இளம் பெண்ணின் சடலத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த நபர்கள், அங்கு ஆட்கொல்லி சிறுத்தை வராமல் இருக்க முரசு ஒலிக்கச் செய்தனர். அப்பொழுது மதியம் 2 மணி. அந்தச் சூழ்நிலையில் ஆட்கொல்லி சிறுத்தை அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருக்க வாய்ப்பில்லை. எனவே கார்பெட்டும், இபாட்சனும், பட்வாரியையும் பாதுகாவலர்களையும் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த கிராமத்திற்கு தேநீர் அருந்தச் சென்றனர்.
தேநீர் அருந்தி விட்டு கார்பெட்டும், இபாட்சனும் கூட வந்தவர்களுடன் இறந்த பெண் வசித்த வீட்டைக் காணச் சென்றார்கள். அது கற்களால் கட்டப்பட்ட வீடு. ஓர் அறை மட்டும் உள்ள வீடு அது. இரண்டு அல்லது மூன்று ஏக்கர் அளவு கொண்டு அடுக்கு வயலுக்கு நடுவே அவ்வீடு இருந்தது. அவ்வீட்டில், அவளது கணவன் மற்றும் ஆறு மாதக் கைக்குழந்தையுடன் வசித்து வந்திருக்கிறாள் அப்பெண்.
அவள் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு நிலத் தகராறு வழக்கில் சாட்சி சொல்வதற்காக அவளது கணவன் பெளரிக்குச் சென்றிருந்தார். தான் வீட்டில் இல்லாதபோது பாதுகாப்புக்காகத் தனது தந்தையை வீட்டில் தங்கச் செய்து விட்டுச் சென்றிருந்தார். அப்பெண் கொல்லப்பட்ட அன்று இரவு, அப்பெண்ணும், அவளது மாமனாரும் இரவு உணவருந்தினர். பின்னர், அப்பெண் தன் குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டு, தன் குழந்தையை மாமனாரிடம் ஒப்படைத்துவிட்டு, இயற்கை உபாதைக்காக வீட்டின் கதவைத் திறந்து, வீட்டை விட்டுக் கீழே இறங்கினாள். மலைக் கிராம மக்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சரியான கழிவறை வசதிகள் எதுவும் கிடையாது. அவர்கள் வீட்டிற்கு வெளியே பொது வெளியில்தான் செல்ல வேண்டும்.
குழந்தை, மாமனாரின் கைக்குச் சென்றவுடன் அழத் தொடங்கிவிட்டது. அதனால் அவருக்கு வெளியிலிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. குழந்தை அழாமல் இருந்திருந்தாலும் அவருக்கு ஒரு சத்தமும் கேட்டிருக்காது. வெளியே ஒரே கும்மிருட்டு. வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் வீடு திரும்பவில்லை. சில நிமிடங்கள் காத்திருந்த பெண்ணின் மாமனார், தன் மருமகளை அழைத்தார். ஆனால் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பின்னர் அவர் விரைந்து சென்று வீட்டின் கதவை மூடித் தாழிட்டார்.
அன்று மாலை மழை பெய்திருந்ததால், ஆட்கொல்லி சிறுத்தை எப்படி அப்பெண்ணை வேட்டையாடியது என்ற தகவலைக் கால் தடயங்களை வைத்துத் திரட்ட முடிந்தது. மழை பெய்து முடிந்த பிறகு, ஆட்கொல்லி சிறுத்தை அப்பெண் வசித்த கிராமத்தை நோக்கி வந்திருக்கிறது. பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 30 கஜ தூரத்தில் இருந்த ஒரு பாறையின் பின்னால் ஆட்கொல்லி சிறுத்தை பதுங்கிக் கொண்டது. பாறைக்குப் பின்னால் இருந்தபடியே, பெண்ணும், அவளது மாமனாரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்த சப்தத்தைச் சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்தது. வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்த பெண், தன் முதுகைத் திருப்பியபடியே தரையில் குத்திட்டு உட்கார்ந்திருக்கிறாள். அப்பொழுது பாறையிலிருந்து வெளிப்பட்ட சிறுத்தை, தனக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரத்தைத் தன் வயிற்றைத் தரையில் அழுத்தியவாறே, மெதுவாக வீட்டுச் சுவரின் ஓரமாகக் கடந்து வந்து, அப்பெண்ணை பின்னாலிருந்து தாக்கியது. பின்னர் சிறுத்தை அப்பெண்ணை பாறைக்குத் தூக்கிச் சென்றது. அவள் இறந்து விட்டதாலோ அல்லது அவளுடைய மாமனார் அழைத்ததன் காரணமாகவோ, சிறுத்தை அப்பெண்ணைப் பாறையை விட்டுத் தூக்கிச் சென்றது. புதிதாக ஏர் உழவு செய்யப்பட்ட நிலத்தில் பெண்ணினுடைய கைகள் அல்லது கால்களின் தடங்கள் பதிந்த அடையாளங்கள் எதுவும் இல்லை. எனவே, சிறுத்தை அப்பெண்ணை உயரே தூக்கிச் சென்றிருக்க வேண்டும்.
ஆட்கொல்லி சிறுத்தை பெண்ணின் சடலத்தை மற்றொரு வயலைத் தாண்டித் தூக்கிச் சென்றிருக்கிறது. பின்னர் அங்கிருந்து கீழே மூன்றடி உயரம் கொண்ட ஆற்றங்கரையைத் தாண்டியிருக்கிறது. அடுத்தாற்போல் ஒரு வயல்வெளியைக் கடந்து, அங்கிருந்து சுமார் 12 அடி சரிவில் உள்ள நடைபாதையைக் கடந்து மறுபக்கம் சென்றிருக்கிறது.
நடைபாதையைக் கடக்கும் பொழுது சிறுத்தை அப்பெண்ணை வாயில் கவ்வியபடியே சென்றிருக்கிறது. அப்பெண்ணின் எடை சுமார் 70 கிலோ இருக்கும். ஆனால் நடைபாதையில், ஓர் இடத்தில் கூடப் பெண்ணின் சடலத்தை இழுத்துச் சென்ற தடம் தெரியவில்லை. இதை வைத்தே அச்சிறுத்தை எவ்வளவு வலிமையானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
நடைபாதையைத் தாவிக் கடந்த பிறகு, சிறுத்தை பெண்ணை வாயில் கவ்வியபடியே ஒரு மைல் தூரம் கடந்து, ஒரு மலை அடிவாரத்திற்குச் சென்றது. அங்கு அப்பெண்ணின் ஆடைகளை நீக்கிவிட்டு, உடலைச் சிறிது சாப்பிட்டது. பின்னர் சடலத்தை, திறந்த புல்வெளியில், அடர்ந்த கொடிகளால் சூழப்பட்ட ஒரு மரத்தின் நிழலில் விட்டுச் சென்றது.
மாலை நான்கு மணியளவில், கார்பெட்டும் இபாட்சனும் ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடுவதற்காகக் கிளம்பினர். அவர்கள் பெட்ரோல் விளக்கையும், இரவில் வேட்டையாடுவதற்குத் தேவையான டார்ச் லைட்டையும் எடுத்துச் சென்றனர்.
கிராமவாசிகள் பெண்ணைத் தேடுவதற்காக எடுத்த முயற்சியில் ஏற்பட்ட சத்தமும், பின்னர் சடலத்தைப் பாதுகாக்க ஏற்படுத்திய முரசு ஒலியும் ஆட்கொல்லி சிறுத்தையை உஷார்படுத்தியிருக்கும். எனவே அது மறுபடியும் சடலத்தை நெருங்கும்பொழுது மிகவும் கவனத்துடன் இருக்கும். எனவே கார்பெட்டும், இபாட்சனும் சடலத்தின் அருகில் இருப்பதைத் தவிர்த்துவிட்டு, சுமார் 60 கஜ தூரத்தில், புல்வெளியைப் பார்த்தபடி இருந்த மலையிலிருந்த ஒரு மரத்தில் ஆட்கொல்லி சிறுத்தைக்காகக் காத்திருந்தனர்.
அது ஒரு வளர்ச்சி குன்றிய கர்வாலி மரம். அம்மரம் வலது கோணமாக மலையில் வளர்ந்திருந்தது. கார்பெட்டும், இபாட்சனும் அவர்கள் கொண்டு வந்த பெட்ரோல் விளக்கை மரத்தின் பொந்தில் வைத்து அதன் மீது தேவதாரு மரக் குச்சிகளை வைத்து மூடினர். கர்வாலி மரத் தண்டு இரண்டாகப் பிரிந்து செல்லும் இடத்தில் இபாட்சன் அமர்ந்து கொண்டார். அவர் அமர்ந்த இடத்திலிருந்து பெண்ணின் சடலம் தெளிவாகத் தெரிந்தது. இபாட்சனின் முதுகிற்குப் பின் தன் முதுகை வைத்தார்போல் கார்பெட் மரத்தண்டில் அமர்ந்து கொண்டார். கார்பெட்டின் பார்வை மலையைப் பார்த்தபடி இருந்தது. ஆட்கொல்லி சிறுத்தை வந்தவுடன் இபாட்சன் அதைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்றும், கார்பெட் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இருவரும் தீர்மானம் செய்து கொண்டனர். இபாட்சனின் டார்ச் லைட் வேலை செய்யவில்லை. டார்ச் லைட்டில் இருந்த மின்கலத்தில் மின்னூட்டம் குறைந்து போயிருக்கலாம். எனவே இபாட்சன் தனக்கு இருளில் கண் தெரியும் வரை சிறுத்தைக்காகக் காத்திருப்பது என்றும், பின்னர் பெட்ரோல் விளக்கின் வெளிச்சத்தில் இருவரும் கிராமத்திற்குத் திரும்பிச் செல்வது என்றும் முடிவாயிற்று. ருத்ரபிரயாகிலிருந்து அவர்களுக்காக வந்திருந்த ஆட்கள் கிராமத்தில் காத்திருப்பார்கள்.
சடலம் கிடந்த பகுதியைச் சுற்றிப்பார்க்க அவர்கள் இருவருக்கும் போதுமான அவகாசம் இல்லை. ஆனால் கிராம மக்கள், பெண்ணின் சடலம் இருந்த இடத்திற்குக் கிழக்கே அடர்ந்த வனப்பகுதி இருப்பதாகவும், முரசு ஒலியைக் கேட்டு ஆட்கொல்லி சிறுத்தை அந்த அடர்ந்த வனத்திற்குள் சென்று பதுங்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். கிராமவாசிகள் சொன்னது போன்று ஆட்கொல்லி சிறுத்தை அந்த அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வந்தால், அது திறந்த புல்வெளியை அடைவதற்குள், இபாட்சனால் அதைக் குறிபார்த்துச் சுட்டு வீழ்த்த முடியும். இபாட்சனின் ரைபிள் துப்பாக்கியில் telescopic sight என்ற கருவி பொருத்தப்பட்டிருந்தது. இக்கருவியைக் கொண்டு இலக்கைத் துல்லியமாகச் சுட்டு வீழ்த்த முடியும். இந்த telescopic sight கருவி சந்தி வேளையில் அரைமணி நேரத்திற்கு வெளிச்சத்தை நீட்டித்துக் கொடுக்கும். வேட்டையாடும் சமயங்களில், வெளிச்சம் குன்றி இருளத்தொடங்கும் வேலைகளில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இம்மாதிரிச் சமயங்களில் telescopic sight கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாலைக் கதிரவன் மேற்கில் மலைகளுக்கு நடுவே மறைந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு கரட்டாடு கத்தியபடியே அடர்ந்த வனப்பகுதியிலிருந்து மலையை நோக்கி ஓடி வந்தது. மலை மீது ஏறிய கரட்டாடு ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த்து சிறிது நேரம் கத்திவிட்டு மலையின் மறுபக்கத்திற்குச் சென்றுவிட்டது. அது முன்னே செல்லச் செல்ல அதன் கத்தல் ஒலியும் குறைந்து கொண்டே போனது.
கரட்டாடு கண்டிப்பாக ஒரு சிறுத்தையைப் பார்த்துத்தான் அபாயக் குரல் எழுப்பியிருக்க வேண்டும் என்று கணித்தார் கார்பெட். அப்பகுதியில் ஏனைய சிறுத்தைகள் இருந்தாலும், சமீபத்தில் வந்திருப்பது ஆட்கொல்லி சிறுத்தையாகத் தான் இருக்கும் என்று கார்பெட்டுக்குத் தோன்றியது. அவர் இபாட்சனை திரும்பிப் பார்த்தார். இபாட்சன் தனது இரு கரங்களையும் துப்பாக்கியில் தயாராக வைத்தபடிக் காத்திருந்தார்.
வெளிச்சம் குறையத் தொடங்கிய நேரம். அந்த வெளிச்சத்தில் அவர்களால் telescopic sight கருவி இல்லாமலேயே சிறுத்தையைச் சுட முடியும். அந்தச் சமயத்தில், தேவதாருவின் திரளை (pine-cone) மலையிலிருந்து உருண்டு வந்து இருவரும் அமர்ந்திருந்த மரத்தில், கார்பெட் காலுக்குக் கீழே வந்து மோதியது. இது ஆட்கொல்லி சிறுத்தை அங்கு வந்து விட்டதை உணர்த்தியது. தனக்கு ஆபத்து இருக்கும் என்று உணர்ந்த சிறுத்தை, பாதுகாப்புக் கருதி, யாரும் எதிர்பார்க்காத வழியில் வந்தது. அப்படி வரும் பொழுது, இருவர் உட்கார்ந்திருந்த மரமும், பெண்ணின் சடலமும் நேர் கோட்டில் இருந்தது. அதனால் துரதிஷ்டவசமாக மரத் தண்டுகளின் நடுவில் அமர்ந்திருந்த இபாட்சன் சிறுத்தையின் கண்களில் பட்டிருப்பார். கார்பெட்டை சிறுத்தை கவனித்திருக்க வாய்ப்பில்லை.
வெளிச்சம் மேலும் குறைந்ததால் ஆட்கொல்லி சிறுத்தையைக் குறிபார்த்துச் சுடுவதற்கு கார்பெட்டுக்கு போதிய வெளிச்சம் இல்லை. இபாட்சனின் telescopic sight கருவியும் பயன்படவில்லை. ஆட்கொல்லி சிறுத்தை இருவர் அமர்ந்திருந்த மரத்தின் அடியில் பதுங்கியபடி வந்தது. இப்பொழுது ஏதாவது செய்தாக வேண்டும். கார்பெட், இபாட்சனைத் தான் அமர்ந்திருந்த இடத்திற்கு வரச்சொன்னார். கார்பெட் மரப்பொந்தில் வைத்திருந்த பெட்ரோல் விளக்கை எடுத்தார். ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பான பெட்ரோமேக்ஸ் என்ற பெயர் கொண்ட அவ்விளக்கு நல்ல வெளிச்சத்தைக் கொடுத்தது. ஆனால் அவ்விளக்கு உயரமான ஒன்றாக இருந்தது. அதுனுடைய கைப்பிடியும் நீண்டதாக இருந்தது. இம்மாதிரி விளக்குகள் காடுகளில் பயன்படுத்தத் தயாரிக்கப்பட்டவை அல்ல.
கார்பெட் இபாட்சனை விடச் சற்று உயரமானவராக இருந்ததால், பெட்ரோல் விளக்கை, தான் ஏந்திக் கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் இபாட்சன் தான் விளக்கை ஏந்திக் கொள்வதாகவும், தன் ரைபிள் துப்பாக்கியை விடவும் கார்பெட்டின் ரைபிள் துப்பாக்கியின் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இருவரும் மரத்தை விட்டுக் கீழே இறங்கினர். இபாட்சன் பெட்ரோல் விளக்கை ஏந்தியபடி முன்னே சென்றார். கார்பெட் தனது கரங்களில் துப்பாக்கியை ஏந்தியபடியே பின்னே வந்தார்.
மரத்திலிருந்து சுமார் 50 கஜ தூரம் வந்திருப்பார்கள். இபாட்சன் ஒரு பாறையில் ஏற முயன்றார். அப்பொழுது அவர் தவறி விழுந்தார். அவர் கையில் ஏந்திக்கொண்டிருந்த விளக்கின் அடிப்பாகம் பாறையில் மோதியது. அதன் விளைவாக விளக்கிலிருந்த மாண்டில் கழன்று விளக்கின் அடியில் போய் விழுந்தது. விளக்கின் கூம்புக் குழலிலிருந்து ஊதா நிறச் சுடர் தோன்றியது. அந்த வெளிச்சம் அவர்கள் நடந்து செல்வதற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அந்தச் சுடரிலிருந்து வரும் வெளிச்சம் எவ்வளவு நேரத்திற்கு இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இபாட்சன் தன்னால் அவ்விளக்கை இன்னும் மூன்று நிமிடங்களுக்கு மட்டுமே ஏந்தி வரமுடியும் என்றும், அதன் பிறகு அவ்விளக்கு வெடித்துவிடும் என்றும் தெரிவித்தார். அந்த மூன்று நிமிடங்களுக்குள் இருவரும் அரை மைல் தூரத்திற்குக் கடினமாக மலையை ஏற வேண்டும். கூடவே பாறைகளிலும், முட்புதர்களிலும் மோதிக்கொள்ளாமல் வளைந்து செல்ல வேண்டும். ஆட்கொல்லி சிறுத்தை தங்களைப் பின் தொடர்கிறதா என்று பார்த்தவாறேயும் செல்ல வேண்டும். இதை நினைக்கும்போதே அவர்களுக்குத் திகில் உண்டாகியது.
(தொடரும்)