Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #20

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #20

ஜிம் கார்பெட்

கார்பெட் வீசிய தூண்டிலை இழுத்துக் கொண்டு ஒரு நூறு கஜ தூரத்திற்குத் தண்ணீரில் ஓடியது மஹசீர் மீன். பின் சற்று நின்று பார்த்துவிட்டு, மறுபடியும் ஓர் ஐம்பது கஜ தூரத்திற்கு ஓடியது. தூண்டில் கயிறு நீளமாக இருந்ததால், மீன் அதிக தூரம் சென்றும் பிரச்னையில்லை. ஆனால் மீன் ஒரு வளைவில் சென்றது. அந்த வளைவு, குளத்தின் எல்லையில் ஆபத்தான இடத்தில் இருந்தது. கையில் வைத்திருந்த தூண்டிலின் பிடியைத் தளர்த்தியும், இழுத்தும் பிடித்து மீனை தன் பக்கத்திற்குத் திருப்பினார் கார்பெட். தன் பக்கமாகத் திரும்பிய மீனை கார்பெட் மெதுவாக இழுத்தார். வளைவைத் தாண்டிய மீன் ஒரு நூறு கஜ தூரம் கார்பெட்டுக்கு நேர் எதிரே வந்தது. அச்சமயத்தில், நீண்டிருந்த ஒரு பாறையில் உருவாகியிருந்த காயல் (backwater) அருகே மீன் சென்றது. கார்பெட் மீனைக் காயலில் போகவிடாமல் போராடினார். மீனும் எதிர்த்துப் போராடியது. முடிவில், ஓர் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீன் காயலினுள் சென்றது.

உயரத்தில் நின்று கொண்டிருந்த கார்பெட் அவ்விடத்தின் எல்லை வரை சென்று விட்டார். இனி அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற சூழ்நிலை. எனவே தூண்டிலை அறுத்து மீனை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் கார்பெட். அப்பொழுது அவருக்கு அருகிலிருந்த பாறையின் மீது ஒரு நிழல் விழுந்தது. அந்த நிழலுக்குச் சொந்தமான நபர், அப்படியே பாறையின் அடியில் உள்ள காயலைப் பார்த்தவாறே, ‘அது ஒரு பெரிய மீன்’ என்றார். அடுத்தாற்போல் ‘அந்த மீனை என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று கேட்டார். கார்பெட் அவரிடம், காயலிலிருந்து பாறை வரை மீனை இழுக்க முடியாது; எனவே, தூண்டிலை அறுத்து மீனை விடுவிக்கப் போவதாகத் தெரிவித்தார். ‘இருங்க சாஹிப், நான் என் சகோதரனை அழைத்து வருகிறேன்’ என்றார் அவர். குறிப்பிட்டவாறே, அழைத்தும் வந்தார். இளைஞனைப் போல் தோற்றமளித்த அச்சகோதரன் நெட்டையாகவும், ஒல்லியாகவும் இருந்தான். அவன் அழைத்து வரப்படுவதற்கு முன்னர் மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவன் கை கால்கள் அனைத்தும் அழுக்காக இருந்தன. அந்தச் சூழ்நிலையில், அவன் மீனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினால், வழுவழுப்பான பாறையில் வழுக்கி விழுந்து விடுவான். எனவே அவனை ஆற்றுக்குச் சென்று கை கால்களை அலம்பிவிட்டு வரும்படி கூறினார் கார்பெட். அவன் சென்று வருவதற்குள், சகோதரர்களில் மூத்தவனிடம் தூண்டிலில் சிக்கிக்கொண்ட மீனை எப்படி மேலே கொண்டு வரலாம் என்று கலந்தாலோசித்தார்.

அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில், பாறையில் சில அங்குல அளவிற்கு விரிசல் ஒன்று காணப்பட்டது. அவ்விரிசல் அப்படியே மேலிருந்து கீழ் வரை, தண்ணீர் இருக்கும் இடத்திற்குச் சற்று மேலே, பாறையில் ஒடுங்கியிருந்த ஒரு நீள் விளிம்பு வரைச் சென்றது. கார்பெட்டும் அந்தப் பெரிய சகோதரனும் கலந்தாலோசித்து ஒரு திட்டத்தை வகுத்தனர்.

திட்டம் என்னவென்றால், இளையவன் கீழே இறங்கி நீர் விளிம்பில் நின்றபடியே தண்ணீரிலிருந்து மீனை வெளியே எடுப்பான். அவன் மீனை எடுக்கும் பொழுது, மூத்த சகோதரன் பாறையின் விரிசல் வழியாக இளையவனைத் தாங்கிப் பிடிப்பான். பாறையின் மேலே இருந்தபடியே கார்பெட் மூத்தவனின் கரத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னர், கார்பெட் இருவரிடமும், ‘மீனைப் பிடிக்கத் தெரியுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள் இருவரும் சிரித்தபடியே, தாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஆற்றில் மீன் பிடித்து நீச்சல் அடித்தே திரும்பி வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இத்திட்டத்தில் சிக்கல் என்னவெனில், கார்பெட் மூத்தவனுக்குக் கை கொடுத்துத் தாங்கிப் பிடிக்கும் அதே சமயத்தில் தூண்டிலையும் பிடிக்க வேண்டும். அது முடியாது என்ற காரணத்தால், கார்பெட் தூண்டிலைக் கீழே வைத்துவிட்டார். சகோதரர்கள் இருவரும் தங்கள் இடத்திற்குச் சென்ற பிறகு, கார்பெட் பாறையின் மீது குப்புறப் படுத்தவாறே, கீழே பாறையின் விரிசல் வழியாக நின்ற மூத்த சகோதரனது கரத்தைத் தன் கரத்தால் பற்றிக்கொண்டார். தூண்டிலுக்குப் பதிலாக, தூண்டில் கயிற்றைத் தனது இடது கரத்தாலும், பற்களாலும் மாறி மாறி மெதுவாக இழுத்துச் சிறிது சிறிதாகப் பாறை அருகே மீனைக் கொண்டு வந்தார். மீன் பாறை அருகே வந்ததும், அதை இளைய சகோதரன் பிரமாதமாகக் கையாண்டான். மீன், பாறையைத் தொடுவதற்கு முன்னர், இளையவன் தன் கை கட்டை விரலை மீனின் ஒரு பக்கச் செவுளுக்குள் சொருகி, ஏனைய விரல்களை மீனின் மற்றொரு செவுளுக்குள் சொருகி மீனின் குரல்வளையை லாகவமாக இறுக்கிப் பிடித்தான். தன் குரல்வளை பிடிபடுவதற்கு முன் அமைதியாக இருந்த மீன், குரல்வளை பிடிபட்ட பிறகு, திமிற ஆரம்பித்துவிட்டது. மீன் திமிறிய அந்தச் சில நொடிகளில் மூவரும் தலை குப்புறத் தண்ணீரில் விழும் சூழ்நிலை ஏற்பட்டது.

இரு சகோதரர்களும் காலணி அணியாமல் வெற்றுக் கால்களுடன் இருந்தனர். இளையவன் மீனைக் கையில் பிடித்தபிறகு கார்பெட்டுக்குத் தூண்டிலின் பயன்பாடு தேவையற்றுப் போனது. எனவே அவர் தன் இரு கரங்களாலும் இருவரும் பாறையின் மேலே ஏற உதவினார். அவர்களும் தங்களது கால் கட்டை விரல்களைப் பயன்படுத்தி பாறையின் மேலே ஏறி வந்தனர்.

மீன் பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டது. கார்பெட் அவர்களைப் பார்த்து ‘நீங்கள் மீன் சாப்பிடுவீர்களா?’ என்று கேட்டார். அவர்கள் ஆர்வமாக ‘நாங்கள் மீன் சாப்பிடுவோம்’ என்று தெரிவித்தனர். பிடிபட்ட 30 பவுண்டுக்கும் அதிகமான எடை கொண்ட மீனை அவர்களுக்குக் கொடுத்துவிடுவதாக கார்பெட் தெரிவித்தார். ஆனால் அதற்குக் கைமாறாக, தன்னுடைய வேலையாட்களுக்கு மேலும் ஒரு மீனைப் பிடித்துத் தர உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு இருவரும் தாராளமாக ஒப்புக் கொண்டனர்.

தூண்டில் கொக்கியின் முட்கள் மீனின் உடலை நன்கு தைத்திருந்தது. கார்பெட் கத்தியால் மீனின் உடலை அறுத்துக் கொக்கியின் முட்களை வெளியே எடுத்தார். இதனைச் சகோதரர்கள் இருவரும் ஆர்வமாகப் பார்த்தனர். கொக்கி வெளியே எடுக்கப்பட்ட பிறகு, ‘தாங்கள் அந்தக் கொக்கியைப் பார்க்கலாமா?’ என்று சகோதரர்கள் கேட்டனர். ஒரு கொக்கியில் மூன்று முட்கள். இவ்வாறான ஒரு கொக்கியை அவர்கள் அது நாள் வரை அவர்களது கிராமத்தில் பார்த்ததில்லை. பித்தளையால் ஆன அந்தக் கொக்கியின் அடிப்பாகம் வளைந்து இருப்பதால், கொக்கி தண்ணீருக்குள் செல்கிறது என்று புரிந்து கொண்ட அவர்களுக்கு, அந்தக் கொக்கியில் எந்த இரையைத் தூண்டிலாகப் பயன்படுத்துவது என்ற சந்தேகம் எழுந்தது. மீன் ஏன் ஒரு பித்தளையைச் சாப்பிட வேண்டும்? தூண்டில் பித்தளையால்தான் செய்யப்பட்டிருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கின்றதா? போன்ற சந்தேகங்கள் அவர்களுக்குத் தோன்றின. கார்பெட் ஸ்பூனை மூன்று முட்கள் கொண்ட கொக்கியுடன் இணைத்துக் கட்டித் தூண்டிலைத் தயார் செய்வதை ஆச்சர்யமாகப் பார்த்தபடியே தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். கார்பெட் இருவரையும் அமரச் செய்து விட்டு, இரண்டாவது மீனைப் பிடிப்பதற்காகத் தூண்டிலை வீசினார்.

ஆற்று நீர் மேலிருந்து கீழே விழும் மடுக்களில்தான் பெரிய மீன்கள் கிடைக்கும். ஆனால் இம்மாதிரி நுரை பொங்கும் மடுக்களில், மஹசீர் மீன்களைத் தவிர கூன்ச் என்று அழைக்கப்படும் ராட்சசப் பிசாசு கேட்ஃபிஷ் (Cat fish) வகையைச் சேர்ந்த மீன்களும் காணப்படும். கூன்ச் மீன்கள் சுலபமாகத் தூண்டிலில் மாட்டிக் கொள்ளும். ஆனால் மலைப் பகுதி ஆறுகளில் மீன் பிடிக்கும் பொழுது 90% தூண்டில் உடைந்து போவதற்குக் காரணம் இந்த கூன்ச் வகை மீன்கள் தான். தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் கூன்ச் மீன்கள் தண்ணீருக்குள் அடியில் சென்று மறைந்து கொள்ளும். அதன் பின்னர், அதை வெளியே கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான செயலாகும்.

முதலில் மீன் பிடித்த இடத்தைத் தவிர வேறு எந்த இடமும் கார்பெட்டுக்கு தோதாகத் தெரியவில்லை. எனவே முதல் மீனைப் பிடித்த இடத்திலேயே இரண்டாவது மீனையும் பிடிக்க, கையில் தூண்டிலுடன் தயாரானார். முதல் மீனைப் பிடிக்கும் பொழுது ஏற்பட்ட சலசலப்பினால் அங்குத் தண்ணீரிலிருந்த மீன்கள் சிதறி ஓடிவிட்டன. சற்று நேரத்திற்கெல்லாம் மீன்கள் திரும்பி வந்தன. சகோதரர்கள் இருவரும் மீன்கள் திரும்பி வருவதைப் பார்த்து கூக்குரல் எழுப்பினர். அவர்கள் உணர்ச்சி வசத்தோடு கார்பெட்டிடம் தங்களது கைவிரல்களைக் காட்டி, கீழ் நோக்கி ஓடும் ஆற்றில் கூழாங்கற்கள் நிறைந்த பகுதி முடிந்து ஆழமான பகுதி தொடங்கும் இடத்தில் ஒரு பெரிய மீன் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.

கார்பெட் தூண்டிலை வீசுவதற்கு முன்னர் அந்தப் பெரிய மீன் தண்ணீருக்குள் ஆழத்திற்குச் சென்று விட்டது. ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் அம்மீன் மேலே வந்தது. மீன் ஆற்றின் ஆழமில்லாத பகுதிக்கு வந்த போது, கார்பெட் தன் தூண்டிலை வீசினார். தூண்டில் கயிறு ஈரமாகி இருந்ததால் அது குறைந்த தூரத்தில் போய் விழுந்தது. கார்பெட் இரண்டாம் முறை தூண்டிலை வீசினார். இம்முறை தூண்டில் எங்கு விழ வேண்டுமோ, சரியாக அந்த இடத்தில் போய்க் கச்சிதமாக விழுந்தது. தூண்டில் முள்ளுடன் மாட்டப்பட்டிருந்த ஸ்பூன் மெதுவாகத் தண்ணீரில் மூழ்கியது. கார்பெட், தூண்டில் கயிற்றைச் சுண்டினார். தண்ணீருக்குள் ஸ்பூன் சுற்றத் தொடங்கியது. பின்னர் தூண்டில் கயிற்றை மெதுவாக வெட்டி வெட்டி இழுத்தார். மஹசீர் மீன் தூண்டிலை நோக்கி வந்தது. அடுத்த வினாடி, தூண்டில் கொக்கியின் முட்கள் அந்த மீனைத் தைத்தன. மீன் தண்ணீரை விட்டு வெளியே தாவி, தண்ணீரைச் சிதறி அடித்தபடியே மறுபடியும் தண்ணீருக்குள் குதித்தது. பின்னர், மீன் தலை தெறிக்க ஆற்றில் கீழ்நோக்கிச் சென்றது. இந்த நிகழ்வைக் கரையில் இருந்த இருவரும், அங்கிருந்த மற்றவர்களும் கிளர்ச்சியுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் பார்த்தனர்.

தூண்டில் சுருளில் இருந்த கயிறு வேகமாக வெளியே வந்தது. இரு சகோதரர்களும் கார்பெட்டுக்கு இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றனர். மடுவின் எல்லை வரை மீனை விட்டுவிட வேண்டாம் என்று கார்பெட்டை கேட்டுக்கொண்டனர். அப்படிச் சொல்லுவது சுலபம், ஆனால் அதைச் செயல்படுத்துவது என்பது கடினம். தூண்டிலில் மாட்டிய மஹசீர் மீனை இழுத்து நிறுத்துவது என்பது கடினம். அப்படிச் செய்யும் பொழுது, ஒன்று தூண்டில் உடைந்து விடும் அல்லது தூண்டிலில் மாட்டப்பட்ட கொக்கி பெயர்ந்து போய்விடும். ஆனால் அன்று அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தது. தூண்டில் சுருளில் இருந்த கயிறு இன்னும் 50 கஜ தூரத்திற்குத்தான் வரும் என்ற தறுவாயில் மீன் சற்று நின்றது. மஹசீர் மீன் பயத்தில் இருந்தாலும், அது தன் போராட்டத்தை விடவில்லை. ஆனால் கார்பெட் லாகவமாக மீனை வளைவில் கொண்டு வந்தார். பின்னர் பாறையின் அடியில் இருந்த காயலில் மீனைக் கொண்டு வந்து சேர்த்தார். முதல் மீனைப் பிடிக்கும் பொழுது ஏற்பட்ட சிரமம் இரண்டாவது மீனைப் பிடிக்கும் பொழுது ஏற்படவில்லை. மீன் காயலில் வந்த பிறகு அடுத்தது ஒவ்வொருவரும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பரிச்சயம் இருந்தது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

2 thoughts on “ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #20”

  1. தொடரானது வெகு சுவாரஸ்யமாக உள்ளது & மனதை ரிலாக்ஸ் செய்வதாகவும் உள்ளது சார். தொடர்ந்து எழுதுங்கள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *