Skip to content
Home » இயற்கையின் மரணம் #18 – மனக் குகையின் ஓவியங்கள்

இயற்கையின் மரணம் #18 – மனக் குகையின் ஓவியங்கள்

குகைய ஓவியங்கள்

பொதுவாகவே மாந்திரீகன் முன்னின்று நடத்தும் சடங்குகளில் குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பதைத் தாண்டி, குழுவைச் ‘சேர்த்துக் கட்டுவது’ தொல் மாந்திரீகனின் முக்கியப் பணி. இதற்குப் பசைபோல பயன்படுவது தொல்கதைகளும், குலச்சின்னங்களின் கீர்த்தியைப் பற்றிய பேச்சும், குழுவினரின் அகத்தைக் கொக்கிபோல இழுக்கும் குறியீடுகளும், பாடல்களும், சிறு நடனங்களும் கலந்த மாந்திரீகன் நடத்தும் ஓர் ஆற்றுகை.

இதில் குழுவினர் வெற்றுக் காட்சியாளர்கள் அல்ல. அவர்களுக்கும் அதில் ஒரு பங்கிருக்கிறது. தன்னுணர்வு தளம் தாவிச் செல்லும் இந்நிலையில், இவர்கள் காணும் காட்சிகளும், கிடைக்கும் அனுபவங்களும் மற்றவர்களோடு பகிரப்படுகிறது. இவற்றின் அர்த்தங்கள், குழுவினர் அனைவரையும் இணைக்கும் ஒரு கலாசார அடித்தளத்தின் பேரிலேயே, புரிந்துகொள்ளப்படுகின்றன. மாந்திரீகனின் அபரிமிதமான விஷய ஞானமும் இந்த அர்த்தப்படுத்தலை நெறிப்படுத்துகிறது. இந்தக் கூட்டு முயற்சியின் விளைவாக, தனி மனிதனைத் தாண்டி குழு என்ற அடையாளம் பலப்படுத்தப்படுகிறது. தொல் மாந்திரீகத்தை ஆராய்ந்த பலர், மாந்திரீகனின் இந்தக் குழுவைப் பிணைக்கும் செயலாற்றல், பல தொல் வேட்டைச் சமூகங்கள் தங்களை மிக அழுத்தமான புறச்சூழல்களில் தகவமைத்துக் கொள்ள உதவி இருக்கிறது என்று கருதுகிறார்கள்.

இந்தக் கருதுகோளுக்குப் பலம் சேர்க்கும் வகையில் கடந்த பல ஆண்டுகளாகத் தரவுகள் சேர்ந்த வண்ணம் உள்ளன. சான் வேட்டைச் சமூகத்தின் ஓவியங்கள் தொடங்கி ஐரோப்பாவின் குகை ஓவியங்கள் வரை ஆராய்ந்த தெற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் லூயிஸ் வில்லியம்ஸ் இதில் முதன்மையானவர். நரம்பணுவியல், பழங்குடி மாந்திரீகத்தின் கோட்பாடுகள், பிளீத்தொசீன் காலத்து இறுகிய, கொந்தளிப்பான புறச் சூழல் ஆகியவற்றைக் கோர்த்து இந்தக் குகை ஓவியங்களைப் பற்றி ஒரு நுட்பமான கோட்பாட்டை முன் வைத்திருக்கிறார் பேராசிரியர் வில்லியம்ஸ்.

இவரது வாதத்தின் முக்கியப் புள்ளி, கற்கால ஓவியங்கள் பல வேட்டைச் சமூகங்களின் தொல் மாந்திரீகம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களின் வெளிப்பாடு என்பதே. இந்த ஓவியங்களில் காணப்படும் பல விசித்திரக் கூறுகளை இந்தத் தொடரின் ஒரு பகுதியில் விவரித்திருக்கிறேன். வில்லியம்ஸின் பார்வையில் இந்த அம்சங்களில் பல தொல் மாந்திரீகத்தோடு தொடர்புடையவை. தன்னுணர்வைப் பல படிகள் கொண்ட பாதையாக உருவகப்படுத்தி, ஒவ்வொரு தளத்திலும் தோன்றும் காட்சிகளைக் குகை ஓவியங்களோடு இணைத்து ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்.

பல கற்கால ஓவியங்களில் காணப்படும் புள்ளிகள், வெட்டுக் கோடுகள், சுருள் வட்டங்கள் போன்றவை தன்னுணர்வுத் தளம் மாறும்பொழுது காணப்படும் வடிவங்கள். இந்தப் பிம்பங்கள் பல கோடி ஆண்டுகளாக ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் வாயிலாக நம் நரம்பணுக்களில் பிணைக்கப்பட்டவை. ஆகையால் அகத்தில் தோன்றும் இவ்வடிவங்கள் மானுடத்திற்கே பொதுவானது. இன்றும்கூட ஆராய்ச்சிச் சாலைகளில் அல்லது மற்ற சூழல்களில் தன்னுணர்வு மாறும்பொழுது இதே வடிவங்களைக் காண இயலும் என்று பல ஆராய்ச்சி முடிவுகளை மேற்கோள்காட்டி, வில்லியம்ஸ் வாதிடுகிறார். இதை முதல் படி என்று கருதலாம்.

இதற்கு அடுத்த படிகளில் இவ்வடிவங்கள் மறைந்து அல்லது உருமாறி ஆழமான சுழல் அல்லது இருள் நிறைந்த சுரங்கமாகத் தோன்றுகிறது. இது, அதைக் ‘காண்பவர்கள்’ கூற்றின்படி உண்மைதான் என்று நிரூபிக்க இன்றளவில் எஞ்சி இருக்கும் வேட்டை சமூகங்களைச் சார்ந்த மாந்திரீகனின் அனுபவங்களை ஆதாரமாகத் தொகுத்து அடுக்கி இருக்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

உதாரணத்திற்கு, தென் அமெரிக்காவின் கோனிபோ (Conibo) இனத்தவர் ‘ஒரு பெரும் விருட்சத்தின் வேர்களைத் தொடர்ந்து கொண்டே நிலத்தடியில் செல்வோம்’ என்கிறார்கள். ஹட்சன் பே (Hudson Bay) அருகே வசிக்கும் எஸ்கிமோக்கள், ‘பூமிக்குள் துளையிடப்பட்ட ஒரு குழாயில் வழுக்கிக் கொண்டே கீழே செல்வோம்’ என்கிறார்கள். இதுபோல உலகின் பல பாகங்களிலிருந்து பல வர்ணனைகள். புறத்தில் உள்ள குகைகள் ஓவியங்களால் நிரப்பப்பட்டதற்குக் காரணம், மனிதன் தன் அகத்தில் கண்டெடுத்த குகையே என்பதே வில்லியம்ஸின் நிலைப்பாடு.

இவற்றையெல்லாம் தாண்டி ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்ட குகைகளின் அமைப்புகூட தொல் வேட்டைச் சமூகங்களைப் பற்றிய சில தகவல்களைத் தெரிவிப்பதாக வில்லியம்ஸ் கருதுகிறார். பெரும்பாலான குகைகளில் முன் பகுதிகளில் சில ஓவியங்களே காணப்படுகின்றன. இந்த விசாலமான இடங்களில் பலர் ஒன்று கூடி நடன அசைவுகள், சிறு தோல் பறைகளின் தொடர் ஓசைகள், பாடல்கள் மூலமாகத் தங்கள் தன்னுணர்வுகளைத் தளம் கடத்தி இருக்கக்கூடும். அடிக்கடிப் பலர் சேர்ந்து நடத்தும் இந்த நிகழ்வு குழுவின் பிணைப்புகளை வலுப்படுத்தும். குகையின் குறுகலான மற்ற பகுதிகளில் மாந்திரீகனோ அல்லது வேறு சிலர் மட்டுமே சென்று வந்திருப்பார்கள்.

ஆழ்குகையின் இறுக்கமான இடங்களில் இவர்களின் மனத்தின் கட்டுகள் அவிழ, தங்கள் அகத்தில் கண்டவற்றை ஓவியங்களாக வரைந்தனர். இந்தக் கோட்டோவியங்கள் மனிதனின் அகம் கண்டு கொண்ட ஆழ்ப்படிமங்களின் வெளிப்பாடு. பிற்காலத்தில் தெய்வங்கள், மதங்கள் என்று விரிந்த பெரும் விருக்ஷத்தின் வேர் பருவநிலை மாறுபட்டுக் கொண்டே இருந்த பிளீத்தொசீன் காலத்திலிருந்துதான் தொடங்கியது என்று வில்லியம்ஸ் போன்ற ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

முடிவாக வில்லியம்ஸ் முன் வைப்பது இதுதான். ஆழ் குகைகள், தன்னுணர்வு மாறிய நிலை, மர்மமான ஓசைகள், இருளும் ஒளியும் சேர்ந்தாடும் நடனம், மிக மெதுவாக மெல்லிய வெளிச்சத்தில் வெளிப்படும் மிருகங்களின் ஓவியங்கள் போன்றவற்றின் கூட்டுத் தாக்கத்தை நாம் ஏதோ ஒரு விதத்தில் கற்பனை செய்துகொள்ள முடியும் என்றாலும், பல புலன்களைத் தீண்டிய இந்தச் சூழல் பேலியோலிதிக் மனிதனை எவ்வாறு பாதித்திருக்கக் கூடும் என்பது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

பல நம்பிக்கைகள் தோய்ந்த அவ்வுலகத்தின் சடங்குகளையோ, குகைகளில் காணப்படும் குறியீடுகளின் அர்த்தத்தையோ நம்மால் முழுவதும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், இந்தப் பிம்பங்களைத் தாண்டி இயற்கை படைத்த இந்தக் குகைகளைச் சமூகம் எப்படி உபயோகித்துக் கொண்டது, இவ்வகையான தொல் மாந்திரீகச் சடங்குகளால் அந்தச் சமூகம் பெற்ற பயன்கள் என்ன என்று ஆராய்வது பல நல்ல புரிதல்களை நமக்கு அளிக்கும் என்பதே வில்லியம்ஸ் போன்றோரின் எதிர்பார்ப்பு.

கடந்த பல பகுதிகளாக, மனித இனத்தின் பல வளர்ச்சிக் கட்டங்களை விவரித்தேன். இரு கால்கள் கொண்டு நடப்பது முதல், கல் ஆயுதங்கள் தயாரிப்பது வரை, சடங்குகளிலிருந்து குகை ஓவியங்கள் வரை என்று பல கட்டங்கள். இந்த முக்கிய கட்டங்கள் அனைத்திலும் பருவநிலையும் அதில் ஏற்படும் மாற்றங்களும் ஒரு பெரும் பங்கை வகித்திருக்கிறது. இந்தக் கருத்தையே இத்தொடர் இதுவரை அடிக்கோடிட்டது.

ஆனால், பயணம் முடியவில்லை. பருவநிலை தன் பங்கை ஆற்றிக் கொண்டே இருக்கிறது. பல லட்சம் ஆண்டுகளாகப் பனிப்பாறைகளின் கிடுக்குப் பிடியில் உறைந்த உலகம் ஏறக்குறைய 20,000 ஆண்டுகளுக்கு முன் உருகத் தொடங்கியது. இளகும் பருவநிலை மனிதனை மீண்டும் உந்தியது, அடுத்த கட்டத்தை நோக்கி…

(தொடரும்)

___________

உசாத்துணை
David Lewis-Williams, The Mind in the Cave, Thames and Hudson, 2004

பகிர:
ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *