மனித வரலாற்றில் குறியீடுகளின் தோற்றம், உடலில் அணிகலன்களை அணியும் வழக்கம் மற்றும் இதைப் போன்ற பலவற்றையும் வழிப்படுத்தும் ஆதிமனிதனின் பிரபஞ்ச நோக்கு ஆகியவை டோபா எரிமலையின் வெடிப்போடு சம்பந்தப்பட்டிருப்பதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதை ஒப்புக் கொள்ளாதவர்கள் பலர். இவையெல்லாம் சட்டென்று, வெகு குறுகிய காலகட்டத்தில், ஒன்றாக வெளிப்படுவது சாத்தியமில்லை என்பது இவர்களின் வாதம்.
ப்ளாம்போஸ் குகையிலோ அல்லது காலஹாரி பாலைவனத்தில் கண்டெடுத்த கிளிஞ்சல் மாலைகள், சிறு கற் செதிலில் காணப்பட்டக் கோடுகள் போன்றவை பல்லாயிரம் ஆண்டுகளாக மெதுவாக மனித அகம் கொண்ட மாறுதல்களின் வெளிப்பாடே, நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வரும் ஒரு திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளே, என்று ஓர் ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகிறது. ஆனால் இரு சாராரின் வாதங்களிலும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு. அது, மனித மனத்தின் இந்தப் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடிக்கடி மாறும், சீர் இல்லாத பிளீத்தொசீன் காலத்துப் புறச்சூழலில் உயிர் வாழ பெருந் துணையாக இருந்தது என்பதே. இந்த அக வளர்ச்சியின் மூன்று முக்கியக் கூறுகளைப் பார்க்கலாம்.
இத்தொடரின் கடந்த ஒரு பகுதியில் எப்படி மனித முகத்தில் உள்ள எலும்புகளும், தசைக்கட்டுகளும் உரு மாற்றம் பெற்று மனித முகத்தை உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அங்கமாக மாற்றியது என்பதைக் கண்டோம். இந்த உணர்வுகள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தின் மேல் தான் மனித நுண்ணறிவு வலுக் கொண்டது. முக்கியமாகத் தனக்கு இருக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்கும் உண்டு என்பது இந்தப் புரிதலின் முதல் அங்கம். ஆகவே, அவர்களின் ஆசாபாசங்களும், கோப தாபங்களும் தனது போலவோ அல்லது வேறாகவோ இருக்கக் கூடும் என்பது அடுத்தக் கட்டப் புரிதல். ஆகையால் மற்றவர்களின் மனத்தில் என்ன உணர்வுகள் எழும்புகின்றன, அவர்களின் நோக்கம் என்ன என்று கேள்விகளை தனக்குள்ளேயே எழுப்பிக் கொள்வது இந்தப் புரிதலின் இன்னொரு கட்டம். ஆராய்ச்சியாளர்கள் Theory of Mind என்று அறியப்படும் இந்தக் கருத்துருவைத்தான் மனிதனையும் மற்ற விலங்குகளையும் பிரிக்கும் கோடாக வரைகிறார்கள். ஒரு கொசுறுச் செய்தியாக, சமீபத்திய ஆராய்ச்சிகள் சிம்பன்சிகளுக்கும் இந்தத் தன்மை ஓரளவுக்கு உண்டு என்று கூறுகிறது!
டோபா எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்கள் இந்த நுண்ணுணர்வை மேலும் செம்மைப் படுத்தி இருக்கும் என்பது சிலரின் கருத்து. ஏனென்றால் இவர்களின் வாதத்தின் படி இந்த வெடிப்பால் ஏற்பட்ட தாவரங்களின் இழப்பு அவற்றை உண்ணும் இரை விலங்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தது. ஆகவே வேட்டையாடக் கற்கால மனிதன் தான் வழக்கமாகப் புழங்கும் எல்லைகளைத் தாண்டிச் செல்ல நேரிட்டது. அவன் இரை தேடிச் செல்லும் பகுதிகளில் மற்ற சிறு குழுக்கள் வாழ்ந்திருக்கும் பட்சத்தில் பிற குழுக்களை வன்முறையின் மூலமாக அந்த இடங்களில் இருந்து வெளியேற்றியிருக்கலாம். இது சாத்தியமானதே. ஆனால், இது போன்ற ரத்தம் சிந்தும் நடவடிக்கைகள் பல நேரங்களில் பயன் தராமலும் போகக் கூடும். ஆகவே மிக அழுத்தமான இந்தப் புறச்சூழலில் தன்னை தகவமைத்துக் கொள்ள ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தின் நுண்ணுணர்வானது ஒரு கலாச்சாரத் தீர்வை முன்வைத்தது. எதிராளியின் கொப்பளிக்கும் உணர்வுகளை அடையாளம் கண்டு அதைச் சடங்குகள் மூலமாக வடிகாலிட்டு, உரசல்களைத் தவிர்த்து, சிறிதளவு சுமுகத்தை உண்டுசெய்து, சேர்ந்துவாழ இயலாவிட்டாலும் ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ Theory of Mind வழி வகுத்தது.
பிளீத்தொசீன் காலத்தில் கடும் உணர்வுகளை நீர்க்கச் செய்து குழுக்கள் இடையே சற்று இணக்கம் ஏற்படச் செய்த சடங்குகளின் நிழலை இன்றும் கூடப் பல வேட்டையாடி உணவு திரட்டும் கலாச்சாரங்களில் காணலாம். தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் வாழும் யானமாமி (Yanomami) மக்கள் இடையே உரசல்களைச் சமாளிக்க ஒரு சடங்கு உள்ளது. அமைதியை விரும்பும் குழு, தம்மோடு அடிக்கடி மோதும் மற்றொரு குழுவை விருந்திற்கு அழைக்கும். விருந்திற்கு வந்தவர்கள் தங்கள் ஆயுதங்களைச் சுற்றியபடியும், விருந்து கொடுப்பவர்களைக் கடுமையாக ஏசியும் ‘அவமானப்படுத்துவர்’. விருந்திற்கு இவர்களை அழைத்த குழு இந்த ‘தூண்டுதல்களை’ சட்டை செய்யாமல் அமைதி காப்பர். சிறிது நேரத்தில் வேடங்கள் மாறும். அமைதி காத்தவர்கள் ஆக்ரோஷப்பட்டும், தூஷித்தவர்கள் சாதுவாகவும் மாறுவார்கள். இச் சிறு ‘நாடகத்திற்கு’ பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுவார்கள். இதுபோல ஆக்ரோஷமான உணர்வுகளைச் சடங்குகள் மூலமாக வழிப்படுத்தும் வழக்கம் பல தொல் கலாச்சாரங்களில் உண்டு.
இது மட்டும் அல்லாமல் ஒரு சிறுவனோ அல்லது பதின் பருவத்தவனோ தன்னை ஒரு குழுவுக்குள் பொருத்திக் கொள்வதற்கும், தனி மனித அடையாளங்களைத் தாண்டி குழுவுக்கென்று உள்ள ஓர் அடையாளத்தோடு தன்னை நிலை நிறுத்தவும், அந்தக் குழுவின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை முழு வீச்சுடன் அளிக்கவும் ஏது செய்யும் பல நுழைவுச் சடங்குகள் (Initiation rites) இந்தக் கடினமான புறச்சூழலில் உதவின. மிகக் கடினமான சூழலில் வாழும் குழுக்களின் சடங்குகள் அதி தீவிரமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவில் நீர் சற்று எளிதாகக் கிடைக்கும் தென்கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் இடையே இத்தகையச் சடங்குகள் தீவிரமாக இல்லை. ஆனால், மிக வறட்சியான மத்தியப் பகுதிகளில் Initiation சடங்குகள் தீவிரமாக இருக்கிறது. பற்களைப் பிடுங்குவது, உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் ஏற்படுத்துவது போன்றவை இதில் அடக்கம். ஏனென்றால் இது போன்ற வலியையும், இன்னலையும் ஏற்கக்கூடிய சிறுவர்களே அத்தகைய வறண்ட புறச்சூழலில் தங்களின் குழுவைத் தாங்குவார்கள் என்ற எண்ணமே இச் சடங்குகளின் ஒரு முக்கிய அடித்தளம்.
எதற்கு இத்தகைய மெனக்கெடல்? ‘நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம், நீங்கள் எங்களுக்குச் செய்யுங்கள், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று வாய் வார்த்தையாகச் சொல்லி காரியத்தை முடித்துக் கொள்ளலாமே அல்லது விரலில் சிறு கீறலிட்டு சில ரத்தத் துளிகளைப் பூமியில் சொரிந்து ‘இனி நீ எங்கள் குழுவைச் சேர்ந்தவன்’ என்று சுருக்கமாக முடித்தால் என்ன என்பது போன்ற கேள்விகள் எழலாம்.
ஆனால் சடங்குகளை ஆழமாக ஆராய்ந்த ராய் ரபபோ (Roy Rappaport) போன்ற ஆராய்ச்சியாளர்கள், குழுக்கள் எவற்றை நாடி வந்ததோ அவற்றின் பேரில் உள்ள ஈடுபாட்டையும், பற்றையும் பறைசாற்ற நேரமும், பொருளும் ஒதுக்கி சடங்குகளில் தங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வது வெறும் வார்த்தைகளை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று கருதுகிறார்கள். வரையறுக்கப்பட்ட, பெரிதும் மாற்றம் இல்லாத வரிசையான செயல்பாடுகள் அதற்குப் பொருந்தும் உச்சாடனங்கள் போன்றவை ‘தெரிவித்தலுக்கு’ பெரும் கனம் சேர்ப்பவை. இது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்குத் தங்கள் நோக்கத்தின் உண்மைத்தன்மையைச் சமிக்ஞை செய்யச் சடங்குகள் பேரிடர்கள் நிறைந்த இக் காலகட்டத்தில் உதவியாக இருந்திருக்கலாம் என்பது இவர்களின் வாதம்.
இந்தக் கோட்பாடுகளுக்கெல்லாம் மேலும் வலு சேர்க்கும் வகையில் சமீப காலத்து உளவியல் ஆராய்ச்சிகள் நிலையில்லாத, இடர்கள் சூழ்ந்த கட்டங்களில் சடங்குகள் மனித மனத்தின் உளைச்சலைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் மனம் மற்றும் உடலின் நலனைப் பேணுகிறது என்று கூறுகிறது.
தனக்கு உள்ள உணர்வுகள், எதிர்பார்ப்புகள் ஆசைகள் போன்றவை மற்றவர்களுக்கும் உண்டு என்பதையும் தாண்டி, தன்னைச் சுற்றி இருக்கும் இயற்கைக்கும் உண்டு என்ற Theory of Mind இன் நீட்சியே நாம் காணப்போகும் இரண்டாவது கூறு.
மனித அகம் கண்ட வளர்ச்சியின் அடுத்தக் கட்டம் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தைப் பல மீயியற்கைச் சக்திகளின் ஆடுகளமாக உணரத் தொடங்கியதுதான் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. மரங்களை முறிக்கும் சூறாவளிக் காற்று, நிலத்தை அதிரச் செய்யும் இடி, திரையைப் போல எல்லாவற்றையும் மறைக்கும் பெரு மழை, மலைகளைப் பிளக்கும் பூகம்பம், நெருப்பு உமிழும் எரிமலை, நிலத்தைக் கீறிக் கொண்டு பாயும் நதி, விண்ணை நோக்கி எழும் தாவரங்கள், பாய்ந்து, நடந்து, ஊர்ந்து செல்லும் விலங்குகள் ஆகிய யாவையும் இந்தப் பூமியின் வெற்றுப் பின்புலம் அல்ல. அதற்கு மாறாக இவை யாவும் இச்சை, கோபம், பசி, தாகம் போன்ற உணர்வுகளும், விசைகளும் கொண்ட பெரும் சக்திகள் என்ற விழிப்புணர்வு என்பது, சத்தமின்றி ரத்தமின்றி ஏற்பட்ட ஒரு அகப் புரட்சி என்றே கூறலாம்.
நீர் தளும்பி மீன்கள் துள்ளும் பெரும் ஏரிகள் ஒரு பத்தாண்டில் வற்றுவது, ஒரு தலைமுறைக்குள்ளாகவே உணவுக் காடுகள் மறைந்து புல்வெளிப் பரப்புகள் ஆவது, மிகக் குறுகிய காலத்தில் மிதமான வானிலை மறைந்து உக்கிரமான குளிரும், நிலம் எங்கும் பனிப்பாறைகள் படர்வது, ஏதோ ஓர் அட்டவணைப்படி நடந்து கொண்டிருந்த இரை மிருகங்களின் வலசைபோதல் தடம் மாறி, நின்று போவது போன்றவை இந்த மீயியற்கைச் சக்திகளின் மாறும் நோக்கங்களே என்ற புரிதல் மனிதனின் பார்வையையும், நடவடிக்கைகளையும் முற்றிலும் மாற்றியது.
இந்தப் பெரும் இயக்கத்தில் மனிதன் ஒரு பாகம் என்று உணர்ந்தது மட்டுமல்லாமல் தன் வாழ்க்கையை இன்னல்கள் இல்லாமல் நடத்த, இதன் மற்ற பாகங்களுடன் உறவாடுவது இன்றியமையாதது என்று உணரத் துவங்கியது இந்தக் காலகட்டத்தில் தான்.
ஆனால் பிற மனிதக் குழுக்களோடு போல அல்லாமல் இந்தச் சக்திகளோடு ஊடாடுவதற்கு அவன் அகத்தின் மற்றொரு கதவு திறந்தது. தன்னுடைய தன்னுணர்வை வேறு தளங்களுக்கு இட்டுச் செல்லும் திறன் தான் அது. Altered States of Consciousness என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இந்தத் திறனை மிகச் செம்மையாகக் கையாளத் தெரிந்த ஆதிகால மாந்திரீகன் (Shaman) இந்த மீயியற்கைச் சக்திகளுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு முக்கிய பாலமாக உருவெடுத்ததும் இந்த அக மலர்ச்சியால் தான். இந்த மூன்றாவது கூறை நாம் அடுத்த பகுதியில் விரிவாகக் கவனிக்கலாம்.
(தொடரும்)
___________
உசாத்துணை
Matt J Rossano, Supernatural Selection: How Religion Evolved, Oxford University Press, 2010
Brian Hayden, Shamans, Sorcerers, and Saints: A Prehistory of Religion, Smithsonian Books, 2003
Roy Rappaport, Ritual and religion in the making of humanity, Cambridge University Press, 1999
Karan Johnson, The surprising power of daily rituals, BBC Future, 15th September 2021