Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #22

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #22

ஜிம் கார்பெட்

சிறிய அளவுக்குத்தான் வெளிச்சம் இருந்தது. கார்பெட் ஜாக்கிரதையாக அந்த வெள்ளைப் பொருளை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தால் அது ஆட்டின் உயிரற்ற உடல் என்று தெரிந்தது. அவர்கள் வந்து கொண்டிருந்த குறுகிய பாதையில் அந்த உடல் கிடத்தப்பட்டிருந்தது. ஆடு தற்பொழுது கிடந்த நிலைக்கு மாறாக வேறு நிலையில் போடப்பட்டிருந்தால், மலையின் செங்குத்தான பகுதியில் அது உருண்டு விழுந்திருக்கும். ஆட்டின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கார்பெட் தன் கரத்தை ஆட்டின் மீது வைத்தார். ஆட்டின் உடல் துடிப்பது தெரிந்தது.

அந்தக் காட்சி, ‘என்னைத் தவிர, வேறு எந்தச் சிறுத்தையாலும் ஆட்டைக் கொன்று, அதை இவ்வாறு பாதையில் கிடத்தியிருக்க முடியாது’ என்று ஆட்கொல்லி சிறுத்தை சொல்வதுபோல் கார்பெட்டுக்குத் தோன்றியது. மேலும், ‘ஆட்டை வேண்டுமானால் எடுத்துக்கொள். ஆனால் இப்போது இருட்டி விட்டது. நீங்கள் வெகு தூரம் செல்ல வேண்டும். உங்களில் எத்தனைப் பேர் கிராமத்திற்கு உயிருடன் செல்கிறீர்கள் என்று பார்த்து விடுவோம்’ என்று ஆட்கொல்லி சிறுத்தை எச்சரிப்பதுபோலும் இருந்தது.

அன்று கார்பெட்டிடம் அதிர்ஷ்டவசமாகப் பயன்படுத்தப்படாத ஒரு முழுத் தீப்பெட்டி இருந்தது. அது மட்டும் அவர் கையில் அன்று இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் மூவரும் உயிருடன் கிராமத்தை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். கார்பெட் ஒரு தீக்குச்சியை எடுத்துப் பற்றவைத்தார். சுற்றும் முற்றும் பதற்றத்துடன் பார்த்துவிட்டு சில அடிகள் முன் எடுத்து வைத்தார். பிறகு, அடுத்த தீக்குச்சியைப் பற்ற வைத்து மூவரும் முன்னேறிச் சென்றார்கள்.

இப்படியாகப் போகும் பாதையில், பல சந்தர்ப்பங்களில், கரடு முரடான இடங்களில் அவர்கள் தடுமாறியபடியே சென்றனர். பிறகு, ஒரு வழியாக அவர்கள் கிராமத்திற்கு அருகில் வந்தடைந்தனர். அங்கிருந்து கிராமத்தில் உள்ளவர்களைப் கூப்பாடு போட்டு அழைத்தனர். இவர்களின் குரல்களைக் கேட்டதும் கிராமத்தினர், லாந்தர் விளக்குகளை ஏந்தியபடியும், பைன் மரத்தால் செய்யப்பட்ட தீவட்டியை ஏந்திக்கொண்டும் வந்தனர். மூவரும் தங்களுடன் கொல்லப்பட்ட ஆட்டைத் தூக்கி வரவில்லை. அவர்கள் அதைப் பார்த்த இடத்திலேயே அப்படியே விட்டுவிட்டு வந்திருந்தனர்.

மறுநாள் விடிந்தது. கார்பெட் முந்தைய தினம் திரும்பி வந்த அதே பாதையில் சென்றார். அங்கே அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆட்கொல்லி சிறுத்தை அவர்கள் மூவரையும் முந்தைய இரவு கிராமம் வரை பின்தொடர்ந்து வந்திருக்கிறது என்பதுதான் அது. இதை அதன் காலடிச் சுவடுகள் தெளிவாக அடையாளம் காட்டின. ஆனால், அந்த ஆட்கொல்லி சிறுத்தை தான் கொன்று வீசியெறிந்த ஆட்டைப் புசிக்கவில்லை. ஆட்டின் உடல் நேற்று எந்த இடத்தில் கிடத்தப்பட்டிருந்ததோ அதே இடத்தில் அப்படியே கிடந்தது.

இறந்து கிடந்த ஆட்டைப் பார்த்த கார்பெட், ஆய்வு பங்களாவிற்குத் திரும்பினார். இடையில் இருந்த கிராமத்தை அடைந்திருந்த நிலையில், அவர் அவசரமாக ருத்ரபிரயாக்கிற்கு வர வேண்டும் என்ற தகவல் கிடைத்தது. அதில், ஆட்கொல்லி சிறுத்தை ஒரு நபரை இரவில் அடித்துக் கொன்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவர்களால் எந்த இடத்தில் ஆட்கொல்லி சிறுத்தை அந்த நபரைக் கொன்றது என்ற விவரத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

உடனே கார்பெட், தான் பார்த்த ஆட்கொல்லி சிறுத்தையின் கால் தடங்களை வைத்து ஒரு முடிவுக்கு வந்தார். சென்ற இரவு, தங்களைப் பின் தொடர்ந்து வந்த ஆட்கொல்லி சிறுத்தை மூவரையும் தாக்கிக் கொல்ல முடியாத சூழ்நிலையில், வந்த அதே குறுகிய பாதை வழியே திரும்பி இருக்கிறது. பின்னர், வலதுபுறம் உள்ள வளைவில் திரும்பி, மலை மீது ஏறி, அங்கு ஓர் அப்பாவியைத் தாக்கிக் கொன்றிருக்கிறது என்று யூகித்தார். பின்பு தன்னுடைய இந்தக் கணிப்பு சரிதானா என்பதையும் உறுதிப் படுத்திக்கொண்டார்.

கார்பெட் ஆய்வு பங்களாவிற்குத் திரும்பியபோது இபாட்சன் நந்துராம் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். நந்துராமின் கிராமம் ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடுவதற்காக அவர்கள் கடந்த தினம் மாலையில் காத்திருந்த இடத்திலிருந்து சுமார் நான்கு மைல்கள் தொலைவில் இருந்தது. அக்கிராமத்திலிருந்து அரை மைல் தொலைவில், ஓர் ஆழமான பள்ளத்தாக்கில், காட்டின் சிறிய நிலப் பகுதியைச் சரிசெய்து, அதில் ஒரு வீட்டையும் கட்டி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கவ்யா என்பவர் வாழ்ந்து வந்தார். அவருடன், அவரது தாயார், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் வசித்து வந்தனர்.

காலை விடிந்ததும் கவ்யா வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் நந்துராமுக்குக் கேட்டது. அந்த அழுகுரலைக் கேட்டு, ’என்ன அசம்பாவிதம் நடந்தது?’ என்று தூரத்திலிருந்தே நந்துராம் கத்தினார். அதற்கு எதிர்த் திசையிலிருந்து, ‘அரை மணி நேரத்திற்கு முன்பு, கவ்யாவை ஆட்கொல்லி சிறுத்தை தூக்கிச் சென்று விட்டது’ என்று பதில் கிடைத்தது. இந்த செய்தியைக் கேட்டவுடன், நந்து ராம் வேகமாக ஆய்வுப் பங்களாவுக்கு வந்து இபாட்சனிடம் விஷயத்தைத் தெரிவித்தார்.

இபாட்சன் உடனேயே தன்னுடைய அரேபிய, இங்கிலாந்துக் குதிரைகளைப் பயணத்திற்குத் தயார் செய்தார். இபாட்சனும் கார்பெட்டும் தங்களது காலை உணவை முடித்துக் கொண்டு நந்துராமுடன் அவரது கிராமத்திற்குக் கிளம்பினர். அவர்கள் சென்ற வழியில் சரியான சாலை இல்லை. கால்நடைகள் செல்லும் பாதைதான் இருந்தது. மேலும், கொண்டை ஊசி வளைவுகள் இருந்தன. இந்த வளைவுகளில் பெரிய இங்கிலாந்து குதிரையால் எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. எனவே, தங்களது குதிரைகளைத் திருப்பி அனுப்பிவிட்டு, இருவரும் கால்நடையாகவே நந்துராமுடன் அந்தச் செங்குத்தான மலைப்பகுதியைக் கடந்தனர்.

சிறிது தொலைவில், காட்டுப்பகுதியில் சுத்தம் செய்யப்பட்ட ஓர் இடம் அவர்கள் கண்களில் பட்டது. அவர்கள் அங்குச் சென்று பார்த்தபோது, இரு பெண்கள் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர். அந்தப் பெண்கள் என்ன நடந்தது என்பதை விவரிக்கத் தொடங்கினர்.

கவ்யா வீட்டின் வாசல் அருகில் உட்கார்ந்திருந்தபோது அங்கே வந்த ஆட்கொல்லி சிறுத்தை அவரைத் தாக்கியுள்ளது. கவ்யா தப்பிக்க முயற்சி செய்யும் முன்னரே அவரது கழுத்தைப் பிடித்துத் தூக்கிச் சென்றிருக்கிறது. அதனால் கவ்யாவால் எந்தச் சப்தமும் எழுப்ப முடியவில்லை. கவ்யாவை நூறு கஜத் தூரத்திற்கு இழுத்துச் சென்ற அந்தச் சிறுத்தை, அவரைக் கொன்றிருக்கிறது. பிறகு சடலத்தை 400 கஜ தூரத்தில் மண்டியிருந்த புதர்களுக்கு மத்தியிலான ஒரு வெற்றிடத்திற்குத் தூக்கிச் சென்று, தொண்டை, தாடை, தோள்பட்டையின் சிறிய பகுதி, தொடை ஆகியவற்றைத் தின்றிருக்கிறது. அந்தச் சமயத்தில் கவ்யா வீட்டுப் பெண்களின் புலம்பல் சத்தமும், நந்துராமின் சத்தமும் ஆட்கொல்லி சிறுத்தையைத் தொந்தரவுக்குள்ளாகவே அது சடலத்தை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றது.

கார்பெட் அந்த இடத்தைச் சுற்றி ஆராய்ந்தார். சடலம் கிடந்த இடத்தின் அருகே மரங்கள் ஏதும் இருக்கவில்லை. மரங்கள் இருந்திருந்தால் ஆட்கொல்லி சிறுத்தை அதன் மீது அமர்ந்திருந்து, மறுபடியும் நோக்கி வரும். அப்போது அதைச் சுட்டு வீழ்த்தலாம். ஆனால் மரங்கள் இல்லாததால் கார்பெட்டும் இபாட்சனும் வேறு ஒரு திட்டத்தை வகுத்தனர். அவர்கள் சிறுத்தை தின்ற சடலத்தின் மூன்று பகுதிகளில் சயனைடு விஷத்தைத் தடவினர். பின்பு மாலை வேளை நெருங்கிவிட்டபடியால், இருவரும் சடலத்தை அங்கேயே வைத்துவிட்டுப் பல நூறு கஜத் தூரத்தில் இருந்த மலைக்குச் சென்று மறைந்தனர். அவர்களால் மலையிலிருந்து கீழே உள்ள சடலத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

ஆட்கொல்லி சிறுத்தை கீழே உள்ள புதர்களில்தான் ஒளிந்துகொண்டு இருக்கிறது என்பது அவர்கள் இருவருக்கும் சந்தேகமில்லாமல் தெரியும். இருவரும் தாங்கள் மறைந்திருந்த இடத்திலிருந்து சடலத்தைக் கவனிக்கத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் கழிந்தது. ஆனால் கீழே எந்த அசைவும் இல்லை. மாலை முடிந்து இரவு ஆரம்பித்தது. இருட்டிவிட்டபடியால் இருவரும் தங்களுடைய லாந்தர் விளக்குகளில் வெளிச்சத்தை ஏற்றி அந்த ஒளியின் உதவியுடன் ஆய்வு பங்களாவிற்குத் திரும்பினர்.

மறுநாள் விடிந்தது. கார்பெட்டும் இபாட்சனும் மீண்டும் ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாட தயாராயினர். அவர்கள், முந்தைய தினம் மறைந்திருந்த அதே மலைப் பகுதிக்குப் புறப்பட்டனர். வானத்தில் மெலிதாக வெளிச்சம் வரத் தொடங்கியிருந்தது. அவர்கள் மலைக்குச் சென்று மீண்டும் காத்திருக்க தொடங்கினர். கீழே எந்த மாற்றமும் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் வானில் சூரியன் முழுவதுமாக உதயமாகி இருந்தது. சூரியன் தோன்றிய ஒரு மணி நேரத்தில் கார்பெட்டும் இபாட்சனும் கீழே சென்று சடலத்தைப் பார்வையிட்டனர். ஆச்சரியமாக அந்தச் சிறுத்தை, சயனைடு தடவப்பட்ட மூன்று இடங்களை மட்டும் விட்டுவிட்டு ஏனைய பகுதிகளான மற்றொரு தோள்பட்டை மற்றும் கால் பகுதியைத் தின்றிருந்தது. மேலும் மீதமுள்ள சடலத்தைச் சிறிது தூரத்திற்குத் தூக்கிச் சென்று புதர்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்தது.

இப்போதும் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி எந்த மரமும் இல்லை. எனவே, அடுத்து என்ன செய்யலாம் என்று கார்பெட்டும் இபாட்சனும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இபாட்சன் மலையை விட்டுக் கீழே இறங்கி ஒரு மைல் தொலைவில் இருக்கும் கிராமத்திற்குச் செல்ல வேண்டும். அங்கிருக்கும் ஒரு பெரிய மாமரத்தில் மேடை அமைத்து இரவு முழுவதும் சிறுத்தைக்காகக் காத்திருக்க வேண்டும்.

கார்பெட்டோ சடலம் கிடந்த இடத்திலிருந்து சுமார் 400 கஜத் தூரத்தில், கிராமத்திற்குச் செல்லும் பாதையைப் பிடித்து, அங்கிருந்த அடர்த்தியான ஒரு மரத்தில் காத்திருக்க வேண்டும். கார்பெட் அங்கே சென்றதற்கு ஒரு காரணம் இருந்தது. அம்மரம் இருந்த பாதையில்தான் அன்றைக்கு முன்தினம் ஆட்கொல்லி சிறுத்தையின் கால் தடங்களை அவர் பார்த்திருந்தார். அதனால் அங்கே மறைந்திருக்க அவர் முடிவு செய்தார்.

15 அடி உயரத்தைத் தாண்டி வளர்ந்திருந்த அம்மரத்தின் கிளைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டு மீண்டும் துளிர்விட்டிருந்தன. அந்தக் கிளையின் கீழ் உள்ள கட்டையில்தான் கார்பெட் அமர்ந்துகொண்டார். அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் கிளைகள் சூழ்ந்திருந்தன. இதுவே அவருக்கு நல்ல மறைவிடமாக அமைந்தது.

கார்பெட் அமர்ந்த மரத்தின் எதிரே, மலை செங்குத்தாக மேலே சென்றது. அந்த இடம் முழுவதும் காட்டுப் புதர்களும், குட்டை மூங்கில்களும் நிறைந்திருந்தன. அவர் அமர்ந்திருந்த மரத்தின் பின் பக்கத்தில் பெருமளவு மக்களின் பயன்பாட்டில் இருந்த ஓர் ஒற்றை அடி பாதையும் கிழக்கு-மேற்காக இருந்தது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *