Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #18

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #18

ஜிம் கார்பெட்

ஆட்கொல்லி சிறுத்தை தன் இரையை நோக்கி மறுபடியும் வராது என்று கார்பெட்டுக்குத் தோன்றியது. முந்தைய தினம், சயனைடு விஷத்தை இரையில் வைக்கத் தவறிவிட்டார் கார்பெட். அதற்காக இன்று மாட்டின் சடலத்தில் சயனைடு விஷத்தைக் கூடுதலாகவே வைத்தார். கார்பெட்டுக்கு இப்படிச் செய்வது பிடிக்கவில்லை. சயனைடு விஷத்தை வைத்து விலங்குகளைக் கொல்வதை அவர் வெறுத்தார்.

மறுநாள் காலை மாட்டின் சடலத்தை கார்பெட் பார்க்கச் சென்றார். விஷம் வைக்கப்பட்டிருந்த மாட்டு இறைச்சியின் பகுதியை ஒரு சிறுத்தை சாப்பிட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால் அது ஆட்கொல்லி சிறுத்தை இல்லை என்று கார்பெட்டுக்குத் தோன்றியது. எதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த ஏதோ ஒரு சிறுத்தைதான் சயனைடு விஷம் கலந்த மாட்டின் இறைச்சியைத் தின்று இறந்து போயிருக்கலாம் என்று அவர் கருதினார். கிராமத்திற்குத் திரும்பிச் சென்ற கார்பெட், சிறுத்தையின் உடல் கிடைக்கும் வரை, தான் கிராமத்தில் தங்கப் போவதில்லை என்றும் இறந்த சிறுத்தையின் தோலை யார் கொண்டுவந்து பட்வாரியிடம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு 100 ரூபாய் சன்மானத்தை வழங்கப் போவதாகவும் கிராமத் தலைவரிடம் தெரிவித்தார். (ஒரு மாதத்திற்குப் பிறகு இறந்த சிறுத்தையின் தோலை பட்வாரியிடம் ஒருவர் கொடுத்துவிட்டு, அதற்கான சன்மானத்தையும் பெற்றுச் சென்றார். பட்வாரி அச்சிறுத்தையின் தோலைக் குழி தோண்டிப் புதைத்தார்.)

கார்பெட்டின் ஆட்கள் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு தயாரானார்கள். கார்பெட்டும் அவரது ஆட்களும் மதியத்திற்குப் பிறகு நைனிடாலை நோக்கிய தங்களுடைய நீண்ட நெடிய பயணத்தைத் தொடங்கினர். அவர்கள் சத்வபிபால் பாலத்தைக் கடக்கும்பொழுது, ஒரு பெரிய சாரைப்பாம்பு ஒன்று மெதுவாக அவர்கள் சென்ற வழிப்பாதையில் கடந்து சென்றது. அப்பொழுது கார்பெட்டின் வேலையாட்களில் ஒருவரான மாது சிங், ‘உங்கள் தோல்விக்குக் காரணமாக இருந்த தீய சக்தி அதோ கடந்து செல்கிறது’ என்று தெரிவித்தான்.

கார்வால் மக்களை ஆட்கொல்லி சிறுத்தையிடம் விட்டுச் செல்வதில் கார்பெட்டுக்கு உடன்பாடு இல்லை. இந்த நிகழ்வைக் கடுமையாகத் தாக்கி அன்றைய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆட்கொல்லி சிறுத்தையின் அட்டகாசங்கள் குறித்து அன்றைய செய்தித்தாள்களில் தினமும் செய்திகள் வெளிவந்தன.

ஆட்கொல்லி விலங்குகளை வேட்டையாடுவது என்பது ஒரு கடினமான செயல். அதுவும் அதில் தொடர்ச்சியாக ஈடுபடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. அதனைத் தொடர்ந்து செய்வது என்பது முடியாத காரியம் என்று கார்பெட் கருதினார்.

கார்பெட் கார்வாலில் தங்கியிருந்த பல வாரங்களில், அவரது ஒரு நாள் முழுக்க ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்துவதற்காக அயராது முயற்சித்திருக்கிறார். பல இரவுகள் ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்துவதற்காகக் கண் விழித்திருக்கிறார். இரவு காத்திருப்பிற்குப் பின்னர் மறுநாள் காலையில் அவர் பல மைல்கள் நடந்து தூரத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்கள், இரவில் ஆட்கொல்லி சிறுத்தை தங்களது வீட்டிற்குள் நுழைவதற்கு எப்படியெல்லாம் முயற்சி செய்தது என்ற தகவல்களைக் கொடுப்பர். பல இரவுகளில், நிலவொளியில், வசதிக் குறைவான சூழலில், பல இன்னல்களுக்கு நடுவே, சகிப்புத் தன்மையுடன் மரத்தில் காத்திருந்திருக்கிறார் கார்பெட். அத்தகைய சூழ்நிலையில், அவர் கண் விழிக்க முடியாமல் அயர்ந்த சமயங்களில், ஆட்கொல்லி சிறுத்தை அவரை எளிதாகத் தாக்கிக் கொன்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.

ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்த, அது சென்ற பாதையில் பல மணி நேரம் அதனைப் பின் தொடர்ந்திருக்கிறார். ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்த அவர் பல யுக்திகளைக் கையாண்டிருக்கிறார். ஆனால் ஆட்கொல்லி சிறுத்தை அதிர்ஷ்டவசமாகவோ அல்லது தந்திரமாகவோ அவரது யுக்திகளிலிருந்தும், அவரது தோட்டாக்களிடமிருந்தும் தப்பித்திருக்கிறது. அடுத்த நாள் கார்பெட், தான் முந்தைய தினம் சென்ற பகுதிக்குச் சென்று பார்த்தபோது, ஆட்கொல்லி சிறுத்தை தன்னை நெருக்கமாகப் பின் தொடர்ந்திருக்கிறது என்பதை, அதன் கால் தடத்திலிருந்து அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது. இரவில் நிலவொளி இருந்தாலும், தன்னை ஓர் ஆட்கொல்லி சிறுத்தை பின் தொடர்ந்து வந்து தாக்க முயற்சித்திருக்கிறது என்ற விஷயம் கார்பெட்டுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை கலக்கமுறச் செய்தது.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வுற்று இருந்த கார்பெட் இனிமேலும் தான் ருத்ரபிரயாகில் தங்கியிருப்பதில் கார்வால் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை என்று உணர்ந்தார். மேலும் அங்கு அவர் தங்கியிருப்பது அவரது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம். தான் எடுத்த காரியத்தை இப்படிப் பாதியிலேயே தற்காலிகமாக விட்டுச் செல்வதைப் பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சிக்கலாம். இருப்பினும், கார்பெட்டுக்கு தான் செய்வது சரியாகவே பட்டது. கார்வால் மக்களிடம், தான் விரைவில் திரும்பி வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, கனத்த இதயத்துடனும், சோர்வுடனும் கார்வாலை விட்டுத் திரும்பிச் சென்றார்.

1925 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் இறுதியில் நம்பிக்கையிழந்து, சோர்வுற்று, தோல்வியுற்ற மனநிலையில் கார்வாலை விட்டுக் கிளம்பினார் கார்பெட். 1926 ஆம் ஆண்டு, வசந்த காலத்தின் தொடக்கத்தில், தன் அன்றாட அலுவல்களைக் கவனித்து வந்த கார்பெட், புத்துணர்ச்சி பெற்று நம்பிக்கையுடன் காணப்பட்டார்.

கார்பெட், ஆட்கொல்லி சிறுத்தையை அழிக்க கார்வாலுக்கு இரண்டாவது முறையாகச் சென்றார். இம்முறை, அவர் ரயிலில் பயணித்தார். கோத்வார் வரை ரயிலில் பிரயாணம் மேற்கொண்டார். அங்கிருந்து பெளரிக்கு கால் நடையாகச் சென்றார். இப்படிச் செல்வதன் மூலம், அவரால் பயண காலத்தில் 8 நாட்களைக் குறைக்க முடிந்தது. பெளரியில், கார்பெட்டுடன் இபாட்சனும் இணைந்து கொண்டார். இருவரும் ருத்ரபிரயாகிற்குப் பயணமானார்கள்.

கார்வாலில் கார்பெட் இல்லாத அந்த மூன்று மாதக் காலத்தில் ஆட்கொல்லி சிறுத்தை சுமார் 10 நபர்களைக் கொன்றிருந்தது. இந்த மூன்று மாதத்தில் ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. உள்ளூர் மக்கள் ஆட்கொல்லி சிறுத்தை மீதான பயத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆட்கொல்லி சிறுத்தையால் ஏற்பட்ட கடைசி பலி ஒரு சிறுவன். அலக்நந்தா நதியின் இடது கரையில் அச்சம்பவம் நடைபெற்றது. கார்பெட்டும், இபாட்சனும் ருத்ரபிரயாகிற்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுவன் ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டிருந்தான். அவர்கள் இருவரும் பெளரியில் இருக்கும் பொழுது, இச்சம்பவம் குறித்து அவர்களுக்கு ஒரு தந்தி கிடைத்தது. தந்தியைப் படித்துப் பார்த்ததும், இருவரும் ருத்ரபிரயாகிற்கு விரைந்து சென்றனர். இருப்பினும், அவர்கள் ருத்ரபிரயாக் செல்வதற்குள் ஆட்கொல்லி சிறுத்தை சிறுவனின் முழு உடலையும் தின்று விட்டது என்ற செய்தியை பட்வாரி கூறக் கேட்டு, அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறுவனின் உடல் இருந்திருந்தால் அதை வைத்து அவர்கள் ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடியிருக்க முடியும். இப்பொழுது அதற்கு வாய்ப்பில்லை.

ருத்ரபிரயாகிலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் நள்ளிரவில் ஆட்கொல்லி சிறுத்தை சிறுவனை அடித்துக் கொன்றிருக்கிறது. கொன்ற பிறகு, எந்த விதத் தொந்தரவும் இல்லாமல் அச்சிறுவனின் உடலைத் தின்றிருக்கிறது சிறுத்தை. எனவே அச்சிறுத்தை அலக்நந்தா நதியைக் கடந்து வலது கரைக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால், நதியின் வலது மற்றும் இடது கரைகளை இணைக்கும் இரண்டு தொங்கு பாலங்களும் மூடப்பட்டன.

ஆட்கொல்லி சிறுத்தையின் நடமாட்டம் உள்ள அந்தப் பெரிய பகுதியிலிருந்து உடனடித் தகவல்கள் கிடைக்கும்படி நல்ல ஓர் உளவுத் துறையை இபாட்சன் ஏற்பாடு செய்திருந்தார். அப்பகுதியிலிருந்து ஒரு நாயோ, ஆடோ, மாடோ அல்லது ஒரு மனிதனோ ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டாலோ அல்லது ஆட்கொல்லி சிறுத்தை யாருடைய வீட்டின் கதவையாவது உடைத்துக்கொண்டு உள்ளே புக நினைத்தாலோ, அந்தத் தகவல்கள் கார்பெட்டுக்கும், இபாட்சனுக்கும் உடனே கிடைத்துவிடும். இதனால் கார்பெட் மற்றும் இபாட்சனால் ஆட்கொல்லி சிறுத்தையின் நடமாட்டம் குறித்து நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயம், நூற்றுக் கணக்கில் வதந்தியான செய்திகளும் அவர்களுக்கு வந்தன. இதனால் அவர்கள் பல மைல்கள் தூரம் நடக்க வேண்டியிருந்தது. ஆனால் இருவரும் இதை எதிர்பார்த்தார்கள். ஆட்கொல்லி சிறுத்தை நடமாடும் பகுதியில், ஒவ்வொருவரும் தங்களது நிழலையே சந்தேகித்தனர். இரவில் கேட்கும் ஒவ்வொரு சத்தமும் ஆட்கொல்லி சிறுத்தையால் ஏற்பட்டது என்று சந்தேகித்தனர்.

அது போன்ற ஒரு வதந்திதான், பின்வரும் சம்பவம்:

ருத்ரபிரயாகிலிருந்து சுமார் 7 மைல் தொலைவில், அலக்நந்தா நதிக்கு வடகரையில் குந்தா என்ற ஒரு கிராமம் இருந்தது. அக்கிராமத்தில் கல்து என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு நாள் மாலை தன் கிராமத்திலிருந்து கிளம்பி ஒரு மைல் தொலைவில் உள்ள தன் மாட்டுக் கொட்டகையில் தங்குவதற்காகச் சென்றான். மறுநாள் காலை, கல்துவைத் தேடி மாட்டுக் கொட்டகைக்கு அவனது மகன் சென்றான். அங்கு கல்து காணவில்லை. அவன் பயன்படுத்திய போர்வையின் பாதி கொட்டகையின் கதவிற்கு உள்ளேயும், பாதி கதவிற்கு வெளியேயும் கிடந்தது. அருகில், தரையில் கல்து இழுத்துச் செல்லப்பட்ட தடயம் இருந்தது. அந்தத் தடயத்திற்குப் பக்கத்தில் ஆட்கொல்லி சிறுத்தையின் கால் சுவடுகளும் இருந்தன. இவற்றைப் பார்த்து கல்துவின் மகன் கிராமத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்தான்.

கிராமத்திலிருந்து சுமார் 60 பேர் கல்துவின் சடலத்தைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்பினர். 4 நபர்கள் இந்த விஷயத்தை இபாட்சனிடமும், கார்பெட்டிடமும் தெரிவிப்பதற்காக ருத்ரபிரயாக் நோக்கி வந்தனர். அப்பொழுது இபாட்சனும், கார்பெட்டும் அலக்நந்தா நதியின் இடது கரையில் உள்ள மலைப் பகுதிகளில் ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு அவர்களைத் தேடி வந்த 4 பேர், அவர்களிடம் தகவலைத் தெரிவித்தனர். அலக்நந்தா நதியின் இடது கரையில் ஆட்கொல்லி சிறுத்தை இருப்பதாக கார்பெட் உறுதியாக நம்பினார். அதனால் கல்து ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டிருப்பான் என்ற தகவலை அவர் வதந்தியாகத்தான் பார்த்தார். எனவே இபாட்சன் தங்களைப் பார்க்க வந்த நான்கு பேருடனும் ஒரு பட்வாரியைக் குந்தாவிற்கு அனுப்பி, தனிப்பட்ட முறையில் கல்துவை நன்கு தேடிக் கண்டுபிடித்து அங்கு நடக்கும் தகவல்களைத் தனக்குத் தெரிவிக்குமாறு பணித்தார்.

மறுநாள் மாலை, பட்வாரியிடம் இருந்து ஓர் அறிக்கையும், அதனுடன் ஒரு வரைபடமும் வந்தது. அது மாட்டுக் கொட்டகைக்கு அருகில் தரையில் கிடைத்த ஆட்கொல்லி விலங்கின் கால் சுவட்டின் வரைபடம். அவ்வறிக்கையில், இரண்டு நாட்களாக இருநூறு நபர்களைக் கொண்டு தேடியும் கல்துவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் பணி தொடர்வதாக அந்த அறிக்கை தெரிவித்தது. வரைபடத்தில் ஆறு வட்டங்கள் இருந்தன. நடுவில் இருந்த வட்டம் ஒரு தட்டின் அளவிற்கு இருந்தது. அதைச் சுற்றிலும் இருந்த மற்ற வட்டங்கள் சீரான இடைவெளிகளில் இருந்தன. ஒவ்வொரு வட்டமும் ஒரு தேநீர்க் கோப்பையின் அளவை ஒத்திருந்தன. அனைத்து வட்டங்களும் ஒரு வட்டவரைவி (compass) கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. ஐந்து நாட்கள் கழித்து, இபாட்சனும் கார்பெட்டும் தொங்கு பாலத்தின் கோபுரத்தில் ஏறி ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாட ஏற்பாடுகள் செய்வதற்காகப் பங்களாவில் இருந்து கிளம்பிய போது, ஒரு பெரும் கூட்டம் ஊர்வலமாக அவர்களை நோக்கி வந்தது. அதில் ஒருவன் கோபத்தோடு, தான் ஒரு குற்றமும் செய்யவில்லை, தன்னைக் கைது செய்து ருத்ரபிரயாகிற்குக் கூட்டி வந்தது தவறு என்று ஆட்சேபித்தபடி வந்தான். அவன் வேறு யாரும் இல்லை, கல்துதான்!

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *