Skip to content
Home » இயற்கையின் மரணம் #21 – பருவம் பயிர் செய்யும் – 2

இயற்கையின் மரணம் #21 – பருவம் பயிர் செய்யும் – 2

அபு ஹுரெய்ரா

அபு ஹுரெய்ரா (Abu Hureyra) 11500 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு கிராமம். ஏறக்குறைய 4500 வருடங்கள் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த ஓர் இடம். அதன் உச்சத்தில் 16 ஹெக்டர் பரப்பளவுக்கு விரிந்து 5000 பேர் வசிக்கும் ஒரு கிராமமாக உருக்கொண்டது. துரதிருஷ்ட வசமாக அதன் தொல்லியல் எச்சங்கள் இப்பொழுது நீருக்கடியில். 1970களில் சிரியா அரசாங்கம் யூப்ரடிஸ் நதியின் குறுக்காகக் கட்டிய ஓர் அணையினால் இந்தக் கற்காலக் கிராமம் மூழ்கியது. ஆனால், சமயோசிதமாகவும், பொறுப்புணர்வுடனும் அணை கட்டுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய சிரியாவின் அரசு அந்தப் பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு தொல்லியல் எச்சங்களை ஆராய பல தேசங்களைச் சார்ந்த வல்லுனர்களை அனுமதித்தது. அப்படி ஆராயப்பட்டதுதான் அபு ஹுரெய்ரா.

உலகில் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் நீண்ட காலம் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் அபு ஹுரெய்ரா முதன்மையானது. சிறு வட்ட பள்ளங்களின் மேல் கூரை அமைத்துக் கட்டிய வீடுகளில் தொடங்கி, பல அறைகளும், செங்கல் சுவர்களும், கெட்டியான கூரைகளும் கொண்ட வீடுகள் வரை இதன் பரிணாம வளர்ச்சி அங்கே காணக் கிடைக்கிறது. இவற்றையெல்லாம்விட முக்கியமாக, எப்படி ஒரு வேட்டைச் சமூகம் பருவநிலை மாற்றங்களினால் வேளாண் சமூகமாக மாறியது என்பது அபு ஹுரெய்ராவின் வரலாற்று அடுக்குகளில் கச்சிதமாகப் பதிந்திருக்கிறது. அங்கே தோண்டி எடுக்கப்பட்ட தானியங்கள், கல்லால் ஆன உரல்கள், உலக்கைகள், குழவிகள், வெயிலில் உலர்த்தப்பட்ட செங்கற்கள், எலும்பு மற்றும் கல் ஆயுதங்கள் போன்ற பல தொல்பொருட்கள் தெளிவாக ஒரு கதையைக் கூறுகின்றன.

பிளீத்தொசீன் காலத்தின் இறுதிப் பகுதியில், உலகின் பல பகுதிகள்போல, அபு ஹுரெய்ராவிலும் பருவநிலை சீராகத் தொடங்கியது. மாதம் மும்மாரி பெய்யாவிட்டாலும் வெயில் காலங்களிலும், இளவேனில் காலங்களிலும்கூட சீராக மழை பெய்ய ஆரம்பித்தது. அதன் விளைவாக வளமான காடுகளும், புற்கள் நிறைந்த பரப்புகளும் பச்சைக் கம்பளம்போல் விரிந்து கிடந்தது. இத்தகைய பருவநிலை வேட்டைச் சமூகங்கள் தழைத்து வாழ மிகவும் ஏதுவானதாக இருந்தது. வேட்டையாட அபரிமிதமான சிறு மிருகங்கள் மட்டும் அல்லாமல் எண்ணிக்கையில் அடங்கா உணவுத் தாவரங்கள் காட்டில் முளைத்தெழுந்தன. இந்தக் கட்டத்தில் அபு ஹுரெய்ராவில் வாழ்ந்தவர்கள் மட்டும் காட்டுக் கோதுமை, தானாகவே வளர்ந்து நிற்கும் சிறு தானியங்கள், பாதாம் என்று ஏறக்குறைய 250 வகையான தாவரங்களில் இருந்து தங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டனர். இன்றைய உலகில் 75 சதவிகித உணவு வெறும் 12 தாவரங்கள் மற்றும் 5 மிருகங்களிடம் இருந்து பெறப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளலாம்.

ஆனால், சில ஆயிரம் ஆண்டுகளில் இவை யாவும் மாறின. காரணம் Younger Dryas (YD).

12800 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பகுதிகள் மீண்டும் சில்லிடத் தொடங்கின. மத்திய க்ரீன்லேண்ட் பகுதியில் ஒரு வருடத்திற்குள்ளாகவே வெப்பம் 9 முதல் 14 டிகிரி சென்டிகிரேட் குறைந்தது. இதைப் போலவே மற்றப் பகுதிகளிலும் வெப்ப நிலை மிகக் குறுகிய காலத்திலேயே வெகுவாகக் குறைந்தது. பனிப்பாறைகள் சிதறியதால் பெரும் வெள்ளம் வட அமெரிக்க நிலத்தை ஆழமாகக் கீறி கடல் சேர்ந்தது. பல பகுதிகளில் நிலத்தின் கேசம் போல தழைத்து ஓங்கி நின்ற பெரும் காடுகள் தீக்கிரையாகின. இவையெல்லாம் பூமியின் மீது வீழ்ந்த ஒரு பெரிய வால் மீனின் விளைவா அல்லது மற்ற காரணங்களா என்பதைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் இந்த நிகழ்வின் தாக்கம் பெரும் மாறுதல்களுக்கு வித்திட்டது என்பதைப் பலர் ஒத்துக் கொள்கிறார்கள்.

வட அமெரிக்கக் கண்டத்தில் பல லட்சம் வருடங்களாகக் கோலோச்சிய பெரும் பாலூட்டிகள் – கம்பளி யானை, பெரிய நீர் நாய், கம்பளி காண்டாமிருகம், இப்பொழுது இருப்பதை விட உருவத்தில் இரு மடங்கு பெரியதாகவும், பத்து அடி அகலக் கொம்புகளையும் கொண்ட கடமான்கள் (elks) போன்ற பல விலங்குகள் காணாமல் போயின. வட அமெரிக்கக் கண்டத்தில் மட்டும் 32 வகையான பாலூட்டி இனங்கள் 2000 ஆண்டுகளில் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து போனது. பூமியின் மேற்கு அரைக்கோளத்தில் ஏறக்குறைய ஐந்தரை கோடி ஆண்டுகளாகத் திரிந்து வந்த குதிரை இனம் YDவிற்குப் பின் முற்றிலுமாக மறைந்தது. யூரேசியா கண்டத்தில் மட்டும் இவை பிழைத்து வளர்ந்தன.

YDயின் தாக்கம் மனிதனையும் விட்டு வைக்கவில்லை. மிக நுணுக்கமான கல் ஈட்டிகளைத் தயாரித்து வாழ்ந்து வந்த க்லோவிஸ் கலாச்சாரம் மறைந்தது. பழம் பெரும் அமெரிக்க இந்திய இனத்தின் இந்தத் திடீர் மறைவு YD நிகழ்வோடு சம்பந்தப்பட்டிருப்பதாகச் சில ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்கக் கண்டத்தின் பல இடங்களில் YD நிகழ்வு ஒரு கருப்புப் படலம் போலப் பூமியின் அடுக்குகளில் தென்படும். பிற அடுக்குகளை விட இந்த அடுக்கில் Carbon அல்லது கரிமத்தின் அளவு அதிகமாக இருப்பதே இந்தக் கருமை நிறத்திற்கான காரணம்.

மெல்லியப் பாய் போல விரிந்திருக்கும் இப்படலத்தின் கீழே, இன்னும் சொல்லப் போனால் பல இடங்களில் இந்தப் படிமத்தைத் தொட்டுக் கொண்டே, பல்வேறு வகையான க்லோவிஸ் ஈட்டிகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், படர்ந்து கிடக்கும் இந்தக் கருமையான பாய்ச்சுருளில் ஒரு கலாச்சாரமே சுருண்டுவிட்டது போல அந்த அடுக்கிற்கு மேலே எங்கேயுமே க்லோவிஸ் கலாச்சாரத்தைக் குறிக்கும் எந்தப் பொருட்களும் அகப்படவில்லை.

இந்த உலகளாவிய மாற்றங்கள் அபு ஹுரெய்ராவிலும் எதிரொலித்தது. மழை குறைந்து நிலம் வறண்டது. பல உணவுத் தாவரங்களுக்குப் புகலிடமாக இருந்த வனங்கள் அளவில் சுருங்கின. அலை அலையாய் ஆடிக் கொண்டிருந்த காட்டு கோதுமை மற்றும் பிற தானியப் பயிர்கள் மறைந்தது. அபு ஹுரெய்ராவின் மக்கள் சத்தில்லாத, அளவில் சிறிதான பருப்பு வகைகள் மற்றும் முன்பு யாரும் திரும்பிக் கூடப் பார்க்காத சில தானியங்கள் என்று பஞ்சம் பிழைக்க வந்தவர்களைப் போல உண்ண நேரிட்டது. இதைப் போன்ற கடுமையானக் கட்டங்களில் உயிர் வாழ மற்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். சில குழுக்கள் அப்படிச் செய்திருக்கவும் கூடும். ஆனால், YDயின் தாக்கம் பரவலாக இருக்கும் பட்சத்தில் மற்றப் பகுதிகளிலும் இதே சவால்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். ஆகவே, பலரும் அபு ஹுரெய்ராவில் தொடர்ந்து வாழ்ந்தனர். தாங்கள் எதிர்கொண்ட வாழ்வாதார சவால்களுக்கு அங்கேயே விடைகள் தேட ஆரம்பித்தனர்.

அபு ஹுரெய்ராவில் செய்யப்பட்ட அகழ்விலேயே மிக முக்கியமாகக் கண்டெடுக்கப்பட்ட பொருள் என்று கருதப்படுவது, சுமார் 11000 ஆண்டுகள் பழமையான rye என்று அறியப்படும் ஒரு விதப் புல்லரிசியின் மணிகளைத்தான். ஏனென்றால் இங்குக் கண்டெடுக்கப்பட்ட இந்த மணிகள் இவற்றின் காட்டு மூதாதையர்களின் அளவைவிடப் பெரியதாகவும், நீண்டதாகவும் இருந்தது. அதாவது இவை domesticated அல்லது மனித முயற்சியால் உருமாற்றப் பட்ட விதைகள். மேலும் இதே காலகட்டத்தைச் சேர்ந்த, விவசாயம் செய்யும் நிலங்களில் மட்டும் வளரும், சில களைச் செடிகளின் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டது. இதைப் போன்ற தரவுகளின் பேரிலேயே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன் rye இங்கு வேளாண் பயிராகப் பயிரிட ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டிருக்கிறது. இது வரையில் அபு ஹுரெய்ராவில் கண்டெடுக்கப்பட்ட தடயங்களே வரலாற்றில் முழு விவசாயத்திற்கான முதல் தடங்கள். பருவம் பயிர் செய்யத் தூண்டிய ஆதி காலத்தின் சுவடுகள்.

இத்தகைய முயற்சிகள் அபு ஹுரெய்ராவில் மட்டும் அல்லாது லேவந்த் என்று அழைக்கப்படும் மத்திய கிழக்கு பகுதிகள் பலவற்றில் கிளைத்தெழுந்தது. சிறு நிலப் பகுதிகளில் விதைகளை ஊன்றுவது, மீதம் இருக்கும் குறுங்காடுகளை வெட்டிப் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றவாறு நிலத்தைச் சமன்படுத்துவது போன்ற முயற்சிகள் தொடங்கின. ஹோலோசீன் காலத்தில் மீண்டும் பருவநிலை மாறி, மழையும், மிதமான வானிலையும் உருவாகியது. ஏரிகளும் சிறு குளங்களும் பல பகுதிகளில் தோன்றின. இந்த மாற்றம் ஆண்டுப்பயிர்களைச் சாகுபடி செய்ய உதவியது. இதுவே வேளாண் சடங்குகள் உருவாகுவதற்கும் ஆங்காங்கே சிறு கிராமங்கள் தோன்றவும் அடிக்கோலிட்டது.

கிராமத்திற்குப் பின் நகரம் தானே? அந்த வளர்ச்சியிலும் பருவநிலையின் கை ரேகைகள் பதிந்திருக்கின்றன.

(தொடரும்)

___________

உசாத்துணை
A.M.T. Moore and others, Village on the Euphrates, Oxford University Press, 2000
James Lawrence Powell, Premature rejection in science: The case of Younger Dryas impact hypothesis, Science Progress, 105(1), 2022

பகிர:
ரகு ராமன்

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *