Skip to content
Home » இயற்கையின் மரணம் #12 – முகத்தில் அகம் பார்க்கலாம்

இயற்கையின் மரணம் #12 – முகத்தில் அகம் பார்க்கலாம்

காலத்தின் தொடக்கத்தில் பாலைவனத்திற்கு உயிரூட்டிய நீர் மானின் நெற்றியில் இருந்து பீறிட்டது. மானின் குளம்புத் தடத்திலிருந்து முளைத்தது கள்ளிச்செடியான பேயோடே. பின்பு அதுவே சோளத்தின் முதல் கதிராகவும், பெரும் அக்னி தெய்வமான ததேவாரியின் நீர் அருந்தும் கிண்ணமாகவும் மாறியது. இந்தத் தெய்வம்தான் இந்த மக்களுக்கு முதன்முதலாக பேயோடேவை அறிமுகப்படுத்தியது. பேயோடே (Peyote) என்ற கள்ளிச்செடியும், மானும், சோளமும் இவர்களைப் பொறுத்தவரைக்கும் ஒன்றே. இவை இவர்களை வழி நடத்தும் சக்திகள். இவற்றை ஆராதிக்க மறந்தால் மழை நிற்கும், சோளப் பயிர் முளைக்காது, மனிதனும், மானும் தாகத்தால் மடிவர். இதைத் தடுக்கவே ஒவ்வொரு ஆண்டும் மெக்ஸிகோவில் இருக்கும் ஹுய்சோல் (Huichol) இன மக்கள் தாங்கள் வாழும் மலைகளில் இருந்து இறங்கி 200 மைல்கள் பல சடங்குகளை உள்ளடக்கிய ஓர் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

மெக்ஸிகோவில் இருந்து வெகு தூரம் வாழும் எஸ்கிமோக்களின் ஒரு குழு விலங்குகளின் கடவுளான பிங்கா ஆகாயத்தில் வசிப்பதாகவும், இறந்த உயிர்கள் அவளிடம் சென்று வேறு விலங்குகளாகப் பூமியில் மீண்டும் பிறக்கின்றன என்று நம்புகிறார்கள். வேண்டிய இரை கிடைப்பதும், சில காலங்களில் இரை ஒன்றும் சிக்காததற்கும் இந்தத் தெய்வம்தான் காரணம் என்று நம்பும் இவர்கள், இத் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கும், தெய்வத்தை மகிழ்விக்கவும் பல சடங்குகளை உருவாக்கி இருக்கின்றனர்.

உலகின் பல பகுதிகளில், பல்லாயிரம் ஆண்டுகளாக, பல நூறு இனங்கள், இது போன்ற நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகவே கருதியிருக்கின்றன. இன்றும் கருதுகின்றன.

மாய யதார்த்தவாத கதைகள் போல ஒலிக்கும் தொன்மங்கள் தொடங்கி இருண்ட குகைகளுள் காணப்படும் ஓவியங்கள் வரை பழங்கற்கால மனிதனின் பல்வேறு ஆக்கங்களை இணைக்கும் சரடு ஒன்று உண்டு. அது, மனிதன் தன்னைச் சுற்றி இருக்கும் உலகின் மற்றொரு அங்கமாக அல்லது அதன் மேல் படலம் போல மீயியற்கை (Supernatural) சக்திகள் படிந்திருக்கிறது என்ற நம்பிக்கை. மனிதனின் விரிந்த அகமும், கொந்தளிப்பான புறச்சூழலும் ஊடாடும் தளத்தில்தான் இந்த நம்பிக்கைகளின் ஆழ் வேர்களின் தொடக்கம் இருக்கிறது.

ஆப்ரிக்கா பெருங் கண்டத்தில் வாழ்ந்த Primates என்று அழைக்கப்படும் பலதரப்பட்ட முதனிகளில் ஒன்றாக இருந்த நோஞ்சான்தான் ஏறக்குறைய ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்குள் பூமியை ஆளும் நவீன மனிதனாக வளர்ந்திருக்கிறது. இது ஒரு பெரும் அதிசயமே. ஏனென்றால் ஐம்பது லட்சம் ஆண்டுகள் என்பது பரிணாம வளர்ச்சிப் பாதையின் கால அளவில் ஒரு சிறு பகுதியே. இந்தக் குறுகிய காலகட்டத்திற்குள் இத்தகைய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது மிகப் பெரும் புறச்சூழல் மாற்றங்கள்.

ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்கா வனங்களால் மூடப்பட்டிருந்தது. பல முதனிகளின் பிரதான உணவு இந்தக் காடுகளில் விளையும் கனிகளும், மற்றும் பல உண்ணத்தக்கத் தாவரங்கள் மட்டுமே. ஆனால், சுமார் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, மிலன்கோவிச் சுழற்சி (இதை நாம் முன்னர் ஒரு பகுதியில் கண்டோம்) போன்ற பல காரணங்களால் ஆப்ரிக்கா வறண்டு போக ஆரம்பித்தது. காடுகள் குறுகி, பல பகுதிகள் பாலைவனமாகவும், வெப்பப் புல்வெளி பரப்புகளுமாக (Savannah) மாறின.

மரங்களிலும், காடுகளிலும் வாழ்ந்த, பிரத்தேயகமாக மனிதனைப் போலக் காணப்படும் பல உயிரினங்களுக்கு (Hominins) இந்தப் புதிய புறச்சூழல் ஒரு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. இந்த மாற்றங்களினால் பல முதனிகள் மறைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. எஞ்சியவை இந்தப் புல்வெளிப் புறச்சூழலுக்குத் தம்மைத் தகவமைத்துக் கொண்டவையே (Adaptation).

இந்தச் சூழலில் Australopithecus போன்ற சில ஹோமினின்களின் எலும்புகளின் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தத் தகவமைப்பிற்கு உதவியிருக்கக்கூடும். இருகால்கள் கொண்டு நடப்பதும், மணிக்கட்டு மற்றும் விரல்களின் நெகிழ்வும் தங்களை வேட்டையாடும் கொன்றுண்ணிகளிடமிருந்து (Predators) தப்பித்துக் கொள்ளவும் பலதரப்பட்ட கல் ஆயுதங்களைப் பயன்படுத்தவும் உடலில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் எளிதாக்கியிருக்கக்கூடும்.

ஆனால், இந்த உடல் சார்ந்த முன்னேற்றங்களை எல்லாம் தாண்டி ஹோமினின் குழுவில் முளைத்த ஹோமோ சேப்பியன்ஸ் (நாம்!) பல விதமான புறச்சூழல் அழுத்தங்களைக் கடந்து பல்வேறு வகையான சூழலியல்களில் தன்னை தகவமைத்துக்கொள்ளப் பக்கபலமாக இருந்தது இந்த ஹோமினின் வகையின் அகம் கொண்ட மாற்றங்கள்.

கடந்த 50 லட்சம் ஆண்டுகளில் ஹோமினின் மூளையின் அளவு ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. இரு கால்களில் நடப்பது, கல் ஆயுதங்கள் தயாரிக்கும் திறன் போன்றவை பன்மடங்கு வளர்ந்த மூளையின் வெளிப்பாடுகள்தாம் என்றாலும் இதன் மிக முக்கிய வெளிப்பாடு அகத்தின் உணர்ச்சிகளை அறிந்துகொள்வதும், அவற்றை வெளிப்படுத்தவும், மற்றவர்களின் உணர்ச்சியை புரிந்துகொள்வதும் ஆகும். சில ஆய்வாளர்களைப் பொறுத்தவரை இந்த உணர்ச்சிகளின் கட்டமைப்பு அமைத்துக்கொடுத்த அடித்தளம் ஹோமினின்கள் உய்யவும், ஹோமோ சேப்பியன்ஸ் போன்ற இனம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை அடையவும், பாதை அமைத்துக்கொடுத்தது.

முன்பு குறிப்பிட்டது போல ஆப்பிரிக்கா கண்டம் ஒரு மிக நீண்ட கால வறட்சியின் பிடியில் சிக்கி இருந்தது என்றாலும், சமீபத்திய ஆராய்ச்சிகள் இந்த நீண்ட வறண்ட காலம் ஆங்காங்கே தடைப்பட்டு பல்வேறு கொந்தளிப்புகள் உள்ளடக்கிய காலகட்டமாக இருந்தது என்று தெரியப்படுத்துகிறது. சில வருடங்களுக்கு அபரிமிதமான மழையும் பின்பு பல வருடங்கள் வறட்சி என்று இரு துருவங்கள் இடையே பல லட்சம் ஆண்டுகள் இக் கண்டம் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆழ்ந்த நீர்ப்பரப்புகளில் காணப்படும் பாசி வகைகளின் தொல்லுயிர் எச்சங்களும் மற்றும் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகளின் விகிதாச்சாரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வல்லுநர்கள் சொல்வது இது தான்.

கடந்த 30 லட்சம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் பெரும் மழையினால் பல நூற்றுக்கணக்கான பெரும், ஆழமான ஏரிகள் தோன்றின. இது போன்ற நீர் நிலைகள் அக் காலகட்டத்தில் வாழ்ந்திருந்த ஹோமினின் இனங்களுக்கு ஜீவாதாரமாக அமைந்திருக்கக் கூடும். ஆனால், இதுபோன்ற நீர் நிலைகள் சாஸ்வதமாக இல்லை. பருவநிலையின் ஊசலாட்டத்தில் சராசரியாக நூறு கிலோமீட்டர் சுற்றளவும், நூறு மீட்டர் ஆழமும் கொண்ட பல ஏரிகள் சில பத்தாண்டுகளில் இருந்த சுவடே தெரியாமல் மணல் மேடுகள் மூடின. பின்பு மீண்டும் தோன்றி மறைந்தன. இந்த மிகக் குழப்பமான காலகட்டத்தில் தான் ஹோமினின் இனங்கள், பிரத்தேயகமாக, ஹோமோ சேப்பியன்ஸ் இனம், புடம் போடப்பட்டது.

உணவைத் தேடி நீண்ட தூரப் பயணங்கள், தங்கள் எல்லைகளைத் தாண்டி மற்ற ஹோமினின் வாழும் நிலங்களுக்குச் செல்லுதல், அதனால் எழும் பூசல்களைச் சமாளித்தல், உணவுக்காக இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள இயலாத சிறு வயதினருக்கும், வயதானவர்களுக்கும் உணவு கொண்டு வருதல், சிறு வயதினர் பல காலம் பெற்றோர்களுடன் இருப்பது, மொட்டு விடும் உறவு முறைமைகள் போன்றவை இந்தப் பேரிடர்களைச் சந்திக்க உதவியது. இதற்கு அச்சாணியாக இருந்தது ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தின் உணர்வுகளின் பரிணாம வளர்ச்சி. இந்த வளர்ச்சியை இன்னும் உந்தியது ஹோமோ சேப்பியன்ஸ் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.

நமது முகம் நம் அகத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கக் கூடிய அற்புதமான அங்கம். பதினாலு வகையான எலும்புகளின் மீது நுண்ணிய தசைக் கட்டுகள் மூடிய இது சராசரியாக இருபது வகையான உணர்ச்சிகளைக் காண்பிக்கக் கூடியது. சிவாஜி கணேசன் போன்ற மகா நடிகர்கள் இதை விட அதிக நுண் உணர்ச்சிகளைத் தன் முகத்தில் காண்பிக்க இயலும் என்றாலும் பொதுவாக மகிழ்ச்சி, கோபம், சோகம், ஆச்சர்யம், அருவருப்பு போன்றவை பிரதான உணர்ச்சிகள். இவற்றைப் பற்றிய நமது கண்ணோட்டம் வெறும் ‘பாசமான புள்ள’ அல்லது ‘கோவக்கார பய’ என்கிற ரீதியிலே இருந்தாலும் உணர்ச்சிகள் மனிதக் குலத்தின் பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்காற்றி இருக்கிறது.

சில ஆராய்ச்சியாளர்களின் கருத்தின்படி நெற்றி, புருவ எலும்புகள் மிகையாகப் புடைத்திருந்த ஹோமோ எரெக்டஸ் (Homo erectus) மற்றும் நியாண்டர்தால் (Neanderthals) போன்ற ஹோமினின் இனங்களின் முகங்கள், பலம், முரட்டுத்தனம் போன்ற உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டியது. ஆனால், மிக இக்கட்டான புறச்சூழலில் தன்னைத் தகவமைத்துக்கொள்ள ஹோமோ சேப்பியன்ஸிற்கு மேலும் பல மென் உணர்ச்சிகள் தேவைப்பட்டன. சிறு குழுக்களாக வாழவும், மற்றவர்களோடு நட்பு, பாசம் பாராட்ட உதவும் வகையில் முகம் மேலும் மாறியது. புடைத்த நெற்றி சற்றுக் குறைந்து, முகத்தின் மத்தியப் பகுதி சற்று உள்ளடங்கியது. புருவங்கள் அசைப்பது மேலும் எளிதானது. புருவம் பிரதானமாக ஆனதால் உணர்வுகளை மேலும் நன்றாகப் பிரதிபலிக்க இயலுமா என்று சந்தேகப்படுபவர்கள், ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்ற பாடலில் நடிகை பத்மினி புருவங்களை உயர்த்தியும், தாழ்த்தியும் எவ்வாறு பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்று காணலாம்!

முகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள்தான் ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தின் உறவுத்தொடர்புகளை வலுப்படுத்தின என்பது பல ஆய்வாளர்களின் வாதம்.

மனிதச் சடங்குகள் கூடப் புறச்சூழல் மாற்றங்கள் கொடுத்த அழுத்தத்தினால் உருவாகியிருக்கக் கூடும் என்று சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அகத்தின் இந் நீட்சி தொடரும்.

(தொடரும்)

படம்: ஹுய்சோல் இன மக்களின் சடங்கு (Huichol Peyote Pilgrimage)

___________

உசாத்துணை
Wade Davis, One River, Touchstone, 1997
Brian Hayden, Shamans, Sorcerers, and Saints: A Prehistory of Religion, Smithsonian Books, 2003
Martin Trauth and others, Late cenozoic moisture history of East Africa, Science, September 23 2005.
Rodrigo S Lacruz and others, The evolutionary history of the human face, Nature Ecology & Evolution, April 2019

பகிர:
ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *