புக் கேட்டார். இதற்கும் ஒரு மனம் தேவை!

பின்னாட்களில் கரிமக் காலக்கணிப்பு (Carbon dating), யுரேனியம் காலக்கணிப்பு (Uranium series dating) போன்றவை உலகின் பல இடங்களில் காணப்படும் குகை ஓவியங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்று நிரூபித்தன. சமீபத்தில்கூட இந்தோனேசியாவின் சுலவேசியில் (Sulawesi) ஏறக்குறைய 45000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பன்றியின் உருவத்தைக் கண்டெடுத்திருக்கின்றனர். உலகின் முதல் ஓவியம் என்ற பெருமையை இது இப்பொழுது பெற்றிருக்கிறது.

உலகின் பழமையான ஓவியம்

இதுபோன்ற கலைகள் தோன்றுவதற்கு என்ன காரணம்? மாறி வரும் பருவநிலை, அதனால் ஏற்படும் விளைவுகள் மனிதனை இந்தத் திசையை நோக்கி மெல்லத் திருப்பியதா? மனிதனின் அகம் இதனால் மாறியதா போன்ற கேள்விகள் கடந்த பல பத்தாண்டுகளாகவே தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் சில முக்கியமான, அதே நேரத்தில், சுவாரஸ்யமான கூறுகளைக் காண்போம்.

(தொடரும்)

 

___________

உசாத்துணை
Brian Fagan, The Long Summer: How Climate Changed Civilization, Basic Books, 2004
Steven Mithen, After the Ice, W&N, 2004
Brian Fagan and Nadia Durrani, People of the Earth, Taylor & Francis, 2019
José Antonio Lasheras, The Cave of Altamira

பகிர:
ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *