இப்பொழுது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும் தானியங்கள் முதன் முதலில் பயிரிடப்பட்டது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான். அதுவும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில். லேவந்த் (Levant) என்று அழைக்கப்படும் இன்றைய சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் கோதுமை, சீனாவில் நெல், தென் அமெரிக்காவில் சோளம் போன்று பல பயிர்கள், உலகின் வெவ்வேறு பகுதிகளில், சொல்லி வைத்தால்போல், 10,000 ஆண்டுகளுக்கு முன் வேளாண் பயிராகப் பயிரிடப்பட ஆரம்பித்தது. எதனால் இந்த ‘திடீர்’ முயற்சி? முன்பே ஏன் இது நிகழவில்லை? இதற்குப் பருவநிலை ஒரு முக்கிய காரணம்.
கடந்த 25 லட்ச ஆண்டுகளின் பருவநிலை மாற்றங்களை ஒரு வரைபடமாக்கினால் தெளிவாக ஒரு காட்சி புலப்படும். பல லட்சம் ஆண்டுகளாகத் தத்தளித்துக் கொண்டு, உக்கிரங்களின் எல்லைகளை அடிக்கடித் தொட்டுக் கொண்டு நின்ற பருவ நிலை சற்றென்று கடந்த 10000 ஆண்டுகளாகச் சாந்தம் அடைந்துள்ளது என்பதே அந்தக் காட்சி.
ஏறக்குறைய 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன், அதாவது பிளீத்தொசீன் காலத்தின் தொடக்கம் முதல், 20,000 ஆண்டுகள் முன் வரை பூமியின் வெப்பநிலை மிகக் குறைந்து இருந்தாலும் சீராக இருந்ததில்லை. அதன் ஏற்ற இறக்கங்கள் ஒரு நீண்ட கம்பளிப் பூச்சியின் உடலில் உள்ள ரோமங்கள்போல வரைபடத்தில் மண்டிக் கிடக்கும். பின்பு 15,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பூமியின் வெப்பநிலை அதிகரித்தது, மழையும் அதிகமாகப் பெய்யத் தொடங்கியது. Bolling – Allerod Interstadial என்று இந்தக் காலகட்டம் அழைக்கப்படுகிறது. அப்புறம் திடீரென்று ஒரு சரிவு. உலகின் பல பகுதிகளில் வெப்பம் குறைந்து, ஜில்லிட்டது. 12,800 ஆண்டுகள் முன் தொடங்கிய இந்தக் குளிரான காலகட்டம் 1300 ஆண்டுகள் நீடித்தது. Younger Dryas என்ற இக்காலகட்டத்தை முன்பொரு பகுதியில் விவரித்தேன். இதற்குப் பின் பூமியில் ஒரு நீண்ட, மித வெப்பமான சூழல் உருவாகியது. ஹோலோசீன் (Holocene) என்று அழைக்கப்படும் நாம் இருக்கும் இக்காலம்தான் கடந்த 25 லட்சம் ஆண்டுகளில் எப்பொழுதுமே காணக் கிடைத்திராத ஒரு வசந்த காலம். வெப்பநிலைக் கோடு மண்புழு போல வழுவழுப்பாக வரைபடத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டம். இந்தக் காலஇடைவெளியில்தான் நாம் நம் நாகரீகத்தின் பல உச்சங்களுக்கான அடித்தளத்தை அமைத்தோம். குறிப்பாக விவசாயம்.
உயிரோட்டம் உள்ள குதிரைகளையும், எருதுகளையும் குகைகளில் வரையத் தெரிந்த நமக்கு, கூரான கல் ஆயுதங்களை உண்டாக்கிய நமக்கு, அகத்தின் பல கதவுகளைத் திறக்க இயன்ற நமக்கு விதைகளை நிலத்தில் தூவி, களை எடுத்து, நீர் பாய்ச்சி, அறுவடை செய்ய மட்டும் முடியாமல் போனது ஏன்? இந்த மர்மத்தை அவிழ்ப்பதற்கு நாம் மூன்று கூறுகளை ஆராய வேண்டும்.
ஒன்று, இப்பொழுது புழங்கும் தானியம் மற்றும் பிற உணவு வகைகளின் காட்டு மூதாதையர்களின் தோற்றமும், விரிவும். பிளீத்தொசீன் – ஹோலோசீன் கால எல்லையில் பூமியின் பல பகுதிகளில் வெப்பம் ஏறத் தொடங்கியதோடு மட்டும் இல்லாமல் மழையின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தாவரங்களின் அமைப்பு, அவை வளரும் சூழல் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. உதாரணத்திற்கு, கடந்த பனியுகத்தில் இப்பொழுதுபோல் வறண்டு இருந்த சஹாரா பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. சிறு குளங்களும், புல் வெளிகளும், சிறு மிருகங்களும் நிரம்பிய வளமையான பகுதியாக மாறியது சஹாரா. ஏறக்குறைய 8000 வருடங்களுக்கு முன்புகூட இங்கே வேடுவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.
உலகின் பல பகுதிகளில் காடுகளின் அமைப்பு மாறத் தொடங்கியது. வட மேற்கு ஐரோப்பாவில் பனி யுகங்களில் தழைத்த ஊசியிலைக் காடுகள், பின் நகர்ந்து தற்போது இருக்கும் ஸ்கேண்டிநேவியன் பகுதிகளுக்குக் குடியேறின. இவை காலி செய்த இடங்களில் அவசர அவசரமாக இலை உதிர் மரங்களான ஹேசல், ஓக் போன்றவை ஆக்கிரமித்தன.
ஆனால் இவற்றை எல்லாம் விட நம் வரலாற்றின் ஒரு முக்கியமான நிகழ்வுக்கு அடித்தளம் அமைக்கப் போகும் சில தாவரங்கள், இந்தப் பருவநிலை மாற்றங்களால், ஆரவாரம் இன்றி உலகத்தில் பல இடங்களில் பரவத் தொடங்கியது. இவை இப்பொழுது பயிரிடப்படும் தானியங்கள், மற்றும் பல உண்ணத்தக்க பயிர் வகைகளின் காட்டு மூதாதையர்கள். பிளீத்தொசீன் பனியுகத்தில் இயற்கை அளித்த சில புகலிடங்களில் வளர்ந்துகொண்டிருந்த இவை பனியுகத்தின் முடிவில் மடை திறந்த நீர்போல் பரந்து, விரிந்தது.
உதாரணத்திற்கு, மெக்ஸிக்கோவை எடுத்துக் கொள்வோம். 20000 வருடங்கள் முன்பு ஒரு வறண்ட, குளிர்ந்த பகுதியாக இருந்தது இது. ஆனால், 15000 ஆண்டுகளுக்கு முன்னர், பனியுகத்தின் முடிவில், இங்கே புதர்க்காடுகளும், சப்பாத்திக் கள்ளிகளும் தோன்றத் துவங்கின. இவற்றின் ஊடே அவரை, பரங்கிக்காய் மற்றும் மக்காச் சோளத்தின் மூதாதையான டீயோசிண்டே (Teosinte) என்ற தானியப் பயிரும் காட்டுப் பயிர்களாக வளரத் தொடங்கின.
இதேபோலச் சில பத்தாண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியாவில் எடுக்கப்பட்ட உள்ளகங்களில் காணப்படும் மகரந்தத்தை வைத்து 15,000 ஆண்டுகளுக்கு முன் அங்கே நிலவிய வானிலையையும், வளர்ந்த தாவரங்களின் தன்மையையும், எண்ணிக்கையையும் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.
வெப்பமும், மழையும் அதிகரிக்கத் தொடங்கிய இப்பகுதியில் கருவாலி, பிஸ்தா, பாதாம் போன்ற மரங்கள் வேரூன்றின. பிளீத்தொசீன் காலத்தில் மிக அரிதாகக் காணப்பட்ட உண்ணத்தக்க வேர்கள் கொண்ட நூல்கோல் போன்ற செடிகளும் பரவலாகத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். அது மட்டும் அல்லாமல் நிகழ் காலத்துத் தானிய வகைகளின் முன் வடிவான பலவிதப் புல் வகைகளும் தங்களின் பரப்பளவை அதிகரித்து இப்பகுதியில் மண்டிக் கிடந்தது.
கடல் போல் பரவிக்கிடந்த காட்டுக் கோதுமை, புல்லரிசி இவற்றை அணைத்தார்போல பாதாம், பேரிக்காய் மரங்கள், இவற்றின் ஊடே துள்ளித் திரியும் மான்கள் ஆகியவை அக்காலத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்களின் உணவுத் தேவையை முழுவதுமாகவே பூர்த்தி செய்திருக்கும். நிலத்தை உழுது, விதைத்து, தானியங்களை அறுப்பதற்கு அவசியம் ஏதும் எழவில்லை.
இரண்டாவதாக நாம் கணக்கில் கொள்ள வேண்டியது வளிமண்டலத்தில் கரிவளியின் அளவு. இதுவும் விவசாயத்தின் தோற்றத்தோடு தொடர்பு கொண்டது. இத்தொடரின் ஒரு பகுதியில் கரிம சுழற்சி எவ்வாறாகப் பருவநிலையைப் பாதிக்கிறது என்று கண்டோம். வளிமண்டலத்தில் உள்ள கரிவளியின் அளவை பனி உள்ளகங்கள் மட்டும் அல்லாது தாவரங்கள் இலைகள் மூலமாகக்கூட அனுமானிக்க முடியும். தாவரங்களின் இலைகளில் காணப்படும் இலைத்துளைகளின் (stomata) முக்கிய பணி வெளியே இருக்கும் கரிவளியை உள்ளிழுத்து ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது. சுற்றுச் சூழலில் கரிவளி குறைவாக இருக்கும் பட்சத்தில், எவ்வளவு வளியை உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உறிஞ்சுவதற்கு ஏதுவாக, இலைத்துளைகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். ஆனால், கரிவளியின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை குறைவாகதான் இருக்கும். ஆகவே, தொல்லுயிர் இலைகளில் உள்ள துளைகளின் எண்ணிக்கை ஒரு வகையில் நமக்கு அந்தக் காலகட்டத்தின் கரிவளியின் அளவைச் சுட்டிக்காட்டும்.
வளிமண்டலத்தில் கரிவளியின் அளவு குறையும்பொழுது பூமி குளிர்கிறது. இதன் தாக்கம் தாவரங்களின் வளர்ச்சியிலும் காணப்படும். ஏனென்றால் தாவரங்களின் உணவுத் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது கரிவளி. பல கணக்குகளின் படி பிளீத்தொசீன் காலத்தில் வளிமண்டலத்தில் கரிவளியின் அளவு சராசரியாக 160 முதல் 180 பிபிஎம் (parts per million) ஆக இருந்தது. சராசரி அளவைவிட இது குறைவே. ஆனால், ஹோலோசீன் காலகட்டத்தில் இதன் அளவு 270 பிபிஎம் ஆக உயர்ந்தது. இதனால் தாவரங்களின் வளர்ச்சியும், உற்பத்தியும் அதிகரித்தது. அதுவும், குறிப்பாக C3 தாவரங்கள் என்று அறியப்படும் வகையின் (ஒளிச்சேர்க்கை பாதைகள் சார்ந்து தாவர இனங்கள் C3 மற்றும் C4 என்று பாகுபடுத்தப்படுகின்றன. உலகின் பல முக்கியமான தானியப் பயிர்கள் C3 வகையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது) உற்பத்தி ஹோலோசீன் காலத்தில் 50 சதவிகிதம் வரை கூடியதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. அதாவது தானியப் பயிர்களும் மற்ற உணவுப் பயிர்களும் பிளீத்தொசீன் காலத்தைவிட ஹோலோசீனில் அதிகப் பயனை அளித்திருக்கும்.
மூன்று, விதைகளின் தன்மை. இப்பொழுது நாம் பயன்படுத்தும் பல பயிர்கள், நெல், கோதுமை உட்பட, அறுவடைக்குப் பின்பு தரையில் அடிக்கப்பட்டோ அல்லது ஆலைகளிலோதான் தோல் நீக்கப்பட்டு தானியங்கள் எடுக்கப்படுகின்றன . வயலில் தானியங்கள் அறுப்பவன் வரும்வரைக் காத்திருக்கின்றன. ஆனால், எப்பொழுதும் இதுபோல் இருந்தது இல்லை.
முன்பு காட்டில் வளர்ந்து கொண்டிருந்த இந்தப் புல்லரிசி வகைகள் திரண்டு, கனிந்தபின் தானாகவே வெடித்துத் தானியங்களை வெளியேற்றிவிடும். Seed shattering என்று இது அறியப்படுகிறது. இவற்றை அறுவடை செய்வது எளிதல்ல, சிந்தி இருக்கும் தானியங்களை நிலத்திலிருந்து திரட்டத்தான் முடியும். இந்தத் தன்மையை மாற்ற, இயற்கையாக ஏற்பட்ட மரபணு மாற்றங்களினால் சில நாற்றுகளிலிருந்து வெடிக்காத தானியங்களைத் திரட்டி அவற்றை வளர்த்து, பெருக்க வேண்டும். இதுபோலப் பயிரைப் பழக்க மனிதனுக்குப் பல நூறு ஆண்டுகள் தேவைப்படும். அதுவும், அந்த ஆண்டுகளில் பருவநிலை சீராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது இயலும்.
ஆனால், நாம் முன்பே கண்டதுபோல பிளீத்தொசீன் காலத்துப் பனியுகத்தில் பல இடைப்பனிக் காலங்கள் தோன்றினாலும் அவற்றின் தட்ப வெட்ப நிலை கடும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இப்பொழுது நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் பெரும் வெள்ளம், வறட்சி, அதி தீவிரப் புயல் போன்றவை பிளீத்தொசீன் காலத்தில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்ந்துகொண்டிருந்தது. இத்தகைய வானியல் சூழலில் பயிர்களைப் பழக்குவதோ அல்லது வளர்ப்பதோ மிகக் கடினம்.
(தொடரும்)
___________
உசாத்துணை
David Beerling, The Emerald Planet, Oxford University Press, 2007
Joan Feynman and Alexander Ruzmaikin, Climate stability and the origin of agriculture, in Climate change and agriculture, IntechOpen, 2019
Brian Fagan and Nadia Durrani, People of the Earth, Taylor & Francis, 2019
Steven Mithen, After the Ice, W&N, 2004
Jennifer Cunniff and others, Was low atmospheric CO2 a limiting factor in the origin of agriculture?, Environmental Archaeology, 15(2), 2010