Skip to content
Home » இயற்கையின் மரணம் #14 – எரிமலை திறந்த மனக் கதவுகள்

இயற்கையின் மரணம் #14 – எரிமலை திறந்த மனக் கதவுகள்

சாடில்லோ குகை ஓவியம்

பூமியின் வரலாற்றில் கடந்த 25 லட்சம் வருடங்களாகச் சட்டென்று வந்து போகும் வறட்சியும், மழையும், அடர் பனிக்காலங்களும் நிலப்பரப்புகளின் தன்மையை மாற்றிக் கொண்டே இருந்திருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து டோபா எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுகள் தாக்கங்களை மேலும் அதிகப்படுத்தியிருக்கின்றன. இதன் விளைவாக உலகத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் வேருன்றிப்போன தாவரங்களும், அவற்றைச் சார்ந்து வாழும் விலங்குகளும் வெகு குறுகிய காலத்திலேயே மறைந்துபோய் அவை விட்டுச்சென்ற சூழல்சார் வேற்றிடங்களைப் பல புதிய உயிரினங்கள் முளைத்து ஆட்கொண்டிருக்கின்றன. பிளீத்தொசீன் காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய நம்மைப் பல விதங்களில் முடுக்கியிருக்கிறது.

நம் கல் ஆயுதங்கள் மாறியது. பெரும் தாவரவுண்ணிகள் (Herbivores) மறைந்து அவற்றின் இடத்தை அளவில் சற்றுச் சிறியதாகவும், வேகமாகப் பாய்ந்து ஓடும் விலங்குகள் தோன்றியபொழுது அதுவரை வேட்டையாடவும், கடினமான தோல்களையும், தசைகளையும் வெட்டப் பயன்படுத்தப்பட்ட கை அகலம் கொண்ட கல் வெட்டுக் கருவிகளும் (Acheulean Handaxes), அதை உண்டாக்கிய தொழில் நுட்பமும் போதாதாகியது. இந்தப் போதாமை மனிதனைப்போல இருந்த மற்ற ஹோமினின்களை அழித்திருக்கலாம். ஆனால், நாமோ அல்லது நமக்கு முன்னால் வந்த இனமோ இந்தப் புற மாற்றங்களுக்குத் தம்மை தகவமைத்துக்கொள்ளப் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டோம்.

சிறியதாகவும், கூர்மையாகவும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிறு கல் ஈட்டிகளும், வெட்டுக் கருவிகளும் உருவாக்கியது இந்த இனம். Middle Stone Age Innovations என்றே இவற்றிற்குப் பெயர். ஆனால், பரவலாக அறியப்படும் இந்தப் புதுக் கண்டுபிடிப்புகள் ஹோமோ சேப்பியன்ஸ் கதையின் ஒரு சிறு பகுதியே. கடலில் மிதக்கும் பெரும் பனிப்பாறையின் மேலே தெரியும் நுனிபோல. இதைவிட மகத்தானப் புதுமைகள் மனிதனின் மறைந்திருந்த மனத்தில் ஏற்படத் தொடங்கியது. இவையே இந்தக் கதையின் முக்கியப் பகுதி.

உணர்வுகளும், அவற்றை வெளிப்படுத்துவதும் எவ்வாறு உதவின என்பதை முந்தைய பகுதியில் கண்டோம். அது முதல் அடியே. பிளீத்தொசீன் காலத்துக் கொந்தளிப்புகளில் தன்னைப் பொருத்திக்கொண்டு, கடும் அழுத்தம் தரும் புறச்சூழலோடு ஒத்திசைந்து வாழ்வதற்கு ஏதுவாக மனிதனின் மனத்தில் மேலும் பல கதவுகள் திறந்தது. அதுவும் டோபா எரிமலை வெடித்து பூமியைச் சற்றுத் தடுமாறச் செய்த அதே காலகட்டத்தில்!

0

ப்ளாம்போஸ் (Blombos) குகை, ஆப்ரிக்காவின் தென் கோடியில் இந்திய பெருங்கடலின் அலைகள் தொட்டு நீங்கும் ஒரு கடற்கரையில் உள்ளது. பல ஆண்டுகளாக அந்தக் குகையில் அகழ்வாராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 2011ஆம் ஆண்டு ஒரு முக்கிய வருடம். காரணம், அங்கே அகழ்வாய்ந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு கல் செதில். தோண்டி எடுக்கப்பட்ட பல பொருள்களோடு இந்தச் சிறு கல்லும் ஆய்வுக்கூடம் வந்து சேர்ந்தது. அங்கே வேலை பார்க்கும் ஆராய்ச்சியாளர் ஒருவர் இப் பொருள்களைச் சுத்தப்படுத்தி, வகைப்படுத்தும்பொழுது இந்தக் கல் செதிலில் மெல்லிய சிவப்பு நிறக் கோடுகளைக் கண்டார். குறுக்கும் நெடுக்குமாக ஒன்பது கோடுகளும் அவற்றை வெட்டிக் கொண்டு செல்லும் மூன்று நீளக் கோடுகளும் தென்பட்டன. L13 என்று அதற்குப் பெயரிட்டு அதைப் பத்திரப்படுத்தினார் அந்தப் பணியாளர். சில மாதங்களில், பல பரிசோதனைகளுக்குப் பிறகு, L13 பற்றி வெளிவந்த முடிவுகள் கற்கால வரலாற்றைப் புரட்டிப்போட்டது.

L13 கல் செதில், ப்ளாம்போஸ் குகை

L13ல் காணப்பட்டக் கோடுகள் 73000 ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒரு முகம் தெரியாத மனிதனால் ஒரு சிறு காவிக்கல் கட்டிக் கொண்டு கல்லின் மேல் எழுதிய ஏதோ ஒரு குறியீடு என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் மனிதன் குறியீடுகளின் ஊடாக, அதாவது ஒரு பொருளையோ எண்ணத்தையோ ஒரு சின்னமாக அல்லது சொல்லாக சிந்திக்கும் தன்மையைக் கண்டெடுத்தது சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பே என்றுதான் பலர் கருதிவந்தனர். இதைப்போலச் சிந்திக்கும் திறன் மனித அகம் கண்ட மிகப் பெரிய பாய்ச்சல் என்று கருதப்படுகிறது.

வெறும் கோடுகளும், சுழிகளும், புள்ளிகளுமாகத் தெரியாமல் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளாக நம் மனத்தில் பதிவதும், அம்பு இதயத்தைத் துளைக்கும் குறியீட்டைக் கண்டு காதலர்கள் பரவசப்படுவதும், சாலையில் சிவப்பு விளக்கைக் கண்டு வாகனங்கள் நிற்பதும், ‘பிப்டி கேஜி தாஜ்மஹால்’ போன்ற உவமைகளைப் புரிந்துகொள்வதும் சாத்தியமானது மனித அகத்தில் தோன்றிய இந்தத் திறனின் காரணமாகவே. மனித வரலாற்றில் இதைப்போன்ற ஒரு முக்கியக் கட்டம் மிக முந்தைய காலத்திலேயே நடந்தேறியது என்பது பல ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குகை ஓவியங்களை மறுத்ததுபோலவே ப்ளாம்போஸ் குறியீட்டையும் வெறும் அர்த்தமில்லா கிறுக்கல் என்று சிலர் எழுதத் துவங்கினர். ஆனால், ப்ளாம்போஸ் குகை, தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடலைப்போல மேலும் பல ஆச்சர்யங்களை அள்ளித் தந்தது. இம்முறை சிறு கிளிஞ்சல்கள்.

இக் குகையில் கண்டெடுத்த எல்லாக் கிளிஞ்சல்களிலும் துல்லியமாகக் குடையப்பட்ட சிறு துளைகள் இருந்தன. ஒரு சிறு கயிற்றையோ அல்லது காய்ந்த கொடியையோ துளைகளூடே சேர்த்துக் கட்டினால் கழுத்தில் அணியும் மாலை ஒன்று உருவாகும். அந்தத் துளைகள் அதற்காகவே ஏற்படுத்தப் பட்டன என்பதை நிரூபிக்கும் வகையில் துளைகளில் கயிறு உண்டாக்கிய தேய்மானத்தின் அடையாளங்கள் காணப்பட்டன. பல கிளிஞ்சல்களில் காவி நிறம் தேய்க்கப் பட்டிருந்தது. ஆம், ஏறக்குறைய 70000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் ஆபரணங்களை அணியத் தொடங்கி இருக்கிறான் என்பது இந்தக் கண்டெடுப்பில் ஊர்ஜிதமாகியது.

ப்ளாம்போஸ் குகை கிளிஞ்சல்கள்

அணிகலன்கள் குறியீடுகளின் உச்சக்கட்டம். இது மனிதன் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பிக்க உபயோகிக்கும் யுக்தி. ஆபரணங்கள் மனித அகத்தின் பெரும் நீட்சிக்கு மற்றும் ஓர் சான்று.

0

இந்தக் கண்டெடுப்பை எல்லாம் மிஞ்சுகிறது போட்ஸ்வானாவில் (Botswana) காணப்படும் மலைப்பாம்பின் சிற்பம்! காலாஹாரி (Kalahari) பாலைவனத்தின் சாடில்லோ (Tsodilo) குன்றுகள் குகை ஓவியங்களுக்குப் புகழ் பெற்றவை. இதே குன்றுகளில் எளிதில் அடைய முடியாத பல குகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்றில் நுழைந்த ஆஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷீலா கூல்சன் (Sheila Coulson) கண்டது ஒரு விசித்திரமானப் பாறையை.

குகையின் பக்கவாட்டுச் சுவற்றில் 2 மீட்டர் உயரமும் 6 மீட்டர் நீளமும் கொண்ட பாறையின் முகப்பு மலைப்பாம்பின் முகம்போல இருந்தது. அந்தப் பாறையின் மேல் சிறிதும் பெரிதுமாக, மனிதனால் மட்டுமே உருவாக்கக்கூடிய, நூற்றுக்கணக்கான சிறு பள்ளங்கள் அலங்கரித்திருந்தன. வெயிலும், நிழலும் இதன் மேல் நடனமாடும் பொழுது பாம்பின் தோல் போலவே உருக்கொள்வதுபோல இருந்தது. இரவில் சிறு விளக்குகளின் அசையும் சுடர் ஒளியில் இந்தக் கல்லால் ஆன மலைப்பாம்பு நகர்வது போலத் தோற்றம் உண்டாவதாக அந்தப் பேராசிரியர் தெரிவித்தார். இவை எல்லாம் இந்தப் பேராசிரியரின் கட்டற்ற கற்பனையில் விளைந்தது என்று ஒதுக்கி விடுவது சுலபம். ஆனால் அந்த மலைப்பாம்பு சிற்பத்தின் முகத்திற்குக் கீழ் உள்ள தரையில் பள்ளம் தோண்டி அவர் கண்டெடுத்த பொருள்கள் நம்மைச் சற்றுச் சிந்திக்க வைக்கிறது.

சாடில்லோ குகை – மலைப்பாம்பின் முகம்போல இருக்கும் முகப்பு

தோண்டப்பட்ட குழியில் கண்டெடுக்கப்பட்டது பல்லாயிரக்கணக்கான கல் ஈட்டி முனைகள். இங்கே மனத்தில் கொள்ள வேண்டியது அந்தக் குகை வாழும் ஸ்தலம் அல்ல. கல் ஈட்டிகள் ஏதோ ஒரு காரணத்திற்காகப் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்து, பல இடங்களில் இருந்து, இங்கே கொண்டு சேர்க்கப்பட்டிருந்தன. இதில் இன்னொரு விந்தை என்னவென்றால் சிவப்புக் கல் ஈட்டி முனைகள் மட்டும் நெருப்பால் சுடப்பட்டு இருந்தது. ஏதோ அந்தச் சிவப்பு நிற கல் ஈட்டி முனைகள் பலி கொடுக்கப்பட்டிருப்பதுபோல.

இந்தப் பல்வேறு தரவுகளின் அடிப்படையிலேயே பேராசிரியர் கூல்சன், சாடில்லோ குகை பலர் ஒன்று சேர்ந்து கூட்டுச் சடங்குகளை நடத்திய இடமாக இருந்திருக்கலாம் என்ற கோட்பாட்டினை முன் வைத்திருக்கிறார். அதாவது பழங்குடி மாந்திரீகத்தின் (Shamanism) பிரபஞ்ச நோக்கும், நம்பிக்கைகளும் மற்றும் சடங்குகளின் வெளிப்பாட்டையே சாடில்லோ குகைகள் காட்சிப்படுத்துகின்றன என்பதே இவர்களின் கோட்பாடு. இதற்காக இவர்கள் அடுக்கும் வாதங்கள் வலிமையாகவே உள்ளன.

அந்தப் பகுதியில் வசித்து வரும் சான் (San) இன மக்கள் சாடில்லோ குன்றுகளைப் புனிதத் தலமாக கருதுகிறார்கள். சான் இனம் உலகத்தின் மிகப் பழமையான வேட்டை மற்றும் உணவு திரட்டும் (Hunter-gatherers) கலாச்சாரம். புஷ்மென் (Bushmen) என்று அறியப்படும் இவர்களைப் பல வருடங்கள் முன் வெளிவந்த ‘The Gods must be Crazy’ என்ற பிரபலத் திரைப்படம் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியது. பல்லாயிரம் ஆண்டுகளாக காலாஹாரியில் வசித்து வரும் இவர்களின் தொன்மக் கதைகளில் மலைப்பாம்பு, ஒட்டகச்சிவிங்கி, யானை போன்ற மிருகங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மனிதன் மலைப்பாம்பிலிருந்தே தோன்றினான் என்ற நம்பிக்கை உடையவர்கள் இவர்கள்.

சான் (San) இன மக்கள்

அவர்களைப் பொறுத்தவரை மலைப்பாம்பு ஒரு தெய்வம். சாடில்லோ குன்றுகளைச் சுற்றிக் காணப்படும் வறண்ட படுகைகள் முன்பொரு காலத்தில் நீர் தேடி அலைந்த இத் தெய்வத்தின் சுவடே என்பது இவர்களின் நம்பிக்கை. ஒரு காலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கிய இந்தத் தெய்வத்தைக் கரை ஏற்றியது ஓர் ஒட்டகச்சிவிங்கி. ஆகவே அதுவும் ஒரு முக்கியத் தெய்வம். யானையின் தும்பிக்கை மலைப்பாம்பைப்போல இருப்பதனால் அதுவும் முக்கியமே. இந்த நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதைப்போல மலைப்பாம்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்ட சாடில்லோ குகையில் இரண்டே இரண்டு ஓவியங்கள் மட்டுமே உள்ளன; யானையும், ஒட்டகச்சிவிங்கியும். அதுவும் இவ்விரு ஓவியங்களுமே குகைச் சுவற்றில் நீர் வழிந்து ஓடும் பகுதியில் காணப்படுகிறது!

குகையில் இந்தச் சடங்குகள் எந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கக்கூடும் என்ற கேள்விக்கு இவர் அளிக்கும் பதில், ஏறக்குறைய 70000 ஆண்டுகள் முன்பு!

(தொடரும்)

___________

உசாத்துணை
Brian Handwerk, To Adapt to a Changing Environment 400,000 Years Ago, Early Humans Developed New Tools and Behaviors, Smithsonian Magazine, October 21, 2020.
Christopher S. Henshilwood and others, An abstract drawing from the 73,000-year-old levels at Blombos Cave, South Africa, Nature, 12th September 2018
Ritual: Organised Activity Identified as World’s Oldest, Current World Archaeology, March 6, 2007.

பகிர:
ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *