Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #2

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #2

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

எப்பொழுதெல்லாம் தான் வாழும் இடத்தில் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் இம்மாதிரி பள்ளத்தாக்குகளில் வீசப்படும் மனித உடல்களைச் சிறுத்தை சாப்பிடும். நாளடைவில், அதற்கு நரமாமிசத்தின் சுவை பிடித்துப் போய்விடும். கார்வால் பகுதியில் தொற்று நோய் நின்று, சகஜ நிலை வந்த பிறகு, அவர்கள் பிணங்களைத் தூக்கி எறிவது நின்றுவிடும். அப்பொழுது உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன், சிறுத்தை உயிருள்ள மனிதர்களை வேட்டையாடத் தொடங்கும்.

1918 ஆம் ஆண்டு, இந்தியாவில் இன்ஃபுளூயன்சா தொற்று பெரிய அளவில் பரவி இருந்தது. அதனால் பத்து லட்சம் பேர் இறந்து போனார்கள். கார்வால் பகுதியும் இன்ஃபுளூயன்சா தொற்றால் பெரிதும் பாதிப்படைந்தது. இந்தப் பெருந்தொற்று முடிவடைந்த தருணத்தில்தான், ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை தோன்றியது.

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையின் முதல் மனித வேட்டை பாயிஜி கிராமத்தில், 1918 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. அதனுடைய கடைசி மனித வேட்டை பையின்ஸ்வாரா கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த இடைப்பட்ட 8 ஆண்டு காலத்தில் ருத்ரபிரயாக் சிறுத்தை சுமார் 125 நபர்களைக் கொன்றிருக்கிறது.

அரசு பதிவுகளில் 125 நபர்கள்தான் ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை வேறு. ஆட்கொல்லி சிறுத்தை தாக்குதல் நடத்தி ஏற்படுத்திய பல இறப்புகள் அரசாங்கப் பதிவில் இடம்பெறவில்லை.

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையால் கார்வால் மக்கள் பட்ட இன்னல்கள் அதிகம். இச்சிறுத்தை செய்த அட்டூழியங்களால் அது, ‘பிரபலமான ஆட்கொல்லி சிறுத்தை’ என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, கென்யா, மலேசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்திய நாட்டின் நாளேடுகளிலும், பத்திரிக்கைகளிலும் இந்த சிறுத்தையைப் பற்றிய செய்திகள் பெரும் அளவில் வெளிவந்தன.

ஊடகங்களில் வந்த செய்திகளைத் தவிர, ஆண்டு தோறும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு வரும் சுமார் 60000 யாத்திரிகர்களும் இச்சிறுத்தையைப் பற்றிய கதைகளை அனைத்து இடங்களுக்கும் பரவச் செய்தனர்.

பொதுவாக, ஆட்கொல்லி விலங்கால் ஒருவர் தாக்குண்டு இறந்தால், அந்தச் சம்பவத்தைப் பற்றி இறந்தவரின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ கிராம பட்வாரியிடம் உடனே தகவல் அளிப்பார்கள். பட்வாரி, சம்பவம் நடந்த இடத்தில் இறந்தவரின் உடல் கிடைக்கவில்லை என்றால், தான் அங்குச் செல்வதற்கு முன்னர் தேடுதல் குழுவை அமைத்து இறந்தவரின் உடலைத் தேடச் செய்வார். இதே, இறந்தவரின் உடல் சம்பவ இடத்தில் கிடைத்தாலோ அல்லது தேடுதல் குழு உடலைக் கண்டுபிடித்தாலோ, பட்வாரி அந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்துவார். அடிப்படையில் பட்வாரியின் விசாரணை, இறந்தவர் எப்படி இறந்தார் என்று கண்டறிவதற்காக இருக்கும். உண்மையாகவே விலங்கு அடித்துத்தான் இறந்தாரா அல்லது வேறு நபர்களால் கொலை செய்யப்பட்டாரா என்று பட்வாரி விசாரிப்பார். விசாரணையின் முடிவில், இறந்தவர் உண்மையாகவே ஆட்கொல்லி விலங்கால்தான் இறந்தார் என்று தெரியவந்தால், இறந்தவரின் சடலத்தை எடுத்து இறுதிச் சடங்குகள் நடத்த உறவினர்களை அனுமதிப்பார்.

ஆட்கொல்லி விலங்கால் இறப்பு ஏற்பட்டது என்ற முடிவுக்கு வரும் பட்வாரி அதைத் தன் பதிவேட்டில், ஆட்கொல்லி விலங்கின் பெயருக்கு எதிராகப் பதிவு செய்வார். மேலும், நடந்த சம்பவத்தை ஓர் அறிக்கையாகத் தயார் செய்து, தன் மாவட்டத்தின் தலைமை அதிகாரியான துணை ஆணையாளரிடம் சமர்ப்பிப்பார். துணை ஆணையாளரும் ஆட்கொல்லி விலங்கின் தாக்குதல்கள் குறித்து, தான் பராமரித்து வரும் பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்வார்.

ஒருவேளை தாக்குதலுக்கு உண்டான நபரின் முழு உடலோ அல்லது பாதி உடலோ கிடைக்கவில்லை என்றால், விசாரணை மேற்கொண்டு நடைபெறும். சில சமயங்களில், ஆட்கொல்லி விலங்குகள் தாங்கள் வேட்டையாடிய மனித இரையை நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்லும். அம்மாதிரி சமயங்களில் இறந்தவர்களின் உடல் கிடைக்காது. அதுபோன்ற தருணங்களில், ஆட்கொல்லி விலங்கின் தாக்குதல்கள், அரசாங்க பதிவேடுகளில் இடம்பெறாது. மேலும் ஆட்கொல்லி விலங்கால் தாக்குண்ட ஒருவர், தாக்குதலின் காரணமாக சில நாட்கள் கழித்து இறந்தாலும், அந்த விவரமும் பதிவேடுகளில் பதியப்படாது.

ஆட்கொல்லி விலங்குகள் ஓர் இடத்தில் பல ஆண்டுகள் இருக்கும். மேற்சொன்ன காரணங்களால், ஆட்கொல்லி விலங்குகள் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாகப் பதியப்படுவதில்லை. எனவே, அரசாங்கப் பதிவேடுகளில் கிடைக்கும் விவரங்கள் சரியானவையாக இருக்க வாய்ப்பில்லை.

நாம் ‘பயங்கரம்’ என்ற வார்த்தையை சர்வ சாதாரணமாக, சம்பந்தமில்லாமல் பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் நம்மில் பலருக்குப் பரிச்சயப்பட்டிருக்காது. ஆனால் 1918 ஆம் ஆண்டிலிருந்து 1926 ஆம் ஆண்டு வரை, கார்வால் பகுதியின் 500 சதுர மைல் பரப்பில் வாழ்ந்த சுமார் 50000 மக்களும், வருடா வருடம் கேதார்நாத், பத்ரிநாத்திற்குச் செல்லும் சுமார் 60000 யாத்திரிகர்களும் ‘பயங்கரம்’ என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்திருந்தனர்.

ஊரடங்கு என்றால் என்ன? என்பதை கார்வால் பகுதியில் அன்றைய தேதியில் நடந்த சம்பவங்கள் பறைசாற்றும். மனிதர்களால் கூட அப்படிப்பட்ட ஓர் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கமுடியாது. ஆனால் கார்வால் பகுதியில் ஆட்கொல்லி சிறுத்தை அப்படி ஓர் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது.

பகல் பொழுதுகளில், சூரிய வெளிச்சம் இருக்கும் வரை, கார்வால் பகுதியில் அனைத்து விவகாரங்களும் இயல்பாகவே நடைபெறும். ஆண்கள் வெகுதூரம் சந்தைகளுக்குச் சென்று தங்கள் வியாபாரத்தைக் கவனித்து வந்தனர். அருகாமையில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களது வீட்டிற்குச் சென்று நல்லது, கெட்டதை விசாரித்து வந்தனர். பெண்கள் மலைகளின் மீது ஏறிச் சென்று, தங்கள் வீட்டின் கூரைகளை வேய்வதற்காகத் தேவைப்படும் புற்களை, கால்நடைகளுக்குத் தேவைப்படும் புற்களை வெட்டிக் கொண்டுவருவர். சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்குச் செல்வர் அல்லது ஆடுகளை மேய்ப்பதற்காகவோ, விறகுகளை அள்ளி வருவதற்காகவோ அருகில் இருக்கும் காட்டிற்குள் சென்று வருவர். கோடைக்காலங்களில், யாத்திரிகர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ கடினமான மலைப்பாதைகளைக் கடந்து கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்குச் செல்வர்.

ஆனால், இதுவே சூரியன் மேற்கில் அஸ்தமனமாகும் நேரம் ஆகிவிட்டால், எல்லாம் தலைகீழாக மாறிவிடும். கார்வால் மக்களின் இயல்பில் திடீரென்று ஒரு பெரிய மாற்றத்தைப் பார்க்கமுடியும். சந்தைக்கு அல்லது பக்கத்துக் கிராமத்திற்குச் சென்ற ஆண்கள் விரைந்து வீட்டிற்குத் திரும்பி வருவார்கள். புற்களை அறுக்கச் சென்ற பெண்கள், புல் கட்டுகளுடன், சறுக்கலான மலைப்பகுதியில் தட்டுத் தடுமாறித் திரும்பிக் கொண்டிருப்பார்கள். பள்ளிக்கூடங்களிலிருந்து திரும்பி வரும் வழியில் வீட்டிற்குச் செல்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகளையும், ஆட்டை ஓட்டிச் சென்று வீட்டுக்குத் திரும்பாத சிறுவர்களையும், விறகு பொறுக்கச் சென்று திரும்பி வராத சிறுவர்களையும் குறித்து கவலை கொண்ட அவர்களது தாய்மார்கள், தங்களது பிள்ளைகளைக் கத்தி அழைத்த வண்ணம் இருப்பார்கள். சோர்வுடன் பயணித்துவரும் யாத்திரிகர்களைப் பார்க்கும் உள்ளூர் மக்கள், அவர்களை சீக்கிரம் தங்குமிடங்களுக்குப் போய்ச் சேருமாறு எச்சரிப்பார்கள்.

இரவு வந்துவிட்டால், ஒரே நிசப்தம்தான். அங்கு ஏதோ தீங்கு ஏற்படப்போவதைக் குறிக்கும் வகையில் ஒரு அச்சுறுத்தும் அமைதி நிலவும். எங்கும் ஓர் அசைவையும் பார்க்கமுடியாது. எந்தச் சப்தத்தையும் கேட்க முடியாது. உள்ளூர் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை இறுகத் தாழிட்டு உள்ளேயே பத்திரமாக அடைந்திருப்பர். சில வீடுகளில், ஏற்கெனவே இருக்கும் கதவுகள் போதாது என்று கூடுதலாகக் கதவுகளை அமைத்து அதையும் பூட்டி வீட்டினுள் பத்திரமாக இருப்பர். வீடுகளில் தங்க இடம் கிடைக்காத துரதிஷ்ட யாத்திரிகர்கள், விடுதிகளில் ஒருவருக்கொருவர் துணையாக அருகருகே தங்கியிருப்பர்.

இரவாகிவிட்டால், வீடுகளில் தங்கியிருப்பவர்களோ அல்லது விடுதிகளில் தங்கியிருப்பவர்களோ, ஒருவரும் சிறு சப்தத்தைக் கூட எழுப்பமாட்டார்கள். ஆட்கொல்லி சிறுத்தை வந்துவிடும் என்ற பயம்தான் காரணம். இதை வெறும் பயம் என்று சொல்லிவிட முடியாது. கார்வால் பகுதியில் சுமார் 8 வருடங்களாக நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்களால் விளைந்த அச்சம்.

ஒரு பதினான்கு வயது அனாதைச் சிறுவன், தன் எஜமானருக்காக, ஆடுகளை மேய்த்துப் பராமரித்து வந்தான். அவன் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன். ஒவ்வொரு நாளும் ஆடுகளை மேய்த்துவிட்டு திரும்பிய பிறகு, எஜமானர் அவனுக்கு உணவு கொடுப்பார். பின்னர் ஆடுகளுடன் சேர்த்து அவனையும் ஒரு சிறிய அறையில் அடைத்துவிடுவார். அந்த அறை, ஓர் இரண்டடுக்கு மாடிக் கட்டடத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள அறை. எஜமானர் அந்த அறையின் நேர் மேலே உள்ள பகுதியில் வசித்துவந்தார். தான் தூங்கும் பொழுது, ஆடுகள் தன் மீது வந்து விழாமல் இருக்க, அறையின் இடது மூலையில் ஒரு தடுப்பை அச்சிறுவன் ஏற்படுத்தியிருந்தான். அந்த அறையில் ஜன்னல்கள் எதுவுமில்லை. அறையில் நுழைவதற்கு ஒரே ஒரு கதவுதான். ஆடுகளும் சிறுவனும் அறையினுள் சென்றபிறகு, எஜமானர் அறையின் கதவை இழுத்து வைத்து, அதன் கொக்கியில் சங்கிலியைப் பிணைத்து, வாசல் விட்டத்தில் உள்ள வளையத்துடன் கட்டிவிடுவார். மேலும், வளையத்தை விட்டு கொக்கி விலகாமல் இருக்க, அவ்வளையத்தில் ஒரு மரத்துண்டைச் சொருகி விடுவார். சிறுவனும், உள்பக்கமாக ஒரு கல்லை நகர்த்தி கதவருகே வைத்துவிடுவான்.

சம்பவத்தன்று, சிறுவன் அறையினுள் சென்றபிறகு, அவன் எஜமானர் மேற்குறிப்பிட்டவாறு, அறையை நன்கு தாழிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஆட்கொல்லி சிறுத்தை வந்தது. தன் நகங்களால் அறையின் கதவைப் பிராண்டியது. அப்படிப் பிராண்டிய பொழுது, கதவின் கொக்கியை வளையத்துடன் இணைத்திருந்த மரத்துண்டு வெளியே வந்துவிட்டது. பின்னர், கதவருகே வைக்கப்பட்டிருந்த கல்லை நகர்த்திவிட்டு, சிறுத்தை அறையினுள் புகுந்தது.

அந்தச் சிறிய அறையில் நாற்பது ஆடுகள் இருந்தன. அறையின் மூலையில், தடுப்பிற்குப் பின்னால் சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் சிறுத்தையால் ஆடுகளை மீறி லாகவமாகச் சிறுவனிடம் சென்றிருக்க முடியாது. ஒன்று சிறுத்தை கதவின் அருகிலிருந்து மூலையில் படுத்திருந்த சிறுவனை நோக்கிப் பாய்ந்திருக்கவேண்டும் அல்லது சிறுத்தை வந்ததைப் பார்த்த ஆடுகள் பயத்தில் எழுந்து நின்றபொழுது, அதன் கால்களுக்கு நடுவே சிறுத்தை தவழ்ந்து சென்றிருக்கவேண்டும். சிறுத்தை அறைக்குள் வந்தபோது, சிறுவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். காரணம், ஆடுகள் சத்தம் போட்டும் அவன் விழித்துக் கொள்ளவில்லை. சிறுத்தை அவனைத் தாக்கிய போதும், அவன் கூச்சலிடவும் இல்லை. ஆபத்து அவனை நெருங்கும்வரை சிறுவன் அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சிறுத்தை சிறுவனைக் கொன்றது. அறையிலிருந்த ஆடுகளெல்லாம் தப்பித்து இருட்டினுள் ஓடி மறைந்தன. சிறுவனைக் கொன்ற சிறுத்தை காலியான அறையின் வழியே அவனை வெளியில் தூக்கிச் சென்றது. மலைச்சரிவிற்கு உடலை எடுத்துச் சென்றது. அங்கிருந்து, படிமட்ட வயல்வெளிகளின் வழியே பாறைகள் நிரம்பிய மலையிடுக்கிற்குச் சென்றது. அங்கு தான், மறுநாள் சூரியன் உதயத்திற்குப் பிறகு , சில மணி நேரம் கழித்து, சிறுத்தை விட்டுச் சென்ற சிறுவனின் மிச்ச உடலை எஜமானர் கண்டுபிடித்தார்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *