Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1

ருத்ரபிரயாகை நடுங்கவைத்த சிறுத்தை

புனித யாத்திரை செல்வது என்பது ஹிந்துக்கள் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம். அதுவும் இமய மலையில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் தலங்களுக்குச் செல்வது என்பது ஹிந்துக்களின் லட்சியமாக இருக்கும்.

கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் செல்ல, ஒருவர் ஹரித்வாரிலிருந்து பயணத்தைத் தொடங்க வேண்டும். யாத்திரையின் பலனைப் பூரணமாகப் பெற, ஹரித்வாரிலிருந்து காலணி அணியாமல் வெறும் காலுடன் மலைகளைக் கடந்து கேதார்நாத்திற்கும், பின்னர் அங்கிருந்து பத்ரிநாத்திற்கும் செல்ல வேண்டும்.

யாத்திரிகர்கள், ஹரித்வாரில் உள்ள ‘ஹர் கி பெளரி’யில் (ஹரனின் படித்துறையில்) புண்ணிய நீராடுவர். நீராடிவிட்டு வரும் யாத்திரிகர்களிடம், தொழுநோயால் பாதிப்படைந்த பிச்சைக்காரர்கள் கரங்களை நீட்டி பிச்சை கேட்பர். பிச்சைக்காரர்களுக்குச் சில்லறை போடவில்லை என்றால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்; எதற்கு வம்பு என்று யாத்திரிகர்கள் தங்களிடம் உள்ள சில்லறையைப் போட்டு விடுவர். பார்ப்பதற்குத்தான் அவர்கள் பிச்சைக்காரர்களே தவிர, அவர்களிடம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பணம் இருக்கும். பிச்சைக்காரர்கள் தங்களது கந்தல் பைகளிலும், தாங்கள் வசிக்கும் குகையிலுள்ள பாறைகளின் இடுக்குகளிலும் பணத்தை மறைத்து வைத்திருப்பார்கள்.

யாத்திரிகர்கள் அடுத்து ஹரித்வாரில் உள்ள கோயில்களிலும், மடத்திலும் தரிசனம் செய்வர். தரிசனம் முடிந்த பிறகு, கேதார்நாத்தை நோக்கி தங்களுடைய நீண்ட நெடிய, கடினமான பயணத்தைத் தொடங்குவர்.

அவர்கள் பயணிக்கும் வழியில் முதலில் வரும் திருத்தலம் ரிஷிகேஷ். இங்கு முதலில் அவர்கள் எதிர்கொள்வது காளி கம்பளி வாலாக்கள். காளி கம்பளி வாலாக்களின் குரு தன் உடம்பின் மீது கருப்பு கம்பளிப் போர்வையைச் சுற்றியிருப்பார். சிஷ்யர்களும் குருவைப்போலவே தங்களது உடம்பில் கருப்பு கம்பளிப் போர்வையைச் சுற்றிக் கொள்வர்.

காளி கம்பளி வாலாக்களை மக்கள் பெரிதும் மதித்தனர். அவர்களது நற்காரியங்களுக்காக, மக்கள் அவர்களைப் பெரிதும் போற்றினர். மற்ற மத யாத்திரைகளில் இம்மாதிரி சகோதரத்துவத்தைப் பார்க்க முடியாது. கம்பளி வாலாக்கள், தங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் கிடைக்கும் காணிக்கைகளைக் கொண்டு பல மருத்துவமனைகள், மருந்தகங்கள், யாத்திரிகர்கள் தங்கும் விடுதிகள், ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பல நல்ல காரியங்களைச் செய்து வருகின்றனர்.

ரிஷிகேஷை அடுத்து லக்ஷ்மண் ஜூலா என்று ஒரு பாலம் இருக்கிறது. யாத்திரிகர்கள் இந்தப் பாலத்தின் வழியாகக் கங்கை நதியைக் கடக்க வேண்டும். இப்பாலம் கங்கை நதியின் வட கரையையும் தென் கரையையும் இணைக்கிறது. இப்பாலத்தில் நிறைய குரங்குகள் தயாராகக் காத்திருக்கும். யாத்திரிகர்கள் குரங்களுக்கு இனிப்பு அல்லது உலர்ந்த பருப்புகளைக் கொடுத்துத் திருப்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் யாத்திரிகர்களால் பாலத்தை நிம்மதியாகவும், எளிதாகவும் கடக்க முடியாது.

கங்கையின் இடது கரைப் பக்கமாக மூன்று நாட்கள் பயணித்தால் கார்வால் பகுதியின் புராதனத் தலைநகரான ஸ்ரீநகரை அடைந்துவிடலாம். ஸ்ரீநகர் ஒரு சரித்திரம் வாய்ந்த, மத சம்பந்தம் உடைய, வர்த்தக மையம். ஸ்ரீநகர், மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில், ரம்மியமான சூழ்நிலையில் எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

கார்வாலைச் சேர்ந்த மக்கள் ‘கார்வாலி’ என்று அழைக்கப்படுவார்கள். கார்வாலிகள் சிறந்த ராணுவ வீரர்கள். இருப்பினும், 1805 ஆம் ஆண்டு, நேபாளத்திலிருந்து படையெடுத்து வந்த கோர்க்கா வீரர்களைத் தீரமாக எதிர்த்துப் போராடியும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

1894 ஆம் ஆண்டு, ஸ்ரீநகர் நகரம், அரண்மனை, அரசர்களின் மாளிகைகள் என அனைத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. கங்கை நதியின் கிளை நதியான ‘பிராகி கங்கையின்’ உச்சி சுமார் 2000 அடி அகலம் கொண்டது; அடித்தளம் சுமார் 11000 சதுர அடிகள் கொண்டது; நதியின் உயரம் சுமார் 900 அடிகள் இருக்கும். நிலச்சரிவு ஏற்பட்டதால், பிராகி நதியில் வெள்ளம் ஏற்பட்டது. அதன் காரணமாக கோஹனா அணை உடைந்தது. அணை உடைந்த 6 மணி நேரத்தில் சுமார் நூறு கோடி கன அடி அளவிலான தண்ணீர் வெளியேறியது. தண்ணீர் ஸ்ரீநகரை அடித்துச் சென்றது. ஆர்ப்பரித்த வெள்ளம் ஹரித்வார் வரை இடைப்பட்ட பகுதிகளை நிர்மூலமாக்கியது. ஒரு பாலத்தையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரே ஒரு குடும்பம் மட்டும் அபாய பகுதிக்குத் திரும்பிச் சென்றதால் உயிர் இழக்க நேரிட்டது.

ஸ்ரீநகரைத் தாண்டி செங்குத்தான மலைப்பகுதியைக் கடந்து சென்றால் சாந்திஹால் என்ற இடம் வரும். ஏறி வரும் மலைப்பாதை கடினமாக இருக்கும். இருப்பினும், கீழே கங்கை பள்ளத்தாக்கின் ரம்மியமான காட்சிகளும், உயரத்தில் கேதார்நாத்திற்கு மேலே உள்ள பனி படர்ந்த இமயமலையின் காட்சிகளும் நம் களைப்பைப் போக்கிவிடும்.

சாந்திஹாலிலிருந்து ஒரு நாள் பயணத்திற்குப் பின் குலப்ராய் என்ற இடத்தை அடையலாம். அங்கு யாத்திரிகர்கள் தங்குவதற்காக ஓலைக் குடில்கள் வரிசையாக இருக்கும். அதற்கு அடுத்தபடியாகக் கற்களினால் கட்டப்பட்ட வீடும், ஒரு பிரம்மாண்டமான தண்ணீர்த் தொட்டியும் இருக்கும். இந்தத் தண்ணீர்த் தொட்டிக்கு நீர் ஆதாரம் மலையிலிருந்து வரும் சிறிய தெள்ளிய நீரோடையாகும். கோடைக்காலங்களில் ஃபைன் மரக்கன்றுகளுக்காக வெட்டப்பட்ட நீர்த்தடங்களின் வழியே நீர் வழிந்தோடி தொட்டியை நிரப்பும். ஏனைய காலங்களில் நீர் அருவி போலக் கட்டுக்கடங்காமல் விழுந்து, பாசி மற்றும் பெண்கூந்தல் பெரணிச் செடிகள் (maidenhair fern) படர்ந்த பாறைகளின் மீது வழிந்து, நீர்க்கட்டி (watercress) மற்றும் குறிஞ்சிச் செடிகளின் ஊடே வந்து தொட்டியை நிரப்பும்.

யாத்திரிகர்கள் தங்கும் குடிலுக்குப் பின்புறம் சுமார் 300 அடிக்கு அப்பால், சாலையின் வலதுபுறத்தில் ஒரு மாமரம் இருக்கிறது. அந்த மரமும், அதற்குப் பின்புறம் அமைந்திருக்கும் இரண்டடுக்கு மாடி வீடும், பின்னர் விவரிக்கப்போகும் சம்பவத்தில் முக்கியப் பங்கை வகிக்கப்போகின்றன. ‘குலப்ராய்’ யாத்ரிகர்கள் தங்கும் குடில்களுக்குச் சொந்தக்காரரான பண்டிதர் ஒருவர் அந்த அடுக்கு மாடி வீட்டில் தங்கியிருந்தார்.

மேற்குறிப்பிட்ட இடத்திலிருந்து சுமார் 2 மைல்கள் கடந்து சென்றால் ஒரு சமதரைப் பகுதி காணப்படும். இதுதான் ருத்ரபிரயாக். அங்கிருந்து அலக்நந்தா ஆற்றைக் கடந்து, பின்னர் மந்தாகினி நதியின் இடது கரையோரமாகச் சென்றால் கேதார்நாத்தை அடைந்துவிடலாம். ஜிம் கார்பட்டின் சொந்த ஊரான நைனிடால் ருத்ரபிரயாகின் தென் திசையில் உள்ளது.

கேதார்நாத் செல்லும் பாதையில் லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் சென்றிருக்கிறார்கள். அந்தப் பாதை மிகவும் செங்குத்தாகவும், கரடு முரடாகவும் இருக்கும். சமதளத்தில் வாழ்பவர்களால், பெரிய உயரங்கள் ஏறிப் பழக்கம் இல்லாதவர்களால் கேதார்நாத் பாதையில் நடப்பது மிகவும் கடினம். மூச்சு முட்டும். மண் தரையில் நடந்து பழக்கப்பட்ட பாதங்கள் கரடு முரடான மலைப்பாதையைக் கடக்கச் சிரமப்படும். கூர்மையான கற்கள் பாதங்களைப் பதம் பார்க்கும். ரத்தம் ஒழுகியபடி, பனி உறைந்த பாதைகளில் நடக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற ஒரு யாத்திரை தேவைதானா என்று சிலர் நினைக்கலாம். இப்படிச் சிரமப்பட்டு புண்ணியத் தலங்களுக்குச் செல்வதால் என்ன பலன் கிட்டப்போகிறது என்று எண்ணலாம். ஆனால் ஒரு நல்ல ஹிந்து அப்படி நினைக்க மாட்டான். அவன் சிரமப்பட்டு மேலே ஏறிச் செல்வான். அவனைப் பொருத்தவரை புண்ணியம் என்பது எளிதாகக் கிடைத்து விடக்கூடியதல்ல. அதைச் சிரமப்பட்டுத்தான் பெற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் கொண்டவன். இந்த ஜென்மத்தில் எவ்வளவு சிரமப்படுகிறோமோ அடுத்த ஜென்மத்தில் அவ்வளவு நற்பயனை விளைவிக்கும் என்ற நம்பிக்கையை உடையவன்.

ருத்ரபிரயாகில், கேதார்நாத்திலிருந்து வரும் மந்தாகினி ஆறும், பத்ரிநாத்திலிருந்து வரும் அலக்நந்தா ஆறும் சங்கமிக்கின்றன. ஹிந்தி மொழியில் பிரயாக் என்றால் சங்கமம் என்று பொருள். இந்த இரண்டு ஆறுகளும் ருத்ரபிராயகில் ஒன்றாகச் சங்கமித்து அனைவராலும் போற்றப்படும் புனித கங்கை நதியாக உருவெடுக்கிறது.

இந்த ருத்ரபிரயாக் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வந்த மக்களை நடுநடுங்கச் செய்த ஓர் ஆட்கொல்லி சிறுத்தையைப் பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம். சிறுத்தையோ, புலியோ ஒரு ஆட்கொல்லி விலங்காக மாறினால் அதை அடையாளப்படுத்த ஓர் ஊரின் பெயரை அதற்கு அடைமொழியாக வைப்பார்கள். ஆனால், ஓர் ஊரை அடைமொழியாக வைத்து ஓர் ஆட்கொல்லி விலங்கைக் குறிப்பிடுவதால், அது அந்த ஊரில்தான் ஆட்கொல்லி விலங்காக மாறியது என்றோ அல்லது அந்த ஊரில் உள்ளவர்களை மட்டும்தான் அது வேட்டையாடிக் கொன்றது என்றோ அர்த்தம் ஆகாது. அதேபோல்தான் ருத்ரபிரயாக் ஆட் கொல்லிச் சிறுத்தையும். ருத்ரபிரயாகிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ள ஒரு குக்கிராமத்தில்தான் அது முதன் முதலில் ஒருவரை வேட்டையாடியது. அதன் பொருட்டே அச்சிறுத்தை ருத்ரபிரயாக் சிறுத்தை என்று அறியப்பட்டது.

ஒரு புலி ஆட்கொல்லி விலங்காக மாறுவதற்குத் தேவையான காரணங்கள், ஒரு சிறுத்தைக்கும் பொருந்தும் என்பது அவசியமில்லை.

வனத்தில் அழகான, வசீகரமான விலங்கு ஒன்று உண்டென்றால் அது சிறுத்தைதான். சிறுத்தை, தான் சுற்றி வளைக்கப்பட்டாலோ அல்லது காயப்பட்டிருந்தாலோ மனிதர்கள் மீது தைரியமாகத் தாக்குதல் தொடுக்கும். மற்றபடி அது ஒரு மாசு அகற்றி (scavenger). பசி உச்சத்திற்குச் சென்றால் காட்டில் இறந்து கிடக்கும் எந்த உடலையும் அது சாப்பிடும். எப்படி ஆப்ரிக்கப் புதர்களில் வாழும் சிங்கங்கள் இறந்த உடல்களைச் சாப்பிடுகிறதோ அதைப் போல் தான் சிறுத்தைகளும்.

கார்வால் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள். ஹிந்துக்கள், இறந்தவரின் உடலை எரியூட்டச் செய்வர். பொதுவாகப் பிணங்களை நதிக்கரையோரத்தில் தகனம் செய்வர். காரணம், இறந்தவரின் அஸ்தியை எளிதாகத் தண்ணீரில் கரைக்க முடியும். நதியில் கரைக்கப்பட்ட அஸ்தி இறுதியாகக் கடலைச் சென்றடையும். கார்வாலில், கிராமங்கள் மலைகளின் உயரத்தில் அமையப் பெற்றிருப்பதாலும், நதிகள் கிராமங்களிலிருந்து வெகு தொலைவில் பள்ளத்தாக்குகளில் இருப்பதாலும், பிணத்தை எரியூட்டுவதற்குக் கிராம மக்கள் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். மலைப் பகுதியிலிருந்து, பள்ளத்தாக்கில் உள்ள நதிக்கரைக்குப் பிணத்தை மனிதர்கள் தூக்கிச் செல்ல வேண்டும். கூடவே எரியூட்டத் தேவையான விறகு மற்றும் எரிபொருட்களைத் தூக்கிச் செல்ல வேண்டும். மலைகளில் வாழும் சிறிய சமுதாயத்திற்கு இவ்வேலைகளைச் செய்வதற்குப் போதுமான மனிதவளம் இல்லை. இருப்பினும், சாதாரணச் சூழ்நிலைகளில் அவர்கள் பிணங்களைக் குறைவில்லாமல் நல்ல முறையிலேயே தகனம் செய்வர். ஆனால் அதுவே அசாதாரணச் சூழ்நிலையின்போது சிக்கல் உண்டாகும்.

கார்வாலில், தொற்று நோய்ப் பரவலால் இறப்பு விகிதம் அதிகமாகும் பொழுது, இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வதில் பிரச்னை ஏற்படும். அதுபோன்ற காலகட்டங்களில், இறந்தவர்களின் வாயில் எரியூட்டப்பட்ட கரித்துண்டை வைத்து, இறந்தவர்களின் உடலை மலைமுகட்டிற்குக் கொண்டுசென்று, அங்கிருந்து உடலை அப்படியே கீழே உள்ள பள்ளத்தாக்கில் வீசிவிடுவர்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

2 thoughts on “ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1”

  1. மீ.விசுவநாதன்

    தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான தொடராக இருக்கிறது. பாராட்டுகள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *