Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

Jim Corbett

அலக்நந்தா நதியின் இடது கரையில் ஆட்கொல்லி சிறுத்தை இருப்பதாக கார்பெட் உறுதியாக நம்பியதால், கல்து, ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டிருப்பான் என்ற தகவல் வதந்தியாகத்தான் இருக்குமென்று அவர் நினைத்தார். அது நிஜமாகி விட்டது. இதோ கல்து கண்ணெதிரே வந்துவிட்டான். அவன் தன்னைக் கைது செய்து கூடி வந்தது தவறு என்று ஆட்சேபிக்க அங்கிருந்த அனைவரும் அவனைச் சமாதானப்படுத்தினார்கள். பின்னர், நடந்தது என்னவென்று அவன் விளக்கினான்.

ஆட்கொல்லி விலங்கு அவனை அடித்துத் தூக்கிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்பட்ட அன்றைய இரவு, கல்து வீட்டை விட்டுக் கிளம்பினான். அப்போது, அவனுடைய மகன் அவனிடம் வந்து இரண்டு எருதுகளை 100 ரூபாய்க்கு வாங்கியதாகத் தெரிவித்தான். கல்துவைப் பொறுத்தவரை அந்த எருதுகள் 70 ரூபாய்க்கு மேல் தேறாது. தன் மகன் இப்படிப் பணத்தை விரயம் செய்துவிட்டானே என்று கோபத்துடன் மாட்டுக் கொட்டகையில் படுத்திருந்த கல்து, மறுநாள் காலை விடிந்ததுமே மாட்டுக் கொட்டகையை விட்டுக் கிளம்பி, பத்து மைல் தொலைவில் உள்ள தனது திருமணமான மகளின் வீட்டிற்குச் சென்று விட்டான். ஐந்து நாட்கள் கழித்து கல்து அவனுடைய சொந்தக் கிராமத்திற்கு வந்தபோது, பத்வாரி அவனைக் கைது செய்தார். தான் என்ன குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டோம்? என்று தெரிந்து கொள்ள, கல்து சண்டையிட்டபடியே வந்தான். அப்பொழுதுதான் மற்றவர்கள் அவனுக்கு நிலைமையைப் புரிய வைத்தார்கள். நடந்த விவகாரத்தில் உள்ள வேடிக்கையைப் புரிந்து கொண்ட கல்து, கூடியிருந்தவர்களுடன் சேர்ந்து தானும் சிரித்தான். பத்வாரியும், தனது இருநூறு நண்பர்களும் தன்னுடைய உடலை 5 நாட்களாகத் தேடுவதைக் கேள்விப்பட்ட கல்துவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இபாட்சனுக்கு ருத்ரபிரயாக் தொங்கு பாலத்தின் மீது அமர்வதில் உடன்பாடு இல்லை. ஆசாரியும், மரமும் உடனே கிடைக்காததால், தொங்கு பாலத்தின் வளைவில் ஒரு நடைமேடையைக் கட்டச் செய்தார் இபாட்சன். அந்த நடைமேடையில் இருந்தபடியே அடுத்த ஐந்து நாட்களுக்கு இபாட்சனும், கார்பெட்டும் ஆட்கொல்லி சிறுத்தைக்காகக் காத்திருந்தனர். அதன் பிறகு, இபாட்சன் ருத்ரபிரயாகை விட்டுக் கிளம்பினார்.

இபாட்சன் சென்ற பிறகு, ஆட்கொல்லி சிறுத்தை ஒரு நாய், நான்கு ஆடுகள் மற்றும் இரண்டு மாடுகளைக் கொன்றது. நாயையும், ஆடுகளையும், அவை கொல்லப்பட்ட அன்றைய இரவே, ஆட்கொல்லி சிறுத்தை அவற்றை முழுவதுமாகத் தின்றுவிட்டது. ஆனால் மாட்டை ஒரே இரவில் முழுமையாக உண்ண அச்சிறுத்தையால் முடியவில்லை. எனவே மாட்டின் சடலத்தைத் தூண்டிலாக வைத்து ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாட இரண்டு இரவுகள் காத்திருந்தார் கார்பெட். அப்படி அவர் காத்திருந்த இரண்டாம் நாள் இரவு, ஆட்கொல்லி சிறுத்தை மாட்டின் சடலத்தை நோக்கி வந்தது. கார்பெட் தன் துப்பாக்கியைத் தயாராக வைத்தபடியே டார்ச் லைட் பொத்தானை அழுத்தினார். அப்பொழுது அருகிலிருந்த ஒரு வீட்டில் இருந்த பெண்மணி வீட்டின் கதவைச் சத்தமாகத் திறந்தார். திடீரென வந்த அந்தச் சத்தத்தைக் கேட்ட ஆட்கொல்லி சிறுத்தை பயத்தினால் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டது. கார்பெட்டுக்கு ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்தும் மேலும் ஒரு நல்ல சந்தர்ப்பம் கைநழுவிப் போயிற்று.

இந்த இடைப்பட்ட நாட்களில் ஆட்கொல்லி சிறுத்தையால் எந்தவொரு மனித உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் ஆட்கொல்லி சிறுத்தை ஒரு பெண்ணையும் அவளது கைக்குழந்தையையும் கடுமையாகக் காயப்படுத்தியது. அப்பெண் கைக்குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஆட்கொல்லி சிறுத்தை அவளது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு அறைக்குள் புகுந்து அவளை வெளியே இழுத்து வர முயன்றது. அவள் மனவலிமை கொண்ட திடமான பெண்ணாக இருந்ததால் சிறுத்தையின் தாக்குதலுக்கு அவள் பயப்படவில்லை, மயங்கி விழவில்லை. தைரியமாகப் போராடினாள். சிறுத்தை அவளைக் கொஞ்ச தூரம் தரையில் இழுத்துச் சென்று, பிறகு, அவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டது. உடனே அப்பெண் வேகமாகச் சென்று அறையின் கதவைத் தாழிட்டாள். சிறுத்தையிடமிருந்து உயிர் தப்பிய அப்பெண்ணின் கைகளிலும், மார்பகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. குழந்தையின் தலையிலும் காயம் ஏற்பட்டிருந்தது. தாக்கப்பட்ட அப்பெண்ணின் வீட்டின் அறையில் கார்பெட் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆட்கொல்லி சிறுத்தையின் வருகைக்காகக் காத்திருந்தார். ஆனால் ஆட்கொல்லி சிறுத்தை அங்கு வரவில்லை.

மார்ச் மாதக் கடைசியில் கேதார்நாத்திற்கு யாத்திரீகர்கள் செல்லும் பாதையில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டு கார்பெட் திரும்பினார். வழியில், மந்தாகினி ஆறு செல்லும் இடத்திற்கு அருகில் பத்திலிருந்து பன்னிரண்டு அடி உயரமான நீர்வீழ்ச்சி ஒன்று இருந்தது. அந்த நீர்வீழ்ச்சிக்கு மேலே ஒரு பாறையில் சில நபர்கள் அமர்ந்தபடியே, ஒரு மூங்கில் கம்பின் முனையில் ஒரு முக்கோண வடிவிலான ஒரு வலையைக் கட்டி அதை வைத்துக் கொண்டு மீன் பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர். நீர்வீழ்ச்சியில் கொட்டிய தண்ணீரின் சத்தம் அதிகமாக இருந்ததால் அவர்கள் பேசிக்கொண்டது கார்பெட்டின் காதுகளில் விழவில்லை. கார்பெட் சாலையை விட்டு விலகி நீர்வீழ்ச்சியின் அருகே சென்று, ஒரு பாறையின் மீது அமர்ந்து, புகை பிடித்தவாறே அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்தபடி இருந்தார். அவர் அன்று வெகு தூரம் நடந்து வந்திருந்ததால், அவ்விடத்தில் அவருக்குக் களைப்பு தீர நல்ல ஓய்வு கிடைத்தது.

அங்கிருந்தவர்களில் ஒருவன் பாறையை விட்டு எழுந்தான். நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் இடத்தில் உற்சாகமாக தன் கைவிரலைச் சுட்டிக் காட்டினான். அவனுடைய இரு கூட்டாளிகளும் நீண்ட மூங்கில் கம்பின் முனையில் கோர்க்கப்பட்ட வலையைத் தண்ணீர் விழும் இடத்தில் நீட்டினார்கள். அப்பொழுது சுமார் 2 கிலோவிலிருந்து 20 கிலோ வரை எடையுள்ள மஹ்சீர் மீன்கள் கூட்டமாக நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்துக் கீழே விழுந்தன. அப்பொழுது சுமார் 5 கிலோ எடையுள்ள ஒரு மஹ்சீர் மீன் நீர்வீழ்ச்சியிலிருந்து தள்ளி வந்து கீழே விழும்பொழுது, அதை மூங்கில் கம்பில் கட்டப்பட்ட வலையில் அப்படியே லாகவமாகப் பிடித்தார்கள். மீன் பிடிபட்ட பிறகு இருவரும் மூங்கில் கம்பை மேலே தூக்கி, வலையிலிருந்து மீனை எடுத்து தங்களுடைய கூடையில் போட்ட பிறகு, மறுபடியும் மூங்கில் தூண்டிலை நீர்வீழ்ச்சியில் கீழே இறக்கினார்கள். அவர்கள் மீன் பிடிப்பதைச் சுமார் ஒரு மணி நேரத்திற்கு கார்பெட் மிகவும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் சுமார் ஐந்து கிலோ எடையுள்ள நான்கு மஹ்சீர் மீன்களைப் பிடித்திருந்தனர்.

சென்றமுறை கார்பெட் ருத்ரபிரயாக் வந்திருந்த பொழுது, ஆய்வு பங்களாவின் காவலாளி, இளவேனிற்காலத்தில் (மலையில் பனி உருகி அதன் நீர் வருவதற்கு முன்னர்), அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகளில் நன்றாக மீன் பிடிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். எனவே கார்பெட் இம்முறை ருத்ரபிரயாக் வரும் பொழுது மீன் பிடிப்பதற்குத் தேவையான உபகரணங்களான – பதினான்கடி நீளம் கொண்ட மீன்பிடி கம்பி, 250 கஜ நீளமுள்ள தூண்டில் கயிறு, வீட்டில் தயாரிக்கப்பட்ட வெவ்வேறு அளவிலான, ஒன்றிலிருந்து இரண்டு அங்குல அகலமுடைய ஸ்பூன்களை (spoon – மீன் பிடிக்கப் பயன்படுத்தும் ஒருவகை தூண்டில்) கொண்டு வந்திருந்தார்.

மறுநாள், ஆட்கொல்லி சிறுத்தையைப் பற்றி எந்தத் தகவலும் வராததால், கார்பெட் தன் மீன் பிடி உபகரணங்களை எடுத்துக் கொண்டு நீர்வீழ்ச்சிக்கு மீன் பிடிக்கச் சென்றுவிட்டார்.

ஆனால் முந்தைய தினம் போல், இன்று மீன்கள் நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கவில்லை. ஆற்றுக்கு அந்தப் பக்கமாக, சிலர் ஒரு குழுவாகச் சிறிய அளவில் நெருப்பை மூட்டி அதனைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்கள் ஹுக்காவைப் பிடித்தபடி இருந்தார்கள். ஒருவர் கையிலிருந்து மற்றவர் கையில் ஹூக்கா மாறியபடியே இருந்தது. அவர்கள் அனைவரும் கார்பெட் என்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

நீர்வீழ்ச்சிக்கு கீழ் சுமார் 30 லிருந்து 40 கஜ அகலத்திற்கு ஒரு குட்டை இருந்தது. குட்டையைச் சுற்றிலும் பாறைகள் இருந்தன. கார்பெட் நின்று கொண்டிருந்த இடத்தையும் தாண்டி மேலே சுமார் 200 கஜ தூரம் வரைக்கும் பாறைகள் நீண்டிருந்தன. அந்தக் குட்டையில் இருந்த நீர் மிகவும் தெள்ளத் தெளிவாக இருந்தது.

குட்டையின் தலைப்பக்கத்திலிருந்து கிளம்பிய பாறை சுமார் 12 அடி உயரத்திற்கு நீண்டிருந்தது. பின்னர் 20 கஜ தூரத்திற்கு வளைந்து, அதன் பின்னர் அங்கிருந்தபடியே சாய்வாக மேலும் ஒரு 100 அடி உயரத்திற்கு மேலெழுந்திருந்தது. அங்கிருந்தபடியே கீழே தண்ணீரின் மட்டத்திற்கு இறங்கிச் செல்வதென்பது கடினம்.

மேலே நீர் விழும் இடத்தில் கரையோரத்தில் இருந்தபடியே ஒரு மீனைப் பிடித்தாலும் அது கீழே சென்றுவிடும். அந்த மீனை மேலே நீண்ட தூரத்திற்கு இழுத்து வருவது என்பது இயலாது என்பதோடு அல்லாமல் அது லாபகரமாகவும் இருக்காது. காரணம் வழியில் நிறைய மரங்களும், புதர்களும் மண்டியிருந்தன.

குட்டையின் வால் பகுதியில் மேலிருந்து கொட்டிய தண்ணீரானது பெரு வெள்ளமாக விழுந்து அலக்நந்தா நதியுடன் சங்கமித்தது. இம்மாதிரி சூழ்நிலையில் மீன் பிடிப்பது என்பது சவாலான காரியம் மட்டுமல்ல, அபாயமான காரியமும் கூட. ஆனால் மீன் தூண்டிலில் சிக்கும் வரை சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கார்பெட் நின்று கொண்டிருந்த பகுதிக்குக் கீழே குட்டையில் நிறையக் கூழாங்கற்கள் தென்பட்டன. அந்த இடத்தில் குட்டை ஆழமாகவும் இருந்தது. அங்கு நான்கடியிலிருந்து ஆறு அடி அளவிற்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருந்த நீருக்கு அடியில் கற்களும், கூழாங்கற்களும் தெளிவாகத் தெரிந்தன. அந்த நீரில் ஒன்றரை கிலோவிலிருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள நிறைய மீன்கள் மெதுவாக எதிர் நீச்சலடித்துச் சென்றன.

12 அடி உயரத்தில் பாறையில் இருந்தபடியே கீழே தண்ணீரில் செல்லும் மீன்களைக் கவனித்து வந்தார் கார்பெட். தன் கையில் இரண்டு அங்குல நீளமுள்ள ஸ்பூனை மூன்று முட்களைக் கொண்ட தூண்டில் கொக்கியுடன் இணைத்து தன் கையில் வைத்திருந்தார். அப்பொழுது கீழே தண்ணீருக்கு அடியிலிருந்து சடாரென்று சிறு மீன் குஞ்சுகள் பளிச்சென்று வெளிப்பட்டு அப்படியே கூழாங்கற்களின் மேலே சென்றன. மீன் குஞ்சுகளை விரட்டியபடியே மூன்று பெரிய மஹ்சீர் மீன்கள் தொடர்ந்து வந்தன. இதுதான் சமயம் என்று கணித்த கார்பெட் தன் கையில் வைத்திருந்த தூண்டிலை வீசினார். தன் ஆர்வ மிகுதியால் தூண்டிலைச் சற்றுத் தொலைவில் வீசிவிட்டார். தூண்டிலில் கட்டப்பட்டிருந்த ஸ்பூன் குட்டையின் எதிர்புறத்தில் தண்ணீருக்கு இரண்டடி மேலே உள்ள ஒரு பாறையின் மீது மோதியது. அதே சமயத்தில் மீன் குஞ்சுகள் பாறையை நோக்கி வந்தன. தூண்டிலில் மாட்டப்பட்ட ஸ்பூன் தண்ணீரில் விழுந்த சமயத்தில், அதை அங்கு வந்த முதல் மஹ்சீர் மீன் கவ்வியது.

உயரமான ஓர் இடத்திலிருந்து மீன் மாட்டிய ஒரு நீண்ட தூண்டிலை இழுப்பது என்பது தூண்டிலுக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கும். ஆனால் கார்பெட்டின் தூண்டில் அழுத்தத்திற்கு நன்கு ஈடு கொடுத்தது. தூண்டில் கொக்கியின் மூன்று உறுதியான முட்களும் மஹ்சீர் மீனின் வாயில் நன்றாகத் தைத்து விட்டது. அடுத்த சில நொடிகளுக்கு மீனுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அது செங்குத்தாகத் தன் வெள்ளை நிற வயிற்றை கார்பெட்டிடம் காட்டியவாறு இருந்தது. பின்னர் மீன் தன் தலையை இப்படியும், அப்படியுமாக அசைத்தது. தூண்டிலில் இருந்த ஸ்பூன் தலையில் அடித்ததால், அதிர்வுற்ற மீன் படாரென்று தெறித்துக் குதித்து, தண்ணீரைக் கிழித்துக் கொண்டே கீழ் நோக்கிச் சென்றது. உடனே, கூழாங்கற்களின் மீதிருந்த சிறிய மீன்கள் அனைத்தும் பல திசைகளிலும் சிதறியபடி ஓடின.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *