அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா முன்னின்று வடிவமைத்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope), கடந்தாண்டு கிறிஸ்துமஸ் நாளன்று விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் 15 லட்சம் கிலோ மீட்டர் அது பயணித்தது. மிகப்பெரிதாக இருந்ததால் ஓரிகாமி போல மடித்து வைத்து அனுப்பப்பட்ட பாகங்கள் செல்லும் வழியிலேயே ஒவ்வொன்றாக விரியத் தொடங்கின. தனக்கு நிறுவப்பட்ட இடத்தில் சென்று நின்றது. தொலைநோக்கியின் அத்தனை அம்சங்களும் சரியாகப் பணிபுரியத் தொடங்கின. ஜூலை 12ஆம் தேதி ஜேம்ஸ் வெப்பிடமிருந்து பெற்ற ஐந்து புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
பெருவெடிப்பு (big bang) நிகழ்ந்தபோது உருவான முதல் விண்மீன்கூட்டங்கள் (galaxy), பூமியைப் போன்று உயிர்வாழத் தகுந்த புறக்கோள்கள் (exoplanets) பிரபஞ்சத்தில் வேறெங்கும் இருக்கிறதா போன்ற அம்சங்களைக் கண்டறிவது ஜேம்ஸ் வெப்பின் முக்கிய நோக்கங்கள். இந்தப் பின்னணியில், இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் புகைப்படங்களிலிருந்து நம்மால் என்ன தெரிந்துகொள்ளமுடிகிறது?
ஜேம்ஸ் வெப்பும் ஹப்பிளும்
ஜேம்ஸ் வெப்புக்கு முன்பு, ஆய்வுப்பணிக்காக நம்மால் நிறுவப்பட்ட பல விண்வெளித் தொலைநோக்கிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope). புத்தகங்களில், காணொளிகளில் நாம் பார்த்திருக்கும் பிரபஞ்சத்தின் பெரும்பாலான புகைப்படங்கள் ஹப்பிள் எடுத்தவை. விண்வெளி ஆய்வுகளின் மையமாக இந்தப் படங்கள் இருந்திருக்கின்றன. இன்னமும் இருந்து வருகின்றன.
ஹப்பிள் 15 ஆண்டுகாலம், அதாவது 2005ஆம் ஆண்டு வரை பணிசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. அநேகமாக அடுத்த பத்து வருடங்களில் பணி நிறைவு பெறும் என்று கணிக்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பில், இந்திய மதிப்பில் 75,000 கோடி பொருட்செலவில் அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் ஐந்தரை ஆண்டுகள் பணிசெய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த இடையூறும் ஏற்படாமல், அனைத்துப் பாகங்களும் தொய்வில்லாமல் பணிசெய்தால் ஒருவேளை பத்து ஆண்டுகள் அதன் ஆயுள் நீளலாம். அவ்வாறு நடந்தால் ஹப்பிள், ஜேம்ஸ் வெப் இரண்டும் ஒரே சமயத்தில் பணியில் இருக்கும்!
ஹப்பிள் பழசாகிவிட்டதால்தான் ஜேம்ஸ் வெப் உருவாக்கப்பட்டுள்ளதா? ஹப்பிளுக்கு மாற்று ஏற்பாடுதான் ஜேம்ஸ் வெப்பா? இல்லை. விண்வெளியை ஆராய்வதற்கான மற்றுமொரு பிரம்மாண்ட விண்வெளித் தொலைநோக்கிதான் ஜேம்ஸ் வெப்.
அறிவியல் காரணம் என்ன?
நாம் எப்படி நம் கண்களால் ஒரு பொருளைக் காண்கிறோம்? ஒரு பொருளின் மீது படும் ஒளி அதிலிருந்து சிதறி நம் கண்களை வந்தடைகிறது. கயல் போன்ற கண்கள் என்றெல்லாம் கவிதை எழுதினாலும், நம் கண்கள் ஒளியை உள்வாங்கும் ஒரு கருவி மட்டும்தான்.
‘ஒளி’ என்பது மிகவும் விந்தையானது. ஒளி அலைகளின் மொத்த அலை நீளம் மிகவும் அகலமானது. அதாவது, நானோ மீட்டருக்கும் குறைவான அளவிருந்து, கிலோ மீட்டருக்கும் அதிகமான அளவில் ஒளியின் அலைநீளம் உள்ளது. நம் கண்களால் 0.4 – 0.7 மைக்ரோ மீட்டர் உள்ள அலைநீளத்தை உள்வாங்க முடியும். இந்த அலைநீளம் கண்ணுறு ஒளி (visible light) எனப்படுகிறது.
ஹப்பிள் தொலைநோக்கி கண்ணுறு ஒளியின் அலைநீளத்தை உள்வாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணுறு ஒளியின் அலைநீளத்தில் எந்தெந்த விண்பொருட்கள் ஒளியை வெளியிடுகின்றனவோ அவற்றையெல்லாம் ஹப்பிள் துணைகொண்டு நாம் படம் பிடித்திருக்கிறோம். இனியும் தொடர்ந்து படம் பிடிப்போம்.
கண்ணுறு ஒளியைவிட அதிக அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிர்களை (infrared rays) உள்வாங்குமாறு தொலைநோக்கியை அமைக்கும்போது பல்வேறு புதிய தரவுகள் கிடைக்கின்றன. அது ஏன்?
பெருவெடிப்பு நிகழ்ந்து 1,380 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. பெருவெடிப்புக்குப் பிறகு அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின. முதல் விண்மீன்கூட்டங்கள் உருவாயின. அந்த விண்மீன்கள் அழிந்து/இணைந்து/உருமாறி நவீன விண்மீன்கூட்டம் உருவானது. முதல் விண்மீன்கள் எவ்வாறு உருவாயின என்பதைக் கண்டறிவது ஆய்வாளர்களின் விருப்பம். இந்த நிகழ்வுகள் நடந்து பல கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அப்போது அவை வெளியிட்ட ஒளியின் (வெப்பத்தின்) குறிப்பிட்ட பகுதியானது, நாளும் விரிவடையும் இந்தப் பிரபஞ்சத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்.
பிரபஞ்சம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகிறது. ஆக, இன்று நமக்கு அருகில் இருக்கும் விண்பொருட்களும் நம்மைவிட்டு விலகிச் செல்லும். தற்போது கண்ணுறு ஒளியின் அலைநீளத்தில் ஒரு பொருள் ஒளியை உமிழ்ந்தால், அந்த ஒளி நம்மைவிட்டு விலகிச் சென்றுவிட்டால், அந்த விண்பொருள் வெளியிட்ட ஒளியின் அலைநீளம் நம்மைவந்து அடையும்போது அதிகரித்திருக்கும். அதாவது, சிறிய அலைநீளம் கொண்ட கண்ணுறு ஒளியிலிருந்து, அதிக அலைநீளம் கொண்ட அகச்சிவப்பு அளவுக்கு மாறியிருக்கும். அவற்றைக் கைப்பற்ற அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கும் தொலைநோக்கி அவசியம்.
பிற கிரகங்களில் நீர் உள்ளதா என்பதை ஆராய்வதும் ஜேம்ஸ் வெப்பின் நோக்கங்களுள் ஒன்று. ஆனால், நேரடியாக அங்கேயே போய் தண்ணீர் மொண்டு குடித்துப் பார்த்து சொல்ல முடியாது அல்லவா? ஓர் அறையில் எறும்பு இருக்கிறதா என்பதை நேரில் சென்று பார்த்துக் கண்டுபிடிப்பது ஒரு வழி. இனிப்பும், காரமும் இருக்கும் தட்டை வைத்துவிட்டு, மறுநாள் பார்க்கும்போது இனிப்பைக் காணவில்லை என்றால் அங்கே எறும்பு இருக்கிறது என்று முடிவுக்கு வருவது இன்னொரு வகை.
எறும்பு தனக்குப் பிடித்த இனிப்பை மட்டும் எடுத்துக்கொள்வது போல, நீரின் மூலக்கூறுகள் அகச்சிவப்பு கதிர்களில் குறிப்பிட்ட அலைநீளத்தை எடுத்துக்கொள்ளும். ஏனெனில், நீர் மூலக்கூறுகளுக்கு குறிப்பிட்ட அலைநீளத்தில் உள்ள அகச்சிவப்பு கதிர்களைப் பிடிக்கும். அதாவது, அந்தக் கதிர்களை உள்வாங்கும். ஆக, எங்கேயோ ஒரு விண்மீனைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கிரகத்தில் நீர் உள்ளதா என்பதைக் கண்டறிய அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கும் தொலைநோக்கிகள் உதவும்.
இது போன்ற பல்வேறு அறிவியல் காரணங்களால், 0.6-28.3 மைக்ரோ மீட்டர் அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கும் ஒரு விண்வெளித் தொலைநோக்கியாக ஜேம்ஸ் வெப் வடிவமைக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே அது அற்புதமாகச் செயல்படவும் தொடங்கியுள்ளது.
ஒளியின் அகன்ற அலைநீளத்தின் பிற பகுதிகளைக் கைப்பற்றவும் ஆராயவும் வெவ்வேறு விண்வெளித் தொலைநோக்கிகளும் உள்ளன என்பதையும் இங்கே கவனத்தில் கொள்வோம்.
ஐந்து படங்கள்
ஜேம்ஸ் வெப் எதிர்பார்த்ததைப் போல் துல்லியமாகப் பணிபுரிகிறதா என்று பரிசோதிக்க ஆய்வாளர்கள் முடிவெடுத்தார்கள். கண்பார்வை சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க மருத்துவரிடம் சென்றால், பெரிய அளவில் இருக்கும் எழுத்துகளை மட்டும் காட்டி, பார்வை சரியாக இருக்கிறது என்று சொல்லமாட்டார். இயன்ற அளவு சிறிய எழுத்துகளை வாசிக்க முடிகிறதா என்றுதான் அவர் பார்ப்பார்.
அதே போல், விண்வெளியில் எந்தெந்த கூறுகளை முதலில் படம்பிடிக்கலாம் என்று 70 பொருள்களைப் பட்டியலிட்டார்கள். அவற்றிலிருந்து ஐந்தை மட்டும் இறுதிப்பட்டியலில் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றின் படங்களையே தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
இனி ஒவ்வொன்றாக அவற்றின் சிறப்புகளைக் காண்போம்.
***
படம் 1: SMACS 0723
இது ஜேம்ஸ் வெப் எடுத்த முதல் ஆழ்புலப் படம் (deep-field image). பில் கிளிண்டன் அமெரிக்க அதிபர் இருந்தபோது ஜேம்ஸ் வெப் வடிவமைக்கும் எண்ணம் ஆய்வாளர்களுக்கு உதயமானது. அதன்பின்பு மூன்று அதிபர்கள் மாறி, தற்போது, ஜோ பைடனுக்கு ஜேம்ஸ் வெப் எடுத்த முதல் ஆழ்புல புகைப்படத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது.
ஆழ்புலப் படம் என்றால் என்ன? நாம் இரவு வானத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கும். நம் கண்களால் பார்க்க முடிந்த நட்சத்திரங்கள் இவை. அதற்காக வானில் நமக்கு இருட்டாகத் தெரியும் இடங்களில் விண்பொருட்களே இல்லை என்று பொருளல்ல. அங்கேயும் விண்பொருட்கள் இருக்கலாம், இன்னும் வெகுதொலைவில் (ஆழ்புலத்தில்) இருக்கலாம். தொலைநோக்கியால் அந்த ஆழ்புலத்தைப் படம்பிடிக்க முடியும். ஹப்பிளும், ஜேம்ஸ் வெப்பும் எவ்வளவு ஆழ்புலத்துக்குப் படம்பிடிக்க முடியும் என்னும் ஒப்பீட்டுப் படத்தைக் கீழே காணலாம்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்திருக்கும் இந்தப் படத்தில் பல அம்சங்களைக் காண முடிகிறது. இவற்றில் பற்பல விண்மீன்கூட்டங்கள் தெரிகின்றன. சில விண்மீன்கூட்டங்கள் மஞ்சளாகவும், சிவப்பாகவும், நீல நிறத்திலும் தெரிகின்றன. இவற்றின் தொலைவு மற்றும் வெப்பத்தைப் பொலுத்து நிறம் மாறுபடுகிறது. அகச்சிவப்பு கதிருக்கும் நிறத்துக்கும் தொடர்பில்லை என்றாலும், அறிவியல் தரவுகளின் அடிப்படையில் காண்பவருக்கு எளிதாகப் புரியும் வகையிலும் வண்ணத்தைச் சேர்த்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்தப் படத்திலுள்ள விண்மீன்கூட்டங்களைப் பார்க்கும்போது ஒரு புள்ளி வைக்க நினைத்து, கை பிசகி அப்படியே ஒரு கோடாக இழுத்துவிட்டது போல தெரிகிறதல்லவா? இதற்குக் காரணம் ஈர்ப்பு வில்லை விளைவு (gravitational lensing). அதிக நிறை கொண்ட பொருட்கள் தம்மைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கக் கூடியவை. அந்த வெளியில் ஒளி பயணித்துக்கொண்டிருந்தால், ஒளியும் வளைந்துவிடும். அதனால்தான் ஒரு புள்ளியாகத் தெரியவேண்டியது, கோடு போல் வளர்ந்து தெரிகிறது.
ஹப்பிள் தொலைநோக்கியைவிடத் துல்லியமாகவும் நுணுக்கமான தரவுகளுடனும் ஆழ்புலத்தைப் படம்பிடித்திருக்கிறது ஜேம்ஸ் வெப். ஜேம்ஸ் வெப்பின் பிரம்மாண்ட அளவு, நவீனத் தொழில்நுட்பம், அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கக்கூடிய திறன் உள்ளிட்ட காரணங்களால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. எந்தளவு ஆழ்புலத்திற்கு நம்மால் போக முடிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள கீழுள்ள படத்தைக் காணலாம். முதல் விண்மீன் உருவாக்கத்தை நம்மால் ஆராய முடியும் என்பது எத்தகைய அதிசயம்!
SMACS 0723 : James Webb vs Hubble
***
படம் 2: WASP-96b
இதென்ன படம் என்று சொல்லிவிட்டு ஒரு வரைபடத்தைக் காட்டுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஒவ்வொரு அலைநீளத்திலும் எந்தளவு ஒளி உமிழப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் நமக்கு ஒரு நிறமாலை (spectrum) இங்கே கிடைத்திருக்கிறது. நமது பால்வீதியில் உள்ள ஒரு விண்மீனைச் சுற்றிக்கொண்டிருக்கும் WASP-96b என்னும் புறக்கோளில் நீர் இருப்பதற்கான தரவுகளே இந்தப் படம். இவற்றில் குறிப்பிட்ட அலைநீளத்துக்கு மேலே “Water, H2O” என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல அந்த அலைநீளத்தில் உள்ள ஒளியை நீர் மூலக்கூறுகள் சாப்பிட்டுவிட்டதால், அந்த அலைநீளத்தில் அதிகளவு ஒளி கிடைக்கவில்லை என்று இந்தப் படம் சொல்கிறது. விண்மீனின் மிக அருகில் இந்தக் கோள் இருப்பதால் நீர் ‘நீராவியாக’ உள்ளது. 2013இல் ஹப்பிள் தொலைநோக்கியின் துணைகொண்டு மறைமுகமாக நமக்கு இந்தத் தடயம் கிடைத்தது. தற்போது மிகவும் துல்லியமாக ஆய்வுசெய்வது சாத்தியப்பட்டிருக்கிறது.
***
படம் 3: தென்வளைய நெபுலா (Southern ring nebula)
வலப்பக்கம் இருக்கும் படத்தின் நடுவே இரண்டு புள்ளிகள் தெரிகின்றன அல்லவா? இரண்டுமே விண்மீன்கள். அவற்றில் மங்கலாகத் தெரியும் விண்மீன் முழுமையாக இறந்துவிட்டது. ஒரு விண்மீனின் எரிபொருள் ஹைட்ரஜனும் ஹீலியமும். வண்டியில் டேங்க் முழுக்க பெட்ரோல் இருந்தாலும், இரண்டு நாட்களில் தீர்ந்துவிடுகிறது அல்லவா? அதுபோல விண்மீன் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், ‘சில லட்சம் கோடி(!)’ ஆண்டுகளில் தன்னுடைய எரிபொருளைத் தீர்த்துவிடும்.
அப்போது, தன்னுடைய பரப்பிலிருக்கும் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடும் உள்ளடுக்கு மட்டுமிருக்கும். மங்கலாகத் தெரியும் விண்மீன் இறக்கும்போது ஆயிரம் ஆண்டுகளாக அலையலையாகப் பரப்பிலிருக்கும் பொருட்களை வெளியிடுகிறது. தான் வெளியிட்ட பொருட்களால் ஒரு தூசு மண்டலத்தை உருவாக்கி அதற்குள் மறைந்திருக்கிறது. அதனால் ஹப்பிளில் தெரியவில்லை.
தற்போது ஜேம்ஸ் வெப் தெளிவாகப் படம்பிடித்து வெளிக்கொண்டுவந்துவிட்டது. ஒரு விண்மீன் இறக்கும்போது என்னவெல்லாம் நிகழ்கிறது, அதன் தன்மை என்னவாக மாறுகிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் நாம் புரிந்துகொள்ளமுடியும். நமக்கு அருகில் உள்ள சூரியனும் இப்படித்தான் இறக்கும். பயப்படாதீர்கள்! அதற்கு இன்னும் பல கோடி ஆண்டுகள் உள்ளன. அப்போது பூமியும் இருக்காது, நாமும் இருக்க மாட்டோம்.
படம் 3 என்று போட்டுவிட்டு இரண்டு படங்கள் ஏன் மேலே இடம்பெறவேண்டும்? முன்பே சொன்னது போல 0.6-28.3 மைக்ரோ மீட்டர் அலைநீளம் கொண்ட கதிர்களை உள்வாங்கும் தொலைநோக்கி ஜேம்ஸ் வெப். இதில் 0.6 முதல் 5 மைக்ரோமீட்டர் வரை படம்பிடிப்பதற்காக அண்மை-அகச்சிவப்பு ஒளிப்படக்கருவியும் (near infrared camera), 5 முதல் 28.3 மைக்ரோமீட்டர் அலைநீளம் வரை ஆழ்-அகச்சிவப்பு ஒளிப்படக்கருவியும் (far infrared camera) பயன்படுத்தப்பட்டன. அண்மை அகச்சிவப்புப் படத்தில், ஹைட்ரோ கார்பன் உள்ளதால் ஆரஞ்சு நிற அலைகள் தெரிகின்றன. மையம் சூடாக எரிந்துகொண்டிருப்பதால், அங்கிருக்கும் வாயுக்கள் நீல நிறத்தை உருவாக்குகின்றன. படலங்களால் தெரியாத விண்மீன் ஆழ்-அகச்சிவப்பு அலைகளை மட்டும் படம்பிடிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது.
நெபுலா என்பதை விண்வெளி தூசுகளால் உருவான மேகங்கள் என்று புரிந்து கொள்ளலாம். விண்மீன்கள் தூசியிலிருந்து உருவாகும், இறக்கும்போது தூசுப்படலத்தை உருவாக்கும். அதனால், தன்மையைப் பொருத்து நெபுலாக்கள் வெவ்வேறு விதமாகப் பெயரிடப்படுகின்றன. தென்வளைய நெபுலாவை ஹப்பிள் படம்பிடித்திருக்கிறது. அதைக் கீழே காணலாம்.
***
படம் 4: ஸ்டெஃபானின் ஐந்து விண்மீன்கூட்டங்கள்
இந்தப் படத்தில் ஐந்து விண்மீன் கூட்டங்கள் உள்ளன. எட்வர்ட் ஸ்டெஃபான் என்னும் பிரெஞ்சு ஆய்வாளர் 1877 ஆம் ஆண்டு இந்த விண்மீன் கூட்டத்தைக் கண்டறிந்து சொன்னார். 29 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இவற்றில் இரண்டு விண்மீன் கூட்டங்கள் ஒன்றோடொன்று இணையவுள்ளன. விண்மீன்கூட்டங்கள் ஒன்றோடொன்று மோதும்போது உருவான அதிர்வலைகளையும் ஜேம்ஸ் வெப் படம்பிடித்திருக்கிறது. இந்தத் தொகுதியில் புதிதாகப் பிறந்த பல விண்மீன்களும் உள்ளன. இப்படியாக இளம் விண்மீன்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களின் பண்புகளை அறிந்துகொள்ளப் பயன்படுவதால் இந்த தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.
***
படம் 5: கரினா நெபுலா (Carina Nebula)
மூன்றாவது படத்தில் நாம் பார்த்தது இறந்துகொண்டிருக்கும் விண்மீனால் உருவான தூசுப்படலம். இந்தப் புகைப்படத்தில் இருப்பது, விண்மீனை உருவாக்கும் தூசுப்படலம். தூசியில் பிறந்து, தூசியில் மடியும் விண்மீன் குறித்து கவிதை மட்டுமல்ல, காவியமே பாடலாம்.
மலையும் மடுவுமாக இருக்கும் தூசுப்படலத்தில் ஒளிரும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு விண்மீனாம்! தூசுப்படலத்தில் இருந்து ஒரு விண்மீன் எப்படி உருவாகிறது என்பதை ஆராய்வதற்காக இந்த நெபுலாவை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதே நெபுலாவை ஹப்பிள் படம்பிடித்துள்ளது (கீழே உள்ளது).
***
பிரபஞ்சத்தின் அழகு
இவை எல்லாமே அறிவியல் படங்கள். நம் புரிதலை விரிவாக்க இவை பேருதவி புரியப்போகின்றன. ஆய்வாளர்கள் இந்த ஒவ்வொரு படத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு இனி விரிவாகவும் நுணுக்கமாகவும் ஆராயப்போகிறார்கள். ஒரு நிமிடம் அறிவியல் உலகை மறந்துவிட்டு ஒரு சாமானியராக இந்தப் படங்களைப் பார்த்தாலும் அவை நம்மை வெகுவாகக் கவர்ந்து இழுக்கின்றன என்பதே நிஜம். எதுவுமே புரிந்துகொள்ளமுடியவில்லை என்றாலும் அவற்றின் அழகு நம்மை சட்டென்று ஈர்த்துவிடுகிறது. அது படங்களின் அழகு மட்டுமல்ல. நம் பிரபஞ்சத்தின் அழகு.
இந்தப் படங்களைப் பார்வையிடும்போது அவற்றின் பிரமாண்டத்தைக் கடந்து ஓர் ஆய்வாளராக என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்வது விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சிதான். ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இந்தத் தொலைநோக்கிக்கான தீவிர சிந்தனை 1995ஆம் ஆண்டு உருவானது. அதன்பின்னர் அரசியல், அறிவியல், தொழில்நுட்பம் என்று எல்லாத் துறைகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. மாறாதது இந்த ஆய்வும் அதைப் பின்னிருந்து இயக்கும் மானுடத் தேடலும்தான்.
இதுபோன்ற ஆய்வுகளில் பல்துறை நிபுணர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். 0.6 முதல் 28.3 மைக்ரோ மீட்டர் அலைநீளம் கொண்ட அகச்சிவப்பு கதிரில், 0.7இல் இருந்து ஆரம்பிக்கலாமா, 27.8உடன் நிறுத்திக்கொள்ளலாமா என்று அலைநீளத்தை முடிவு செய்யவே அத்தனை அறிவியல் விவாதங்கள் நடைபெற்றிருக்கும்.
விண்ணில் எங்கு நிலைநாட்டுவது, எத்தனை பெரிய தொலைநோக்கி வேண்டும், எந்தக் கோணத்தில் நிறுவவேண்டும் என்பது தொடங்கி தொலைநோக்கியில் பயன்படுத்தப்படும் சிறு திருகு முதல் நவீன இயந்திரங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் பல்துறை ஆய்வாளர்கள் இணைந்து விவாதித்திருப்பார்கள், பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் செய்திருப்பார்கள், ஒன்றுகூடி முடிவெடுத்திருப்பார்கள். கவனத்தைச் சிதறவிடாமல் எடுத்துக்கொண்ட பணியில் முழுமுனைப்போடு இவ்வளவு காலம் இவர்கள் இயங்கியதற்குக் காரணம் அறிவியல்மீது அவர்களுக்கு இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை. அந்தக் கூட்டு நம்பிக்கையின் வெளிச்சத்தை ஜேம்ஸ் வெப் படங்களில் நாம் காணமுடியும். நாடு, மொழி, பண்பாடு, அரசியல் அனைத்தையும் கடந்து அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ் வெப் எடுத்த அடுத்தடுத்த படங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டறியத்தான் போகிறது.
***
Image source: www.nasa.gov, hubblesite.org, esahubble.org, Scientific American (தமிழில் விளக்கங்கள் – ஹேமபிரபா)
வணக்கம். மிகச் சிறப்பான, விரிவான, துல்லியமான விளக்கத்துடனான கட்டுரை. வாழ்த்துகள் ஹேமா!.
– ‘எழுத்துலகத்தேனீ’ டாக்டர். ப. சரவணன், மதுரை.