Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #10

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #10

ஜிம் கார்பெட்

கிராமத்தை நோக்கி வந்த அந்த நபர், சுமார் 30 மைல்கள் தொலைவில் உள்ள பெளரி என்ற இடத்திலிருந்து வந்திருந்தார். அரசாங்கத்தின் வேண்டுதலின்படி, இரவு நேரத்தில் வேட்டையாடுவதற்குப் பயன்படும் டார்ச் லைட்டை கார்பெட்டிடம் ஒப்படைப்பதற்காக அவர் வந்திருக்கிறார் என்பதைக் கார்பெட் பின்னர் தெரிந்து கொண்டார்.

அந்த டார்ச் லைட் கார்பெட்டுக்கு ஒரு மூன்று மணி நேரத்திற்கு முன்னரே கிடைத்திருந்தால், அவரால் ஆட்கொல்லி சிறுத்தையைச் சுட்டு வீழ்த்தியிருக்க முடியும். அன்றே அச்சிறுத்தையை வீழ்த்தி இருந்தால், மேலும் 14 மனித உயிர் இழப்புகளைத் தடுத்திருக்க முடியும். டார்ச் லைட் முன்னமே கிடைத்திருந்தால், அதன் வெளிச்சத்தில் கார்பெட்டால் ஆட்கொல்லி சிறுத்தையைக் கண்டிப்பாக வீழ்த்தியிருக்க முடியும் என்று சொல்லுவதற்கில்லை; ஆனால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.

ஜோவென்று கொட்டிய மழை நின்றது. கார்பெட் தொப்பலாக நனைந்திருந்தார். மின்னல் கீற்று அவ்வப்பொழுது வானில் தோன்றியது. அந்த மின்னல் ஒளியில், அடையாளத்திற்காகக் கார்பெட் வைத்திருந்த வெள்ளைக் கல் அவர் கண்களுக்குப் புலப்படவில்லை. சற்று நேரத்தில் சிறுத்தை தன்னுடைய மனித இரையைத் தின்று கொண்டிருந்த சத்தம் கார்பெட்டின் காதுகளில் விழுந்தது.

முந்தைய இரவு, சிறிய பள்ளத்தாக்கில் ஆட்கொல்லி சிறுத்தை அதன் இரையைத் தின்ற இடத்தில், இரைக்கு அருகாமையில் ஒரு வெள்ளைக் கல்லை அடையாளத்திற்காக வைத்திருந்தார் கார்பெட். இன்றும், ஆட்கொல்லி சிறுத்தை தன் இரையைப் புசிக்கும் பொழுது அதே நிலையில் அமர்ந்து தன் இரையைத் தின்னும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்பில் மண் விழுவதற்குப் பதிலாக மழைத் தண்ணீர் விழுந்தது. அன்று இரவு பெய்த மழையால், தண்ணீர் பெருகி, அந்த நீரானது சிறிய பள்ளத்தாக்கின் வழியே ஓடியது. ஓடும் தண்ணீரைத் தவிர்க்கச் சிறுத்தை தன்னுடைய நிலையை மாற்றி அமர்ந்து, இரையைப் புசித்துக் கொண்டிருந்தது. சிறுத்தை தன் நிலையை மாற்றி அமர்ந்ததால் வெள்ளைக் கல் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்தது. இதை கார்பெட் முன்கூட்டியே யோசிக்கவில்லை. ஆனால் சிறுத்தைகளின் பழக்கங்களை அறிந்திருந்த கார்பெட், அவை ஒரே நிலையில் அமர்ந்திருக்காது என்று கணித்தார். அதன் படியே பத்து நிமிடத்தில் அடையாளத்திற்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளைக் கல் கார்பெட்டின் கண்களில் பட்டது. அதற்குள்ளாக, தான் அமர்ந்திருந்த மரத்திற்குக் கீழே சிறுத்தை வருவதை, சத்தத்தை வைத்துத் தெரிந்து கொண்டார் கார்பெட். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்த சிறுத்தை, அவர் அமர்ந்திருந்த வைக்கோல் போருக்குக் கீழே சென்று மறைந்ததை அவர் கவனித்தார். ஆட்கொல்லி சிறுத்தை வெளிர் மஞ்சள் நிறமாகத் தோற்றமளித்ததால், அது வயதான சிறுத்தை என்று கார்பெட்டுக்குத் தெரியவந்தது. சிறுத்தை நடந்து செல்லும் சத்தம், பட்டுத் துணி உடுத்தி இருக்கும் ஒரு பெண், நடந்து செல்லும்போது, அத்துணி தரையில் பட்டு எழுப்பும் சத்தத்தை ஒத்திருந்தது.

கார்பெட் தன்னுடைய ரைபிள் துப்பாக்கியைத் தன்னுடைய தோள்பட்டையில் வைத்து வெள்ளைக் கல்லை நோக்கிக் குறிவைத்துக் காத்திருந்தார். கல் எப்பொழுது மறுபடியும் மறைகிறதோ அப்பொழுது கல்லை நோக்கிச் சுட்டு விடுவது என்று அவர் தீர்மானித்தார். ஆனால் வெகு நேரமாகியும் கல் மறையவில்லை. தொடர்ந்து ரைபிள் துப்பாக்கியைச் சுமந்ததால், கார்பெட்டின் தோள்பட்டை வலி எடுக்க ஆரம்பித்தது. அதனால் அவர் துப்பாக்கியைத் தோள்பட்டையிலிருந்து எடுத்தார். அடுத்த நொடியே எதிரே உள்ள வெள்ளைக் கல் மறைந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மூன்று முறை இம்மாதிரி நடந்தது. விரக்தியுடன் கார்பெட் இருந்த மரத்திற்கு அடியில், அவர் அமர்ந்திருந்த வைக்கோல் போருக்குக் கீழே சென்றது ஆட்கொல்லி சிறுத்தை. கார்பெட் துப்பாக்கியைத் திருப்பிக் குத்துமதிப்பாகச் சுட்டார்.

மறுநாள் காலை மரத்தை விட்டு இறங்கிய கார்பெட் தன்னுடைய தோட்டா எங்கே சென்றது என்று நிலத்தை ஆராய்ந்தார். இரண்டடி அகலமே கொண்ட அந்தச் சிறிய நிலப்பகுதியின் நடுவே தோட்டா தரையைத் துளைத்துச் சென்றிருந்தது. தோட்டா துளைத்த இடத்தில், சிறுத்தையின் கழுத்தருகில் காணப்படும் மயிர்கள் சில சிதறிக் கிடந்தன.

சென்ற இரவு, கார்பெட் துப்பாக்கியால் சுட்ட பிறகு, அந்த இடத்தை விட்டு ஆட்கொல்லி சிறுத்தை சென்று விட்டது. கார்பெட் தன் ஆட்களை அழைத்துக் கொண்டு செங்குத்தான மலையை விட்டு இறங்கி ருத்ரபிரயாக் நோக்கிச் சென்றார். இதற்கிடையில் இறந்த பெண்ணின் கணவனும், அவனது நண்பர்களும் அப்பெண்ணின் உடலை எடுத்துச் சென்று தகனம் செய்தார்கள்.

நடந்த சம்பவங்கள் அவருக்குக் கசப்பான உணர்வை ஏற்படுத்தின. இரவு நடந்த சம்பவங்களும், சூழ்நிலைகளும் கார்பெட்டுக்கும், கார்வால் மக்களுக்கும் துரதிர்ஷ்டமாக அமைந்தது. அவருடைய இந்தத் தோல்வி இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பேசு பொருளாகிவிடும்.

செங்குத்தான மலையில் இறங்கிச் செல்லும்போது, நடந்த விஷயங்களைக் கார்பெட் தன் மனதிற்குள் அசை போட்டவாறே நடந்து சென்றார்.

‘கார்வால் மற்றும் குமான் மலைகளில் வாழும் மக்கள், ஜிம் கார்பெட்டிடம் ஏதோ விசேஷச் சக்திகள் இருப்பதாகவும், அதைக் கொண்டு ஆட்கொல்லி மிருகங்களை அவர் அழித்துவிடுவதாகவும் நம்பினர். ஆனால் கார்பெட்டிற்கே இந்த நம்பிக்கையில் சற்றும் உடன்பாடு இல்லை.

ஆட்கொல்லி சிறுத்தையிடமிருந்து கார்வால் பகுதியை மீட்க கார்பெட் புறப்பட்டுவிட்டார் என்று கேள்வியுற்ற மக்கள் மிகவும் உற்சாகம் அடைந்திருந்தனர். அவர் ருத்திரப்பிரயாகிற்குச் செல்லும்போது, சாலைகளில், வயல் வெளிகளில், கிராமத்து வீடுகளில் உள்ள மக்கள் பலரும் கார்பெட்டை ஆர்வத்துடன் வரவேற்றனர். அவர் ஆட்கொல்லி சிறுத்தையைச் சுட்டு வீழ்த்துவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த விஷயம் கார்பெட்டிற்கு நெகிழ்ச்சியையும், சங்கடத்தையும் ஒரு சேரக் கொடுத்தது. மக்களின் இந்த நம்பிக்கையும், வரவேற்பும் அவர் ருத்ரபிரயாகை நெருங்க நெருங்க அதிகமானதே தவிர குறையவில்லை. அன்று கார்பெட்டிற்கு வழங்கப்பட்ட உற்சாகத்தை யாரேனும் பார்த்திருந்தால், யுத்தத்தில் சாகசங்கள் புரிந்துவிட்டுத் திரும்பி வரும் ஒருவருக்கு வழங்கப்படும் மரியாதை என்று தவறாக நினைத்திருப்பர்.

கார்பெட் மற்றவர்களைப் போல ஒரு சாதாரண மனிதர்; தன்னுடைய வரம்பு என்ன என்று அறிந்து அதற்கேற்றவாறு ஒரு விவேகமான முடிவை எடுப்பவர்; தான் எடுக்கும் காரியம் தன்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டதா? தன்னால் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்க முடியுமா? என்று அச்சம் கொண்ட சாதாரண மனிதர் என்பது அவரைப் பார்ப்பவர்களுக்குத் தெரியாது.

சுமார் 500 சதுர மைல் கொண்ட அடர்ந்த காடு, கூடவே கரடுமுரடான மலைகள், இதில் வாழும் 50 சிறுத்தைகளில், இதுதான் ஆட்கொல்லி சிறுத்தை என்று சரியாகத் தேர்ந்தெடுத்து அதைச் சுட்டு வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான காரியம். கார்வால் பகுதியின் ரம்மியம் கார்பெட்டைக் கவர்ந்திழுத்தாலும், மேற்கொண்டிருக்கும் பொறுப்பை நினைக்கும் பொழுது, அந்த ரம்மியமான சூழலும் அவருக்குப் பிடிக்காமல் போனது. ஆனால் கார்வால் மக்கள் கார்பெட் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். தங்களை 8 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த ஆட்கொல்லி சிறுத்தையிடமிருந்து தங்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக அவரைக் கருதினர். அதற்கேற்றவாறு அதிர்ஷ்டமும் அவருக்குக் கைகொடுத்தது. கார்பெட் வந்த சில மணி நேரத்திலேயே ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்துவதற்கு அவருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. முதலில் கார்பெட் கட்டி வைத்த தூண்டில் ஆட்டை ஆட்கொல்லி சிறுத்தை அடித்துக் கொன்றது. பின்பு, அந்தி சாய்ந்த பிறகு இருளில், கார்பெட்டைப் பின் தொடர்ந்து வந்தது அச்சிறுத்தை. அதுவும், வேட்டையாடுவதற்குச் சுலபமாக இருந்த அலக்நந்தா நதியின் கரையில். இதுவே மறுகரையாக இருந்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஆட்கொல்லி சிறுத்தையால் மேலும் மனித உயிர் இழப்புகள் நடக்கக்கூடாது என்று எண்ணிய கார்பெட்டுக்கு, அச்சிறுத்தை ஒரு பெண்ணைத் துரதிர்ஷ்டவசமாக அடித்துக் கொன்ற சம்பவம், ஒரு பெரிய தோல்வியாக அமைந்தது. ஆனால் அந்தத் தோல்வியிலும் ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்துவதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் அவர் சிறுத்தையை வீழ்த்த பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். எனவே கார்பெட், சிறிய பள்ளத்தாக்கில் ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்தக் கிளம்பினார். செல்லும் வழியில் தான் எடுத்திருக்கும் சவாலில் வெற்றி வாய்ப்பின் சாத்தியக் கூறுகள் எவ்வளவு என்பதை அலசினார். தன்னுடைய சவாலில் வெற்றி பெற இரண்டுக்கு – ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அதற்கான காரணங்கள் – முதலாவதாக, சமீப காலமாக, ஆட்கொல்லி சிறுத்தை, தான் கொன்ற இரையைத் தேடி மறுமுறை வருவதில்லை. இரண்டாவதாக, கார்பெட் ஆட்கொல்லி சிறுத்தையை வெளிச்சமே இல்லாத இருள் சூழ்ந்த இரவில் எதிர்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, இரவில் சிறுத்தையைச் சுட்டு வீழ்த்துவதற்குத் தேவையான டார்ச் லைட் அவரிடம் இல்லை.

டார்ச் லைட்டின் தேவை குறித்து கார்பெட் ஏற்கெனவே ஐக்கிய மாகாணத்தின் (United Province) தலைமைச் செயலரான மைக்கேல் கீனைச் சந்திக்கும் பொழுது தெரிவித்திருந்தார். அவரும், உடனே இது குறித்துக் கல்கத்தாவிற்குத் தந்தி அனுப்பி, இரவில் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் சிறந்த டார்ச் லைட் ஒன்றை ருத்ரபிரயாகிற்கு அனுப்பி வைப்பதாக கார்பெட்டிடம் வாக்குறுதி வழங்கினார்.

ஆனால் கார்பெட் எதிர்பார்த்த தருணத்திற்குள் டார்ச் லைட் வரவில்லை என்பது அவருக்குச் சிறிய வருத்தத்தைக் கொடுத்தாலும், அவரால் இரவில் பார்க்கமுடியும் என்பதால் டார்ச் லைட் இல்லாதது குறித்து அவர் பெரிதாகக் கவலைப்படவில்லை. அதன் காரணமாகத்தான் கார்பெட் ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்த தனக்கான வெற்றி வாய்ப்பை இரண்டுக்கு – ஒன்று என்று கணித்திருந்தார். கார்பெட் அன்று இரவு தன்னுடன் கூடுதலாக rifle gun (ரைபிள் துப்பாக்கி) மற்றும் shot gun ஐ எடுத்துச் சென்றிருந்தார் என்பதைப் பார்த்தோம். மரத்தில் ஏறி வைக்கோல் போரில் அவர் மறைந்திருந்தது; இரையை நோக்கிச் சிறுத்தை வந்தால் அதைச் சுடும் தூரம் வெகு அருகாமையில் இருந்தது; அப்படியே கார்பெட் சுட்டு ஆட்கொல்லி சிறுத்தை அதிலிருந்து தப்பினால், சிறுத்தையை வீழ்த்த அவர் துப்பாக்கிப் பொறி அமைத்தது போன்ற விவகாரங்கள் அவருக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தன. இருப்பினும் ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்துவதற்குப் பத்தில் ஒரு பங்கு வாய்ப்புதான் இருப்பதாக அவர் கருதினார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் புயல் வந்து காரியத்தையே கெடுத்து விட்டது. அவரால் தன்னைச் சுற்றி எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. டார்ச் லைட்டும் இல்லாது போகவே கார்பெட்டால் சிறுத்தையைச் சுட்டு வீழ்த்த முடியவில்லை.’

கார்பெட் தன் பங்களாவிற்குச் சென்றதும், வெந்நீரில் குளித்தார். பின்னர் காலை உணவை முடித்தார். மலையில் இறங்கி வந்ததால் உடம்பிற்கு நல்ல உடற்பயிற்சி கிடைத்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து அவர் போட்ட வெந்நீர் குளியலும், உண்ட உணவும் அவருடைய மன நிலையைச் சற்று ஆசுவாசப்படுத்தியது. தன் விதியை நொந்து கொள்வதை விடுத்தார். நேற்றைய இரவு ஏற்பட்ட தோல்வியின் நியாயத்தைப் புரிந்து கொண்டார். தன் துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டா வெறும் தரையைத் தாக்கியதை நினைத்து வருத்தப்படுவது என்பது தரையில் சிந்திய பாலை நினைத்து வருத்தப்படுவதற்கு ஒப்பானது என்ற முடிவுக்கு வந்தார். ஆட்கொல்லி சிறுத்தை அலக்நந்தா நதியைத் தாண்டி மறுகரைக்கு வராத வரையில், அச்சிறுத்தையைச் சுட்டு வீழ்த்தும் வாய்ப்புகள் அதிகம் என்று கார்பெட் தன்னை உத்வேகப் படுத்திக்கொண்டார். இப்பொழுது அவர் வசம் டார்ச் லைட்டும் இருக்கிறது. அதைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்க, ஒரு நபர் நள்ளிரவில் அதுவும் ஆட்கொல்லி சிறுத்தை நடமாடும் காட்டில், புயல் காற்று வீசும் சமயத்தில் தைரியமாக வந்ததை நினைத்துப் பார்த்தார்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *