Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #17

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #17

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

பெண்ணின் சடலம் இருந்த இடத்திற்குச் செல்லும் பாதையில் ஒரு தேவதாரு மரம் (pine tree) இருந்தது. கார்பெட்டும், இபாட்சனும் அந்த தேவதாரு மரத்தின் மீது ஒரு மேடை அமைத்து, வைக்கோலை வைத்து அந்த மேடையை மறைத்தனர். இபாட்சன், ஸ்டவ் அடுப்பில் தயாரித்த இரவு உணவை இருவரும் சாப்பிட்டுவிட்டு மரத்தின் மீது அமைக்கப்பட்ட மேடையின் மீது அமர்ந்தனர். இருவரும் கால்களை நீட்டி அமர்வதற்கு வசதியாக அம்மேடை இருந்தது. புகை பிடித்தபடியே அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஆனால் அவர்களின் காதுகள் பெண்ணின் சடலம் இருந்த இடத்திலிருந்து ஏதேனும் சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் மாறி மாறி காவல் காத்தனர். ஒருவர் தூங்கும் பொழுது மற்றவர் விழித்திருப்பார். ஜின் பொறியில் சிறுத்தையின் கால் மாட்டி, அது ஆக்ரோஷத்தில் கத்தாதா என்று அவர்களது காதுகள் ஏங்கிக் கொண்டிருந்தன. இந்த ஏற்பாட்டில் ஒரு குறைபாடு இருந்தது. சடலத்தை அடைய சிறுத்தை எந்தத் திசையில் வேண்டுமானாலும் வரலாம். எனவே, ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிறுத்தை அகப்படுமா என்பது சந்தேகமே.

இரவில் ஒரு முறை கரட்டாடு ஒன்று கத்தியது. ஆனால் கரட்டாட்டின் சத்தம், சிறுத்தை வரும் என்று அவர்கள் எதிர்பார்த்த திசைக்கு மாறாக எதிர்த்திசையிலிருந்து வந்தது.

விடிந்தது. இருவரும் மரத்தை விட்டுக் கீழே இறங்கினர். இருவரும் தேநீர் அருந்திவிட்டு சடலம் இருந்த இடம் நோக்கிச் சென்றனர். முன் தினம், சடலம் எப்படிக் கிடந்ததோ அதே நிலையில் அப்படியே கிடந்தது.

இபாட்சன் காலை உணவை முடித்துக் கொண்டு ருத்ரபிரயாக் சென்றுவிட்டார். கார்பெட்டும் தன்னுடைய மூட்டை முடிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டு நைனிடாலை நோக்கிய தன்னுடைய 15 நாள் பயணத்தைத் தொடங்கத் தயாரானார். உள்ளூர் கிராமவாசிகளிடம் சொல்லிவிட்டு கார்பெட் கிளம்பும்போது, சிலர் அவரிடம் ஓடி வந்து நான்கு மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுத்தை ஒன்று ஒரு மாட்டைக் கொன்று விட்டதாகத் தெரிவித்தனர். மாட்டைக் கொன்றது ஆட்கொல்லி சிறுத்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் சந்தேகப்பட்டனர். அதற்கான காரணம், ‘சென்ற இரவிற்கு முந்தைய இரவு, கார்பெட்டையும் இபாட்சனையும் கார்வாலி மரத்திலிருந்து அவர்கள் தங்கிய கட்டடத்தின் வராந்தா வரை சிறுத்தை பின் தொடர்ந்தது. அடுத்த நாள் விடியும் தறுவாயில், ஆட்கொல்லி சிறுத்தை ஒரு தலையாரியின் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றது. அந்த முயற்சி தோல்வியில் முடியவே, ஆட்கொல்லி சிறுத்தை அன்று மாலை தலையாரியின் வீட்டிலிருந்து சுமார் 300 கஜ தூரத்தில் இருந்த வனத்தில் ஒரு மாட்டை அடித்துக் கொன்றிருக்கிறது’ என்று வந்தவர்கள் தெரிவித்தனர்.

கார்பெட் மேற்படி தகவலுடன் தன்னைச் சந்திக்க வந்தவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, நைனிடால் செல்லும் தன் பயணத்தை ஒத்தி வைத்தார். தன்னை அழைத்துப் போக வந்தவர்களுடன் மாடு கொல்லப்பட்ட கிராமத்திற்குச் சென்றார். கார்பெட் போகும் போது தன்னுடன் ஜின் பொறியையும், சயனைடு விஷத்தையும் எடுத்துச் சென்றார்.

தலையாரியின் வீடு ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருந்தது. குன்றைச் சுற்றி விளைநிலங்கள் இருந்தன. குன்றிலிருந்த அவர் வீட்டிற்குச் செல்ல வழிப்பாதை ஒன்று இருந்தது. அந்தப் பாதை சேறாகவும், சகதியாகவும் இருந்தது. அப்பாதையில் ஆட்கொல்லி சிறுத்தையின் கால்தடங்களைக் கார்பெட்டால் பார்க்க முடிந்தது.

பள்ளத்தாக்கைத் தாண்டி வரும் கார்பெட்டைத் தூரத்திலிருந்தபடியே பார்த்த தலையாரி, அப்போதுதான் கறந்த பாலில், வெல்லம் போட்டுத் தேநீர் தயார் செய்து வைத்து, கார்பெட்டின் வருகைக்காகக் காத்திருந்தார். வீட்டின் வெளியே நாணலால் கட்டப்பட்ட கட்டிலில், மலைக்காட்டு ஆட்டின் தோலினால் ஆன விரிப்பின் மீது அமர்ந்தபடியே, தலையாரி கொடுத்த இனிப்பான தேநீரைக் கார்பெட் பருகினார். தன் வீட்டுக் கதவின் நிலையைக் கார்பெட்டிடம் காட்டினார் தலையாரி. தெய்வாதீனமாகச் சிறுத்தை கதவை உடைக்க முயன்ற சமயத்தில் தலையாரி தன் வீட்டின் கூரையைச் சரி செய்வதற்காக வைத்திருந்த கட்டுமான மரத்தைக் கொண்டு, கதவிற்கு உள்பக்கமாக முட்டுக் கொடுத்தார். அதனால் ஆட்கொல்லி சிறுத்தையால், அவர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரமுடியவில்லை.

தலையாரி வயதான மனிதர். அவருக்கு முடக்குவாதம் வேறு இருந்ததால், தன் மகனை கார்பெட்டுடன் அனுப்பி, கொல்லப்பட்ட மாட்டைப் பார்த்துவர ஏற்பாடு செய்தார். இதற்கிடையில் கார்பெட்டும், அவருடைய ஆட்களும் தன் வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தார்.

கார்பெட், கொல்லப்பட்ட மாட்டைப் பார்த்தார். அது ஓர் இளம் மாடு. கால்நடைகள் செல்லும் பாதைக்குச் சற்று மேலே ஒரு சமதளத்தில் மாட்டின் சடலம் கிடந்தது. இந்த இடம் ஜின் பொறி வைப்பதற்குச் சரியான இடமாகக் கார்பெட்டுக்கு பட்டது. மாட்டின் பின்புறத்தில் காட்டு ரோஜாச் செடிகள் புதராக மண்டியிருந்தன. மாட்டின் பாதக் குளம்புகள் ஓர் அடி உயரக் கரையின் மீது கிடந்தன. சிறுத்தை கரையின் மீது அமர்ந்து, தன்னுடைய முன்னம் பாதங்களை மாட்டின் பாதக் குளம்புகளுக்கு இடையே வைத்து மாட்டின் இறைச்சியைத் தின்றிருக்கிறது.

மாட்டின் கால்களுக்கு நடுவே சிறு குழியைத் தோண்டி, அந்த மண்ணைத் தூரத்தில் போட்டு விட்டு, அந்தக் குழியில் ஜின் பொறியைப் பொருத்தினார் கார்பெட். குழியைப் பச்சைப் புற்களைக் கொண்டு மறைத்தார். அதன் மீது மண்ணைத் தூவினார். பின்னர் ஜின் பொறி வைப்பதற்கு முன்னர், அவ்விடத்தில் காய்ந்த சருகுகள், சிறு குச்சிகள், மாட்டின் உடைந்த சிறிய எலும்புகள் போன்றவை முன்னர் எப்படி இருந்தனவோ, அவற்றை அப்படியே அதே இடத்தில் மாட்டின் கால்களுக்கு நடுவே வைத்தார். மாட்டின் சடலம் இருந்த இடத்திற்குச் செல்லும் நூற்றில் ஒருவரால் கூட அந்த இடத்தில் குழி தோண்டப்பட்டிருப்பதாகவோ அல்லது அங்குப் பயங்கரமான ஜின் பொறி வைக்கப்பட்டிருப்பதாகவோ கண்டுபிடிக்க முடியாது.

ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடித்த பிறகு கார்பெட், வந்த வழியிலேயே சென்று மாட்டின் சடலம் இருந்த இடத்திற்கும், தலையாரியின் வீடு இருந்த இடத்திற்கும் நடுவே இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தார். ஜின் பொறியில் சிறுத்தை மாட்டிக்கொண்டால், மரத்திலிருந்து இறங்கி, மாட்டின் சடலம் இருந்த இடத்திற்குச் செல்ல கார்பெட்டுக்கு வசதியாக இருந்தது அந்த மரம்.

மாலை சூரியன் மறையும் தறுவாயில், ஒரு காட்டுக்கோழியும் அதன் ஐந்து குஞ்சுகளும் திடீரென்று ஏதோ அபாயத்தை உணர்ந்தவாறே தடுமாற்றத்துடன் மலையில் இருந்து கீழே இறங்கி ஓடின. அதன் பிறகு, சில நொடிகளில் ஒரு கரட்டாடு வேகமாக ஓடி வந்து கார்பெட் அமர்ந்திருந்த மரத்தின் அடியில் வந்து சிறிது நேரம் கத்திவிட்டு தன்னுடைய நுனிக்கால்களால் மலை மீது ஏறிச் சென்றுவிட்டது. அதன் பிறகு அங்கு ஒன்றும் நடக்கவில்லை. மரங்கள் சூழ்ந்திருந்த அந்த இடம் மிகவும் இருட்டாக மாறியது. வெளிச்சம் இல்லாத அந்தச் சூழ்நிலையில் தன் துப்பாக்கியைக் குறிபார்த்துச் சுட முடியாது என்று உணர்ந்த கார்பெட், மரத்தை விட்டுக் கீழே இறங்கி, ரப்பர் காலணிகளை அணிந்தபடி நுனி கால்களினால் மெல்லமாகக் கிராமத்தை நோக்கி நடக்கலானார்.

தலையாரியின் வீட்டிற்குச் சுமார் 100 கஜ தூரத்தில், அவர் வீட்டிற்குச் செல்லும் வழிப்பாதை ஒரு திறந்தவெளியைக் குறுக்கிட்டது. அந்தத் திறந்தவெளி சுமார் 30 கஜ நீளமும், 20 கஜ அகலமும் கொண்டிருந்தது. அந்தத் திறந்தவெளியின் ஏற்றத்தில் ஒரு பெரிய பாறை இருந்தது. கார்பெட் அந்தத் திறந்த வெளியைக் கடந்து செல்லும் போது, தன்னை ஆட்கொல்லி சிறுத்தை பின் தொடர்வதாக உணர்ந்தார். இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள நினைத்தார் கார்பெட். வழிப்பாதையிலிருந்து விலகிய அவர், சேறும் சகதியுமாக இருந்த பகுதியை இரண்டு நீண்ட அடிகளில் கடந்தார். பாறைக்குப் பின்னால் சென்று அப்படியே குப்புறப் படுத்துக்கொண்டார். அவரின் ஒரு கண், மாட்டின் சடலம் இருந்த திசையைக் கவனித்தது.

அடுத்த பத்து நிமிடங்கள் அப்படியே ஈரத் தரையில் படுத்துக்கொண்டார் கார்பெட். வெளிச்சம் சுத்தமாக மறைந்த பிறகு, பாறைக்குப் பின்னால் இருந்து எழுந்து, வழிப்பாதையில் மறுபடியும் நடக்கலானார். மிகவும் கவனத்துடன் மீதமுள்ள தூரத்தைக் கடந்து தலையாரியின் வீட்டை அடைந்தார் கார்பெட்.

நள்ளிரவில். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த கார்பெட்டை எழுப்பி ஆட்கொல்லி சிறுத்தை வீட்டின் கதவைச் சுரண்டுவதாகத் தெரிவித்தார் தலையாரி. மறுநாள் காலை, கார்பெட் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, கதவருகே வாசலில் ஆட்கொல்லி சிறுத்தையின் கால்சுவடுகள் தூசியில் பதிந்திருந்தன. சிறுத்தையின் கால் சுவடுகளைக் கார்பெட் பின்தொடர்ந்து சென்றார். அது நேரே திறந்தவெளிக்குச் சென்றது. சிறுத்தை நடந்து வந்த பாதைகளைக் கவனிக்கும்போது, சென்ற இரவு அவர் என்ன செய்தாரோ அதையே சிறுத்தையும் செய்திருப்பது தெரியவந்தது. ஆட்கொல்லி சிறுத்தை வழிப்பாதையை விட்டு விலகி, சேற்றையும் சகதியையும் கடந்து, பாறைக்கு வந்திருக்கிறது. பின்னர் பாறையிலிருந்து மறுபடியும் வழிப்பாதைக்கு வந்து அங்கிருந்து கார்பெட்டைப் பின்தொடர்ந்து தலையாரியின் வீடு வரை வந்திருக்கிறது. இப்படியே சிறுத்தை பல முறை சுற்றி வந்திருக்கிறது.

கடைசியாக அது தலையாரியின் வீட்டை விட்டுக் கிளம்பி வழிப்பாதையின் வழியாக மாட்டின் சடலம் இருந்த இடம் நோக்கிச் சென்றிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட கார்பெட்டுக்கு பெரிய நம்பிக்கை பிறந்தது. ஆனால் அந்த ஆட்கொல்லி சிறுத்தை எவ்வளவு தந்திரமானது என்பதை கார்பெட் பின்னர்தான் உணர்ந்து கொண்டார்.

கார்பெட், வழிப்பாதையைத் தாண்டிக் கரையோரமாக மேடான இடத்திலிருந்த மாட்டின் சடலம் இருந்த இடத்தை நோக்கிச் சென்றார். அந்த இடத்தை நெருங்கிச் சென்ற அவருக்கு ஒரே ஆச்சர்யம். மாட்டின் சடலத்தைக் காணவில்லை. ஜின் பொறி அப்படியே இருந்தது. பொறிக்கு அருகாமையில் சிறுத்தையின் கால் தடங்கள் இருந்தன. இப்போதும் சென்ற முறை போல், ஆட்கொல்லி சிறுத்தை கரையின் மீது அமர்ந்தபடியே, தன் முன்னம் பாதங்களை மாட்டின் பாதக் குளம்புகளுக்கு இடையே வைத்து, மாட்டின் இறைச்சியைத் தின்றிருக்கிறது. ஆனால் இம்முறை சிறுத்தை தன்னுடைய முன் பாதங்களைச் சற்று அகட்டி வைத்திருந்திருக்கிறது. ஆட்கொல்லி சிறுத்தை தன்னுடைய பாதங்களைப் புதைக்கப்பட்டிருந்த ஜின் பொறியின் நெம்புகோல்களின் (levers) மீது வைத்தபடியே தன்னுடைய இரையைப் புசித்திருக்கிறது. சிறுத்தையின் பாதங்கள் நேரடியாக நெம்புகோல்களின் மீது பட்டிருந்தால், சிறுத்தையின் வாய் பொறியில் அகப்பட்டிருக்கும். ஆனால் ஆட்கொல்லி சிறுத்தை ஜின் பொறியில் மாட்டிக்கொள்ளாமல் லாகவமாகத் தன்னுடைய இரையைச் சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், ஜின் பொறி பதிக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்துவிட்டு, சுற்றி வந்து, மாட்டின் தலையைக் கவ்வி, அந்த உடலை ரோஜா முட்களுக்கு இடையே இழுத்துச் சென்று, மாட்டின் சடலத்தை மலையிலிருந்து உருட்டி, கீழே மேலும் 50 கஜ தூரத்திற்குச் சடலத்தைச் சுமந்து கொண்டு, கார்வாலி மரக்கன்றை தாண்டிச் சென்றிருக்கிறது. இரவில் தன்னுடைய பணியைச் செவ்வனே செய்து முடித்த ஆட்கொல்லி சிறுத்தை, பின்னர் கால்நடைகள் செல்லும் பாதையின் வழியாகச் சென்றிருக்கிறது. 8 வருடங்களாக மனிதர்களை வேட்டையாடும் விலங்கு எப்படிப்பட்ட கபடதாரியாக மாறி இருக்கிறது என்பதை அப்போது தான் கார்பெட் புரிந்து கொண்டார்.

குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு, கார்பெட்டால் சிறுத்தையின் கால்சுவடுகளைப் பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. காரணம், சிறுத்தை சென்ற பாதை கட்டாந்தரையாக இருந்தது. அதனால் அதன் கால்சுவடுகள் பதியவில்லை.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *