ஆட்கொல்லி சிறுத்தைகள் தோன்றுவது மிகவும் அரிதான ஒன்று. அதனால், ஆட்கொல்லி சிறுத்தைகளைப் பற்றிய விவரங்கள் அதிகம் இல்லை.
மிருக இறைச்சியிலிருந்து மனித இறைச்சிக்கு மாறும் ஆட்கொல்லி சிறுத்தையின் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். ஆட்கொல்லி புலிகளின் பழக்கவழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.
ருத்ரபிரயாக் சிறுத்தையின் பழக்கவழக்கங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று கார்பெட்டுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதனால் சாதாரணமாக ஒரு சிறுத்தையைக் கொல்லும் யுத்திகளைத்தான், ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்வதற்கும் கார்பெட் பயன்படுத்தினார்.
பொதுவாக சிறுத்தையைக் கொல்வதற்கு, முதலில் அதன் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும். தான் ஏற்கெனவே கொன்ற இரையைத் தேடிச் சிறுத்தை வரும் அல்லது ஒரு தூண்டில் (bait) ஆட்டைக் கட்டி வைத்தால், அதனைத் தாக்கி இரையாக்கிக் கொள்ள வரும். அப்பொழுது அதன் வருகைக்காக, தயாராக மரத்தின் மீது மேடை அமைத்து மறைவாகக் காத்திருக்கும் வேட்டைக்காரர் சிறுத்தையைக் குறி பார்த்துச் சுடுவார். சிறுத்தை வீழ்ந்து விடும்.
இந்த முறையைப் பயன்படுத்தி ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்ல கார்பெட் திட்டமிட்டார். ஆனால் இதில் அவருக்கு ஒரு சிக்கல் இருந்தது. சிறுத்தை தாக்கிக் கொன்ற இரை அவருக்குக் கிடைக்கவேண்டும் அல்லது சிறுத்தை இருக்கும் இடம் அவருக்குத் தெரியவேண்டும்.
கார்பெட் ருத்ரபிரயாக் சென்றதன் முக்கிய நோக்கமே, மேலும் ஒரு மனித உயிர் இழப்பு ஆட்கொல்லி சிறுத்தையால் அங்கு ஏற்படக்கூடாது. அதனால் அவர் அடுத்த மனித உயிர் இழப்பு ஏற்படும்வரைக் காத்திருக்க விரும்பவில்லை. எனவே, அவர் ஆட்கொல்லி சிறுத்தை இருக்கும் பகுதியைத் தேடிச் சென்று, அங்கு ஒரு தூண்டில் ஆட்டைக் கட்டி, அங்கு ஆட்கொல்லி சிறுத்தையை வரவழைத்து, பின்னர் சுட்டு வீழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆனால் இந்த முடிவிலும் அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஆட்கொல்லி சிறுத்தை சுமார் 500 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட பகுதியில் உலாவிக் கொண்டிருந்தது. சாதாரணமாகவே, 500 சதுர மைல்கள் உள்ள பகுதியில், ஒரு விலங்கை அதுவும் இரவில் உலாவும் ஒரு சிறுத்தையைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்துவது என்பது சிரமமான செயல். அதிலும், கார்வால் போன்ற கரடு முரடான மலைகளைக் கொண்ட பகுதியில் சிறுத்தையைத் தேடி வீழ்த்துவது என்பது மிகவும் சவாலான காரியம். அதனால், கார்பெட் அலக்நந்தா நதியைத் தன்னுடைய வேட்டைக்கான இடமாகத் தேர்வு செய்தார். காரணம், சிறுத்தை உலாவும் அந்தப் பெரிய பரப்பளவு பகுதியை இரண்டு சரிசமமான பகுதிகளாக அலக்நந்தா நதி பிரித்தது.
ருத்ரபிரயாக் மக்களால் பொதுவாக நம்பப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், ஆட்கொல்லி சிறுத்தைக்கு அலக்நந்தா நதி ஒரு பெரிய தடையே கிடையாது. ஆட்கொல்லி சிறுத்தைக்கு நதியின் ஒரு கரையில் மனித உயிர் கிடைக்கவில்லை என்றால், அது நதியை நீந்திக் கடந்து மறுகரையை அடைந்து, அங்குள்ள மனிதர்களை வேட்டையாடியது என்று மக்கள் நம்பினர்.
ஆனால் மக்களின் இந்தக் கருத்தில் கார்பெட்டுக்கு உடன்பாடு இல்லை. வேகமாகக் கரை புரண்டோடும், ஜில்லென்று இருக்கும் அலக்நந்தா ஆற்றுத் தண்ணீரில் எந்தச் சிறுத்தையும் நீந்திச் செல்ல வாய்ப்பில்லை என்று திடமாக நம்பினார். ஆட்கொல்லி சிறுத்தை அலக்நந்தா நதியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் செல்ல இரண்டு தொங்கு பாலங்களில் ஒரு பாலத்தைக் கண்டிப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
அந்தப் பகுதியில் இரண்டு தொங்கு பாலங்கள் இருந்தன. ஒன்று ருத்ரபிரயாக்கிலும், மற்றொன்று 12 மைல்கள் தொலைவில் உள்ள சத்துவபிபாலிலும் இருந்தன. இந்த இரண்டு பாலங்களுக்கும் நடுவில் ஊஞ்சல் பாலம் ஒன்று இருந்தது. இந்த ஊஞ்சல் பாலத்தின் வழியாகத்தான் இபாட்சனும் 200 பேரும் பறையடிக்கச் சென்றனர்.
ஊஞ்சல் பாலத்தைப் பயன்படுத்தி எலியைத் தவிர வேறு எந்த விலங்கும் செல்ல முடியாது. ஊஞ்சல் பாலத்தின் மீது செல்வது என்பது பலருக்கு அச்சத்தை வரவழைக்கக் கூடியது. பாலத்தின் இரு பக்கங்களிலும், காய்ந்த புற்களால் திரிக்கப்பட்ட கயிறு இருந்தது. அந்தக் கயிற்றின் நடுவே, நடப்பதற்காக ஒன்றரை அங்குலத்திலிருந்து இரண்டு அங்குலம் வரை தடிமனுள்ள குச்சிகள் இரண்டடி தூர இடைவெளியில் வைக்கப்பட்டு, அதன் முனைகள் இரு பக்கங்களின் உள்ள கயிறுகளில், புற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. இந்த ஊஞ்சல் பாலம் அமைக்கப்பட்டுப் பல ஆண்டுகளாகிய நிலையில், அதன் கயிறுகள் கருமையாகக் காட்சியளித்தன. பாலத்தின் அடியில் ஓடும் நதியிலிருந்து வெளிப்படும் மூடு பனியால், பாலத்தின் கயிறு பூஞ்சை படிந்திருந்தது. இந்தப் பாலம் சுமார் 200 அடி நீளம் கொண்டது. அடியில் வெண்மையான நுரையை வெளித்தள்ளியபடியே அலக்நந்தா நதி சென்றது. ஊஞ்சல் பாலத்தை அடுத்து ஒரு நூறு கஜ தூரத்தில், இடியை ஒத்த பேரிரைச்சலுடன் அலக்நந்தா நதி இரண்டு பாறைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து ஓடியது. ஊஞ்சல் பாலத்தின் ஒரு பக்கக் கயிறு சாய்வாக இருந்ததால், நடப்பதற்காக நடுவில் வைக்கப்பட்டிருந்த குச்சிகளும் சாய்ந்திருந்தன. அதனால் ஊஞ்சல் பாலத்தில் நடப்பவர்கள் 45 டிகிரி கோணத்தில் நடந்து செல்ல வேண்டும்.
இந்த ஊஞ்சல் பாலத்தைப் பயன்படுத்துவதற்குக் கட்டணமாக ஒரு பைசா வசூலிக்கப்பட்டது. கார்பெட், முதல் முறை இந்தப் பாலத்தைக் கடக்கும் முன்பாகக் கட்டணம் வசூலிப்பவரிடம், ‘இப்பாலம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் சோதனை செய்யப்பட்டதா? பழுது பார்க்கப்பட்டதா?’ என்று வினவ, அதற்கு அந்த நபர் கார்பெட்டை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘இந்தப் பாலம் சோதனை செய்யப்படவும் இல்லை, பழுது பார்க்கப்படவும் இல்லை; ஆனால், முன்பு ஒருமுறை இதன் மேல் ஒருவர் நடந்து செல்லும் போது அவரது எடை தாங்காமல் அறுந்து விடவே பாலம் மாற்றப்பட்டது’ என்று தெரிவித்தார். அதைக் கேட்டதும் கார்பெட் அப்படியே வெலவெலத்துப் போய்விட்டார். அவர் அந்தப் பாலத்தைக் கடந்து மறு கரையை அடைந்த பிறகும், பாலத்தைக் கடந்த படபடப்பு அவரை விட்டு நீங்கவில்லை.
‘இந்த ஊஞ்சல் பாலத்தைப் பயன்படுத்தி ஆட்கொல்லி சிறுத்தை அலக்நந்தா நதியைக் கடக்க வாய்ப்பே இல்லை. மீதி இருப்பது இரண்டு தொங்கு பாலங்கள் மட்டுமே. அவற்றையும் யாரும் கடந்து போகாதபடிக்கு மூடி விட்டால், நதியின் ஒரு கரையிலேயே சிறுத்தையை இருக்கச் செய்து விடலாம். இப்படிச் செய்வதன் மூலம் சிறுத்தையைக் கண்காணிக்கும் பகுதியின் பரப்பளவு பாதிக்குப் பாதி குறைந்துவிடும். பாலங்களை மூடுவதற்கு முன்னர் சிறுத்தை எந்தக் கரையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக, ஆட்கொல்லி சிறுத்தை அலக்நந்தா நதியின் இடது கரைப் பகுதியில், சத்துவபிபால் தொங்கு பாலத்தின் அருகே சாதுவைக் கொன்றிருந்தது. கொன்ற பிறகு அவரது பாதி தின்ற உடலை அப்படியே விட்டுவிட்டு சிறுத்தை மறு கரைக்குச் சென்றிருக்க வேண்டும்.’ என்பது கார்பெட்டின் கணிப்பு.
காரணம், சிறுத்தை ஒரு பகுதியில் ஒரு நபரைத் தாக்கினால், அப்பகுதி மக்கள் உஷாராகி இரு மடங்கு பாதுகாப்புடன் இருப்பார்கள். அதனால் ஆட்கொல்லி சிறுத்தையால் அந்தப் பகுதியில் வேறு யாரையும் வேட்டையாட முடியாது. எனவே அது பாலத்தின் வழியே அலக்நந்தா நதியைக் கடந்து மறு கரையை அடைந்திருக்கும் என்று கார்பெட் நம்பினார்.
இந்தக் கூற்று சரியென்றால், ஆட்கொல்லி சிறுத்தை ஏன் ஒரே கிராமத்தில் ஆறு நபர்களைத் தாக்கிக் கொன்ற சம்பவங்கள் அரங்கேறின? என்ற கேள்வி எழலாம். இதற்குக் காரணம், எந்தப் பாதுகாப்பு முயற்சியையும் தொடர்ச்சியாக மேற்கொள்வது என்பது கடினம். கார்வால் பகுதியில் வீடுகள் பொதுவாகச் சிறியனவாக இருக்கும். வீட்டில் கழிவறை வசதிகள் இருக்காது. 15 அல்லது 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆட்கொல்லி சிறுத்தை இருப்பதாகக் கேள்வியுறும் மக்கள், அவசரம் கருதி வெளியே வரும்போது, பல இரவுகளாகப் பதுங்கி இருக்கும் ஆட்கொல்லி சிறுத்தையிடம் சிக்கிக் கொள்வது என்பது இயல்பான ஒன்று.
கார்பெட்டிடம், ஆட்கொல்லி சிறுத்தையின் கால்தடத்தின் புகைப்படங்கள் எதுவும் இல்லை. அதனால் ஒரு சிறுத்தையின் கால்தடம் ஆட்கொல்லி சிறுத்தையின் கால் தடம் என்று சரிவரத் தெரியும் வரை, ருத்ரபிரயாக் பகுதியில், அவர் கண்ணில் படும் அனைத்துச் சிறுத்தைகளையும் ஆட்கொல்லி சிறுத்தை என்று அவர் கருத வேண்டியதாயிற்று. அப்படிக் கண் முன்னே எதிர்ப்படும் எந்தச் சிறுத்தையாவது சந்தர்ப்பத்தைக் கொடுத்தால், அவர் அதைச் சுட்டு வீழ்த்தத் தயாராக இருந்தார்.
கார்பெட் ருத்ரபிரயாக் வந்த அன்று, இரண்டு ஆடுகளை விலைக்கு வாங்கினார். அவற்றில் ஒன்றை, மாலை வேளையில், யாத்திரிகர்கள் செல்லும் சாலையில் கட்டினார். மற்றொரு ஆட்டை, அலக்நந்தா நதியைக் கடந்து சென்று, புதர் காட்டிற்குச் செல்லும் பாதையில், பெரிய ஆண் சிறுத்தையின் கால் சுவடு பதிந்திருந்த இடத்தின் அருகாமையில் கட்டினார். மறுநாள் காலை, தன் ஆடுகளைக் காண கார்பெட் சென்றார். அலக்நந்தா நதியை அடுத்த புதர்க் காட்டிற்குச் செல்லும் பாதையில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றிருந்தது. ஆட்டின் உடலிலிருந்து சிறு மாமிசம் தின்னப்பட்டிருந்தது. ஆனால் மாமிசத்தைத் தின்றது சிறுத்தை இல்லை. அது பைன் மார்ட்டன் என்று அறியப்படும் சிறிய வகை விலங்கு.
ஆடு கொல்லப்பட்ட பகுதியில் ஆட்கொல்லி சிறுத்தை இருப்பதாக மீண்டும் கேள்வியுற்ற கார்பெட், ஆடு இறந்து கிடந்த இடத்திற்குச் சென்றார். மதியம் 3 மணியளவில், அங்கிருந்து சுமார் 50 கஜ தூரத்திலிருந்த ஒரு சிறிய மரத்தில் ஏறி ஆட்கொல்லி சிறுத்தைக்காகக் காத்திருந்தார். சுமார் 3 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் அங்குச் சிறுத்தை வருவதாக எந்தவொரு விலங்கிடமிருந்தும் அல்லது பறவையிடமிருந்தும் எந்தவொரு அறிகுறியும் தெரியவில்லை. அந்தி சாயும் வேளை வந்தது. இனி, அங்குக் காத்திருப்பது பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த கார்பெட், ஆடு கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்து விட்டுவிட்டு தன் பங்களாவை நோக்கிச் சென்றார்.
கார்பெட்டுக்கு ஆட்கொல்லிப் புலிகளுடன் சில அனுபவங்கள் உண்டு. ஆனால் அவருக்கு ஆட்கொல்லி சிறுத்தைகளிடம் அவ்வளவாக அனுபவம் இல்லை. மரத்தை விட்டு இறங்கிய சமயத்திலிருந்து பங்களாவை அடையும் வரை அவர் மிகவும் எச்சரிக்கையுடன் சென்றார். ஆட்கொல்லி சிறுத்தை தன் மீது எப்பொழுது வேண்டுமானாலும் திடீர் தாக்குதல் நடத்தலாம் என்ற கவனத்துடனே அவர் சென்றார். அவர் அப்படிக் கவனமாகச் சென்றது நல்லதாகப் போயிற்று.
மறுநாள் காலை, சீக்கிரமாகத் தன் பங்களாவை விட்டு கார்பெட் கிளம்பினார். பங்களாவின் கதவருகே ஒரு பெரிய ஆண் சிறுத்தையின் கால் சுவடுகள் தரையில் பதிந்திருந்தன. அந்தக் கால் சுவடுகளின் தடத்தைப் பின்தொடர்ந்து சென்றார் கார்பெட். அந்தத் தடம் அவரை மரங்கள் அடர்ந்த பள்ளத்தாக்கின் வழியே இட்டுச் சென்றது. இறுதியாக, அச்சிறுத்தையின் கால்தடம், ஆடு கட்டப்பட்டிருந்த புதர்க் காட்டிற்குச் செல்லும் பாதையில் குறுக்கிட்டது. ஆடு அப்படியே இருந்தது. சிறுத்தை ஆட்டை சீண்டவில்லை. ஆனால் அது கார்பெட்டை பங்களா வரை பின்தொடர்ந்து சென்றிருக்கிறது. இதிலிருந்து, தன்னைப் பின்தொடர்ந்து வந்தது ஓர் ஆட்கொல்லி சிறுத்தை தான் என்பதை கார்பெட் ஊர்ஜிதம் செய்தார்.
(தொடரும்)