பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வேட்டைச் சமூகங்களை வழி நடத்திய மாந்திரீகம் உள்ளுணர்வு (Intuition) சார்ந்தது என்பது சில ஆய்வாளர்களின் வாதம். இன்றைய காலத்தில்கூட உள்ளுணர்வின் உந்துதலால் நாம் பல முடிவுகளை எடுக்கிறோம் என்று டேனியல் கானெமான் (Daniel Kahneman) போன்ற நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர்கள் ஆணித்தரமாக நிரூபித்திருக்கின்றனர். உள்ளுணர்வால் எடுக்கப்படும் இந்த முடிவுகள் தவறாகப் போவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றாலும் சட்டென்று மனத்தில் உதயமாகும் உபாயங்கள் ஆபத்துகளிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் புதிய பாதைகளை அடையாளம் காணவும் பேருதவியாக இருக்கிறது. இந்த உள்ளுணர்வு சார்ந்த உபாயங்களும், வழிகளும் தோன்றும் விதம் மர்மமாக இருந்தாலும் இதன் அடித்தளம் நம் அகத்தில்தான் உள்ளது.
நிதமும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி உள்ள உலகத்திலிருந்து கண்டும், கேட்டும், முகர்ந்தும், ஸ்பரிசித்தும் பல்வேறு செய்திகளை நாம் கிரகித்துக் கொண்டே இருக்கிறோம். இவற்றில் சிலவற்றை மட்டுமே ‘நாம் உள்வாங்குகிறோம்’ என்ற எண்ணத்தோடு மனத்தில் பதிக்கிறோம். ஆனால், பலவற்றை ‘நாம்’ அறியாதவாறே நமது ஆழ்மனம் உள் வாங்கிக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் நம் தன்னுணர்வு தடம் மாறும்பொழுது ஆழ் மனத்தில் சேமித்து வைத்திருந்த காட்சிகளும், அனுபவங்களும் தானாகவே மேல் எழும்புவதுண்டு. புது வெள்ளம் அடித்துக் கொண்டு வரும் கூளத்தைப்போலப் பல்வேறு காட்சிகள், ஓசைகள், சுவை போன்றவை சேர்ந்துக் கோர்க்கப்பட்ட ஓர் அர்த்தமற்ற, சித்திரத்தையே நாம் பல நேரங்களில் காண்போம். கனவு நிலை, விழிப்பிலிருந்து உறங்கச் செல்லும் முன் உள்ள இடைநிலை (Hypnagogic state) போன்ற நிலைகளில் இவை ஆழ் மனத்திலிருந்து எந்தத் திசையும், அமைப்பும் இல்லாமல் கொப்பளிப்பதை நம்மில் பலரால் உணர முடியும்.
ஆனால், ஒலிகள் மூலமாகவோ, பல மணி நேரம் தொடர்ந்து ஆடும் சிறு நடனத்தின் மூலமாகவோ, காளான் அல்லது பிற தாவரங்களில் இருந்து பெறப்பெற்ற உளமாற்றிகளை (Psychedelics) உட்கொண்டோ அல்லது பிற வழிகளிலோ தன்னுணர்வை வேறு பல தளங்களுக்குக் கொண்டு செல்லும் தொல் மதத்தின் மாந்திரீகன் இந்த ஆழ்மனத்திலிருந்து எழும் பிரவாகத்தில் ஒரு கட்டமைப்பைக் கண்டான். பல ஆண்டுகளாகப் பயிற்சிகள் மூலம் கொம்பு சீவப்பட்ட அவன் உள்ளுணர்வு இந்தக் காட்சிச் சிதறல்களையும், ஆழ் மனத்தில் தேங்கி இருக்கும் தரவுகளையும் சலித்து ஓர் அர்த்தமுள்ள காட்சியாக அல்லது கதையாக வடிவமைத்துக் கொண்டது. இதன் மூலமாகவே அவன் தன் குழுவிற்கு வழிகாட்டினான்.
இந்தத் திறன் மரபியல் மாற்றத்தினால் உண்டானதா அல்லது மூளையில் தனித்தனியாக இருந்த பல கணுக்கள் (modules) – உதாரணத்திற்கு, இயற்கையைப் பற்றிய அறிவு, கல் ஆயுதங்கள் தயாரிப்பு, உறவு மற்றும் நட்பு போன்றவை பற்றிய நுண்ணுணர்வு கொண்ட தனித் தனிக் கணுக்கள் – திடீர் என்று ஒன்றோடு ஒன்று ஊடாடி ஒரு முழுமையான திறனாகப் பரிமளித்ததா அல்லது பல்லாயிரம் ஆண்டுகளாக மெதுவாகத் திரண்டு வந்திருக்கும் திறனா என்பதைப் பற்றிப் பல சர்ச்சைகள் இருக்கின்றன. ஆனால், இந்தச் சர்ச்சைகளைத் தாண்டி ஒரு விஷயம் புலனாகிறது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் ஏற்பட்ட பல புறச்சூழல் நெருக்கடிகளை (டோபா எரிமலை வெடிப்பு அல்லது சட்டென்று தோன்றி மறையும் பனி யுகங்கள் போன்ற) சந்திக்க மனித அகத்தில் உண்டான இத்திறன் பேருதவியாக இருந்திருக்கிறது.
இதை ஆராயும் அறிஞர்கள் கூறுவது இதுதான். பெரும் பருவநிலை மாற்றங்களால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, தடாலடியாகக் குறைந்த ஜனத்தொகை ஆகியவற்றைச் சமாளிக்க சிதறி இருக்கும் மற்றக் குழுக்களோடு பல தேவைகளுக்காக ஊடாடுவது இன்றியமையாததாகிப் போனது. மிகவும் கொந்தளித்துப் போய் இருந்த சூழலில் இத்தகையத் தொடர்புகளை உருவாக்கி அதை வலுப்பெறச் செய்வது பல குழுக்களின் முக்கிய நோக்கமாக உருவெடுத்தது. இதற்குப் பிற குழுக்களைப் பற்றிப் பலதரப்பட்டச் செய்திகள் மற்றும் தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இந்தத் தகவல்களை நேராகப் பெறுவதைத் தாண்டி நுண்ணுணர்வினால் மேலும் அறிவது ஒரு குழுவிற்குக் கூடுதல் பயன்களைப் பெற்றுத் தரக்கூடும். தொல் மாந்திரீகம் மூலம் அது சாத்தியமானது. கடும் சூழல் கொண்ட கற்காலத்தில் குழுக்கள் உயிர் வாழ உதவியதால் இத்தகைய திறன் இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதே சில ஆய்வாளர்களின் கருத்து.
இத்தகைய திறனைக் கற்காலத்தில் வாழ்ந்த மாந்திரீகன் கூர்மை ஆக்கிக் கொண்டாலும் குழுவில் பலருக்கு இத்திறன் இருந்திருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. சென்ற நூற்றாண்டு வரையில்கூட உள்ளுணர்வு சார்ந்த இந்தத் திறனைக் கண்ட பல ஆய்வாளர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்க்டிக் பகுதியில் வாழும் எஸ்கிமோக்களுடன் பல ஆண்டுகள் வாழ்ந்தார் டென்மார்க் நாட்டின் பீட்டர் ப்ரூஷென் (Peter Freuchen). ஒரு எஸ்கிமோ பெண்ணை மணந்து, இரு பிள்ளைகளுக்குத் தந்தையாகி, இந்த மக்களின் பல சுக, துக்கங்களில் பங்கெடுத்து அவர்களோடு ஒருவராகவே ஆகி விட்டவர் அவர். கிரீன்லாண்டில் வசிக்கும் இந்த இனுயிட் (Inuit) மக்களின் வாழ்வியலை நேரடியாகக் கண்டு தன் அனுபவங்களை ஒரு புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறார். உலகத்தின் கூரையில், பனி சூழ்ந்த பிரதேசத்தில் வாழும் இந்த மக்களின் குடும்பக் கட்டமைப்பு, நம்பிக்கைகள், சடங்குகள், சட்டங்கள் என்று பலவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறார்.
இவரின் அனுபவத்தின்படி இம்மக்களின் மாந்திரீகன் மட்டும் அல்லாமல் சாதாரணமானவர்கள்கூடப் பல நேரங்களில் சன்னதம் கொள்கிறார்கள். இந்நிலையை மிகப் புனிதமாகக் கருதும் இவர்கள் மாந்திரீகனுக்குக் கொடுக்கும் அதே மரியாதையைச் சன்னதம் கொண்ட அந்தச் சாமானியனுக்கும் அளிக்கிறார்கள். தன்னுணர்வு மாறு கொண்ட அந்த நிலையில் அந்த மனிதர் கண்ட காட்சிகளைப் பற்றிய விவரங்களைக் கவனத்தோடு கேட்டுக் கொள்கிறார்கள் மற்றக் குழுவினர். பல நேரம் இவற்றில் ஆச்சரியகரமான உண்மைகள் வெளி வந்திருக்கின்றன என்கிறார் பீட்டர். ஒரு முறை இவரின் சக ஆர்க்டிக் பிரயாணியான ராஸ்முசன் (Knud Rasmussen) மற்றும் அவரது குழு ஆர்க்டிக் பகுதியில் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டிருந்தனர். ஒரு மாலை வேளையில் பீட்டரும் அவரது நண்பர்களும் ராஸ்முசன் எப்பொழுது திரும்புவார் என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்தக் குழுவில் இனலுக் என்கிற ஒரு வயதான பெண் கூடாரத்திலிருந்து திடீர் என்று வெளியேறி சன்னதம் கொண்டு பாடத் துவங்கினாள். இதற்குப் பின் நடந்ததை பீட்டர் இவ்வாறு வர்ணிக்கிறார்
‘நாங்கள் வெளியே சென்று பார்த்தபோது கடும் குளிரில், நிலவின் ஒளியில், மேல் அங்கி கூட அணியாத இனலுக் தள்ளாடியபடியே பாடிக் கொண்டிருந்தாள். குளிர் காற்றில் அவளின் இருண்ட கேசம் அவள் முகத்தில் அலை அடித்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் சாதாரண நிலைக்குத் திரும்பினாள். ‘ராஸ்முசனின் குழு இங்கே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் குழுவில் இருவரைக் காணவில்லை’ என்றாள். ‘ராஸ்முசன் காணாமல் போய் விட்டாரா?’ என்று நான் கேட்டேன். ‘அவரை எந்தப் பனிப்பாறையாலும் வெல்ல முடியாது, வேறு யாரோ இருவர்’ என்றாள் இனலுக். மிகச் சோர்ந்த மனதோடு படுக்கச் சென்றேன். ஆச்சர்யமாகச் சில மணி நேரத்திற்குள்ளாகவே ராஸ்முசன் என் கூடாரத்திற்குள் தலையை நீட்டினார். பல காலம் கழித்து நாங்கள் மீண்டும் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். ‘எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா?’ என்றேன். ‘இல்லை குழுவில் இருவர் இறந்து விட்டனர்!’ என்றார் ராஸ்முசன்’.
இந்தத் திறன் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் வேட்டைச் சமூகத்திற்கும், அதன் மாந்திரீகனுக்கும் மட்டும் உண்டானது அல்ல. நாம் வாழும் இக்காலத்திற்கும், வாழ்க்கைக்கும், ஏன் பல நவீனக் கண்டுபிடிப்புகளுக்கும் பேலியோலிதிக் (Paleolithic) காலத்தில் ஏற்பட்ட இந்த அகத்தின் தாவல் உதவுகிறது. ஆழ் மனத்திலிருந்து கட்டற்ற ஊற்றுபோலப் பீறிடும் இந்தத் துண்டுகளை இக்காலத்து விஞ்ஞானிகள்கூட உணர்ந்து அதைத் தங்களுக்கு உபயோகமாகும் வழியில் வடிவமைத்துக் கொள்கின்றனர்.
உதாரணத்திற்கு, 1865ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஆகஸ்ட் கேக்குலே (August Kekule) கரிம வேதியலின் முக்கிய மூலக்கூறான பென்சீனின் (Benzene) அமைப்பைக் கண்டுபிடித்தார். அது வட்ட வடிவமானது என்பதே அவரின் கண்டுபிடிப்பு. இது எப்படி நிகழ்ந்தது என்பதைப் பற்றி 1890ஆம் ஆண்டு அவரே கூறி இருக்கிறார்.
‘வேதியியல் பாடப்புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் மனம் வேலையில் செல்லாமல் எங்கோ இருந்தது. கதகதக்கும் கணப்பை நோக்கித் திரும்பி உட்கார்ந்து சிறு தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். எப்பொழுதும்போல என் கனவிலே அணுக்கள் ஆடத் துவங்கின. இது போன்ற காட்சிகளுக்கு நான் ஏற்கெனவே பழகிப் போயிருந்தேன். அன்று கனவில் நான் கண்ட அணுக்களின் நடனத்தில் ஒரு மாறுதலைக் கண்டேன். பாம்பைப்போலப் பின்னத் துவங்கின அவை. நான் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு பாம்பு தன்னுடைய வாலை விழுங்கியது. சட்டென்று விழித்துக் கொண்டேன். அன்றைய இரவு முழுவதும் நான் கண்ட காட்சியை (பென்சீன்) கட்டமைப்புச் சார்ந்த ஒரு கருதுகோளாக வடிவமைப்பதில் செலவானது.’
தன்னுணர்வு புதுத் தளங்களை அடைவது கடினமான புறச்சூழலில் மனிதன் வாழ எவ்வாறு உதவியிருக்கும் என்ற கேள்விக்கான பதில் அடுத்த பகுதியிலும் தொடரும்.
(தொடரும்)
___________
உசாத்துணை
Mike Sutton, Snakes, sausages and structural formulae, Chemistry World, 9th October, 2015.
Michael Winkelman, Shamanism and cognitive evolution, Cambridge Archeological Journal, 12(1), April 2002
Peter Freuchen, Book of the Eskimos, Fawcett Crest Book, 1961