Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #9

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #9

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஆட்கொல்லி சிறுத்தைத் தன்னைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்ட கார்பெட், அப்பகுதியில் இருந்த மக்களை உஷார்படுத்தினார். அவரால் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் கால்நடையாகவே சென்று, அருகிலிருந்த கிராம மக்களிடமும், சாலையில் சந்திக்கும் நபர்களிடமும், ஆட்கொல்லி சிறுத்தை நதிக்கு இந்தப் பக்கத்தில் அவர்கள் இருக்கும் இடத்தில் இருப்பதாகத் தெரிவித்து, மக்களைக் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை செய்தார்.

அன்று முழுவதும் சிறுத்தையைப் பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை. மறுநாள் காலை, கார்பெட் காலை உணவருந்திக் கொண்டிருக்கும்போது, அவர் இருந்த பங்களாவிற்கு ஒருவன் பதற்றத்துடன் ஓடி வந்தான். அவன் கார்பெட்டிடம், பங்களா இருக்கும் இடத்திற்கு மேலே ஒரு மலைக் கிராமத்தில் ஆட்கொல்லி சிறுத்தை ஒரு பெண்ணை அடித்துக் கொன்று விட்டதாகத் தெரிவித்தான்.

கார்பெட் விரைவாகத் தனக்குத் தேவையானப் பொருள்களை (ரைபில் துப்பாக்கி, shotgun, தோட்டாக்கள், கயிறு, தூண்டில் கயிறு) எடுத்துக் கொண்டு, கூடவே தன்னுடைய இரு வேலை ஆட்களையும் அழைத்துக் கொண்டு, தகவல் சொல்ல வந்தவருடன் பெண் கொல்லப்பட்ட கிராமத்தை நோக்கிச் சென்றார்.

கார்பெட் செங்குத்தான மலையில் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. அன்றோ வானிலை மிகவும் புழுக்கமாக இருந்தது. அவர் கடந்து செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவுமில்லை, வெறும் 3 கிலோ மீட்டர் தொலைவு தான். ஆனால் அவர் 4000 அடி உயரமான, செங்குத்தான மலைப் பகுதியில் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. சீதோஷ்ணம் வெப்பமாக இருந்ததால், மலைக் கிராமத்தை அடையும் போது வியர்வையில் குளித்துவிட்டார் கார்பெட்.

இறந்த பெண்ணின் கணவர் நடந்த சம்பவத்தைக் கார்பெட்டிடம் விவரித்தார். இரவில், நெருப்பின் வெளிச்சத்தில், கணவனும் மனைவியும் உணவருந்தினர். பின்னர், சாப்பிட்ட தட்டுகளையும், பாத்திரங்களையும் கழுவுவதற்காக அவற்றை வீட்டின் கதவின் அருகே எடுத்துச் சென்றாள் மனைவி. கணவன் வீட்டினுள் புகை பிடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் கதவை அடைந்தவள், அங்குப் பாத்திரங்களை கழுவதற்காகக் கீழே அமர்ந்தாள். அப்பொழுது பாத்திரங்கள் தரையில் விழும் சப்தம் கேட்டது. என்ன நடந்தது என்று பார்ப்பதற்குக் கணவனுக்குப் போதுமான வெளிச்சம் இல்லை. அவன் தன் மனைவியை அழைத்தான். அவனுடைய கூக்குரலுக்கு, அவளிடமிருந்து பதில் ஏதும் வராத நிலையில், கணவன் வேகமாக வீட்டிற்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டான். ‘என் உயிரைப் பணையம் வைத்து இறந்த என் மனைவியின் பிணத்தை மீட்டு வருவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது?’ என்று கணவன் கேட்டபோது, அவனது கேள்வியில் இருந்த தர்க்கத்தைப் புரிந்து கொண்ட கார்பெட், அதில் மனிதாபிமானம் இல்லாததாக உணர்ந்தார். மனைவி இறந்த துக்கத்தை விட, அவள் வயிற்றில் இருந்து இன்னும் சில நாட்களில் வரவிருந்த தன் வாரிசின் இறப்பின் சோகம்தான் கணவனைப் பெரிதாகப் பாதித்திருந்தது.

ஆட்கொல்லி சிறுத்தையால் தாக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வெளியே 4 அடி அகலப் பாதை இருந்தது. அந்தப் பாதை சுமார் 50 கஜ தூரத்திற்குச் சென்றது. பாதையின் இருமருங்கிலும், அடுத்தடுத்து வீடுகள் இருந்தன. பாத்திரங்கள் தரையில் விழும் சப்தம் கேட்ட பிறகு, கணவன் தன் மனைவியைக் கூக்குரலிட்டு அழைத்ததும், விபரீதத்தைப் புரிந்து கொண்ட அண்டை வீட்டுக்காரர்கள் உடனே தங்களது வீட்டின் கதவுகளை உள்பக்கம் பூட்டித் தாழிட்டுக் கொண்டனர். ஆட்கொல்லி சிறுத்தை அந்த அப்பாவிப் பெண்ணை பாதை முழுவதும் இழுத்துச் சென்ற தடயங்கள் தெரிந்தன. இழுத்துச் சென்ற பிறகு சிறுத்தை அப்பெண்ணைக் கொன்றிருக்கிறது. இறந்த உடலைப் பின்னர் சிறுத்தை சுமார் 100 கஜ தூரத்தில் உள்ள மலை அடிவாரத்திற்குத் தூக்கிச் சென்றிருக்கிறது. அங்கு அடுக்கடுக்காக இருக்கும் படிமுறை வயல்களின் எல்லையில் அமைந்த ஒரு குறுகிய பள்ளத்தாக்கில், அவ்வுடலைச் சிறுத்தை சாப்பிட்டிருக்கிறது. சாப்பிட்டது போக மீதி உடலைச் சிறுத்தை அவ்விடத்தில் விட்டுச் சென்றிருந்தது.

அவ்வுடல் கிடந்த இடத்திற்கு அருகாமையில் ஒரு நாற்பது கஜ தூரத்தில் இலைகளே இல்லாத வால்நட் மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தின் கிளைகளுக்கிடையே வைக்கோல் போர் இருந்தது. அது தரையிலிருந்து நான்கு அடி உயரத்தில் அமைந்திருந்தது. கார்பெட் மரத்தின் மீது இருந்த வைக்கோல் போரில் ஆட்கொல்லி சிறுத்தைக்காகக் காத்திருக்க முடிவு செய்தார்.

எஞ்சிய உடல் கிடந்த இடத்திலிருந்து குறுகிய பாதையொன்று ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றது. அப்பாதையில் பெண்ணைக் கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையின் கால் தடம் பதிந்திருந்தது. அந்தக் கால் தடத்தை கார்பெட் கவனித்தார். அந்தக் கால் தடம் இரண்டு நாட்களுக்கு முன்னர், இரவில் தன்னைப் பங்களா வரை பின்தொடர்ந்து வந்த சிறுத்தையின் கால் தடத்தை ஒத்திருந்தது தெரிந்தது. அக்கால் தடத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, அது இளம் வயதைக் கடந்த ஒரு பெரிய ஆண் சிறுத்தையின் கால் தடம் என்பதை கார்பெட் தெரிந்து கொண்டார். அந்தக் கால் தடத்தை வைத்து மேலும் ஒரு விவரத்தை கார்பெட் தெரிந்து கொண்டார். 4 வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த ஒரு தோட்டா ஆட்கொல்லி சிறுத்தையின் இடது பின்னங்கால் திண்டில் காயத்தை ஏற்படுத்தியதில், அதன் காலில் ஒரு குறைபாடு உண்டாகி இருப்பதைத் தெரிந்து கொண்டார்.

கார்பெட் தன்னிடம் கூடுதலாக இருந்த துப்பாக்கிகளைக் கொண்டு ஒரு பொறியை அமைத்தார். சுமார் 8 அடி நீளம் கொண்ட தடிமனான இரண்டு மூங்கில்களைக் கொண்டுவரச் செய்தார். இரண்டு மூங்கில்களையும் பெண்ணின் உடல் கிடந்த அடுக்கு படிமுறை வயல்களுக்கு எதிரே செங்குத்தாக இருந்த உயரமான கரைப் பகுதியில் நடச் செய்தார். இரண்டு மூங்கில்களிலும், தன்னுடைய இரண்டு துப்பாக்கிகளையும் இறுக்கமாகக் கட்டினார். அந்தத் துப்பாக்கிகளின் விசையில் தூண்டில் கயிறுகளை லாகவமாகக் கட்டி, கயிறுகளின் மறு முனையை எதிர்த் திசையில் உள்ள மலைப்பகுதியில் இரண்டு கழிகளைச் சொருகி அதில் கட்டிவிட்டார். அந்தக் கழிகள் சொருகப்பட்ட இடம், சென்ற இரவு, சிறுத்தை பெண்ணைக் கொன்று தூக்கி வந்த பாதை. சென்ற முறை வந்த மாதிரியே சிறுத்தை அப்பாதை வழியாக வரும் பட்சத்தில், சிறுத்தையின் உடம்பு கழியில் கட்டப்பட்ட தூண்டில் கயிற்றில் கண்டிப்பாகப் படும், அப்படிப் படும்பொழுது கயிறுகள் இழுக்கப்பட்டு, துப்பாக்கிகளின் விசைகள் அழுத்தப்படும். அப்பொழுது துப்பாக்கிகளிலிருந்து வெளியேறும் தோட்டாக்கள் சிறுத்தையைச் சுட்டு வீழ்த்தும். இதுதான் கார்பெட்டின் திட்டம்.

ஒருவேளை சிறுத்தை அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல், பெண்ணின் சடலம் இருக்கும் இடத்திற்கு வருவதற்கு வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்தால், கார்பெட் அதைச் சுட்டு வீழ்த்த மரத்தில் தயாராக இருப்பார். அவரது துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் சிறுத்தை எதிர்த் திசையில் ஓடும். அப்படி ஓடும் பொழுது கழிகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள தூண்டில் கயிறுகளில் அதன் உடல் பட்டு, கயிறுகள் இழுக்கப்பட்டு, எதிர்த் திசையிலுள்ள துப்பாக்கிகளின் விசை அழுத்தப்பட்டு, அவற்றிலிருந்து புறப்படும் தோட்டாக்கள் சிறுத்தையைத் தாக்கிக் கொன்றுவிடும். எவ்வழியில் சென்றாலும் சிறுத்தை தப்பிக்க முடியாது என்பது கார்பெட்டின் திட்டம்.

இரவில் சிறுத்தையைக் கண்டு சுடுவது என்பது சவாலான காரியம். காரணம், சிறுத்தையின் தோல் நிறம் அதற்குச் சாதகமாக இருக்கும். எனவே இரவில் திசை தவறாமல் குறி பார்த்துச் சுடுவதற்கு கார்பெட் ஓர் ஏற்பாடு செய்தார். பள்ளத்தாக்கிலிருந்து ஒரு வெண்ணிறக் கற்பலகையை எடுத்து வந்து, படிமுறை வயலின் விளிம்பில், பெண்ணின் உடல் கிடந்த இடத்திற்கு ஓர் அடி தூரத்தில் வைத்தார்.

அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு கார்பெட் வால்நட் மரத்தின் மீது ஏறி, வைக்கோல் போரில் அமர்ந்தார். தரையிலிருந்து அவர் வைக்கோல் போரில் எப்படி ஏறினாரோ, அதேபோல் ஆட்கொல்லி சிறுத்தையும் அந்த மரத்தில் ஏற வாய்ப்பிருந்தது. மேலே ஏறிய பிறகு, கார்பெட் வைக்கோல் சிலவற்றைக் கீழே வீசினார். தன் முதுகிற்குப் பின்னால் வைக்கோலைக் குவித்தார். முன்பகுதியிலும், தன் இடுப்பு அளவிற்கு வைக்கோலைக் குவித்தார். இறந்த பெண்ணின் சடலத்தை நோக்கி, துப்பாக்கியும் கையுமாக அப்படியே வைக்கோலுக்கு நடுவில் அமர்ந்தார். அவரது முதுகு மரத்தில் சாய்ந்தபடி இருந்தது. ஆட்கொல்லி சிறுத்தை எந்த நேரத்தில் வந்தாலும், அது கீழேயிருந்து கார்பெட்டைப் பார்ப்பதற்கான வாய்ப்பு குறைவாகத் தான் இருந்தது. பொதுவாக அது இரவு நேரத்தில்தான் வரும். ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை, கொன்று தின்று மிச்சம் விட்டுச் சென்ற இரையைத் தேடி மறுமுறை வருவதில்லை. ஆனால் அது இம்முறை வரும் என்று கார்பெட் நம்பினார். அவர் மலை ஏறி வந்ததன் விளைவாக அவரது ஆடைகள் ஈரமாக இருந்தன. ஆனால் அவரது உலர்ந்த ஜாக்கெட் கார்பெட்டை குளிர் காற்றிலிருந்து காத்தது. கார்பெட் மென்மையான வைக்கோலின் மீது வசதியாக அமர்ந்தபடியே இரவு நேர கண்காணிப்பிற்குத் தயாரானார். அவருடன் வந்த அவரது இரு வேலை ஆட்களையும், தான் திரும்பி வரும் வரை, அந்தக் கிராமத் தலைவரது வீட்டில் தங்கும்படிக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். மறுநாள் காலை சூரிய வெளிச்சத்திற்குப் பிறகு தன்னை வந்து பார்த்தால் போதும் என்றும் சொல்லி அனுப்பினார்.

சூரியன் அஸ்தமிக்கும் நேரம், தூரத்தில் கங்கை பள்ளத்தாக்கும், அதன் பின்னால் பனி படர்ந்த இமய மலையையும் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இளஞ்சிவப்பான சூரியக் கதிர்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. இந்த ரம்மியமான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே, வானத்தில் வெளிச்சம் மறைந்து இருட்டத் தொடங்கிவிட்டது.

இருள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் பொழுது அது சார்புடையதாகத்தான் இருக்கும். ஒருவருக்கு இருள் என்பது சாதாரண இருட்டாகத் தோன்றலாம், மற்றவருக்குக் கும்மிருட்டாகத் தோன்றலாம், வேறொருவருக்கு மிதமான இருட்டாகத் தோன்றலாம். கார்பெட் பெரும்பான்மையாக, இரவை வெளியில் கழித்ததால் அவருக்கு இருள் என்பது ஒரு பொருட்டே கிடையாது. மழை மேகங்கள் வானத்தில் சூழ்ந்து அவ்விடம் இருட்டாக இருந்தால் ஒழிய கார்பெட்டிற்கு இரவு ஓர் இருளாகத் தெரியாது. அதற்காக கார்பெட்டால் இரவில் சுதந்திரமாகக் காட்டில் அல்லது மற்ற இடங்களில் நடமாட முடியும் என்று அர்த்தமில்லை. கார்பெட் சடலத்தின் அருகில் ஒரு வெண்பலகைக் கல்லை ஒரு முன்னேற்பாடாகத்தான் வைத்தார். இரவு வானில் தோன்றும் நட்சத்திரங்களின் வெளிச்சமும், பனி மலையின் பிரதிபலிப்பும், சிறுத்தையைச் சுடுவதற்குப் போதுமான வெளிச்சத்தைத் தரும் என்று நம்பினார்.

ஆனால் கார்பெட்டிற்கு அன்று அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. இரவு தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் வானில் மின்னல் கீற்று வெளிப்பட்டது. தொடர்ந்து, தூரத்தில் இடிச் சத்தம் கேட்டது. வானம் மப்பும் மந்தாரமுமாக மாறியது. பெரிய தூறல் விழ ஆரம்பித்தது. அப்பொழுது அருகிலுள்ள பள்ளத்தாக்கில் ஒரு கல் உருண்டோடும் சத்தம் கேட்டது. அடுத்த நொடி, மரத்தின் அடியிலிருந்து வைக்கோலைப் பிறாண்டும் சத்தம் கேட்டது. ஆட்கொல்லி சிறுத்தை வந்து விட்டது. கார்பெட் கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்து கொண்டிருந்தார். கூடவே உறைய வைக்கும் குளிர் காற்றும் சத்தத்துடன் வீசியது. சிறுத்தையோ நனையாமல் கீழே வைக்கோலின் மீது சொகுசாக அமர்ந்திருந்தது. காற்று கடுமையாக வீசியது. கார்பெட் தன்னுடைய வாழ்நாளில் அப்படியொரு காற்றைப் பார்த்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் யாரோ ஒருவர் கையில் ஒரு லாந்தர் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிராமத்தை நோக்கி வருவது தெரிந்தது. கார்பெட்டுக்கு ஒரே ஆச்சர்யம்! இரவு நேரத்தில், புயல் காற்றுக்கு மத்தியில், ஆட்கொல்லி சிறுத்தை நடமாடும் பகுதியில் தனியாக ஓர் ஆள் நடந்து வருவதைப் பார்த்த கார்பெட்டால் அந்த நபரின் தைரியத்தைக் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *