கார்பெட்டும், இபாட்சனும் சிறுத்தை சென்ற திசையில் சென்றபோது அவர்கள் வயலைக் கடந்து செல்லும் வழியில் ஒரு பாறை இருந்தது. அந்தப் பாறையை நோக்கி இபாட்சனும், கார்பெட்டும் கவனமாகச் சென்றனர். இபாட்சன் லாந்தர் விளக்கை தலை உயரத்திற்குத் தூக்கிப் பிடித்தார். அவருக்குப் பக்கத்தில், துப்பாக்கியைத் தோள்பட்டையில் ஏந்தியவாறே கார்பெட் நடந்து சென்றார். அந்தப் பாறைக்குப் பின்னால் ஒரு சிறிய பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் சுருண்ட நிலையில் இருந்த சிறுத்தை இருவரையும் பார்த்து உறுமியது. கார்பெட் தன் துப்பாக்கியால் சிறுத்தையை நோக்கிச் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டா சிறுத்தையின் தலையை நொறுக்கியபடி சென்றது. சற்று நேரத்தில், இபாட்சனையும் கார்பெட்டையும் மக்கள் உற்சாகமாகச் சூழ்ந்து கொண்டனர். தங்களை நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த எதிரியான சிறுத்தை ஒழிந்தது என்ற மகிழ்ச்சியில் மக்கள் அனைவரும் இறந்து கிடந்த சிறுத்தையைச் சுற்றி நடனமாடினர்.
கார்பெட் இறந்து கிடந்த சிறுத்தையை நன்கு கவனித்தார். அது ஒரு பெரிய ஆண் சிறுத்தை. அந்தச் சிறுத்தைதான் சென்ற இரவு ஓர் ஒற்றை வீட்டில் தடுப்புப் பலகைகளைப் பெயர்த்து ஒரு நபரைத் தாக்க முற்பட்ட சிறுத்தை என்று எண்ணத் தோன்றினாலும், கார்பெட்டுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண்ணின் சடலத்தைத் தூண்டிலாக வைத்து ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்துவதற்காக மரத்தில் ஏறிக் காத்திருந்தபோது பார்த்த சிறுத்தையா இந்தச் சிறுத்தை என்ற சந்தேகம் அவருக்குள் தோன்றியது. அன்று கும்மிருட்டில் கார்பெட்டால் ஆட்கொல்லி சிறுத்தையை மேலோட்டமாகத்தான் பார்க்க முடிந்தது. இருப்பினும், தற்பொழுது, தான் சுட்டு வீழ்த்திய சிறுத்தை ஆட்கொல்லி சிறுத்தை இல்லை என்று கார்பெட் திண்ணமாகக் கருதினார்.
கூடியிருந்த மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுத்தையை ஒரு நீண்ட கம்பத்தில் அதன் கால்களைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டனர். இபாட்சனும் அவரது மனைவியும் முன்னே செல்ல, சிலர் சிறுத்தையைத் தூக்கிச் செல்ல, அவர்களுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான ஆண்கள் கூட்டமாகச் சென்றனர். கூட்டம் பஜார் வழியாகப் பங்களாவை நோக்கிச் சென்றது.
கார்பெட் தடுமாற்றத்துடனேயே மலையில் இறங்கினார். அங்கிருந்தவர்களில் ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை சாகவில்லை என்று நம்பிய ஒரே நபர் கார்பெட்தான். இந்தச் சம்பவம் கார்பெட்டின் பழைய நினைவுகளை அவருக்குள் கிளறியது. பல வருடங்களுக்கு முன்னர் கார்பெட் சிறுவனாக இருந்தபோது, அவருடைய குளிர்கால வீட்டிற்குச் சற்று அருகாமையில் நடைபெற்ற சம்பவம் அது. இச்சம்பவத்தைப் பற்றி, ஆங்கிலத்தில் வெளியான Brave Deeds என்ற புத்தகத்திலிருந்து படித்துத் தெரிந்து கொண்டார் கார்பெட். அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இருவர். ஸ்மிட்டன் என்ற இந்திய ஆட்சி அலுவலர் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த ப்ரெய்ட்வுட்.
ஓர் இரவு, நல்ல இருளில், இந்தியாவில் ரயில்கள் இல்லாத காலத்தில், ஒரு ஜட்கா வண்டியில் ஸ்மிட்டனும், ப்ரெய்ட்வுட்டும் பயணித்தனர். அவர்கள் முராதாபாத் என்ற இடத்திலிருந்து காலாதுங்கி நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். வரும் வழியில், ஒரு வளைவில் அவர்களுடைய வண்டி ஒரு முரட்டு யானை மீது மோதியது. யானை, வண்டிக்காரனையும், இரு குதிரைகளையும் கொன்றது. வண்டியைக் குப்புறக் கவிழ்த்தது. ப்ரெய்ட்வுட்டிடம் துப்பாக்கி இருந்தது. தன் பெட்டியிலிருந்து துப்பாக்கியின் பாகங்களை எடுத்து ஒன்று சேர்த்து, தோட்டாக்களை ஏற்றினார். இதற்கிடையில் ஸ்மிட்டன் கவிழ்ந்து கிடந்த வண்டியில் ஏறி, பாதிப்படையாமல் இருந்த ஒரு லாந்தர் விளக்கை எடுத்து, தன் தலை உயரத்திற்குத் தூக்கியபடியே யானையின் அருகே சென்றார். விளக்கை யானையின் நெற்றி அருகே காட்டினார். அந்த வெளிச்சத்தில், ப்ரெய்ட்வுட் தன் துப்பாக்கியால் யானையின் நெற்றியைப் பார்த்துச் சுட்டார். யானை அந்த இடத்திலேயே இறந்தது. ஒரு முரட்டு யானையின் அருகே செல்வது என்பது ஒரு அபாரமான செயல். ஸ்மிட்டன் அன்று செய்தது வீர தீரச் செயல். அதே போன்ற ஒரு செயலைத்தான் தற்பொழுது இபாட்சனும் புரிந்திருக்கிறார். முரட்டு யானைக்கு அருகில் ஸ்மிட்டன் சென்றதைப் போல், அடிபட்டுக் கிடந்த சிறுத்தையின் அருகில் இபாட்சன் சென்றது என்பது அவ்வளவு பெரிய செயல் இல்லை என்றாலும், எத்தனை பேர் அடிபட்டு வேதனையில் இருக்கும் சிறுத்தையின் அருகாமையில் லாந்தர் விளக்கை உயரே பிடித்தபடி, தன் கூட வருபவரின் துப்பாக்கியின் பாதுகாப்பில் செல்ல முன்வருவார்கள். கார்பெட் சுட்டு வீழ்த்திய சிறுத்தையின் பாதம் ஜின் பொறியில் மாட்டித் துண்டாகிப் போயிருந்தது. சிறுத்தையின் காலில் தோலுடன் ஒட்டியபடி அதன் பாதம் தொங்கிக் கொண்டிருந்தது.
பல வருடங்களுக்குப் பிறகு, பஜாரில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளும் அன்று திறந்திருந்தன. வீட்டின் கதவருகே பெண்களும், குழந்தைகளும் வேடிக்கைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தனர். சிறுத்தையைத் தூக்கிச் சென்றவர்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, அங்கிருக்கும் சிறுவர்கள் அருகில் வந்து பார்க்கச் சிறுத்தையின் சடலத்தைக் கீழே இறக்கினார்கள். பஜாரின் தெருமுனை வந்ததும் கூட்டம் கலைந்து சென்றது. பணியாட்களால் சிறுத்தை பங்களாவிற்குள் தூக்கிச் செல்லப்பட்டது.
கார்பெட் தன்னுடைய முகாமிற்குச் சென்று முகம், கை, கால்களை அலம்பிக் கொண்டு பங்களாவுக்குச் சென்றார். சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுத்தை உண்மையில் ஆட்கொல்லி சிறுத்தை தானா? இல்லையா? என்ற விவாதம் கார்பெட்டுக்கும், இபாட்சன் தம்பதியினருக்கும் இடையில் ஏற்பட்டது. ‘கொல்லப்பட்டது ஆட்கொல்லி சிறுத்தை இல்லை!’ என்று கார்பெட் தெரிவித்தார். இபாட்சன் தம்பதியினரோ, ‘அது ஆட்கொல்லி சிறுத்தைதான்!’ என்று வாதிட்டனர். ஆனால் சுட்டுக் கொல்லப்பட்டது ’ஆட்கொல்லி சிறுத்தைதான்’ என்ற உறுதியான முடிவிற்கு அவர்களாலும் வரமுடியவில்லை. இபாட்சன் பெளரிக்குச் சென்று அவருடைய அலுவல்களைப் பார்க்க வேண்டி இருந்தது. கார்பெட் ருத்ரபிரயாக்கிற்கு வந்து பல நாட்களாகியிருந்ததால் அவர் சோர்வடைந்திருந்தார். எனவே, மறுநாள் காலை, கொல்லப்பட்ட சிறுத்தையின் தோலை உரித்துக் காயவைத்து உலர்த்திய பிறகு, அடுத்த நாள் காலை விடிந்ததும் இருவரும் ருத்ரபிரயாக்கை விட்டுக் கிளம்புவது என்று முடிவு செய்திருந்தனர்.
சுற்றுவட்டாரம் மற்றும் தூரத்தில் இருந்த கிராமங்களிலிருந்து ஆண்கள் அடுத்தடுத்து வந்து கொல்லப்பட்ட சிறுத்தையைப் பார்வையிட்டுச் சென்றனர். பார்வையிட்டவர்களில் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டிருப்பது ஆட்கொல்லி சிறுத்தைதான் என்று உறுதியாகத் தெரிவித்தனர். இதனால் இபாட்சன் தம்பதியின் கூற்று வலுப் பெற்றது. ஆனால் கார்பெட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இபாட்சன் இரண்டு முடிவுகளை எடுத்தார். ஒன்று, கிராம மக்கள் ஆட்கொல்லி சிறுத்தை கொல்லப்பட்டுவிட்டதாக முடிவு செய்து அலட்சியமாக இருக்கக்கூடாது என்று எச்சரித்தார். மற்றொன்று, ஆட்கொல்லி சிறுத்தை சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற செய்தியைத் தந்தியடித்து அரசாங்கத்துக்குத் தெரிவிப்பதைத் தவிர்த்தார்.
மறுநாள் விடிந்ததும், ருத்ரபிரயாகை விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற காரணத்தினால் கார்பெட் இரவு சீக்கிரமாக உறங்கச் சென்று விட்டார். மறுநாள் காலை வந்தது. இன்னமும் சூரியன் உதிக்கவில்லை. கார்பெட் தன்னுடைய விடியற்காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய முகாமிற்கு வெளியே, சாலையில் பேச்சுக் குரல்கள் கேட்டன. இது கார்பெட்டுக்கு அசாதாரணமாகப் படவே அவர் வெளியே சென்று அங்கிருந்தவர்களைப் பார்த்து ‘இந்த நேரத்தில் சாலையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். கார்பெட்டைப் பார்த்ததும் சாலையில் இருந்த நான்கு பேர், கார்பெட்டின் முகாமை நோக்கி வந்தனர். அவர்கள் கார்பெட்டிடம், பட்வாரி தங்களை அனுப்பியதாகத் தெரிவித்தனர். சத்வபிபால் பாலத்திலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில், ஆற்றிற்குச் சற்று தூரத்தில் ஆட்கொல்லி சிறுத்தை ஒரு பெண்ணை அடித்துக் கொன்றுவிட்ட தகவலை கார்பெட்டிடம் அவர்கள் கூறினர்.
தகவலை அறிந்ததும் கார்பெட் இபாட்சனைப் பார்க்க அதிகாலையிலேயே சென்றார். இபாட்சன், பெளரி செல்லும் முடிவை ரத்து செய்தார். இபாட்சனும், கார்பெட்டும் தங்களுக்கு முன்னர் ஒரு பெரிய வரைபடத்தை வைத்துக்கொண்டு, தேநீர் அருந்தியபடியே அடுத்த திட்டத்தைத் தீட்ட ஆரம்பித்தனர்.
பெளரியில் இருந்த இபாட்சனின் தலைமையிடத்தில் அவருக்குத் தலைக்கு மேல் வேலை இருந்தது. அதனால் இரண்டு பகல் மற்றும் இரண்டு இரவுப் பொழுதுகள் மட்டும்தான் அவரால் ருத்ரபிரயாக்கில் தங்கியிருக்க முடியும்.
கார்பெட், முந்தைய தினம்தான், பெளரி மற்றும் கொத்வாரா வழியாக நைனிடாலுக்கு ரயில் மூலம் திரும்பி வருவதாக அவரது வீட்டிற்குத் தந்தி அனுப்பியிருந்தார். அனுப்பிய தந்தியை கார்பெட் ரத்து செய்தார். ரயில் மூலமாக வீடு திரும்ப ஏற்பாடு செய்திருந்த கார்பெட், இப்போது, ருத்ரபிரயாகிற்கு எப்படி நடைப்பயணமாக வந்தாரோ, அதேபோல் நடைப்பயணமாகவே வீடு திரும்ப முடிவு செய்தார். பயணத் திட்டங்களை மாற்றிய பிறகு, ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடுவதில் கவனத்தைச் செலுத்தினார் கார்பெட். பெண் கொல்லப்பட்ட இடத்தை வரைபடத்தில் தெரிந்து கொண்டார். பின்னர் நேரே தனது கூடாரத்திற்குச் சென்று, தன் ஆட்களிடம் தன்னுடைய பயணத் திட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றித் தெரிவித்துவிட்டு, அவர்களை மூட்டை முடிச்சுகளை எல்லாம் எடுத்துக் கொள்ளச் சொல்லி, பின்னர் தகவல் கொடுக்க வந்த நால்வருடன் எல்லோருமாகக் கிளம்பிச் சென்றனர்.
இபாட்சனது பங்களாவில் காலை உணவை முடித்துவிட்டு, இபாட்சனும், கார்பெட்டும் குதிரைகளில் ஏறி பெண் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றனர். குதிரைகள் இரண்டும் துணிவு மிக்க, செயல் நுட்பம் மிக்க உறுதியானவை. அவற்றில் ஒன்று Gulf Arab குதிரை, மற்றொன்று English mare. அவர்கள் செல்லும்போது, ஓர் அடுப்பு, பெட்ரோல் விளக்கு, மளிகைச் சாமான்களை உடன் எடுத்துச் சென்றார்கள். அவர்களுடன் குதிரைக்காரன் ஒருவன் ஓர் இரவல் குதிரையில், குதிரைகளுக்குத் தேவையான தீவனத்துடன் பயணித்தான்.
அனைவரும் சத்வபிபால் பாலத்தில் குதிரைகளை விட்டுவிட்டுச் சென்றனர். ஒரு தினம் முன்பு, சிறுத்தை கொல்லப்பட்ட தினத்தன்று சத்வபிபால் பாலம் மூடப்படாமல் விடப்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்டு ஆட்கொல்லி சிறுத்தை ஆற்றைக் கடந்துவந்து, கண்ணில் பட்ட முதல் கிராமத்தில் ஒரு பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டது.
கார்பெட்டையும் இபாட்சனையும் அழைத்துச் சென்ற வழிகாட்டி, அவர்களை ஒரு செங்குத்தான மேட்டின் வழியே, புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதியைக் கடந்து கூட்டிச் சென்றார். பின்னர், மரங்கள் நிறைந்த ஓர் ஆழமான பள்ளத்தாக்கில், சிறிய ஓடையின் வழியே அனைவரையும் கூட்டிச் சென்றார். அங்கு பட்வாரியும் அவருடன் 20 நபர்களும், ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டு இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
கட்டான உடல்வாகு உடைய ஓர் அழகான இளம் பெண்ணின் சடலம் அங்கு இருந்தது. அப்பெண்ணிற்குச் சுமார் 18 அல்லது 20 வயது இருக்கலாம். அப்பெண்ணின் உடல் குப்புறக் கிடந்தது. கைகள் இரண்டும் உடலின் பக்கவாட்டில் இருந்தது. உடலில் ஒட்டுத் துணியில்லை. சிறுத்தை அப்பெண்ணின் கால் முதல் கழுத்து வரை நக்கியிருந்தது. கழுத்தில் சிறுத்தையின் நான்கு பற்களும் பதிந்திருந்தன. உடலில் மேல் பகுதியில் கொஞ்சம் சதையையும், கீழ்ப் பகுதியில் கொஞ்சம் சதையையும் மட்டுமே சிறுத்தை சாப்பிட்டிருந்தது.
(தொடரும்)