விடியற்காலை என்பதால் சிறுத்தையைத் தொடர்ந்து சென்ற சாலை, போக்குவரத்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. சாலை பல பள்ளத்தாக்குகளின் ஊடே வளைந்து, வளைந்து சென்றது. பொதுவாக ருத்ரபிராயக் ஆட்கொல்லி சிறுத்தை பகலில் மனிதர்களைத் தாக்கி வேட்டையாடுவதில்லை. ஆனால் கார்பெட்டுக்கு இப்போது ஒரு சந்தேகம் எழுந்தது. ஒருவேளை, தாம் சிறுத்தையைத் தொடர்ந்து செல்லும் நேரமான இந்தப் பகல் பொழுதில் சிறுத்தை தன்னை மறைந்து நின்று தாக்கிவிடுமோ என்று. அதனால் அவர் சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் மிகவும் கவனத்துடன் கடந்து சென்றார். இப்படியாக ஒரு மைல் தூரம் சாலையில் கடந்த பிறகு, சிறுத்தை சாலையை விட்டு, புதர் மற்றும் மரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.
சிறுத்தை சாலையை விட்டு விலகிச் சென்ற இடத்திலிருந்து சுமார் நூறு கஜ தூரத்தில், ஒருவர் தன் நிலத்துக்கு நடுவே வேலி போட்டு அடைப்புவலை ஒன்றை ஏற்படுத்தியிருந்தார். இந்த அடைப்பில் குஜ்ஜர்கள் தாங்கள் ஓட்டிவரும் கால்நடைகளை அடைத்து வைப்பார்கள். அங்கு அடைக்கப்படும் கால்நடைகள் போடும் சாணம் அந்த நிலத்தை வளப்படுத்தும். சென்ற தினம் மாலைப்பொழுதில் ஆய்வு பங்களா அருகில் நடந்து சென்ற ஆட்டு மந்தை அந்த அடைப்புவலையில் அடைக்கப்பட்டிருந்தது.
அந்த ஆட்டு மந்தையின் சொந்தக்காரர் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்தார். அவர் கடந்த அரை நூற்றாண்டுகளாக யாத்திரீகர்கள் செல்லும் சாலையின் வழியே சரக்குகளைக் கீழேயிருந்து மேலேயும், மேலேயிருந்து கீழேயும் எடுத்துச் செல்வதை, தொழிலாகச் செய்து வந்தார். கார்பெட் அவரை நெருங்கும் போது, அவர் அடைப்புவலை முகப்பின் முள்வேலியைத் திறந்து கொண்டிருந்தார். கார்பெட் அவரிடம் ‘சிறுத்தையைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டார். அதற்கு அவர், ”நான் பார்க்கவில்லை. ஆனால் விடியும் போது மந்தையைப் பாதுகாக்கும் இரண்டு நாய்கள் குரைத்தன; பின்னர் சில நிமிடங்கள் கழித்து, சாலைக்கு மேலே அமைந்திருக்கும் வனப்பகுதியில் கக்கர் மான் கத்தி ஒலி எழுப்பியது’ என்று சொன்னார்.
கார்பெட் அவரிடம் ‘நீங்கள் உங்களுடைய ஆடுகளில் ஒன்றை எனக்கு விற்பீர்களா?’ என்று கேட்டார்.
‘உங்களுக்கு எதற்காக ஆடு தேவைப்படுகிறது’ என்று இடையர் கேட்டார்.
சிறுத்தையை வேட்டையாட, தூண்டிலாகப் பயன்படுத்த ஆடு தேவைப்படுகிறது என்று கார்பெட் தெரிவித்தார்.
இடையர் அடைப்புவலையின் முகப்பை மூடிவிட்டு, கார்பெட் கொடுத்த ஒரு சிகரெட்டை வாங்கிக்கொண்டு சாலையின் அருகே இருந்த கல்லில் அமர்ந்தார்.
இருவரும் சிறிது நேரம் புகைத்துக்கொண்டிருந்தனர். கார்பெட்டின் கேள்விக்கு இடையர் பதில் எதுவும் சொல்லவில்லை. பின்னர் அவர் பேச்சை ஆரம்பித்தார்.
‘சாகிப், நான் பத்ரிநாத் அருகில் உள்ள கிராமத்திலிருந்து வருகிறேன். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவ்விதத்திலும் பயனளிக்காத ஒரு காரியத்துக்காக நீங்கள் உங்கள் ஊரிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் நினைத்தது போல் பல பேரின் இறப்புக்குக் காரணமாக இருப்பது ஒரு மிருகம் இல்லை. அது ஒரு தீய ஆவி. அதை நீங்கள் துப்பாக்கியினாலோ வேறு எந்த ஆயுதத்தினாலோ கொல்ல முடியாது. பலர் அதை அழிப்பதற்கு பலவித முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியைத் தழுவினர். இதற்கு ஆதாரமாக நான் ஒரு கதையை உங்களுக்கு சொல்கிறேன் என்று சொல்லியபடியே இரண்டாவது சிகரெட்டைப் பற்றவைத்தார் இடையர்.
‘எனக்கு இந்தக் கதையைச் சொன்னது என்னுடைய தந்தை. அவர் தன் வாழ்நாளில் பொய் பேசியதே இல்லை. இது அனைவருக்கும் தெரியும்.
‘பல ஆண்டுகளுக்கு முன்னர், என் தந்தை இளைஞராக இருந்தபோது, நான் பிறந்திராத நேரத்தில், ஒரு தீய ஆவி எங்களுடைய கிராமத்துக்கு வந்தது. அதை எல்லோரும் சிறுத்தை என்று நம்பினர். இப்போது இந்தப் பகுதியை எப்படி தீய ஆவி தொந்தரவு செய்கிறதோ, அதே போல் எங்கள் கிராமத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் என அனைவரையும் அவர்களது வீட்டிலேயே அந்தத் தீய ஆவி கொன்றது.
‘இப்போது இங்கு நடப்பது போல் அச்சிறுத்தையைக் கொல்ல அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. சிறுத்தையைப் பிடிக்க பொறிகள் வைக்கப்பட்டன. குறிபார்த்துச் சுடுவதில் வல்லவர்களும் பிரபலமானவர்களும் மரத்தின் மீது அமர்ந்து அந்தச் சிறுத்தையைச் சுட்டு வீழ்த்த முயற்சி செய்தார்கள். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன. மக்கள் மத்தியில் பேரச்சம் நிலவியது. இருட்டியதும் தங்களது வீட்டை விட்டு ஒருவரும் வெளியேறவில்லை. விடியும் வரை அனைவரும் வீட்டின் உள்ளேயே அடைபட்டுக் கிடந்தனர்.
‘என்னுடைய தந்தையார் வசித்த கிராமத்தின் தலைவர் பஞ்சாயத்தைக் கூட்டினார். பஞ்சாயத்தில் அனைத்து ஆண்களும் கலந்து கொண்டனர். தலைவர், கூடியிருந்தவர்களிடம் நாம் இந்த ஆட்கொல்லி சிறுத்தையை ஒழித்துக்கட்ட ஏதாவது ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும் என்று வேண்டுதல் விடுத்தார்.
‘அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு வயதான நபர் எழுந்து பேசினார். அவர் சற்று முன்னர்தான் தன் பேரனைத் தகனம் செய்துவிட்டு இடுகாட்டிலிருந்து வந்திருந்தார். அவர், ‘நேற்று என் வீட்டில் நுழைந்து என் பேரனை அடித்துக் கொன்றது சிறுத்தை இல்லை. நான் என் பேரன் அருகில்தான் படுத்திருந்தேன். என் பேரனைக் கொன்றது நம்மை போன்ற ஒரு மனித ஆசாமிதான். அந்த ஆசாமிக்கு நரமாமிசமும் ரத்தமும் தேவைப்படும்போது சிறுத்தை போல் உருவெடுப்பான். அம்மாதிரி ஆசாமியை நாம் துப்பாக்கியாலோ வேறு ஆயுதத்தாலோ கொல்லமுடியாது. மாறாக நெருப்பால்தான் கொல்ல முடியும். என்னுடைய சந்தேகம், பாழடைந்த கோவிலுக்கு அருகே குடிசையில் வாழும் அந்த பருத்த சாதுதான் நரமாமிசம் சாப்பிடும் ஆசாமி’ என்றார்.
‘பெரியவர் சொன்னதைக் கேட்டதும், கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சிலர், பேரன் இறந்த துக்கத்தில், பெரியவரின் புத்தி பேதலித்துவிட்டதாகச் சொன்னார்கள். வேறு சிலரோ, பெரியவர் சொல்வது சரிதான் என்று அவருக்கு ஆதரவாகப் பேசினர். பெரியவருக்கு ஆதரவாக பேசியவர்கள், அந்த சாது இந்த கிராமத்துக்கு வந்த பின்னர்தான் கொலைகளும் ஆரம்பித்தன என்று சொன்னார்கள். அதிலும் சிலர் கிராமத்தில் ஒரு கொலை நிகழ்ந்த மறுநாள் அந்த சாது பகல் முழுதும் கட்டிலில், வெயிலில் தன் உடம்பை நீட்டிப் படுத்திருப்பதை பழக்கமாகக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.
‘பஞ்சாயத்தில் ஒருவருக்கொருவர் தீவிரமாக விவாதித்தனர். இறுதியாக பஞ்சாயத்தில், உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவேண்டாம், ஆனால் அந்த சாதுவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக அங்கு குழுமியிருந்த ஆண்களிலிருந்து மூன்று குழுக்கள் உருவாக்கப்பட்டன. இடையரின் தந்தை மூன்றாவது குழுவில் இடம்பெற்றிருந்தார்.
‘அந்தக் குழுக்களின் வேலை, குறிப்பிட்ட நாட்களில், அவர்கள் மாறி மாறி சாதுவைக் கண்காணிக்க வேண்டும். பொதுவாக கொலைகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெற்றன. அதனால் அடுத்த கொலை எப்போது நடக்கும் என்று கிராமத்தவர்களால் கணிக்க முடிந்தது.
‘அன்று இரவு, முதல் மற்றும் இரண்டாம் குழுக்கள் கவனித்து வந்த நேரத்தில் சாது தன் குடிசையை விட்டு வெளியேறவில்லை. அவர்களை அடுத்து, மூன்றாம் குழுவினர் சாதுவின் குடிசையைக் கவனிக்கத் தொடங்கினர். அப்போது அந்தக் குடிசையின் கதவு மெதுவாகத் திறந்தது. கதவு வழியாக சாது வெளியே வந்து, இருட்டில் மறைந்து போனார். சில மணி நேரம் கழித்து, மலைகளுக்கு நடுவே இருந்த மரக்கரி எரிப்பவரது வீட்டிலிருந்து ஒரு வேதனை கலந்த அலறல் சப்தம் மூன்றாவது குழுவினரின் காதுகளில் விழுந்தது. அதன் பிறகு அமைதி நிலவியது.
‘அன்று மூன்றாவது குழுவினர் உறங்காமல் கண் விழித்தபடியே காத்திருந்தனர். விடியலுக்குச் சற்று முன், சாது வேகமாகத் தன் குடிசையை நோக்கி விரைந்தார். அவருடைய கைகள் மற்றும் வாயிலிருந்து இரத்தம் ஒழுகியது.
‘சாது, குடிசைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டவுடன், மூன்றாம் குழுவினர் சாதுவை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டனர். பின்னர் சாதுவின் வைக்கோல் போருக்குச் சென்று அங்கிருந்து வைக்கோல் மூட்டைகளை எடுத்து வந்து குடிசை மீது போட்டுல் கொளுத்திவிட்டனர். அன்றைய தினம், சூரியன் வானில் உதித்தபோது, குடிசை இருந்த இடம் புகையும் சாம்பலுமாகக் காட்சியளித்தது. அதன் பிறகு ஒரு கொலை கூட நடைபெறவில்லை’ என்று முடித்தார் அந்த இடையர்.
‘சாகிப், இப்போது, இந்தப் பகுதியில், எந்த சாதுக்களின் மீதும் சந்தேகமும் எழவில்லை. அப்படி எழுந்தால், என் தந்தையார் காலத்தில் விவகாரம் எப்படிக் கையாளப்பட்டதோ, அதே முறை இப்போதும் கையாளப்படும். ஆனால் அதுவரை, கார்வால் மக்கள் துன்பற வேண்டும். சாகிப் நீங்கள் என்னிடம் ஒரு ஆட்டை விற்பாயா என்று கேட்டீர்கள். நான் விற்க மாட்டேன். ஏனென்றால் என்னிடம் உங்களுக்கு விற்பதற்கு ஆடு இல்லை. ஆனால் நீங்கள் என் கதையைக் கேட்ட பிறகும், இவ்வளவு கொலைகளுக்கும் காரணம் ஒரு சிறுத்தை என்று நினைத்தால், நீங்கள் அச்சிறுத்தையைக் கொல்ல தூண்டில் ஆடு வேண்டும் என்று விரும்பினால், நான் என் மந்தையிலிருந்து ஒரு ஆட்டை உங்களுக்குத் தருகிறேன். அந்த ஆடு இறந்துவிட்டால் நீங்கள் எனக்குக் காசு கொடுத்தால் போதும். ஆடு இறக்கவில்லையென்றால் நீங்கள் எனக்குக் காசு கொடுக்கத் தேவையில்லை. இன்றும், நாளையும் நான் இங்கு இருப்பேன். பின்னர், நாளை மறு நாள் விடிவெள்ளி தோன்றிய பிறகு நான் இவ்விடத்தை விட்டுச் சென்றுவிடுவேன்.’
0
கார்பெட், அன்று மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், ஆடுகள் அடைபட்டிருக்கும் அடைப்புவலைக்குச் சென்றார். இடையர் தன் மந்தையிலிருந்து ஆட்டைத் தேர்வு செய்ய கார்பெட்டை அனுமதித்தார். கார்பெட் மந்தையிலிருந்த ஒரு கொழுத்த ஆட்டை தேர்வு செய்தார். சிறுத்தை அந்த ஆட்டை வேட்டையாடினால், அதை இரண்டு நாட்களுக்கு உணவாக உட்கொள்ளும். கார்பெட் அந்த ஆட்டைப் புதர்காட்டுப் பகுதியில், சிறுத்தை ஒரு 12 மணி நேரத்துக்கு முன்பாகச் சென்ற பாதை அருகே கட்டிவைத்தார்.
மறுநாள் காலை கார்பெட் எழுந்தவுடன், பங்களாவை விட்டுக் கிளம்பினார். அவர் பங்களாவின் தாழ்வாரத்தை விட்டு இறங்கியபோது, ஆட்கொல்லிச் சிறுத்தையின் காலடிச் சுவடுகள் அவரது கண்களில் பட்டன. சிறுத்தை பங்களாவின் தாழ்வாரத்துக்கு வந்திருக்கிறது! பங்களாவின் கதவருகே சென்று பார்த்தபோது, சிறுத்தை கோலப்ராய் திசையிலிருந்து சாலை வழியாக பங்களாவுக்கு வந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து ருத்ரபியாக் பஜாருக்குச் சென்றிருக்கிறது.
கார்பெட், முன் தினம் ஆட்டைக் கட்டி வைத்திருந்த இடத்துக்குச் சென்று பார்த்தார். அங்கு ஆடு கொல்லப்பட்டிருந்தது. கார்பெட் ஆட்டைக் கட்டிய சில மணி நேரத்திலேயே சிறுத்தை அதை அடித்துக் கொன்றிருக்கிறது. ஆனால் கொன்ற ஆட்டிலிருந்து துளி மாமிசத்தைக்கூட சிறுத்தை தின்றிருக்கவில்லை. அச்சிறுத்தை மனிதர்களை வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டிருந்ததால் அது ஆட்டைத் தின்னவில்லை.
இடையர், கார்பெட்டிடம் ‘உங்க வீட்டுக்குப் போங்க சாகிப். உங்க பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்’ என்று அறிவுரை கூறியபடியே, தன் மந்தையை சீட்டி அடித்தவாறே அழைத்துக்கொண்டு, ஹரித்துவார் செல்லும் சாலையை நோக்கி நடையைக் கட்டினார்.
(தொடரும்)