இச்சம்பவங்கள் அனைத்தும் சிறுத்தை ஆட்கொல்லி விலங்காக மாறிய சில காலத்தில் நடந்தவை. ருத்ரபிரயாக் தொங்கு பாலத்திலோ, பொறி கூண்டிலோ அல்லது குகையிலோ சிறுத்தை கொல்லப்பட்டிருந்தால், பின்னாட்களில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழக்க வேண்டியிருந்திருக்காது. கார்வால் பகுதி மக்கள் பெரிய அவதிக்கும் இன்னலுக்கும் ஆளாகி இருந்திருக்க வேண்டியதில்லை.
1925 ஆம் ஆண்டு, நைனிடாலில் உள்ள சாலே அரங்கில். Gilbert and Sullaivan தயாரித்து வெளியிட்ட ‘Yeomen of the Guard’ என்ற இசை நாடகத்தைப் பார்க்கச் சென்றபொழுதுதான், ருத்ரபிரயாக் சிறுத்தையின் சரியான விவரங்களைக் கார்பெட் தெரிந்து கொண்டார்.
அதற்கு முன்னர், கார்வால் பகுதியில் ஓர் ஆட்கொல்லி சிறுத்தை உலவுவதைப் பற்றிப் பலர் சொல்லி கார்பெட் கேள்விப்பட்டிருக்கிறார், செய்தித்தாள்களில் ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையைப் பற்றிப் படித்திருக்கிறார். கார்வாலில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் 4000-க்கும் அதிகமான பேர் இருக்கிறார்கள். ருத்ரபிரயாக்கிலிருந்து சுமார் 70 மைல் தொலைவில் உள்ள லாண்ட்ஸ்டவுனில் நிறைய வேட்டைக்காரர்கள் இருந்தார்கள். இருப்பினும், இவர்களுக்குள் ஆட்கொல்லி சிறுத்தையை யார் முதலில் வீழ்த்துவது என்ற போட்டி நிலவியது. இந்தச் சூழ்நிலையில் கார்வாலுக்குக் கார்பெட் செல்வதை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள் என்று அவர் நினைத்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான், சாலத் மதுக்கூடத்தில், கார்பெட் அவர் நண்பருடன் மது அருந்திக்கொண்டிருந்த போது, ஐக்கிய மாகாணத்தின் (இன்றைய உத்திரப்பிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் பகுதிகளை உள்ளடக்கிய அன்றைய பிரிட்டிஷ் இந்திய மாகாணம்) முதன்மைச் செயலாளரும், பின்னால் அசாம் மாகாணத்தின் ஆளுனராகவும் இருந்த மைக்கெல் கீன், அங்குக் குழுமியிருந்த நபர்களிடம் ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையைப் பற்றிச் சொல்லி, அவர்களிடம் அதை வேட்டையாடி வீழ்த்தும்படி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் முதன்மைச் செயலாளரின் வேண்டுகோளுக்கு அங்குக் கூடியிருந்தவர்களிடமிருந்து பெரிய வரவேற்பு இல்லை. ‘என்னது, நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களை வேட்டையாடிய ஆட்கொல்லி விலங்கைப் பின்தொடர்ந்து போவதா? வாய்ப்பேயில்லை’ என்று அங்கு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்.
மறுநாள், தலைமைச் செயலாளரை கார்பெட் சந்தித்தார். அவரிடம் அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டார். ஆட்கொல்லி சிறுத்தை எந்த இடத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது என்று தன்னால் சரியாகச் சொல்லமுடியவில்லை என்றார் தலைமைச் செயலாளர். அதனால் அவர் கார்பெட்டை ருத்ரபிரயாகிற்குச் செல்லும்படிப் பணித்தார். அங்குக் கார்வாலுக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட துணை கமிஷனரான இபாட்சனை சந்திக்கும்படிக் கேட்டுக் கொண்டார். இபாட்சன் பின்னாளில் ஐக்கிய மாகாணத்தின் ஆளுனருக்கு ஆலோசகராகச் செயல்பட்டார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட கார்வாலின் துணை ஆணையரான இபாட்சனின் அப்போதைய தலையாய கடமை, கார்வால் பகுதியைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்ல வேண்டும் என்பதே. அதன் பொருட்டு, இபாட்சனும் கார்பெட்டுக்கு அப்போது ஒரு கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தார். அந்தக் கடிதமும் கார்பெட்டுக்குக் கிடைத்தது.
கார்பெட் ருத்ரபிரயாக்கிற்குப் பயணமானார். அவருடைய ஊரான நைனிடாலிலிருந்து ராணிகேட், அத்பாரி, கர்ணபிரயாக் வழியாக பத்து நாட்கள் பயணத்திற்குப் பிறகு, மாலை நேரம் நாகராசு என்ற இடத்திலிருந்த ஆய்வு மாளிகைக்கு வந்தடைந்தார் கார்பெட். கார்பெட்டுடன், அவருடைய பொருள்களைச் சுமந்து கொண்டு ஆறு கார்வாலிகளும் (கார்வாலைச் சேர்ந்தவர்கள்), வேலைக்காரன் ஒருவனும் ஆய்வு மாளிகைக்கு வந்தார்கள். ஆனால் அந்தப் பங்களாவில் தங்க வேண்டுமென்றால், முன்கூட்டியே அதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுவர வேண்டும் என்பது கார்பெட்டுக்குத் தெரியவில்லை. அதனால் ஆய்வு பங்களாவின் காவல் பொறுப்பாளர், கார்பெட்டையும் மற்றவர்களையும் அங்குத் தங்க அனுமதிக்கவில்லை. என்னடா சோதனை என்று கார்பெட்டும், அவருடன் வந்தவர்களும் இன்னும் இரண்டு மைல்கள் தூரம் ருத்ரபிரயாக் சாலையில் நடந்து சென்று, அங்கு ஒரு தகுந்த இடத்தில், தங்களுடைய முகாமை அமைத்து அன்றிரவு அங்குத் தங்க ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
கார்பெட்டுடன் வந்தவர்கள் தண்ணீர் எடுக்கச் சென்றனர். குச்சிகளைப் பொறுக்கி வரச் சென்றனர். அவருடைய வேலைக்காரன் சமையல் செய்வதற்கு அடுப்பைத் தயார் செய்தான். இவர்கள் நடந்து வந்த பாதையில் பத்து மைல்களுக்கு முன்பாகவே, இவர்கள் ஆட்கொல்லி சிறுத்தையின் பகுதியில் பிரவேசித்து விட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே இரவில் பாதுகாப்பு கருதி, கார்பெட் தன் முகாமைச் சுற்றிலும் முள்வேலி அமைக்க முட்செடிகளை வெட்டிவரக் கோடரியுடன் கிளம்பினார்.
கார்பெட்டின் வேலைக்காரன் சமையலுக்காக அடுப்பைப் பற்ற வைத்த பிறகு, தொலைவிலுள்ள ஒரு மலையிலிருந்து பதற்றத்துடன் ஒரு குரல் ஒலித்தது. ‘நீங்க எல்லாம் அங்குத் திறந்த வெளியில என்ன செய்திட்டு இருக்கீங்க. அது ஆட்கொல்லி சிறுத்தை நடமாடுற இடம். நீங்க அந்த இடத்தில இருந்தீங்கன்னா சிறுத்தை உங்களைக் கொன்னுடும்’ என்று எச்சரிக்கை செய்தது அந்தக் குரல். இரவில், இடர்களுக்கு நடுவில் முகாமிட்டிருப்பவர்களின் நன்மை கருதி, ஒருவர் தன் எச்சரிக்கையை விடுத்தார்.
கார்பெட்டுடன் வந்தவர்களில் ஒருவரான மது சிங், அங்கிருந்தவர்கள் அனைவரின் சார்பாகவும் கார்பெட்டிடம், ‘நாம் இங்கேயே தங்குவோம். நம்மிடம் இரவு முழுதும் விளக்கு எரிக்கப் போதுமான எண்ணெய் இருக்கிறது. கூடவே, எங்களைப் பாதுகாக்க உங்களிடம் துப்பாக்கியும் இருக்கிறது’ என்று தெரிவித்தார். அனைவரும் அவர்கள் அமைத்த கூடாரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டனர். பத்து நாட்களாக நடந்து வந்த களைப்பு அவர்களை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தியது. விடியற்காலையில், கார்பெட் விழித்தவுடன் விளக்கைக் கவனித்தார். அது நன்றாக எரிந்து கொண்டிருந்தது. அதில் எண்ணெய்யும் இருந்தது. துப்பாக்கி படுக்கையில் குறுக்காக இருந்தது. கார்பெட் அமைத்த வேலி அவ்வளவு உறுதியானதாக இல்லை. சென்ற இரவு சிறுத்தை அவர்கள் முகாமிற்கு வந்திருந்தால் அதற்கு எளிதாக இரை கிடைத்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, சிறுத்தை அவர்களின் முகாம் பக்கம் வரவில்லை.
அனைவரும் முகாமை விட்டுக் கிளம்பி ருத்ரபிரயாகிற்குச் சென்றனர். அங்கு இபாட்சனின் ஆட்கள், அவர்களுக்கு அன்பான வரவேற்பை வழங்கினார்கள்.
ருத்ரபிரயாக்கின் கிழக்கே உள்ள மலையில் ஏறிப்பார்த்தால் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகத் தெரியும். ருத்ரபிரயாக்கைச் சுற்றியுள்ள சுமார் 500 சதுர மைல்கள் கொண்ட அடர்ந்து விரிந்த பகுதியில் ஆட்கொல்லி சிறுத்தை உலாவிக் கொண்டிருந்தது. அந்த நிலப்பகுதியின் நடுவே அலக்நந்தா நதி ஓடி அப்பகுதியை ஏறத்தாழ சரிசமமாகப் பிரிக்கிறது. அலக்நந்தா நதி கர்ணபிரயாக்கைக் கடந்து ருத்ரபிரயாக்கை வந்தடைகிறது. ருத்ரபிரயாக்கில் அலக்நந்தா நதி, வட மேற்கிலிருந்து வரும் மந்தாகினி நதியைச் சந்திக்கிறது. இந்த இரண்டு நதிகளுக்கும் இடையே முக்கோண வடிவில் அமைந்திருக்கும் நிலப்பகுதி, அலக்நந்தா நதியின் இடது கரையை விடச் செங்குத்துக் குறைவான பகுதி. அதனால் அலக்நந்தா நதியின் இடது கரையை விட, முக்கோண வடிவில் உள்ள நிலப்பகுதியில் அதிகக் கிராமங்கள் உள்ளன.
மலை முகட்டிலிருந்து பார்த்தால், தூரத்தில் விவசாய நிலங்கள் தெரியும். அந்நிலங்களைப் பார்க்கும்போது, செங்குத்தான மலைகளின் மீது கோடுகள் போட்டது போல் காட்சியளிக்கும். இந்தக் கோடுகள் எல்லாம் வேறொன்றும் இல்லை, விளைநிலங்கள் தான். இந்த நிலங்கள், ஒரு கஜம் முதல் சுமார் ஐம்பது கஜங்கள் வரை அகலம் கொண்டிருக்கும். இந்நிலங்களில் உள்ள வீடுகள் அனைத்தும், விளைநிலங்களின் உயரமான பகுதியில்தான் காணப்படும். இப்பகுதிகளில், ஒரு சில விளைநிலங்களில் மட்டுமே பாதுகாப்பு வேலிகள் இருந்தன. மற்ற விளைநிலங்களில், கால்நடைகளோ அல்லது வன விலங்குகளோ புகுந்து பயிர்களை நாசம் செய்யாமல் பாதுகாக்கவே, வீடுகள் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
மலை முகட்டிலிருந்து பார்க்கும்போது, பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளும், பழுப்பு நிறத்தில் வனப்பகுதிகளும் கண்களுக்குத் தென்படும். இங்குள்ள சில கிராமங்களைச் சுற்றிலும் புல்வெளிகள் அமைந்திருக்கும். சில கிராமங்களைச் சுற்றிலும் வனங்கள் அமைந்திருக்கும். மேலிருந்து பார்க்கும் பொழுது, மொத்தப் பகுதியுமே கரடு முரடாகத் தெரியும். இந்த நிலப்பகுதியை, பள்ளத்தாக்குகளும் சிகரங்களும் பிளவுபடுத்தியிருப்பதைப் பார்க்க முடியும். இந்நிலப்பகுதியில் இரண்டு சாலைகள் மட்டுமே உண்டு. ஒன்று, ருத்ரபிராயக்கிலிருந்து கேதார்நாத் நோக்கிச் செல்லும் சாலை. மற்றொன்று, யாத்திரிகர்களால் பத்ரிநாத் செல்லப் பயன்படுத்தப்படும் முக்கிய சாலை. 1920 ஆம் ஆண்டுகளில், இவ்விரு சாலைகளுமே குறுகலாகவும், கரடு முரடாகவும் இருந்தன. வண்டிகள் எதுவும் இந்தச் சாலைகளில் பயணிக்க முடியாது.
1918 ஆம் ஆண்டு தொடங்கி 1926 ஆம் ஆண்டு வரையிலான எட்டு ஆண்டுகளில், இந்த நிலப்பகுதியில் ருத்ரபிரயாக் சிறுத்தையால் கொல்லப்பட்ட மக்களின் பலி எண்ணிக்கை மொத்தம் 125. புல்வெளிகளால் சூழப்பட்ட கிராமங்களை விட, வனப்பகுதியால் சூழப்பட்ட கிராமங்களில்தான் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும் என்று சிலர் கணிக்கலாம். ஆனால் அது அப்படி அல்ல. ஒரு புலி, ஆட்கொல்லி விலங்காக மாறியிருந்தால் இந்தக் கணிப்பு சரிதான். ஆனால் இங்கு ஆட்கொல்லியாக இருப்பது சிறுத்தை. சிறுத்தை இரவில் வேட்டையாடும். இரவில் வெளிச்சம் இருப்பதில்லை. எனவே பகல் பொழுதில் பதுங்கி வேட்டையாடுவது போல் இரவில் வேட்டையாட வேண்டிய அவசியம் சிறுத்தைக்கு இல்லை. அப்படியென்றால், ஆட்கொல்லி சிறுத்தையால் ஒரு கிராமத்தை விட மற்றொரு கிராமத்தில் அதிகப் பலி ஏற்பட்டதற்கு, அக்கிராம மக்கள் முன்னெச்சரிக்கையாக இல்லை என்பதே காரணம்.
ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை ஒரு பெரிய ஆண் சிறுத்தை. வாலிபப் பருவத்தைக் கடந்த சிறுத்தை. அச்சிறுத்தைக்கு வயதாகி இருந்தாலும், அதன் வலிமை குறையவில்லை. ஒரு விலங்கால், தான் வேட்டையாடிய இரையை எவ்வளவு தூரம் தூக்கிச் சென்று எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் அந்த இரையைச் சாப்பிட முடிகிறதோ, அதை மையமாக வைத்துத்தான் அந்த விலங்கு தன்னுடைய வேட்டையாடும் இடத்தைத் தேர்வு செய்யும். ஆனால் ருத்ரபிரயாக் சிறுத்தைக்கு அனைத்து இடங்களும் ஒன்றுதான். எவ்வளவு கனமான இரையையும் வெகு தூரத்திற்கு எளிதாகத் தூக்கிச் சென்றுவிடும். ஒரு சம்பவத்தில், தன் இரையை நான்கு மைல் தொலைவிற்குத் தூக்கிச் சென்றது அச்சிறுத்தை. நன்கு வளர்ந்த ஒரு பெரிய மனிதனை, அவனது வீட்டிலேயே அடித்துக் கொன்று, சுமார் 2 மைல் தொலைவில், மரங்கள் அடர்ந்த செங்குத்தான மலைப் பகுதிக்குத் தூக்கிச் சென்றது. பின்னர் அங்கிருந்து இறந்த அம்மனித உடலை இன்னொரு 2 மைல் தொலைவிற்கு அடர்ந்த புதர்க் காட்டின் வழியாகத் தூக்கிச் சென்றது. சிறுத்தை ஏன் அப்படிச் செய்தது என்று தெரியவில்லை. சிறுத்தை மனிதனைத் தாக்கிய நேரம் நள்ளிரவுக்கு முன்பாக. சிறுத்தையை மறுநாள் மதியம் வரை யாரும் பின்தொடரவில்லை. அப்படியிருந்தும், அச்சிறுத்தை அந்த மனித உடலை 4 மைல்கள் தூரம் தூக்கிச் சென்றது ஏன்? என்பது தெரியவில்லை.
(தொடரும்)