வரலாற்றில் மனிதகுலம் அழிவின் விளிம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சென்று மீண்டிருக்கிறது. இதன் சுவடுகள் நம் மரபணுவில் பதிந்திருக்கின்றன. Genetic bottleneck அல்லது Population bottleneck என்று அறியப்படும் இந்த நெருக்கடி சுமார் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க பெருவெளியில் வாழ்ந்து கொண்டிருந்த ஹோமோ எரெக்டஸ் போன்ற சில ஹோமினின்களின் எண்ணிக்கையைத் தடாலடியாகச் சுருக்கி இருக்கிறது. இது ஒன்றுமில்லை என்பது போல 74,000 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ஓர் ஆழ் ஒடுக்கம். இதன் காரணத்தால் அக்காலகட்டத்தில் சுமார் 10,000 பேர் மட்டுமே பூமியில் எஞ்சி இருந்திருக்கக்கூடும் என்று ஒரு கணக்கு கூறுகிறது. இது ஒரு சர்ச்சைக்குரிய எண்ணிக்கை. எதனால் ஏற்பட்டது இந்தக் கடும் சுருக்கம் என்ற கேள்விக்கான பதில் அதை விடச் சர்ச்சைக்குரியது. சர்ச்சைகளில் சற்றுக் காலை நனைப்போம்.
சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவின் ஒரு மூலையில் உள்ள ஷிவேலுக் எரிமலை வெடித்தது. வளிமண்டலத்தின் பல கிலோமீட்டர் உயரம் வரை சாம்பலும், மெல்லிய துகள்களும் படர்ந்து உலகத்தின் பல பகுதிகளில் விமானப் பயணம் பாதிக்கப்பட்டது. இதேபோல 12 ஆண்டுகளுக்கு முன் ஐஸ்லாண்டில் சாம்பலைக் கக்கிய எரிமலை சில பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. இவையெல்லாம் சிறு இடர்களே. கண்ணில் வீழ்ந்த தூசியை விரலால் தடவி எடுப்பதுபோல எடுத்துவிட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
ஆனால், பூமியின் வரலாற்றில் எரிமலைகளின் சீற்றம் மக்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எஞ்சியவர்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தங்களைத் தகவமைத்துக் கொள்ள புது சடங்கு முறைகளும், பல விதமான கலாச்சாரப் பரிமாற்றங்களும் கண்டெடுத்தார்கள் என்ற கருத்தைப் பற்றி தெரியுமா? இது சாத்தியமே இல்லைதான் என்பதே பலரின் எண்ணமாக இருக்கக்கூடும். அதில் நானும் ஒருவனாக இருந்தேன். ஆனால், இதைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கத் துவங்கிய பின் அப்படியும் இருக்கக்கூடுமோ என்ற எண்ணமே வலுப்படத் துவங்கி இருக்கிறது.

1145 சதுர கிலோமீட்டர் விஸ்தாரமும், 450 மீட்டர் ஆழமும் கொண்ட இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஏரியும் அதன் நடுவில் ஏறக்குறைய சிங்கப்பூர் போன்ற பரப்பளவு கொண்ட ஒரு தீவும் இன்று பிரபலமான ஒரு சுற்றுலாத் தலம். சிறு படகுகளில் இந்த ஏரியைச் சுற்றுவது ஒரு பேரனுபவம். அமைதியான இந்த இடம் முன்னொரு காலத்தில் உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. இப்பொழுது ஏரியும், தீவும் இருக்கும் இடத்தில் அப்பொழுது அமர்ந்திருந்தது சீற்றம் கொண்ட ஓர் எரிமலை. டோபா (Toba) என்ற பெயர் கொண்ட இந்த எரிமலை சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன் வெடித்தது.
இது மனித வரலாற்றிலேயே மிகத் தீவிரமான எரிமலை வெடிப்பாகக் கருதப்படுகிறது. இதன் தீவிரத்தை மனதில் பொருத்திப் பார்த்துக் கொள்வது சற்றுக் கடினம், இருந்தாலும் ஒரு ஒப்புமைக்காக இப்படிப் பார்ப்போம். 1883ஆம் ஆண்டு இதே பகுதியில் உள்ள கிரகடோவா (Krakatoa) எரிமலை வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்பின் வீர்யம் இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா நகரத்தை அழித்த அணுகுண்டின் சக்தியை விட 10,000 மடங்கு அதிகம்! கிரகடோவா வெடித்ததால் எழுந்த சத்தம் அங்கிருந்து ஏறக்குறைய 4500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொரீஷியஸ் தீவுகள் வரை கேட்டது. தூரத்தில் பீரங்கிகள் முழங்குவது போல இருந்ததாக மொரீஷியஸ் தீவு வாசிகள் தெரிவித்தார்கள். கிரகடோவா ஏறக்குறைய 20 கியூபிக் கிலோ மீட்டர் சாம்பலும், தூசும் வெளியேற்றி வளிமண்டலத்தை நிரப்பியது.
74,000 ஆண்டுகள் முன்பு நடந்த டோபா எரிமலையின் வெடிப்பு, கிரகடோவாவின் வெடிப்பு ஒன்றுமே இல்லை என்று ஆக்கி விட்டது. இது வளிமண்டலத்தில் நிரப்பிய தூசி, துகள் மற்றும் பலவிதமான விஷ வாயுக்களின் அளவு 2800 கியூபிக் கிலோமீட்டர். பூகம்பத்தை ரிக்ட்டர் ஸ்கேல் (Richter Scale) கொண்டு அளப்பதுபோல எரிமலை வெடிப்பிற்கும் ஓர் அளவு உண்டு. Volcanic Explosivity Index என்று அறியப்படும் இந்த அளவு பூஜ்யத்திலிருந்து எட்டு வரை நீள்கிறது. டோபாவின் வெடிப்பு எட்டைத் தொட்டிருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது!
டோபாவால் வெளியேறிய சாம்பல் காற்றில் நகர்ந்து பூமியின் பல பாகங்களில் படிந்தது. ஏறக்குறைய 7000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் கூட இச் சாம்பலால் ஏற்பட்ட படிமத்தைப் பூமியின் அடியில் கண்டெடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா போன்ற பல பகுதிகளில் டோபாவின் சாம்பல் கிடைத்திருக்கிறது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் டோபா எரிமலையின் சாம்பல் கண்டெடுத்ததின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
கர்நாடகாவின் தார்வாட் பல்கலைக்கழத்தின் பேராசிரியர் ரவி கோரிசெட்டர் (Ravi Korisettar) கர்னூல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கற்கால மனிதனின் சுவடுகளைப் பல காலமாக ஆராய்ந்து வருபவர். ஆராய்ச்சிக்காகச் செய்த பயணங்களின்போது ஜ்வாலாபுரம் என்ற ஒரு கிராமத்தின் பெயர் அவர் மனதை நெருடிக் கொண்டிருந்தது. நெருப்பு அல்லது எரிமலை சார்ந்த ஏதேனோடும் இந்தக் கிராமத்திற்குத் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி அவர் எண்ணங்களில் சுற்றிக் கொண்டிருந்தது. ஏனென்றால் 1986ஆம் ஆண்டில் மற்ற சில ஆராய்ச்சியாளர்களோடு மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் போரி புத்ருக் (Bori Budruk) கிராமத்தில் தற்செயலாக ஒரு நதிக்கரையில் வெள்ளைப் படிமங்கள் அவர் கண்களில் பட, பிற்பாடு சோதனை செய்ததில் அவை 74,000 ஆண்டுகளுக்கு முன் இந்தோனேசியாவில் வெடித்த டோபாவின் சாம்பல் என்று தெரியவந்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேபோல ஜ்வாலாபுரத்திலும் ஏதேனும் சிக்கும் என்ற ஓர் உள்ளுணர்வு அவரை அந்தக் கிராமத்தில் அகழ்வு செய்யத் தூண்டியது.
ஆராய்ச்சியில் ஜ்வாலாபுரத்தில் டோபாவின் சாம்பல் மட்டும் கிடைக்கவில்லை. சாம்பல் படிமத்தின் கீழேயும், மேலேயும் கற்கால மனிதன் உபயோகப்படுத்திய பல்வேறு கல் ஆயுதங்கள் கிடைத்தன. இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவில் ஹோமோ சேப்பியன்ஸ் எப்பொழுது கால் ஊன்றினான் என்ற கருதுகோள் முதல் டோபா எரிமலை வெடிப்பால் மனிதர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் வரை பலதரப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டது.
இதில் விந்தை என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்புகள், சர்ச்சைகள் ஆகியவற்றுக்கெல்லாம் வித்திட்ட ஜ்வாலாபுரம் என்ற கிராமத்தின் பெயர் சோளம் அல்லது ஜோலா என்பதின் திரிபுதான் என்று பேராசிரியர் ரவி கோரிசெட்டருக்கு பின்பே தெரிய வந்தது!
டோபா எரிமலை வெடித்தது என்பதை யாரும் சந்தேகப்படவில்லை. எரிமலையின் சாம்பல் குளிர்ந்து விட்டது, ஆனால் அது உண்டாக்கிய தாக்கங்களைப் பற்றிய விவாதங்கள் இன்றும் சூடாகவே உள்ளது. ஸ்டான்லி அம்ப்ரோஸ் (Stanley Ambrose) போன்ற சில ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிமலை, பூமியின் பல பாகங்களில் சர்வ நாசத்தை உண்டு பண்ணியதாகக் கருதுகிறார்கள். எரிமலை கக்கிய சாம்பலும், தூசும், நீராவியும், சல்பூரிக் அமிலத் துளிகளும் பூமியைக் கூடாரம்போல் மூடி, சூரிய ஒளியை பூமியில் அண்ட விடாமல் தடுத்து, உலகின் பல பாகங்களில் அதி தீவிரக் குளிரை உருவாக்கி இருக்கலாம் என்பதே இவர்களின் வாதம். சுமார் ஆறாண்டுக் காலம் இந்த Volcanic winter நீடித்திருக்கலாம் என்பது இந்தத் தரப்பினரின் கணக்கு. நிலத்தைத் தடித்த போர்வைபோல மூடிய சாம்பல், தாவரங்களையும் அதை நம்பி இருக்கும் உயிர்களையும் கொன்றிருக்கும் என்றும் எஞ்சிய மற்ற உயிர்கள் சில இடங்களில் அமில மழையிலும் மற்ற இடங்களில் மாசுபட்ட நீராலும் பெரும் அவதிக்குள்ளாயிருக்கலாம் என்றே எண்ணப்படுகிறது.
இவற்றுக்கெல்லாம் மேலாக மனிதகுலம் முற்றிலும் அழிந்து போவதிலிருந்து மயிரிழையில் தப்பியதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுமார் 10,000 பேர் ஆப்பிரிக்கா கண்டத்தில் பாதிப்பு குறைந்து காணப்பட்டப் பகுதிகளில் அடைக்கலம் சேர்ந்திருக்கலாம். பின்பு 15,000 ஆண்டுகள் கழிந்து அதாவது 60,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி உலகின் பல பகுதிகளுக்கு இவர்கள் குடிபெயர்ந்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் பெரும் அழிவினால்தான் இப்பொழுது பல்வேறு பகுதிகளில் வாழும் மனிதர்களின் மரபியல் வேறுபாடுகள் குறைந்து காணப்படுகின்றன என்பது இந்த அறிஞர்களின் அவதானிப்பு.
ஆனால், டோபா எரிமலையின் தாக்கம் இத்தனை தீவிரமாக இல்லை என்று கடந்த சில வருடங்களாக வெளிவந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதகுலம் பேரழிவை எல்லாம் சந்திக்கவில்லை, சிறு தடங்கல் ஏற்பட்டது, ஆனால் இந்த இடரிலிருந்து மீண்டு வந்துவிட்டனர் என்கிறது புது ஆராய்ச்சி. முன்பு நான் கோடிட்டுக் காண்பித்திருந்த ஜ்வாலாபுரம் அகழ்வாராய்ச்சி இந்தப் புதுக் கோட்பாட்டிற்கு ஒரு முக்கிய அடிக்கல்.
இந்த ஆராய்ச்சியின் மிக முக்கியச் செய்திகள் இரண்டு. முதலாவது இந்திய துணைக் கண்டத்தில் மனிதன் டோபா எரிமலை வெடிப்பிற்கு முன்பே இருந்திருக்கிறான். அதாவது 74,000 ஆண்டுகளுக்கு முன்பே. இது, 60,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி உலகின் மற்றப் பகுதிகளைச் சென்றடைந்தான் மனிதன் என்று பரவலாக நம்பப்படும் கற்கால வரலாற்றையே கேள்விக்குறியாக்குகிறது. இரண்டாவது, டோபா வெடிப்பின் தாக்கம் மனிதனை அழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்லவில்லை. இந்த இடரிலிருந்து அவன் மீண்டான் என்பதே.
மனிதகுலம் ஏறக்குறைய அழிந்ததா அல்லது சற்றே தடுக்கி வீழ்ந்து மீண்டதா என்ற சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆனால், இரு தரப்பினரும் ஒப்புக்கொள்வது என்னவென்றால் டோபா எரிமலை வெடிப்பு, சூழலியலில் பல மாற்றங்களை உருவாக்கியது. சாம்பல் போர்வையால் காடுகள் மறைந்து புல்வெளிப் பரப்புகளாக மாறி, நீர் நிலைகள் மாசடைந்து, பல விலங்கினங்களும் மறைந்திருக்கக்கூடும். ஆகவே, இங்கே எழும் முக்கியக் கேள்வி இதுவே. சட்டென்று மாறிய சூழலில் டோபா வெடிப்பிற்குப் பின் வாழ்ந்த மனிதன் எவ்வாறு தன்னை தகவமைத்துக் கொண்டான்?
(தொடரும்)
___________
உசாத்துணை
Lhendup G Bhutia, The First Indian, Open Magazine, 23rd December 2015
Michael D. Petraglia and others, The Toba volcanic super-eruption, environmental change, and hominin occupation history in India over the last 140,000 years, Quaternary International, 2011
Stanley Ambrose, Late Pleistocene human population bottlenecks, volcanic winter, and differentiation of modern humans, Journal of Human Evolution, (34), 1998.