மிக அற்புதமான குகை ஓவியங்கள் கொண்ட பிரான்ஸ் தேசத்தில் உள்ள லாஸ்க்கோ (Lascaux) குகையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மக்களின் வரவால் ஓவியங்களில் பூஞ்சைப் படலம் தோன்ற ஆரம்பித்ததே இந்த முடிவிற்கான காரணம். இந்தக் குகையின் இரண்டு பகுதிகள், ஓவியங்களுடன், அசல் குகையைப் போலவே மறு நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதியைத்தான் இப்பொழுது காண இயலும். ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அசல் குகைக்குள் அனுமதி உண்டு. அதுவும் 20 நிமிடங்களுக்கு மட்டுமே. ‘இதில் பத்து நிமிடங்கள் கண்களைக் கண்ணீர் மறைத்ததால் மீதம் இருக்கும் நிமிடங்களில் மாத்திரமே என்னால் ஓவியங்களை நன்றாகப் பார்க்க முடிந்தது’ என்று ஒரு பிரபல அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவித்ததாக ஒரு நிகழ்வு அகழ்வாராய்ச்சியாளர்கள் இடையே பேசப்படுவது உண்டு. இருண்ட, ஆழ் குகைக்குள் மிக மெல்லிய வெளிச்சத்தில் இந்த ஓவியங்களைக் காண்பது ஒரு பேரனுபவம். சுவரிலும், கூரையிலும் நெளிந்தாடும் மிருகங்கள் நம் ஆழ் மனதில் இருந்து ஏதோ ஒன்றைச் சுண்டி இழுப்பதாகப் பலர் எழுதி இருக்கின்றனர்.
குகை ஓவியங்கள் எப்போது தீட்டப்பட்டன என்பதைச் சில காலக்கணிப்பு உத்திகள் மூலமாக ஓரளவு துல்லியமாகக் கணக்கிடலாம். உலகில் காணப்படும் பல நூறு குகை ஓவியங்கள் இவ்வாறே கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஓவியங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்ற கேள்விக்கான பதில் அத்தனை சுலபம் அல்ல. எது மனிதனை இருண்ட குகைகளிலும், பாறை இடுக்குகளிலும் பல விதமான வடிவங்களை எழுதத் தூண்டியது என்பதைப் பற்றிப் பல வருடங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விவாதம் இன்றளவும் தொடர்கிறது.
பழங்கற்காலம் அல்லது Paleolithic age என்று அறியப்படுகின்ற பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இக் கலை ஆக்கங்களைப் புரிந்துகொள்ள இவற்றின் சில சிறப்புத் தன்மைகளையும் இவை நிராகரிக்கும் சில கூற்றுகளையும் காணலாம்.
முதலாவதாக, ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட குகை ஓவியங்களில் மிக அதிகமாகக் காணக்கிடைப்பது பலம் பொருந்திய பெரும் மிருகங்கள் – காட்டெருது, கருங்கரடி, சிங்கம் போன்றவை. இவற்றோடு பல குறியீடுகள் – அம்பு, வலை, புள்ளிகள் என்று. மற்றபடி நிறைய உள்ளங்கைப் பதிவுகள். காவிக்கல் கரைசலை உள்ளங்கைகளில் அப்பி அதைச் சுவரில் பதித்த அச்சுகள் அல்லது உள்ளங்கைகளை வெறும் சுவரில் வைத்து அதன் மீதும், அதைச் சுற்றியும் வண்ணத்தைத் தெளித்து உருவாக்கிய உள்ளங்கையின் negative பிம்பங்கள் போன்றவை இக் குகைகளில் காணப்படுகின்றன (ஆச்சர்யமாக, இந்தியாவின் பல கிராமங்களில் இன்றும் கூட இது போன்ற உள்ளங்கை பிம்பங்களை வீடுகளில் பதிக்கும் பழக்கம் நிலவி வருகிறது).
இது மட்டும் அல்லாது பல குகைகளில் விரல் நுனிகள் கொண்டு உருவாக்கப்பட்ட நீண்டு, நெளிந்து ஓடும் கோடுகள் தென்படுகிறன. அக் காலத்தில் இக் குகைகளுக்குள் வந்தவர்கள் தங்கள் விரல்களை மென்பாறைகளிலோ அல்லது களிமண் பூச்சு இருக்கும் குகைகளின் சுவரிலோ தேய்த்துக் கொண்டு செல்வது ஓர் இன்றியமையாத செயலாக இருந்திருக்கக் கூடும் என்றே இத் தடயங்கள் அறிவுறுத்துகின்றன.
இதில் கவனிக்கத்தக்க அம்சம் இன்னொன்றும் இருக்கிறது. இதுவரை இக் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களில் மனிதன் தன் உணவிற்காக வேட்டையாடும் மிருகங்களின் உருவ எண்ணிக்கை சொற்பமே. ஆகவே, மனிதன் தன்னுடைய இரை பன்மடங்காக வேண்டும் என்ற எண்ணத்தில் sympathetic magic, அதாவது தவளைகளுக்குத் திருமணம் செய்வித்தால் மழை வரும் என்ற நம்பிக்கைகள் போல, இந்த ஓவியங்களை வரைந்திருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் சாரம் இல்லை என்று கருதப்படுகிறது.
இரண்டாவதாக, பல ஓவியங்கள் குகைகளின் ஆழங்களில் உள்ளன. இவற்றைச் சென்று அடைவதற்குக் குறுகிய பாதைகளில் தவழ்ந்து, இடுக்குகளில் ஏறி, மூச்சு முட்டும் இடுங்கிய குழிகள் வழியே இறங்கிச் சென்றால்தான் ஓவியங்களைக் காண இயலும்.
ஆகவே, இந்த ஓவியங்கள் வெறும் கிறுக்கல்கள் என்றும் நீண்டகாலம் குகைகளில் உள்ளேயே அடைந்து இருப்பதால் யாரோ சில ஓவியர்கள் பொழுது போவதற்காகச் செய்தவை என்று ஆராய்ச்சிகளின் ஆரம்ப காலங்களில் எழும்பிய கருத்துகள் வெகு சீக்கிரமே வழக்கொழிந்து போயின.
இந்தக் குகைகளுக்குள் செல்வது எவ்வளவு கடினமானது என்பதை அகழ்வாராய்ச்சியாளர் ஏப்ரல் நோவெல் (April Nowell) வடக்கு இத்தாலியில் 14000 ஆண்டுகளுக்கு முன் ஒரு குகையில் நுழைந்த குடும்பமொன்று விட்டுச் சென்ற தடயங்களை வைத்து விளக்குகிறார். ஷெர்லாக் ஹோல்ம்ஸ், கிடைத்தத் தடயங்களைக் கொண்டு என்ன நடந்திருக்கக் கூடும் என்று யோசித்து, வாட்ஸனிடம் விளக்குவது போல இருக்கிறது இவரின் வர்ணனை.
‘வெளிச்சத்திற்காக தேவதாரு சுள்ளிகளைக் கொண்டு கட்டப்பட்ட சுளுந்திகளைக் கையில் ஏந்தி குகைக்குள் நுழைந்தது இந்தக் குடும்பம். காலணிகள் அணியாத இவர்களின் கால்கள் பதித்தத் தடங்கள் குகையின் மண்ணில் பதிந்திருக்கிறது. ஓர் ஆண், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள். முதல் குழந்தைக்கு சுமார் 11 வயது இருக்கலாம், இரண்டாவதிற்கு ஆறு வயது, இவர்களுடன் அப்பொழுதுதான் நடைபழகும் மூன்று வயதுக் குழந்தை. இவர்களோடு இவர்களின் வளர்ப்பு நாய்களின் தடங்களும் தென்படுகிறது.
குகையின் உள்ளே 150 மீட்டர் சென்று மேல்மட்டம் மிகவும் தாழ்ந்த ஒரு நடையில் நுழைந்து சுவரைப் பிடித்தபடியே ஒற்றை வரிசையில் குண்டும் குழியுமான தரையில் நகர்ந்திருக்கிறார்கள். இந்த நடை மேலும் குறுகி 80 செ. மீ விட்டமே கொண்ட ஒரு குடைவு வழியாக (tunnel) உருப்பெறுகிறது. இதில் நுழையும் முன் குழந்தைகள் இதனுள் செல்ல இயலுமா என்ற தயக்கம் தோன்றியது போல ஆண் சற்றே தாமதித்திருக்கிறார். முடிவெடுத்தது போலச் சற்று நேரத்திலேயே தவழ்ந்தபடியே முன் நகர்ந்திருக்கிறார். பாறைகள், ஆங்காங்கே முளைத்து இருக்கும் சுண்ணக்கல் புற்றுகள் (Stalagmites), நீர் தளும்பும் சிறு குட்டை என்று நிறைந்திருக்கும் இக் குடைவு வழி ஓர் அறையில் முடிகிறது. அங்கே பெரியவர்கள் தங்களின் கை அச்சுகளை உட்கூரையில் பதிக்க, சிறுவர்கள் அறையின் ஓரத்தில் உள்ள ஒரு சுண்ணக்கல் புற்றின் மீது சிறிது சேற்றை அப்பி அதில் தங்களின் விரல் நுனிகள் கொண்டு நெளியும் கோடுகளைத் தீட்டியிருக்கிறார்கள். பின்பு வேறு ஒரு வழியாக இந்தக் குடும்பம் அந்தக் குகையை விட்டு வெளியேறியிருக்கிறது.’
எதற்காக இந்தப் பயணம்? ஏன் இந்த மெனக்கெடல்? அதுவும் சிறு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு? இந்தப் புதிருக்கான விடையின் சில பகுதிகள் இப்பொழுதுதான் கிடைக்கத் துவங்கி இருக்கிறது. அதைப் பற்றிப் பேசும் முன்னே மேலும் சில இயல்புகளைக் காண்போம்.
மூன்றாவதாக, இந்த உருவங்களை வரைந்தவர்கள் குகைகளின் சுவரில் அல்லது உட்கூரையில் காணப்படும் பாறைகளின் பல்வேறு கூறுகளைத் தங்கள் ஓவியத்தினுள் ஒருங்கிணைத்துள்ளனர். உதாரணத்திற்கு, குகைச் சுவரில் காணப்படும் சிறு துவாரம் ஒரு மிருகத்தின் கண்ணாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் அல்லது மேற்கூரையில் உள்ள புடைப்பு சற்றே செப்பனிடப்பட்டு, சுற்றிக் கோடுகள் வரையப்பட்டு ஒரு குதிரையின் முகம் போல மாற்றி அமைக்கப்பட்டிருக்கும். இது போன்ற உத்திகள் இந்தக் கோட்டோவியங்களை உயிர் பெறச் செய்திருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இவற்றை ஆராய வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அனைவருமே இந்தச் சிறப்பியல்பை அடிக்கோடிட்டிருக்கிறார்கள். இந்த மிருகங்கள் யாவும் குகைகளின் சுவருக்கு அப்பால் உள்ள ஓர் உலகத்திலிருந்து நம் உலகத்திற்கு வருவது போன்ற தோற்றத்தையே இந்த ஓவியங்கள் உருவாக்குகின்றன.
நான்காவதாக, கண்டெடுக்கப்பட்ட ஏறக்குறைய எல்லா ஓவியங்களிலுமே பின்புலம் அல்லது வரைய எடுத்துக் கொண்ட பிம்பத்தை மெருகூட்டத் தீட்டப்படும் அதன் சூழல் வரையப்படவே இல்லை. காட்டெருதுகளைச் சுற்றி மலையோ, மரமோ, புல் விரிப்புகளோ எதுவும் கிடையாது. மிருகங்கள் யாவும் குகைகளின் சுவரில் ஒற்றையாகவோ அல்லது குழுவாக ஒன்றின் மேல் ஒன்று வரையப்பட்டுக் காணப்படுகிறது. மிருகங்களின் கால்கள் தரையில் பாவாமல் அந்தரத்திலே மிதப்பது போல ஒரு தோற்றத்தை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஐந்தாவதாக, பழங்கற்கால மனிதனின் ஆக்கங்கள் வெறும் ஓவியங்களோடு நின்று விடவில்லை. இந்த ஓவியங்களின் முப்பரிமாண வடிவங்களான சில சிறு சிலைகளும் ஐரோப்பாவின் பல்வேறு குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ஸ்டேடல் (Hohlenstein-Stadel) குகையில் 40,000 ஆண்டுகள் முன்பு கம்பளி யானையின் தந்தத்தில் செதுக்கப்பட்ட சிறு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சிங்கத்தின் முகமும், மனித உடலும் கொண்டு நிற்கும் இந்த 31 செ. மீ உயர உருவம் அக்காலத்திலேயே மனிதப் புழக்கம் அதிகம் இல்லாத ஸ்டேடல் குகையின் ஒரு சிறு அறையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் சிலையின் அமைப்பையும், கண்டெடுத்த இடத்தின் சிறப்பியல்பையும் கணக்கில் கொண்டு இது அக்கால மனிதன் நடத்திய ஏதோ ஒரு சடங்கில் முக்கிய பங்கு வகித்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கடைசியாக, ஆனால் முக்கியமாக, இந்த ஓவியங்களை அறிய முற்பட்ட ஆய்வாளர்கள் இவற்றைத் தனி பிம்பங்களாகத்தான் பல ஆண்டுகளாகக் கண்டு வந்தனர். அதாவது குகையில் இந்தப் பகுதியில் இருக்கும் எருதின் ஓவியம், மற்றொரு பகுதியில் காணப்படும் சிங்கங்களின் கூட்டம் என்று பிரித்தே ஆராய்ந்து வந்தனர். ஆனால் இதற்கு மாறாக இந்த ஓவியங்களுக்கு ஓர் ஒழுங்கு இருக்கக் கூடும் என்ற யூகத்தின் பேரில் ஒரு குகையில் காணப்படும் மொத்த ஓவியங்களையும் ஒரு தொகுப்பாகவும், அவை குகையின் எந்தப் பகுதிகளில் காணப்படுகின்றன என்பதையும் கணக்கில் கொண்டு இவ் ஓவியங்களைப் பற்றி ஒரு முழுமையான மதிப்பீட்டை உருவாக்கும் முயற்சிகளை ஆய்வாளர்கள் எடுக்கத் துவங்கினர்.
இந்த முயற்சிகளில் பிரான்ஸ் நாட்டு மானுடவியலாளர் ஆண்ட்ரே லெரோய் குஹான் (Andre Leroi-Gourhan) ஒரு முன்னோடி. சக மானுடவியலாளர் கிலாட் லீவை ஸ்ட்ராசுடைய (Claude Levi-Strauss) அமைப்புவாத (Structuralism) மற்றும் அதை வெளிக்கொணரும் இரும எதிர்மறை (Binary opposites) கோட்பாடுகளால் உந்தப்பட்ட இவர் குகை ஓவியங்களிலும் அந்த எதிர்மறையையும் அது கூறும் கதைகளையும் தேடத்துவங்கினார்.
தனது ஆராய்ச்சிக்காக 66 குகைகளின் ஓவியங்களோடு அவை குகைகளுக்குள் காணப்பட்ட இடங்களையும் ஒன்று திரட்டி வகைப்படுத்தினார். விலங்குகளின் படிமங்களை ஆண், பெண் என்று பிரித்தார். இந்தப் பிரிவு அந்த மிருகங்களின் பாலினத்தைச் சார்ந்தது அல்ல. இது குஹானின் கணக்கின் படி ‘ஆண்மைத்தனம்’ அல்லது ‘பெண்மைத்தனம்’ கொண்ட மிருகங்கள் என்று அவரால் வகுக்கப்பட்ட பிரத்யேக வகைப்படுத்தல். அதே போலக் குறியீடுகளையும் ஆண், பெண் என்று வகைப்படுத்தி இவை யாவும் குகைகளில் எங்கே காணப்படுகின்றன என்பதையும் சேர்த்து இந்தக் குகை ஓவியங்களைப் பற்றிய அவரின் மதிப்பீட்டை முன் வைத்தார்.
அதன்படி குகைகளின் மையத்தில் பெண் விலங்குகள் மற்றும் குறியீடுகள் காணப்படுகின்றன என்றும் அவற்றைச் சுற்றி ஆண் விலங்குகளும், குறியீடுகளும் உள்ளதாகவும், மற்றபடி குகையின் மற்றப் பகுதிகள் எல்லாவற்றிலுமே ‘ஆண்மைத்தனம்’ கொண்ட பிம்பங்களே உள்ளதாகக் கருதினார். பின்னர் நடந்த ஆய்வுகள் இது போன்ற அமைப்பு மற்றக் குகைகளில் காணப்படாததால் குஹானின் இந்தக் கோட்பாடு மறக்கப்பட்டது.
ஆனால், இது போன்ற ஆராய்ச்சி நோக்குகள் ஒரு வலுவான சிந்தனைச் சரடை பிற்கால ஆராய்ச்சியாளர்கள் இடையே வேரூன்றியது. இந்த ஓவியங்களும் அவை தீட்டப்பட்டுள்ள குகைகளும் பழங்கற்கால மனிதன் தன்னைச் சுற்றி இருக்கும் இயற்கை மற்றும் மீயியற்கை (Supernatural) சக்திகளைப் பற்றிய தன் சிந்தனைகளை வெளிப்படுத்த உபயோகப்படுத்திய பெரும் திரைச்சீலைகள்தான் என்ற கருத்தே அது.
(தொடரும்)
___________
உசாத்துணை
David Lewis-Williams, The Mind in the Cave, Thames and Hudson, 2004
April Nowell, Children of the Ice Age, Aeon, 13/2/2023
Claus-Joachim Kind and others, The Smile of the Lion Man, Recent Excavations in Stadel Cave, Vol. 61, Quartär. International Yearbook for Ice Age and Stone Age Research, 2014