தொன்மையான மாந்திரீகத்தின் கோட்பாடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் இருந்திருக்கும் என்று அறுதி இட்டு யாராலும் சொல்ல இயலாது. ஆனால், ஆப்பிரிக்காவில் சாடிலோ குகையில் கண்டெடுத்த மலைப்பாம்பு சிற்பம், ஜெர்மனியின் ஸ்டேடல் (Hohlenstein-Stadel) குகையில் கண்டெடுக்கப்பட்ட சிங்கத்தின் முகமும் மனித உடலும் கொண்ட சிறு சிலை, பிரான்சின் லாஸ்கோ குகைகளில் உடலில் அம்பு தைத்த எருது, அருகில் படுத்திருக்கும் பறவை மனிதன் போன்ற ஓவியங்கள் மற்றும் இது போன்ற பல சர்ச்சைக்குள்ளான தடயங்கள் தொல் மாந்திரீகத்தின் சுவடுகளே என்ற கருத்து இப்பொழுது பரவலாக வேரூன்றியிருக்கிறது. இதைத் தவிர்த்துக் கடந்த சில நூறாண்டுகளில் மானுடவியலாளர்களின் அயராத முயற்சியால் பல வேட்டைச் சமூகங்களின் சடங்குகளும், நம்பிக்கைகளும் ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தொல்லியல் மற்றும் மானுடவியல் முயற்சிகளில் இருந்து முற்காலத்தின் மாந்திரீகம் சார்ந்த கோட்பாடுகளை ஒருவாறாக அவதானிக்க முடிந்திருக்கிறது.
இந்தத் தொல் மாந்திரீகக் கோட்பாட்டில் பல அங்கங்கள் உண்டு. இவற்றில் நான்கு முக்கிய அங்கங்களைப் பார்ப்போம். ஒன்று, பிரபஞ்சம் அடுக்குகள் கொண்டது. நாம் நிதம் காணும் இந்த உலகம் ஓர் அடுக்கு மட்டுமே… இதற்கு மேலும், கீழும் உலகங்கள் உண்டு. இரண்டு, இந்தப் பல்வேறு உலகங்களுக்குச் சென்று வரக் கூடிய திறனை உடையவன் மாந்திரீகன் (Shaman). மூன்று, இந்தப் பயணங்களின் ஊடாக அவன் அல்லது அவள் (பெண் மாந்திரீகர்களும் சில சமூகங்களில் உண்டு) பல மீயியற்கைச் சக்திகளோடு உறவாடி தன் குழுவிற்கு ஏற்படும் இன்னல்களை – வியாதி, பருவநிலை இடர்கள், இரை மிருகங்கள் அல்லது உணவுப் பற்றாக்குறை போன்றவைகளைக் களைய வழிகளைக் கண்டறிவது. நான்காவதாக, மேற்கண்ட அங்கங்களுக்கெல்லாம் அசைவு கொடுப்பது, மனிதன் தன்னுணர்வைப் பல தளங்களுக்கு இட்டுச் செல்லும் திறன். Altered States of Consciousness என்று அறியப்படும் இது மனித இனத்திற்குப் பொதுவானது என்றாலும் இத்திறனைத் தொல் இனங்களின் மாந்திரீகன் செம்மை ஆக்கிக்கொண்டான்.
பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல பண்டைய சமூகங்களில் அறியப்பட்ட இந்த அகத்தின் தாவல் மேற்கத்திய அறிஞர்கள் இடையே பரவலாக அறிமுகமானது கடந்த நூற்றாண்டில்தான். உளவியலாளர் வில்லியம் ஜேம்ஸ் (William James) 1902ஆம் ஆண்டு எழுதிய The ‘Varieties of Religious Experience’ மூலமாகவே இந்தச் சிந்தனை மேற்கத்திய நாடுகளில் வேரூன்றியது. விழிப்பு, தூக்கம், கனவு போன்ற நிலைகளைத் தாண்டி மேலும் அகத்தளங்கள் உண்டு என்றும் இவை நம் நிஜ உலகின் உண்மைத்தன்மைக்கு ஒப்பானவை (நாம் புழங்கும் உலகத்தைவிட ‘உண்மையாகவும், நிஜமாகவும்’ இவை உணர்வதாகச் சிலர் கூறுகிறார்கள்!) என்று ஜேம்ஸ் கருதினார். இந்தத் தளங்களைப் பிரிப்பது மிக மெல்லிய திரைச்சீலைகளே, சில நேரங்களில் தன்னுணர்வு தானாகவே இச்சீலைகளை விலக்கி இந்தத் தளங்களை அடைவதுண்டு என்றாலும் (உதாரணத்திற்கு, மனத்தை முற்றிலும் கொள்ளை அடிக்கும் இயற்கைக் காட்சிகள் காணும் பொழுது) இவற்றை அடையச் சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததைப் பற்றியும் இந்த நூல் அறிமுகப்படுத்தியது.
இந்த நீண்ட புத்தகத்தில், Mysticism என்ற பகுதியில், வில்லியம் ஜேம்ஸ் கிழக்கத்திய மதங்களான இந்து, பௌத்த மதங்கள், இஸ்லாமிய மதத்தின் ஒரு அங்கமான சூஃபிசம் மற்றும் சில கிறித்துவத் துறவிகள் தன்னுணர்வைப் பிற தளங்களுக்கு மாற்றும் முறையான பயிற்சிகளைப் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருவதாகத் தன் சக மேற்கத்திய ஆய்வாளர்களிடமும், வாசகர்களிடமும் தெரிவித்தார். ஆனால், இந்தப் பயிற்சிகளின் வேர்கள் மிகக் கடுமையான புறச்சூழல்கொண்ட பிளீத்தொசீன் காலத்தில் வாழ்ந்த வேட்டைச் சமூகங்களில் புதைந்திருந்தது என்ற சிந்தனை அவருக்கு எழவில்லை. இது கடந்த பல பத்தாண்டுகளில்தான் உருவாகி இருக்கிறது.
தொல் மாந்திரீகம் மானுடம் முழுவதற்கும் பொதுவானது என்று உலகின் பல தொன்மையான கலாச்சாரங்களை ஆராய்ந்த மிர்ச்சா எலியாடு (Mircea Eliade) போன்ற ஆளுமைகள் கருதுகின்றனர். இத்தகைய உலகம் தழுவிய மீயியற்கைச் சிந்தனைகள் ஏன் உருவானது?
மனிதனுடைய அகத்தின் வளர்ச்சிகூட டார்வீனியன் கோட்பாடுகளுக்கு உட்பட்டது என்று கருதுகிறது Evolutionary Psychology என்ற துறை. மரபியல் மாற்றங்கள் கொண்டுவரும் உடல்சார்ந்த வேறுபாடுகள் ஜீவராசிகளை அந்தச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள உதவும் பட்சத்தில் அந்த வேறுபாடு பின்வரும் தலைமுறைகளிலும் தோன்றி அந்த இனம் அச்சூழலில் வெற்றிகரமாக வேரூன்றுகிறது. இதுவே டார்வீனியன் கோட்பாடு.
இதில் முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது அந்த வேறுபாடு அந்த ஜீவராசிக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்தது என்பதே. உதாரணத்திற்கு, மிகவும் குளிர் பிரதேசங்களில் மரபியல் மாற்றத்தினால் உடல் மறையும் அடர்த்தியான ரோமம் உருவாகும் பட்சத்தில் அந்த வேறுபாடு அந்த மிருகம் வாழ உதவும். இந்த வேறுபாடு அந்த மிருகத்தின் பின் வரும் தலைமுறைகளுக்கும் கடத்தப்பட்டு உடலில் ரோமம் அடர்ந்த இனம் அங்கே தோன்றி அச்சூழலில் பரிமளிக்கும். அதைப் போலவே மனித அகத்தில் ஏற்படும் மாற்றங்கள்கூட உயிர் வாழ உதவும் பட்சத்தில் அவை இயற்கையால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதே Evolutionary Psychologistகளின் வாதம்.
சரி, தொல் மாந்திரீகமும் அதன் அடிநாதமாய் இருக்கின்ற தன்னுணர்வைப் பிற தளங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடிய திறன் உயிர் வாழ எப்படி உதவியிருக்கும்?
இந்தக் கேள்விக்கான பதில்களைப் பரிசீலிக்கும்பொழுது இக்கீழ்க்கண்ட கருத்தை மனதில் வைக்க வேண்டும்.
இப்பொழுது நம் பணிகளும், சிந்தனைகளும் முற்காலத்திற்கு முற்றிலும் வேறாக இருந்தாலும் நவீன மனிதன் சுமந்து கொண்டிருக்கும் மூளையின் கனம், வடிவம், அளவு மற்றும் செயல்திறன் ஏறக்குறைய ஓர் ஐம்பதாயிரத்தில் இருந்து நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நாம் அகத்தில் அனுபவிக்கும் உணர்வுகள் யாவையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல் இனங்களுக்கோ அல்லது அவற்றின் முக்கிய அங்கத்தினனான மாந்திரீகனுக்கோ சாத்தியம் என்பதை வலியுறுத்தவே. ஆகவே, மனித அகத்தின் பரிமாணங்களும் அது உடலில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிய இன்றைய ஆராய்ச்சிகளின் முடிவுகள் அக்காலத்தில் வாழ்ந்த மனிதனுக்கும் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.
சரி, தன்னுணர்வின் மாற்றம் மனிதன் வாழ உதவி செய்திருக்குமா என்ற கேள்விக்கான பதில்களுக்கு வருவோம்.
தன்னுணர்வு மாற்றத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் சன்னதம் கொள்ளுதல். இது பல தொல் கலாச்சாரங்களில் உண்டு. இந்த நிகழ்வு தனியாகவோ அல்லது ஒரு சிறு குழுவாகவோ நடந்தேறும். பல மணி நேரங்கள் நீடிக்கும் சிறு நடன அசைவுகள், இதனோடு ஒத்திசைக்கும் சொற்கள் கோர்த்த, அல்லது சொற்களே இல்லாத, துண்டுப் பாடல்கள், சில தாளங்களுக்கு உள்ளாகவே சுற்றிச் சுற்றி வரும் சிறு பறையின் ஓசை அல்லது கை கொட்டுதல் போன்றவையே மாற்றத்தை உருவாக்கும் சில வழிகள்.
ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்புகூட உலகின் மிகத் தொன்மையான வேட்டைச் சமூகமான தென் ஆப்பிரிக்காவில் உள்ள சான் மக்கள் சன்னதம் கொள்ளும் காட்சிகள் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன. கை கொட்டிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கும் பெண்களைச் சுற்றி நீண்ட வரிசையில் ஆண்கள் ஆடியபடியே இருக்கும் காட்சிகள் இப்பொழுதுகூட You Tubeஇல் காணக் கிடைக்கும். பொதுவாக இரவு முழுவதும் ஆடி, களைப்பும் உடல் வலியும் உச்சத்தைத் தொடும் தருணத்தில் இவர்களின் அகம் மீயியற்கைச் சக்திகளால் நிறைந்திருக்கும் ஓர் உலகத்தை உணர்கிறது.
இந்நிலையில்தான் இவர்கள் தங்களின் அல்லது மற்றவர்களின் மனம் உடல் சார்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்துகிறார்கள். ஆமாம், தங்களைச் சார்ந்தவர்களைக் குணப்படுத்துதல் இத்தகைய சடங்குகளின் ஒரு முக்கிய நோக்கம்.
இந்த நடனங்களை ஆராய்ந்து, ஆவணப்படுத்தியவர்களில் முக்கியமானவர் உளவியலாளர் பேராசிரியர் ரிச்சர்ட் கேட்ஸ் (Richard Katz). காலஹாரி பாலைவனத்தில் வாழும் சான் இன மக்களின் பல ஆடும் சடங்குகளில் கலந்து கொண்டு, அதில் ஈடுபட்டவர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, நடனம் முடிந்ததும் அவர்களுடன் தொடர்ந்து உரையாடி இந்த ஆட்டத்தின் சில புரிதல்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
இந்த மக்களின் வர்ணனைப்படி இந்த நீண்ட நடனங்கள் ‘நும் (Num)’ என்ற முதுகுத்தண்டின் அடியில் உறங்கும் ஒரு சக்தியை எழுப்பி விடுகிறது. இது முதுகுத்தண்டின் வழியாக மேல் எழும்பி கழுத்தும், தலையும் சேருமிடத்தில் சென்று சேர்கிறது. இந்த நிலையை ‘கியா (Kia)’ என்று இவர்கள் அழைக்கிறார்கள். இந்த ‘நும்’ என்ற சக்தியின் வீர்யத்தைக் கொண்டே மனம், உடல், வேட்டை, வானிலை, சமூகம் சார்ந்த பல பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. ‘கியா (Kia)’ என்ற இந்த மாறுபட்ட தன்னுணர்வு நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த மக்கள் இவ்வாறு வர்ணிக்கிறார்கள்.
கொதித்து, மிகச் சூடாக ஏறும் ‘நும்’ எங்கள் அங்கங்களை நடுங்கச் செய்யும். தாளமுடியாத வலியுடன் தான் இந்தச் சக்தி எங்களிடம் ஆவிர்பவிக்கிறது. ஆனால், இந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் செய்ய இயலாத பல செயல்களை எங்களால் செய்ய இயலும். தீயோடு விளையாட முடியும். எங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பீடித்திருக்கும் பிணிகள் துல்லியமாகப் புலப்படும். அவற்றை அடையாளம் கண்டு, உறிஞ்சி வெளியேற்றுவோம். ‘கியா’ என்ற இந்த நிலையில் பல தூர தேசங்களுக்குக் கூடப் பயணப்படுவோம். எங்கள் கடவுள் ‘காவ் நா’ (Gao Na) மற்றும் எங்கள் மூதாதையர்கள் உறையும் வான் உலகிற்குச் சென்று எங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்போம்.
கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் இது போன்ற சடங்குகள் உடலில் டோபமைன் (Dopamine), செரோடோனின் (Serotonin) போன்ற ஹார்மோன் மற்றும் நரம்புக் கடத்திகளை (Neurotransmitters) அதிகப்படுத்துவதாகவும் அதன் விளைவாக மன உளைச்சல் குறைந்து மனம் மற்றும் உடல் நலன் பேணப்படுவதாகவும் கூறுகிறது.
நரம்பியல் ஆராய்ச்சிகள் இது போன்ற தன்னுணர்வு மாறும் தருணங்களில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள், அதன் பலன்கள் ஆகியவற்றைப் பட்டியலிட ஆரம்பித்திருக்கிறது. உதாரணத்திற்கு, ஆழ் நிலைத் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும் பொழுது நரம்பணுக்களின் செயல்பாடுகள் நாம் நிதமும் உணரும் தன்னுணர்வின் போது இருக்கும் நரம்பணுச் செயல்பாட்டிலிருந்து மாறுபடுகிறது என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தியானத்தில் posterior superior parietal lobe என்ற மூளையின் ஒரு பகுதியில் நரம்பணுக்களின் செயல்பாடுகள் மட்டுப்படுகின்றன. மூளையின் இப்பகுதியின் பிரதான செயல் என்னவென்றால் ‘நான்’ மற்றும் என் புறச்சூழலை பிரிக்கும் எல்லைக்கோட்டை இப் பகுதிதான் வரைகிறது. இங்கே நரம்பணுக்களின் செயல்பாடுகள் சற்றுச் சாந்தம் அடையும் பொழுது ‘நான்’ என்கிற உணர்வு புறச்சூழலைப் பிரிக்கும் கோட்டைத் தாண்டி விரிகிறது. இதன் விளைவாக ஆழ் நிலைத் தியானம் பயில்பவர்கள் தங்கள் அகம் விரிந்து பிரபஞ்சம் ஆனதும், நான் மட்டுமே உள்ளேன் என்ற மிக ஆழ்ந்த, அவர்களைப் பொறுத்தவரை ‘உண்மையான’, உணர்வுகளைப் பெறுகிறார்கள் என்று சில சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆகவே, மனம் மற்றும் உடல் சார்ந்த அசௌகரியங்களை நீக்குவதன் மூலமாகவும், மனம் மற்றும் உடல் நலன் பேணுவதாலும் இது போன்ற தன்னுணர்வை மாற்றும் சடங்குகள் இயற்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
(தொடரும்)
___________
உசாத்துணை
Richard Katz, Boiling Energy: Community Healing among the Kalahari Kung, Harvard University Press, 1982
William James, The Varieties of Religious Experience: A Study in Human Nature, Penguin Classics, 1983
David Lewis-Williams, The Mind in the Cave, Thames and Hudson, 2004
Robert C. Fuller, Spirituality in the Flesh: Bodily Sources of Religious Experiences, Oxford University Press, 2008