Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #11

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #11

ஜிம் கார்பெட்

இப்பொழுது கார்பெட் முதலில் தெரிந்துகொள்ள விரும்பிய விஷயம், ஆட்கொல்லி சிறுத்தை அலக்நந்தா நதியைக் கடந்து விட்டதா? அதுவும் தொங்கு பாலத்தின் மூலமாக நடந்து சென்று கடந்து விட்டதா? என்பதாகும். அதனால் அவர் தன் காலை உணவை முடித்துவிட்டு தன் தேடலைத் தொடங்கினார். ஆட்கொல்லி சிறுத்தை சத்வபிபால் பாலத்தின் வழியாகப் பயணித்திருக்க வாய்ப்பில்லை என்று கார்பெட்டுக்குத் தோன்றியது. காரணம், பெண்ணின் சடலம் இருந்த இடத்திலிருந்து அந்தப் பாலம் 14 மைல்கள் தொலைவில் இருந்தது. என்னதான் கார்பெட்டின் ரைபில் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டா ஆட்கொல்லி சிறுத்தையின் தலையை உரசியபடி சென்று அதை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தாலும், அச்சிறுத்தை இரவு நேரத்தில் இருளில் மறைந்து வெளிச்சம் வரப்போகும் அந்தக் குறுகிய நேரத்தில் சத்வபிபால் பாலத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை. எனவே கார்பெட் தன்னுடைய தேடலை ருத்ரபிரயாக் பாலத்தின் அருகிலேயே நடத்தினார்.

ருத்ரபிரயாக் பாலத்திற்குச் செல்ல மூன்று பாதைகள் இருந்தன. வடக்கிலிருந்து ஒரு பாதை, தெற்கிலிருந்து ஒரு பாதை. மேலும் இவ்விரு பாதைகளுக்கும் நடுவே ருத்ரபிரயாக் பஜாரிலிருந்து வரும் ஒற்றையடிப் பாதை. இந்த மூன்று பாதைகளையும் கார்பெட் மிகவும் கவனமாக ஆராய்ந்தார். பின்னர் பாலத்தின் வழியாக நடந்து சென்று கேதார்நாத்திற்கு யாத்திரிகர்கள் செல்லும் சாலையில் ஓர் அரை மைல் தூரம் சென்று பார்த்தார். பின்னர் மூன்று இரவுகளுக்கு முன்னர் தூண்டில் ஆடு கொல்லப்பட்ட நடைபாதையையும் சென்று பார்த்தார். அந்தப் பாதைகள் எதிலுமே சிறுத்தை சென்றதற்கான கால் சுவடுகள் எதுவுமே தென்படவில்லை. ஆட்கொல்லி சிறுத்தை அலக்நந்தா நதியைக் கடந்து மறு கரைக்குச் செல்லவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார் கார்பெட்.

இரவில் இரண்டு பாலங்களையும் மூடும் தன்னுடைய திட்டத்தை அன்று இரவே செயல்படுத்தி, ஆட்கொல்லி சிறுத்தையை நதியின் ஒரு கரையிலேயே வைத்திருக்க முடிவு செய்தார் கார்பெட். இது ஓர் எளிமையான திட்டமாகக் கார்பெட்டுக்குப் பட்டது. காரணம், அந்த இரண்டு பாலங்களின் பாதுகாவலர்களும் நதியின் இடது கரையில், பாலத்திற்கு அருகாமையிலேயே வசித்தனர். நதியின் இரு கரைகளுக்கும் உள்ள ஒரே தொடர்பான பாலங்களை மூடிவிடுவதால், சுமார் 30 மைல்கள் கொண்ட கரையோரங்கள் தொடர்பின்றி துண்டிக்கப்படுவது என்பது ஓர் அசாதாரணமான விஷயம். இருப்பினும், இதைப் பொதுமக்கள் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. காரணம், தினமும் சூரிய அஸ்தமனம் தொடங்கி சூரியோதயம் வரை ஆட்கொல்லி சிறுத்தைக்குப் பயந்து ஒருவரும் பாலத்தின் மீது செல்வதில்லை.

நுழைவாயில்களில் முட்புதர்கள் போடப்பட்டு இரு பாலங்களும் அன்று இரவு மூடப்பட்டன. மறு நாள் கார்பெட் பாலத்தைக் காவல் காத்தார் அப்பொழுது பாலம் மூடப்படவில்லை. பாலம் மூடப்பட்ட அன்றோ அல்லது கார்பெட் காத்துக் கொண்டிருக்கும் போதோ, ஒருவர் கூடப் பாலங்களைக் கடந்து செல்ல வேண்டும் என்று கேட்டதில்லை.

கார்பெட் 20 இரவுகள் ருத்ரபிரயாக் பாலத்தின் இடது கரையில் உள்ள கோபுரத்தின் மீது கண்காணித்து வந்தார். அந்த 20 இரவுகளும் அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தந்தன. ருத்ரபிரயாக் பாலத்தின் கோபுரம், நீட்டிக்கொண்டிருந்த ஒரு பாறையின் மீது அமைக்கப்பட்டிருந்தது. கோபுரத்தின் உயரம் சுமார் 20 அடி. கோபுரத்தின் நடைமேடை நான்கு அடி அகலமும், 8 அடி நீளமும் கொண்டதாக இருந்தது. காற்றின் காரணமாக அந்த நடைமேடை வழுவழுப்பாக இருந்தது. கோபுரத்தின் மீதுள்ள நடைமேடைக்குச் செல்ல இரு வழிகள் இருந்தன. கோபுரத்திலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள மலையிலிருந்து கோபுரத்திற்குக் கம்பிகள் சென்றன. அந்தக் கம்பிகளின் வழியே கோபுரத்திற்குச் செல்லவேண்டும். இன்னொன்று, பலமற்ற ஏணியின் மூலம் ஏறி கோபுரத்தின் நடைமேடைக்குச் செல்லவேண்டும். இதில் கார்பெட் இரண்டாவதாகச் சொன்ன வழியைத் தேர்ந்தெடுத்தார். காரணம், முதல் வழியில், கம்பிகளில் துர்நாற்றம் வீசக்கூடிய எண்ணெய் போன்ற பசைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கும், அது ஒருவரது கைகளிலும் ஆடைகளிலும் பட்டு, ஆடைகளைப் பாழ்படுத்தி விடும்.

கோபுரத்தில் ஏறப் பயன்படுத்தப்பட்ட ஏணியும் சிறிய ஏணிதான். ஏணியின் இரு மூங்கில்களும் சமமற்றவை. அந்த மூங்கில்களின் ஊடே குச்சிகள் வைக்கப்பட்டு அவை கயிற்றால் மூங்கில்களுடன் தளர்வாக கட்டப்பட்டிருந்தன. அந்த மூங்கில் ஏணி, கோபுரத்தின் நடைமேடையின் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குத் தான் சென்றது. ஏணியின் உச்சியிலிருந்து நடைமேடைக்கு நான்கு அடி இடைவெளி இருந்தது. கார்பெட் ஏணியின் உச்சியில் ஏறிய பிறகு, தன் உள்ளங்கையை நடைமேடையின் கட்டுமானத்தில் வைத்து நடைமேடையில் ஏறினார். கார்பெட் ஒவ்வொரு முறையும் கழைக்கூத்தாடி போல்தான் அந்த ஏணியின் மூலம் நடைமேடையில் ஏறுவார்.

கார்வால் பகுதியில், இமய மலையில் பாயும் நதிகளெல்லாம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. பள்ளத்தாக்கில் நதிகள் செல்லும் போது, சூரியன் உதிப்பதற்கும், அஸ்தமிப்பதற்கும் ஏற்றவாறு, காற்று தன் திசையை மாற்றிப் பயணிக்கும். பகல் பொழுதில் காற்று தெற்கிலிருந்து வீசும். இதை கார்வால் மக்கள் தாது என்று அழைப்பர். அதே போல் இரவில் காற்று வடக்கிலிருந்து வீசும்.

கார்பெட் பாலத்தின் கோபுர நடைமேடையில் ஏறி அமரும் பொழுது காற்று மெலிதாக வீசும். பின்னர் சற்று நேரத்திற்கெல்லாம் பலமாக வீசத் தொடங்கிவிடும். சூரிய வெளிச்சம் குறையக் குறையக் காற்று மின்னல் வேகத்தில் வீசத் தொடங்கும். நள்ளிரவில் காற்று சூறாவளியாக அடிக்கும். கோபுரத்தின் நடைமேடையில் பிடித்துக்கொள்ளக் கைப்பிடி எதுவும் இல்லை. சூறாவளிக் காற்று தன்னைக் கோபுரத்திலிருந்து தள்ளிவிடாமல் இருக்க, கார்பெட் அப்படியே குப்புறப் படுத்துக்கொள்வார். காற்றினால் தள்ளப்பட்டு விழுந்தால், கீழே நேரே 60 அடி ஆழத்தில் உள்ள கூர்மையான பாறைகளின் ஊடே விழுந்து, பின்னர் குளிர்ந்த அலக்நந்தா நதியில் விழ வேண்டியதுதான். தான் விழும்பொழுது பாறைகளில் விழாமல் தண்ணீரில் விழுந்து விடுவோமோ என்று கார்பெட்டுக்கு விசித்திரப் பயம் இருந்தது.

பலமான காற்று கார்பெட்டை ஒரு புறம் தொந்தரவு செய்து கொண்டிருக்கும் போது, மறுபுறம் சிற்றெறும்புகள் அவரைத் தொந்தரவு செய்தன. கார்பெட்டின் ஆடைக்குள் நுழைந்த சிற்றெறும்புகள், அவரது தோலைப் பதம் பார்த்தன. அவர் தொங்கு பாலத்தைக் காத்து வந்த 20 நாட்களும் பாலத்தின் நுழைவாயில் முட்புதர்களால் அடைக்கப்படவில்லை. அந்த 20 நாட்களிலும், பாலத்தைக் கடந்த ஒரே ஜீவராசி – குள்ளநரி.

ஒவ்வொரு மாலையும் கார்பெட்டுடன் இருவர் உடன் வந்தனர். அவர்கள் ஏணியைக் கொண்டு வந்தனர். ஏணியை வைத்து கார்பெட் பாலத்தின் கோபுரத்தில் ஏறியவுடன், அவர்கள் கார்பெட்டிடம் ரைபில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு ஏணியை எடுத்துச் சென்று விடுவர்.

இரண்டாவது நாள் கார்பெட்டும் அவருடன் இருவரும் பாலத்திற்கு வந்த பொழுது, நீண்ட வெள்ளை அங்கி உடுத்திய ஒருவர் அவர்களது கண்களில் பட்டார். அந்த நபரின் தலையிலும், மார்பிலும் ஏதோ மின்னியது. அவரது கையில் ஆறு அடி உயரத்திற்குச் சிலுவை இருந்தது. கேதார்நாத் செல்லும் பாதையிலிருந்து அவர் பாலத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். பாலத்தை அடைந்ததும், அவர் மண்டியிட்டு அமர்ந்தார். தான் கொண்டு வந்த சிலுவையைத் தன் முன்னர் வைத்து தலை வணங்கினார். சற்று நேரம் அதே நிலையில் இருந்து விட்டு, பின்னர் தன் சிலுவையை உயர்த்திப் பிடித்தார். எழுந்து நின்றார். பின்னர் சில அடிகள் முன் வைத்தார். மறுபடியும் மண்டியிட்டு வணங்கினார். குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை, பாலம் நெடுகிலும் இவ்வாறாகச் செய்து கொண்டே சென்றார்.

கார்பெட்டும் அவரது ஆட்களும் நின்ற இடத்தை அந்த நபர் கடக்கும் பொழுது வணங்கியவாறே சென்றார். அவர் பிரார்த்தனையில் இருந்ததால் கார்பெட் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவருடைய தலைப்பாகையிலும், மார்பிலும் மின்னியது சிலுவைகள் என்பதை கார்பெட் உணர்ந்தார். கார்பெட்டைப் போலவே அவருடன் கூட வந்தவர்களுக்கும், அந்த நபரின் தோற்றம் விசித்திரமாக இருந்தது. அவர் செங்குத்தான நடைபாதையின் வழியாக இறங்கி ருத்ரபிரயாக் கடைத்தெருவிற்குச் சென்றார். கார்பெட்டுடன் இருந்த இருவரும் ‘யார் இந்த நபர்? அவர் எந்த ஊரிலிருந்து வந்திருக்கின்றார்?’ என்று வினவினர். அந்த நபர் ஒரு கிறித்தவர் என்பது கார்பெட்டுக்கு தெரிந்தது. ஆனால் அவருடன் பேசும் வாய்ப்புக் கிடைக்காததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கார்பெட்டுக்கு தெரியவில்லை. இருப்பினும் அவருடைய நீண்ட முடியையும், கருமையான ஒளிரும் தாடியையும், அம்சங்களையும் வைத்துப் பார்க்கும் பொழுது வட இந்தியாவில் இருந்து வந்திருக்கும் நபர் என்பது கார்பெட்டுக்குத் தெரிந்தது.

மறு நாள் காலை ஏணியின் உதவி கொண்டு கார்பெட் பாலத்தின் கோபுரத்திலிருந்து இறங்கி ஆய்வு பங்களாவை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் உயரமான வெள்ளை அங்கி உடுத்திய மனிதரைப் பார்த்தார். அந்நபர் சாலையின் அருகே ஒரு பாறையில் நின்றவாறே ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். கார்பெட்டின் அருகில் வந்ததும், அவர் பாறையை விட்டு இறங்கி கார்பெட்டுக்கு முகமன் கூறினார். கார்பெட் அவரைப் பற்றி விசாரிக்க, அவரும் தாம் தூர தேசத்திலிருந்து வருவதாகவும், கார்வால் பகுதியை ஆட்டி வைக்கும் அந்தத் துஷ்ட ஆவியிலிருந்து அவர்களை விடுவிக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார். நீங்கள் எப்படி அதைச் செய்து முடிக்கப் போகிறீர்கள் என்று கார்பெட் அவரிடம் வினவ, அவரும், தான் ஒரு புலியின் கொடும்பாவியைத் தயார் செய்யப் போவதாகவும், தன் பிரார்த்தனையின் மூலம் அந்த துஷ்ட ஆவியை அந்தக் கொடும்பாவியில் செலுத்தப்போவதாகவும், பின்னர் அந்தக் கொடும்பாவியைக் கங்கையில் மிதக்க விடப்போவதாகவும், கங்கை நதியும் அந்தக் கொடும்பாவியைக் கடலுக்கு இழுத்துச் செல்லும் என்றும், பின்னர் அது திரும்பி வராது என்றும் தெரிவித்தார். அதன் பிறகு, அந்தத் துஷ்ட ஆவி பொது மக்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது என்றும் தெரிவித்தார்.

அவரால் அவர் எடுத்த காரியத்தை முடிக்க முடியுமா என்று கார்பெட்டுக்குச் சந்தேகம் இருப்பினும், அவரின் நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கண்டு அதிசயித்தார். கார்பெட் தினமும் பாலத்தின் கோபுரத்திலிருந்து இறங்குவதற்கு முன்னதாகவே அந்த நபர் ‘புலி’ கொடும்பாவியைத் தயார் செய்யும் வேலையில் இறங்கிவிடுவார். கார்பெட் மாலையில் கோபுரத்தில் ஏறுவதற்கு வரும் பொழுதும் அவர் தன் கொடும்பாவியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருப்பார். சிறு சிறு மூங்கில்கள், கயிறு, காகிதம், மலிவான வண்ணத் துணிகள் ஆகியவற்றைக் கொண்டு ‘புலி’ கொடும்பாவியைத் தயார் செய்து கொண்டிருப்பார். அந்தக் கொடும்பாவி முடிவடையும் தறுவாயில் ஓர் இரவு பெரிய மழைக்காற்று ஒன்று வீசி அந்தக் கொடும்பாவியைத் தனித்தனிச் சுக்கல்களாக்கிவிட்டது. ஆனால் அதைக் கண்டு சிறிதும் மனம் தளராத அம்மனிதர் மறுநாள் காலை இன்முகத்துடன் மறுபடியும் ஒரு புது கொடும்பாவியைத் தயார் செய்யலானார்.

முடிவில் ஒரு ‘புலி’ கொடும்பாவியைத் தயார் செய்து விட்டார். அது ஒரு குதிரையின் உயரத்திற்கு இருந்தது. கார்வால் மக்களும் தங்களை இந்த வேடிக்கையான முயற்சியில் ஈடுபடுத்திக்கொண்டனர்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *